**********

மதுரையில் இயக்குநர் கவுதமன் மீது தாக்குதல்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு திரைப்பட நடிகரான ஆர்யா, பிரபல இயக்குனர் கெளதமன், இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் முற்றியதால் பொலிசார் தடியடி நடத்தி அங்கு இருந்த மக்களை அப்புறப்படுத்தினர்.

இயக்குனர் கெளதம் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் ஏராளமானோரை பொலிசார் கைது அவர்களை பொலிசார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இப்போராட்டத்திற்கு இடையில் கெளதமன் கூறுகையில், 50,000 ஆண்டுகள் பழமை மிகுந்த எங்கள் தமிழினம், ஏர் தழுவிய தமிழினம், இத்தகைய பெருமை மிகுந்த தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வீரம் போன்றவைகளை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இது ஒரு போதும் நடக்காது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மட்டும் உத்தரவு தரவில்லை எனில் பொதுவாக்கெடுப்பு நடத்தி சட்ட ரீதியாக தமிழ்நாடு தனி நாடாக பிரிய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

****

தனது ட்வீட்டுக்கு பதில் அளித்த பீட்டாவுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் எழுந்து வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்புக்கு எதிராகவும் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சிம்பு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இதுவெல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதே என்று கூறியிருந்தார்.

இதை பார்த்த பீட்டா இந்தியா அமைப்பு குஷ்புவுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. இதனால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று பதில் அனுப்பியுள்ளது.

இதற்கு குஷ்புவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டை உங்களால் வேறு எங்காவது தடை செய்ய முடிந்ததா? மடகாஸ்கர் அரசிடம் அவர்களுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் சின்னத்தை நீக்க பேச முடிந்ததா? என்பதை தயவு செய்து கூறுங்கள். ஜல்லிக்கட்டால் நன்மைகள் பல உண்டு.

ஒரு காளையை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள், ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக்கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும். ஜல்லிக்கட்டில் நீங்கள் 5 தவறுகளை பார்த்தால் நாங்கள் ஏன் அதை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியானவற்றை காண்பிக்கமுடியும். விதிமுறைகளை கொண்டு வந்தால் நாங்கள் மதிப்போம். ஆனால் தடையை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு பீட்டா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

***************

ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி..!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு இந்திய விலங்குகள் நல சபை மிக மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேவேளை விலங்குகள் நல சபையின் தூதராக ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ரஜினி காந்த் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது: கைவிரித்த மத்திய அரசு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நல்ல ஒரு முடிவை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியதால், தமிழர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும், கலாச்சாரத்தின் முக்கிய பங்காகவும், தமிழர்களின் வீரத்தை வெளிக் காட்டுவதாகவும் அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

இந்த தடைக்கு மாற்றாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மத்திய அரசு காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கியது.

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் செய்த மாபெரும் வரலாற்று பிழையின் தாக்கம் தான் என்று கூறியுள்ளார்.

இதில் ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்தியே தீர வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வந்தேன், ஆனால் மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உரிய திருத்தங்களையும், ஆணைகளையும் பிறப்பிக்க தயாராக உள்ளது என்பது அரசின் அணுகுமுறையை நன்கு உணர்ந்த அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.

ஆனால், அப்படி ஒரு திருத்தும் கொண்டு வரப்பெற்று அவையும் நீதிமன்ற தடைக்கு ஆளானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர்கள் விளையாடிவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான முடிவு காலம் ஒட்டுமொத்தமாக வந்துவிடும் என்ற அச்சம் விவரம் அறிந்த அத்தனை பேருக்கும் தெரிந்துள்ளது.

இந்த நிலையை உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு தமிழர் தரப்பு நியாயங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து வைத்து தமிழர்களின் வீர விளையாட்டை விளையாட, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிட வேண்டி மத்திய அரசு வழக்கறிஞர் மிக தெளிவாக ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்தார்.

வழக்கு இதற்கு முன்பாக நடந்த வழிமுறைகளை நான் தெரிந்திருந்தாலும், தற்போது வழக்கை கடைசி நிலையில் சிறப்பாக நடந்த விதத்தை தெரிந்திருந்தாலும், சர்வ நிச்சயமாக பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிடுமென நம்பி தமிழக மக்களிடம் என் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுடன் இப்பொங்கல் நன்னாளாக கொண்டாட முடியும் என்று 13.01.2017 மாலை வரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆனால், அன்று இரவு வரை நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆகையால் உரிமையோடு ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

இது என்னுடைய மனதை மிகவும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisements