போராட்ட‬ காலத்தில் நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள் !

நான் திருகோணமையில் இருந்து திடீரென்று யாழ்ப்பாணம் வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது என்று முன்னர் இங்கே எழுதியுள்ளேன்.அப்படி வந்தபோது
தளபதி கிட்டண்ணாவுடன் இருந்து நான் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் கோட்டை ராணுவ முகாமை நாம் கிட்டண்ணா தலைமையில் நாம் முற்றுகை இட்டிருந்தோம்..எமது முற்றுகைக்கு வசதியாக இந்தியாவில் இருந்து பொன்னம்மானால் அனுப்பப்பட்டிருந்த ஐம்பது கலிபர் தானியங்கி பெரும் துணை புரிந்தது.கோட்டையில் இருந்து வெறும் ஐநூறு மீட்டருக்குள்தான் எமது முற்றுகையின் எல்லை இருந்தது..

.வானில் இருந்து எந்த வித உணவுப் பொருட்களோ,ராணுவ தளபாடங்களோ கோட்டை முகாமினுள் கொண்டு வந்து விநியோகிக்க முடியாத அளவுக்கு அந்த முற்றுகை அமைந்திருந்தது.கோட்டையை சுற்றியுள்ள எமது காவல் அரண்கள் மீது தாக்குதல் நடாத்தி,குண்டுகளை தினமும் பொழிந்து..பார்த்தது ஸ்ரீலங்கா அரசு.

எதுவும் கிட்டண்ணாவின் முன்னே எடுபடாத நிலையில் கோட்டை ராணுவம் செய்வதறியாது வெறுத்துப் போயிருந்தவேளை ..ஒருவாரமாக கோட்டைக்கு உணவு …நீர் ..விறகு எரிபொருள் ..எதுவுமே விநியோகிக்க படாத நிலையில் அப்போது கோட்டை முகாம் பொறுப்பாளராக இருந்த கப்டன் கொத்தலாவலை என்னும் ராணுவ அதிகாரி இரவு பகலாக என்ன செய்வது ? என்று தனது மண்டையை போட்டு குடைந்து கொண்டிருந்தான்..

..அதற்கு காரணம் இல்லாமல் இல்லை கடந்த இரண்டு நாட்களாக ஐந்நூறுக்கு மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் வெறும் சோற்றுக் கஞ்சியை மட்டும் குடித்துக் கொண்டு புலிகளுடன் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தனர். வாரத்துக்கு இரு முறை அங்கே வந்து இறங்க வேண்டிய பாண் (ரொட்டி) மாவு..குடிநீர் ..சீனி போன்ற எல்லாமே தீர்ந்து போய் இன்னும் சில அரிசி மூட்டைகள் மட்டும் ராணுவ முகாமில் எஞ்சி இருந்தன ..ஒருவித குழப்ப நிலையில் ராணுவம் இருந்த நேரம் அது..

கிட்டண்ணாவோ..அந்த முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்து உலங்கு வானூர்திகளை அங்கே இறங்கவிடுவதாக இல்லை. அதேநேரம் வாக்கிடோக்கிமூலம் கிட்டண்ணாவுடன் பேசிப்பார்ப்பது என்னும் முடிவுக்கு வந்தான் கொத்தலாவலை..

அதுதான் கிட்டு ! எதிரியை பணிய வைப்பதில் கிட்டுவுக்கு நிகர் கிட்டுதான். தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக 1985 இன் நடுப் பகுதியில் யாழ் மாவட்டம் முழவதையும் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வரலாறு கிட்டு ஒருவரையே சாரும்.

கிட்டு யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த அதேவேளைதான் வன்னி மாவட்ட தளபதியாக மாத்தையா இருந்தார். ஆனால், அப்போது வன்னி மாவட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் வரவில்லை. வன்னியின் சகல ராணுவ முகாம்களில் இருந்தும் எந்த வேளையிலும் ராணுவம் வெளியில் வரக் கூடிய
நிலையில்தான் அப்போது நிலைமை இருந்தது..

அன்று ஒருநாள் காலை வேளை ! எமது வாக்கி டாக்கியில் ராணுவ குரல் ஒன்று கேட்டது..வழக்கமாக எமதுபோராளிகள் ‘சென்றி’க்கு நிற்கும் நேரம் …ராணுவம் அவர்களை இடை மறித்து சிங்களத்தாலோ ஆங்கிலத்தாலோ திட்டுவது வழக்கம் .எமது போராளிகள் மட்டும் விடுவார்களா என்ன ? செந்தமிழில் கண்டபடி திட்டினார்கள்..

..வெகுநேரத்துக்குபின் இரு பகுதியினரும் ராணுவத்தின் எறிகணை தாக்குதலை தொடர்ந்து ..தமது வாய்ச்சண்டையை நிறுத்தி கொண்டனர் .அப்போது ..எனக்கு மருத்துவ மனையில் வேலை குறைவாக இருந்ததால் .நான் அன்று இரவு காவலுக்கு வருகிறேன் என்று எமது போராளிகளிடம் சொன்னேன்..அதுபோல் அன்று இரவு காவலுக்கு நின்றபோது, நேற்று பேசிய அதே ராணுவவீரன் மீண்டும் இன்று சிங்களத்தால் வாக்கி டாக்கியில்’ பேச தொடங்கினான்..

..உடனே எனது நண்பன் என்னிடம் வாக்கியை தந்தான். நான் சில நிமிடங்கள் அவனுக்கு சிங்களத்தாலும் ஆங்கிலத்தாலும் கண்டபடி திட்டிவிட்டு எனது பேச்சை நிறுத்தியபோது, அங்கிருந்து எதுவித சத்தமும் வரவில்லை …அனேகமாக இரவு பன்னிரண்டு மணிக்குமேல் காவலுக்கு நிற்கும் இராணுவமே தூக்கம் வரும்போது ..அதை தவிர்க்க புலிகளை சீண்டி பார்க்க முற்படுவார்கள். நான் அந்த காவலுக்கு எப்போதாவதுதான் போவேன். ஏன் தெரியுமா..? எனக்கு மருத்துவமனையில் பராமரிக்க வேண்டிய எமது நோயாளர்கள் இருப்பார்கள், பராமரிக்கவேண்டும்.

அதனால் கோட்டைக்கு போவது மிகவும் குறைவு..அன்று எமது முகாமுக்கு வந்த எமது போராளிகள் இருவர் முந்திய இரவு தமக்கும் ஒரு ராணுவ சிப்பாய்க்கும் பெரிய வாய்ச் சண்டை நடந்ததாக சொன்னார்கள்.

அவர்கள் சிங்களத்திலும் இவர்கள் தமிழிலும் மாறி மாறி திட்டி கொண்டு இருந்ததாக சொன்னார்கள். நான் அன்று இரவு மீண்டும் அங்கே போனேன். அவர்கள் சொன்னது உண்மைதான் ஆனால்..நான் அந்த வாக்கிடாக்கியை, வாங்கி அவனுடன் சிங்களத்தில் பேசிய போது, அவன் திகைத்துவிட்டான்..

..உண்மையிலேயே இங்கிருந்து சிங்களத்தில் பதில்வரும் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவே இல்லை. ஆனால், அதன்பின் என்னுடன் மிக மரியாதையாக அவன் பேசினான். எனக்கு எப்படி சிங்களம் தெரியும்? என்று கேட்டான்…உங்கள் முகாம் பொறுப்பாளர் கொத்தலாவலையுடன் ஒருகாலத்தில் ஒன்றாக படித்தவன் நான் என்று சும்மா சொன்னேன் ..மோட்டு சிங்களவன் உடனே நம்பி விட்டான்..

..அதன் பின் என்னை “மாத்தையா “என்றே (ஐயா) அழைத்தான் ..இது சில நாட்களுக்குமுன் நடந்த கதை.

சில நாட்களாக வெறும்கஞ்சியுடன் இருந்த ராணுவத்தின் நிலை கண்டு கொத்தலாவலை தளபதி கிட்டுவுடன் பேசியபோது, முற்றுகையை உடைத்து உணவு விநியோகம் செய்ய உலங்கு வானூர்திகளை அனுமதிக்குமாறு கேட்டு கொண்டான்.கிட்டண்ணாவும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் “முற்றுகையை எடுக்க முடியாது,வேண்டுமானால் அங்கிருந்து வெளியேறுங்கள்..நீங்கள் விரும்பினால் மண்டைதீவு ராணுவ முகாமுக்கு பின்வாங்கி செல்லமுடியும் ..நாங்கள் உங்களை திருப்பி தாக்க மாட்டோம் “என்று சொன்னார்…அவர்!

..”நாங்கள் இப்போது பசியில் இருக்கிறோம் இரண்டு நாட்கள் எமது வீரர்கள் எதுவும் சாப்பிடவில்லை,இருக்கும் அரிசியை சமைத்து உண்ண …விறகுகூட முகாமில் இல்லை “..என்று அவன் சொன்னபோது ..கிட்டண்ணாவின் மனம் இழகிவிட்டது..”உண்மையாகவா? “என்று கேட்டார் “உண்மைதான் “என்று அவன் சொன்னபோது ” உங்களுக்கு வேண்டிய விறகை நான் அனுப்பி வைக்கிறேன் லொறியில் …உங்கள் வீரர்களை தாக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் “என்று சொன்னார் கிட்டு….”சரி “என்று சொல்லி வாக்கியை வைத்தான் கொத்தலாவலை.

என்ன அதிசயம்? சிலமணி நேரத்தில் ஒரு லொறியில் பாண்..(ரொட்டி) மாவுமூட்டைகள் சில ..சீனி.. .நிறைய விறகு..நான்கு ஐந்து நாட்களுக்கு தேவையான ஐந்து ஆறு பீப்பாய்களில் குடிநீர் என்பன அந்த ராணுவ முகாமுக்கு விநியோகம் செய்யபட்டது ..அந்த விநியோக லோரி சென்று எல்லாவற்றையும் இறக்கிவிட்டு வந்ததும் வாக்கிடாக்கியில் கொத்தலாவலை நேரில் கிட்டுவுடன் பலமுறை “தாங்க்ஸ் தாங்க்ஸ்”என்று சொன்னதாக கிட்டண்ணா பின்னர் சொன்னார்.

அன்பர்களே ! உலகில் போர் முனையில் பரம விரோதிக்குகூட உணவும் நீரும் கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் மட்டும்தான் …இது தமிழர் வரலாறு..புலிகள் வரலாறு.. . வேறு எங்கும் இப்படி நடந்ததாக நான் அறியவில்லை..இப்படி மனிதாபிமானத்தோடு எந்த நாடோ போராளி இயக்கமோ நடந்து கொண்டதாகவும் நான் படிக்கவில்லை. அதற்கு மாறாக பட்டினியை முன் வைத்து ..பல முற்றுகைகள் நடந்தேறியதாகவே படித்து இருக்கிறேன்..

…இந்த பண்பாடு ..மனித நேயம் கிட்டண்ணாவுக்கே உரிய தனிக்குணம் மட்டுமல்ல, அது விடுதலைப் புலிகளின் பொதுக் குணமும்கூட!.புலி எப்போதும் அழுகிய மாமிசத்தை தின்னாது..வேட்டையாடித்தான் புதிதாக தின்பது வழக்கம். எம்மை பார்த்து சிலர் சொல்கிறார்கள் நாங்கள் பயங்கரவாதிகளாம்.

..கொழும்பில் ராணுவ தலைமை செயலகத்தில்..குண்டு வெடிக்கும் போதுகூட தலைவர் திருப்பி திருப்பி சொல்லி அனுப்பினாராம் …ராணுவ தலைமையகத்தின் அருகே பொது மக்கள் நிற்பதை அவதானித்து வைக்கவேண்டும்.. .ஒரு பொதுமகன் கூட அதனால் பாதிக்கபடக் கூடாது ” என்று..ஆனால் சில தவிர்க்க முடியாத தருணங்களில் சில பொது மக்களும் சில இடங்களில் இறந்து உள்ளனர்தான்..ஒரு கெரில்லா போராட்ட இயக்கத்தின் எல்லைகள் அவ்வளவுதான்..அந்த எல்லைகளை மீறி நடப்பது என்பது எப்போதாவது சில வேளைகளில் மட்டும்தான்..

..அன்று வன்னியில் ..முள்ளி வாய்க்காலில்..சிங்களவனுக்கு எங்கே போனது அந்த மனித நேயம் ?..அவனிடம் அது இருந்தால்தானே வர முடியும்?
பின்னர், கிட்டண்ணா சதிகாரர் வைத்த வெடிகுண்டினால் கால் துண்டிக்க பட்டபோது, ,கால் போடுவதற்காக இந்திய இராணுவத்தினால் உலங்கு வானூர்திமூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டபோது எமக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையில் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டவேளை.. சிங்கள இராணுவம் எமது அனுமதியுடன் யாழ்பாணத்துக்குள் வர்த்தக கொள்வனவுக்காக வந்தபோது ..அப்போது கோட்டை முகாம் பொறுப்பாளராக இருந்த கப்டன் கொத்தலாவலையும் வந்தான். அவன் எமது புலிகளின் திருநெல்வேலி முகாமுக்கு வந்தபோது கிட்டண்ணாவை
பார்க்க விரும்பினான்.

. அப்போது அங்கே நான் அவனுடன் ஆங்கிலத்தில் பேசினேன். “உங்களுக்கு பாண் அனுப்பியவர்களில் இருந்த குழுவில் நானும் ஒருவன் “..என்று சொன்னபோது மிகவும் மகிழ்ந்தான்.. கிட்டுவை பார்க்க முடியாதது மிகவும் வேதனையாக இருப்பதாக சொல்லி வருந்தினான் ..அதுமட்டுமா…? “புலிகளில் சிறந்த மனிதாபிமானம் உள்ள ஒரு மாபெரும் தளபதி கிட்டு “..என்று அவன் புகழ்ந்ததை என்காதுகளால் கேட்டபோது எனக்கு பெருமையாக இருந்தது..

..பின்னர் அங்கே நின்ற எமது போராளிகள் சிலரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு யாழ்பாணத்தின் சில இடங்களை சுற்றி பார்க்க போனபோது, என்னையும் வற்புறுத்தி அழைத்தான். எமது பொறுப்பாளரின் அனுமதி பெற்று நான் போனபோது ..தான் ராணுவத்தில் இருந்தாலும் கூட புலிகளின் திடமும் ..வீரமும் என்னை வியக்க வைக்கிறது என்று சொன்னான்..ஆனால் ..இன்று அவன் ரானுவத்தில் இல்லை.

அவன் ராஜினாமா செய்துவிட்டு.. அமெரிக்கா சென்று விட்டதாக பத்திரிகை மூலம் அறிந்தேன்..இது புலிகளின் இன்னும் ஒரு பக்கம்.புலிகளைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் எப்போதுமே புலிகளை விட்டு விலகிச் செல்வதில்லை.எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள்.அதுதான் விடுதலைப் போராட்டத்தின் மகிமை.

எதிரிக்கே போர்க் களத்தில் உணவும் நீரும் கொடுத்த புலிகளைத்தான் சில நாடுகள் வாய் கூசாமல் ‘பயங்கர வாதிகள்’ என்று சொல்கின்றன!
எல்லாம் நேரம்தான்!

-மு.வே.யோகேஸ்வரன்

****************