தனிப்பட்ட ஒரு சிலரினால் 2012 இல் தமிழ் மரபுத் திங்கள்தைப் பொங்கல் முத்திரை வெளியிடுவதற்கு  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  அன்றைய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா உட்பட்டு லோகன் கண்பதி வரை  மின்னஞ்சல் ஊடக அனுகப்பட்ட போதும் அரசியல் ஆதாயம்  கிடைக்காது என்ற காரணத்தால் ஆதரவோ உதவிகளோ கிடைக்காமையினால் அதற்கு மேல் கொண்டு செல்ல முடியாமல் அது தோல்வியில் முடிந்தது .

வருடா வருடம் தமிழ் மரபுத் திங்கள் மட்டும் கையில் எடுக்கப்பட்டு அரசியல் ஆதாயம்  தேடப்படுகின்றது என்பது மட்டும் புலப்படுகின்றது

ரொரன்ரோ மாநகர சபையில் நீதன் சான் உட்பட சில தமிழர்கள் இருந்தும்  ரொரன்ரோ மாநகர சபை சுற்றறிக்கைகளில் தமிழ் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

அது ரொரன்ரோ மாநகர சபையின் அலட்சியம் மட்டும் அல்ல அந்த சுற்றறிக்கை  பற்றி யாரும் அலட்டிக் கொள்ளாமையினாலும்  தொடர்ந்து தமிழ் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

வெறுமனமே தமிழ் மரபுத் திங்களோடு தமிழ் மறக்கப்பட்டு விடுகின்றதா ?

புலம் பெயர் நாடுகளில் எத்தனை பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கின்றார்கள் ?

தமிழ் மண்ணுக்காகவும் மொழிக்காவும் பல்லாயிரம் உயிர் கொடுத்து போராடிய மாவீரர்களின் இலட்சியக் கனவைக் கட்டி காக்க வேண்டிய ஈழத்தமிழர்கள்

தமிழ் கற்றால் என்ன இலாபம் ? பரதநாட்டியம் , சங்கீதம் கற்றால் என்ன இலாபம் ?  என்று சொல்லி பிரஞ்சு மொழி கற்றால் கனடாவில் வேலை கிடைக்கும் என்பதற்காக ஓடித்திரியும் தமிழ் பெற்றோர்கள் !

மாவீரர் நாளோடு மாவீரர்களை மறந்து போகும் இனம் பொங்கலோடு தமிழை மறக்காமல் இருக்குமா என்ன ?

முகநூலில் இருந்து ………

**************************

தமிழ் மரபுத் திங்கள்: ஒன்றாக முன்னேறிச் செல்கின்றோம் ?

தமிழ் மரபுத் திங்களுக்கான முயற்சி, கனடிய பாராளுமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் ஏனைய தமிழ் கனடியர்களைப் போல நானும் மகிழ்ச்சியடைகின்றேன். 2009ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் தமிழ் பாரம்பரிய மாதம் பற்றிய முயற்சியை நான் முன்னெடுத்த போது, மத்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்தது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக இருந்தது.

அந்தச் சமயத்தில் மனதில் இருந்த மூன்று மைல்கற்கள்:

1) இந்த முயற்சிக்கு கனடா முழுவதிலும் இருந்து ஆதரவு பெறுதல்,

2) புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் பிற நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு இந்த முயற்சி பற்றிய செய்தியை பரப்புதல்,

3) முறைப்படி தமிழீழம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்த முயற்சியை பாலமாக்குவது, குறிப்பாக இந்த முயற்சி அதன் நோக்கங்களை அடைவதற்கு.

தற்போது இதில் ஒரு மைல்கல்லை அடைந்து விட்டதால், நானும் எனது குழுவினரும் மீதியிருக்கும் மைல்கற்கள் மீது எங்களது கவனத்தை திருப்புவோம்.

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், முன்முயற்சியின் இந்த முக்கியமான கட்டத்தில், நாம் அனைவரும் பெருமை கொள்ளும் இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய கூட்டாக நாம் எடுத்த அந்த சவாலான முக்கிய நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவது முக்கியமாக இருக்கின்றது.

2009 இன் இலையுதிர் காலத்தில், நமது தாய்நாட்டில் நிகழ்ந்த துயர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளாமல் இருந்தோம். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அந்த நாட்களில் மீண்டும் சமூகத்துடன் ஒன்ற முடியாமல் நான் தவித்தேன், அவை மிகக் கடினமாக இருந்தது. பலரைப் போல என் மனதிலும் நம்பிக்கையின்மை உணர்வு மேலோங்கி இருந்தது. ஆனால் விரைவிலேயே இதிலிருந்து மீண்டு வந்து சமூகத்துடன் ஒன்றாவது நிச்சயமாகக் கடினம் தான் என்று நான் உணர்ந்தேன். இதைத் தான் எங்கள் விடுதலைப் போராட்டம் எங்களுக்கு கற்று கொடுத்தது: எதிர்த்தெழுதல். நாங்கள் தமிழீழத்தில் செயல்பட்டு வந்த சட்டப்படியான அரசாங்கத்தை இழந்துவிட்டதால், புலம்பெயர்ந்த இடங்களிலாவது எங்களது அடையாளங்களை பலப்படுத்த மற்றும் எங்களது மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறுகளை உயிரோடு வைத்திருக்க வழிகளை கண்டுபிடிப்பது முக்கியமானதாக இருந்தது. இந்தத் தேவையே தமிழ் மரபுத் திங்களை ஒரு திட்டமாகக் கொண்டுவர எனக்குத் தூண்டுகோலாக இருந்தது.

ஒரு ஆசிரியராக, கல்விச்சபை உறுப்பினராக மற்றும் சமூக அமைப்பாளராக, நான் ஒன்டாரியோவில் நடைபெற்று வந்த ஏனைய சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் வரலாறு மாத நடவடிக்கைகளை நன்கு உணர்ந்திருந்தேன். இந்தத் திட்டத்திற்கான அடிப்படை மாதிரியை ஏற்படுத்த எனக்கு கருப்பினர்த்தவர்களின் வரலாறு மாதம் தூண்டுகோலாக இருந்தது. தமிழ் கனடியர்களுக்காக இதைப் போன்ற ஒரு மாதம், கனடா மற்றும் உலகிற்கு தமிழர்கள் என்பவர்கள் யார், அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் துறைகளில் உள்ள பங்கு என்ன போன்றவற்றை எங்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கு கற்றுத்தரும் என நான் உறுதியாக நம்பினேன். கனடாவின் மூலைகளில் மற்றும் பிற புலம்பெயர் சமூகங்களில் இருக்கும் எங்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழர் அல்லாத சக கனடியர்கள் ஆகியோரை இந்த தமிழ் கலாச்சார மாதம் சென்றடையும் எனும் நினைப்பே இந்த முன்முயற்சியை வழிநடத்துவதை ஒரு குறிக்கோளாக ஏற்று நடத்த உதவியது. இரண்டு தமிழ் கனடியர்களில் ஒருவர் முதல் முறையாக பொது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வின் காரணமாக நான் எனது பொறுப்பை நன்கு உணர்ந்தேன்.

2010 இல் அந்த தலைமைத்துவ நிலை முடிவதற்குள் என் பெருமை மிகு தமிழ் தேசத்திற்காக நிலையான மற்றும் விளைவு மிக்க இந்த முன்முயற்சிக்கான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என எண்ணினேன்.

முதல் கட்டமாக, 2009 இன் இறுதியில், நான் அறிவகம் மற்றும் கனடா தமிழ் கல்லுாரி பிரதிநிதிகளை சந்தித்து எனது திட்டம் பற்றி எடுத்துரைத்து அதற்கான முயற்சியை தொடங்க மற்றும் அவர்களின் ஆதரவு பெற சந்தித்தேன். அந்த இரு அமைப்புகளும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்ளுக்கு வெற்றிகரமாக தமிழ் மொழி மற்றும் வரலாறை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் நான் அந்த அமைப்புகளை நாடினேன். இந்த முன்முயற்சிக்கு மேலும் ஆதரவு கிடைக்க அவர்களது ஆதரவு ஒரு கருவியாக இருந்தது. பின்னர், நான் ஏனைய தமிழ் கனடிய அமைப்புகளுக்குச் சென்று, ஊக்கம் மிக்க மற்றும் சாதகமான பதில்களை பெற்றேன். நாங்கள் 2010 இல் முதலாவது தமிழ் மரபுத் திங்களை ஏற்பாடு செய்வதற்கு முன்னரே இருபதுக்கும் மேற்பட்டோர் எங்களுடன் இணைந்தனர். இந்த முன்முயற்சியை வெற்றிகரமாகக் துவங்க அறிவகம் மற்றும் கனடா தமிழ் கல்லுாரி தேவையான நிதி ஆதரவு மற்றும் மனித வளத்தை அளித்தது.

பின்னர், எங்கள் குழு பல்வேறு நகரசபைகளிடம் இருந்து தமிழ் மரபுத் திங்களுக்கான முறையான அங்கீகாரம் மற்றும் பிரகடனம் பெறுவதற்கான ஒரு செயல்முறை தொடங்கியது. ஜனவரி 2011, டொராண்டோ நகரசபையில் தமிழ் மரபுத் திங்களை முறையாக பிரகடனம் செய்ய முக்கிய நகரங்களை கேட்டுக்கொள்ள ஒரு மனு முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். மெதுவாக, நாங்கள் ஒன்டாரியோ முழுவதும் உள்ள பல நகரங்களில் ஆதரவைப் பெற்றோம். 2012 இல் மார்க்கம், அஜாக்ஸ் மற்றும் பிக்கரிங், 2013 இல் பிராம்ப்டன் மற்றும் டொராண்டோ, 2014 இல் ஒட்டாவா மற்றும் அந்த நான்கு ஆண்டுகளில் பல சிறிய நகரங்கள் கவுன்சிலர் லோகன் கணபதி, மார்க்கம் நகரம் தமிழ் பாரம்பரிய மாதத்தை பிரகடனம் செய்யும் என்று உறுதியளித்ததோடு மட்டும் இல்லாமல் இந்த முன்முயற்சியின் வளர்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் யோர்க் மாவட்ட பாடசாலை வாரியம் மற்றும் டர்ஹாம் மாவட்ட பாடசாலை வாரியத்தில் இருந்து தொடங்கி ஒரு ஆண்டுக்கு முன்பு டொராண்டோ மாவட்ட பாடசாலை வாரியம் வரை என பல பாடசாலை வாரியங்கள் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. 2013 ஆம் ஆண்டில், எங்களது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, மாகாணசபை உறுப்பினர் டாட் ஸ்மித் எனும் ஒரு தனி உறுப்பினரின் மசோதா ஒன்டாறியோ மாகாண சபையில் மூன்று கட்சிகளாளும் ஏகமனதாக ஏற்கப்பட்டு, தமிழ் மரபுத் திங்கள் ஒன்டாரியோவில் ஒரு சட்டமாக உருமாறியது.

அக்டோபர் 2016 ல், பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் கூட்டு முயற்சிகள் மூலம், தமிழ் மரபுத் திங்கள் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது. கனடாவில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் மரபுத் திங்க ளாக அனுசரிக்கப்படும் என கனடிய பாராளுமன்றம் அறிவித்ததற்கான வெற்றிகரமாக செயல்முறைக்கு வழிவகுத்தார் ஹரி ஆனந்தசங்கரி.

தமிழ் மரபுத் திங்கள் முன்முயற்சியிடம் இருந்து 2017இல் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நாங்கள் தமிழ் மரபுத் திங்கள் சமூகத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு, கனடாவில் தமிழ் மரபு திங்கள் முன்முயற்சிக்கு திட்டமிட, ஒருங்கிணைக்க மற்றும் ஆதரவளிக்க ஆயத்தமாக உள்ளது. இந்த அமைப்பின் ஆலோசனை செயல்பாடுகள் இன்னும் நடந்துகொண்டிருக்கும் போதிலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கருவை நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவை: விவசாயம் (2017), புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்க்கை (2018) மற்றும் தொல்காப்பியம் (2019). மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்ப அறிவிப்பிற்கு பின்னான முதல் வருடம் இது என்பதால், 2017 இல், வான்கூவர், மாண்ட்ரீல், கால்கரி, எட்மண்டன், வினிப்பெக் மற்றும் ஹ்யாலிஃபாக்ஸ் போன்ற பகுதிகளில் இருந்து எங்கள் சக தமிழ் கனடியர்கள் அதிகாரப்பூர்வமாக எங்கள் தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வர் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் (FeTNA மூலம்) இந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நகரங்கள் வரை எங்களை விரிவாக்கிக் கொள்ள நிறைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்வோம்.

தமிழ் மரபுத் திங்களை வெறும் மேடை நிகழ்ச்சிகளையும் தாண்டி ஆழமாக கொண்டுசெல்ல அடுத்த இரு ஆண்டுகளில் கடுமையாக முயற்சி செய்வோம். இந்த இலக்கை அடைய பெரியவர்கள் மற்றும் அறிஞர்களை கனடிய தமிழ்ச் சமூகத்தின் உள்ளே கொண்டுவந்து 2017 இல் செயல்படுவதற்கான பங்கை, குறிப்பாக ஸ்கார்புரோவில் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் உச்சக்கட்ட நிகழ்வில், கொடுப்பது சிறப்பனதாக இருக்கும். இதே நிகழ்வில், இளம் தலைவர்களை செயல்பட வைக்கும் எங்களது தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இரண்டாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்குப் பிந்திய அமைப்புகளில் இருக்கும் தமிழ் மாணவச் சங்கங்களின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைவர்களை அங்கீகரிப்போம். இந்த மாணவ சங்கங்கள், கனடாவில் தமிழ் கனடிய அடையாளத்தை ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தன. இறுதியாக, தமிழ் பாரம்பரிய மாத முன்முயற்சி, தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தில் இருக்கும் பல முக்கிய பங்குதாரர்களுக்கும் எங்களுக்கும் இடையே வலுவான ஒரு பாலத்தை கட்டி, , தமிழ் மரபுத் திங்கள் முன்முயற்சியின் இலக்குகளை பல்வேறு தெளிவான வழிகள் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவம் கொண்டு அடைய 2017 சரியான ஒரு ஆண்டாக இருக்கும்.

நீதன் ஷான்

தமிழ் மரபுத் திங்கள் நிறுவனர் மற்றும்

கனடிய தமிழ் மரபுத் திங்கள் சமூகத் தலைவர்

(ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது)