தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவடைந்த புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களை வைத்து தமிழர்களிடையே ஒற்றுமையைச் சிதைத்துக் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களிடையே ஒற்றுமையும் அதனால் உருவாக்கப்பட்ட பலமும் இருக்கக் கூடாது என்பதில் சிறீலங்கா பேரினவாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தமிழர்களையே பயன்படுத்தி வருகின்றார்கள்.

தமிழர்ளிடையே குழப்பங்களை ஏற்படுத்தி தமிழர்களின் பலத்தைச் சிதைத்துத் தமிழினத்தை அழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட முறைமைகளைப் பயன்படுத்துவதுடன் சாதாரண மக்களின் உணர்வுகளைக் குழப்பி ஒருவிதமான மாயைத் தோற்றத்தைத் தோற்றுவிக்கக் கூடிய மக்கள் மனங்களை நன்கறிந்த உளவியல், சமூகவியல் நியுணர்களைப் பயன்படுத்தி திரைமறைவில் இந்திட்டங்களை மிகவும் இரகசியான முறையில் தீட்டி வருகின்றார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழின விடுதலைக்கான போராட்டத்தை எந்தவொரு படை பலத்தாலோ நவீன தொழிநுட்ப பலத்தாலோ வெற்றிகொள்ள முடியாது, அதற்கு தமிழ் மக்களின் பூரண ஆதரவு என்னும் மிகப் பெரும் பலம் உண்டு. என்பதை தெரிந்துகொண்டவர்கள், தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திப் பிழவுகளை ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டுப் பல தடவைகள் தோற்றுப் போனா நிலையில் சிறீலங்காப் படைகள் யுத்த களங்களிலும் படுதோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சர்வதேசத்தின் மத்தியஸ்த்தத்துடன் நடத்தப்பட்டு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் வழங்கத் தயார் என்று கூறி போரில் தோற்றுக்கொண்டிருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்கான போரை நிறுத்தி தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் திட்டத்தை அரங்கேற்றினார்கள்.

அதை மட்டுமா செய்தார்கள். போர் நிறுத்தம் இடம்பெற்ற சமாதன காலத்திற்குள் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தவரும் விடுதலைப் புலிகள் சார்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவருமான கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரனை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தனியாகப் பிரித்ததுடன் அவரின் சகாவாகச் செயற்பட்ட பிள்ளையான் போன்றவர்களையும் உருவாக்கி தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர் புரியத் திருப்பிவிட்டார்கள். இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத பெருந் தியாகங்களைக் கொண்ட தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் முள்ளிவாய்க்காலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துப் பேரிழப்புக்களால் 2009-மே இல் மௌனித்துப் போவதற்கு எதிர்த் தரப்பின் பாரிய படைப் பலமோ நவீன தொழிநுட்பங்களோ ஆயுத பலமோ அவர்களுக்கு உதவவில்லை. தன்னினத்தையே காட்டிக்கொடுத்த தன்னின மக்களின் விடுதலைப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகளின் துணையே பேருதவி புரிந்தது என்பதே உண்மை.

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை இனத்துரோகிகளை வைத்தே இவ்வாறு அழிக்க நினைத்தவர்கள் தற்போதும் தமிழர்களின் மனங்களில் நிலைத்து நீடித்துள்ள ‘தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிய விடுதலை இயக்கம், அவர்கள்தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள், தமிழர்களின் தேசியத் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்’ என்ற தமிழர்களின் உணர்வை அகற்றுவதற்காக திரைமறைவில் மிகவும் திட்டமிட்ட வகையில் நிபுணத்துவச் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இது மிகவும் நேர்த்தியான முறையில் தீட்டப்பட்டுள்ளமையால் இதன் உண்மை நிலையை அறிந்து கொள்வது மிகவும் கடினமானது. இதன் பிரயோகம் தமிழர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கும். அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் பல பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஒன்றுதான் தற்போது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறை கடடுதல், அதனைத் தடுத்தல், தடுத்த குற்றச்சாட்டை கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது சுமத்துதல், அதனைச் செய்தியாகப் பரப்புதல் என்ற திட்டம் கிளிநொச்சியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது மாவீரர் குடும்பங்களையும் முன்னாள் போராளிகளையும் கோபங்கொள்ள வைத்துக் குழப்புதல் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்களையும் குழப்பி தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்டு தேசத் துரோகிகளாக ஒதுக்கப்பட்டவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கான திட்டம் இதற்குள் மறைந்துள்ளது.

தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலங்களிலும் அதற்குப் பின்னரும் சிறீலங்காப் படைகளின் ஒட்டுக்குழுவாகச் செயற்பட்டவர்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை சகோதரப் படுகொலையாளிகள், தமிழ் மக்களை அழிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், பயங்கரவாதிகள், புலிப் பயங்கரவாதிகள்…. எனக் கூறிவந்தவர்கள் மக்களால் இனங்காணப்பட்டு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைப் பெறுவதற்காக பலவழிகளில் முயன்றும் தோற்றுப் போன நிலையில், தாம் எதைக் கூறினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனையும் தமிழ் மக்கள் மனங்களிலிருந்து அகற்ற முடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தம்மைத் தயார்ப்படுத்தி தமிழின அழிப்புக்குக் காரணமானவர்களின் திட்டப்படி, மாவீரர்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் நோக்கி நகர்ந்துள்ளார்கள். இதனால்தான் பேரினவாத அரசியல்வாதிகள் முதல் ஒட்டுக்குழுத் தேசத் துரோகிகள் வரை தற்போது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை புகழ்ந்து கூறுவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புகழ்வது போல நடித்து தமிழ் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முயல்கிறார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறை ஒன்றை அமைப்பதற்காகவென கடந்த வியாழக்கிழமை 05.01.2017 அன்றைய தினம் வந்ததாகக் கூறும் 10 பேர் கொண்ட குழுவினர் தாம் முன்னாள் போராளிகள் எனவும் மாவீரர்களின் உறவினர்கள் எனவும் வவுனியா மாவட்டப் பிரஜைகள் கழுவெனவும் தம்மை ஊடகங்களுக்கு இனங்காட்டியுள்ளார்கள்.

இவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமது உறவினருக்கான கல்லறை ஒன்றை அமைக்க வேண்டுமாகவிருந்தால் தமது உறவினரை விதைத்த இடத்தை இனங்கண்டு ஏனைய மாவீரர்களின் பெற்றோருடனும் கலந்தாலோசித்து கிளிநொச்சியிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தி அதனை முறைப்படி செய்திருக்க வேண்டும். இதில் வந்தவர்களின் செயற்பாடுகளை நோக்கும் போதே இவர்கள் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார்கள், இவர்களின் இலக்கு என்ன என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

இவர்கள் மாவீரர்களின் உறவினர்கள் என்றும் முன்னாள் போராளிகள் என்று தம்மை இனங்காட்டிக்கொண்டாலும் அப்படித்தான் இருந்தாலும் இவர்கள் யார் இவர்களின் நோக்கம் என்ன என்பது விரைவில் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களின் விடுதலைக்காகத் தம்மையே அர்ப்பணித்த மானமாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. மாவீரர் துயிலும் இல்லங்களை வைத்து யாரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்களானால் இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானதாக அமையும் என்பதே உண்மை. இது சிலருக்கு இப்போது விளங்காது காலப்போக்கில் தெரியும் அப்போது புரியும்!
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் பொதுக் கல்லறை கட்ட முற்பட்ட வவுனியா பரஜைகள் குழுவினர் இதில் எந்தவிதமான உள்நோக்கமோ பின்னணியோ இல்லையென்றால் கிளிநொச்சியிலுள்ள பரஜைகள் குழுவினருடனாவது இவ்விடயத்தைத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கிளிநொச்சியிலுள்ள எந்தவொரு பொது அமைப்புக்களுக்கோ மாவீரர் பெற்றோர்களுக்கோ எதையும் தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக தாம் நினைத்த இடத்தில் தாம் நினைத்தபடி தமிழர்களின் மிக முக்கியமான புனித பூமியான மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்ட முற்பட்டுள்ளார்கள்.

இதனை அவதானித்த மாவீரர்களின் உறவுகள் புதியவர்கள் யாரோ கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கிடங்கு தோண்டி ஏதோ கட்டிடம் போல கட்டுகிறார்கள் என அச்சப்பட்டுத் தமக்குள் பேசிக்கொண்டதுடன் கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனது கவனத்திற்கும் கொண்டு சென்றார்கள்.

மாவீரர்களது உறவுகள் பலர் தமது உறவுகளை விதைத்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இனந்தெரியாத நபர்கள் யாரோ கட்டிடம் கட்டுகிறார்கள் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கூறியதற்கமைவாகவே கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் அவ்விடத்திற்குச் சென்று பிரதேச சபையின் அனுமதியின்றி இவ்விடத்தில் கட்டிடம் கட்ட முடியாது, இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள். கட்டுமான வேலைகளை நிறுத்துங்கள் என்று கூறியதற்கு அக்குழுவில் இடம்பெற்றிருந்த வரணியைச் சேர்ந்த முல்லைத்தீவில் வசிப்பவரும், அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்தவருமான ஈசன் தன்னை மாவீரர்களின் சகோதரன் எனவும் முன்னாள் போராளி எனவும் கூறிக்கொண்டு கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளரை ‘உனக்கு உடைத்து விட்டிடுவன்….. வெளியால போடா மசிராண்டி…….’ என்று ஏசி மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதுடன் ‘சிறீதரன் சொல்லியோட மசிராண்டி இங்க வாறாய்….. சிறீதரன் இஞ்ச எங்களை ஒன்றும் புடுங்கேலாது….’ என்று மிகவும் அநாகரிகமாகக் கூறி மிரட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் ஒழுக்கமான பண்பாடான ஒரு விடுதலை இயக்கம். அதனுடை பெயரைப் பயன்படுத்தும் மேற்படி நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நற்பெயருக்குக் கழங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொண்டதன் மூhலமே தற்போது இவர்களது நோக்கம் பின்னணி பற்றி வெளிப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் அரச அதிகாரிகளுக்கும் அவர்களுக்கேற்ற மதிப்பையும் மரியாதையையும் இயக்கத்தின் போராளிகள் முதற்கொண்டு பொறுப்பாளர்கள் வரை வழங்கியிருந்தார்கள். ரவுடித்தனம், காவாலித்தனம், சட்டவிரோத செயல்கள் எவற்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியில் இடமளிக்கப்படவில்லை. மிகவும் நேர்த்தியான ஒழுக்கம் நிறைந்த கட்டமைக்கப்பட்ட மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஆட்சியை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தார்கள். அதனால்தான் இப்போதும் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியை விரும்புகின்றார்கள்.

அந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்களில் யாரும் தமது விருப்பத்திற்கேற்ப கட்டிடங்களையோ கல்லறைகளையோ கட்ட முடியாது என்பதே உண்மை. ஆப்படிக் கட்டுவதையும் எவரும் விரும்பவில்லை. மாவீரர் துயிலும் இல்லத்திற்கென்றொரு தனி மரியாதை உண்டு, ஒழுங்கு விதிமுறைகள் உண்டு. அதன்படிதான் அதனை மேற்கொள்ள முடியும். இதனை எவராலும் மாற்றியமைக்க முடியாது. எதிர்காலத்திலும் எக்காலத்திலும் அந்தக் காலத்தில் என்ன விதி முறைகள் பின்பற்றப்பட்டனவோ அதனையேதான் பின்பற்றப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம் மட்டுமல்ல அதுதான் முடிவும்.

2009 ஆம் ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படைகளால் அழித்துத் துவம்சம் செய்யப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களைக் காணும் போதெல்லாம் ஒவ்வொரு தமிழனது உள்ளங்களும் வேதனையால் துடித்தது! ஒவ்வொரு கார்த்திகை-27 வரும்போதும் எப்போது நாம் எமது உறவுகளுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி நினைவுகூருவொம்! என்ற ஏக்கத்துடன்தான் காத்திருந்தார்கள். ஏக்கங்கள் பல இருந்தாலும் அப்போதும் தமது வீடுகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் கார்த்திகை-27 மாவீரர் நாளான்று சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூரப் பின்னிற்கவில்லை.

தமிழர்களைக் கொத்துக்கொத்தாக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சாவின் இராணுவ அடாவடிகள் நிறைந்த ஆட்சியில் மாவீரர்களைப் பற்றிக் கதை;தாலே காணாமல் போகும், கைது செய்யப்படும் காலம் மாறி ஓரளவு நடமாடக்கூடிய மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் வந்தமையால் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிலவற்றில் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியிருந்த இராணுவத்தினர் வெளியேறிச் சென்றிருந்தனர். 2016 கார்த்திகை மாதம் வந்ததும் இம்முறையாவது மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்குச் சுடரேற்றி எமது உறவுகளை நினைவுகூர வேண்டும் என்ற ஏக்கத்துடன் மாவீரர்களின் உறவுகள் காத்திருந்தார்கள்.

கார்த்திகை-27 நெருங்க நெருங்க மாவீரர்களது உறவுகள் மத்தியில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இம்;முறையும் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் செல்ல முடியாத என்ற ஏக்கத்துடனும் காணப்பட்டார்கள். அவ்வேளையில்தான் மாவீரரின் தாயாரான மூதாட்டி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனைச் சந்தித்து ‘எனக்கு வயதும் வந்துவிட்டது எனது உடல் நிலையும் மோசமாகவுள்ளது இந்த வருடம் இருக்கும் நான் அடுத்த வருடம் இருப்பனோ தெரியவில்லை நான் இறப்பதற்கு முன் எனது பிள்ளையை விதைத்த மாவீரர் துயிலும் இல்லத்தில் எனது பிள்ளையின் கல்லறை உள்ள இடத்தில் ஒரு விளக்கேற்றி அவனை நினைத்து அழுது புலம்ப வேண்டும் எனது இந்த விருப்பம் நிறைவேறாதா?…..’ எனக் கூறி அழுது புலம்பியிருந்தார். இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது இவ்விடயத்தை அவருக்குக் கூறியதுடன் அந்த மூதாட்டிக்குத் தான் என்ன பதில் சொல்வது எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இவ்விடயம் இவ்வேளையில் செய்தியாக ஊடகங்களில் வெளி வந்திருந்தது.

இதனைக் கருத்திற்கொண்ட கிளிநொச்சியில் உள்ள மாவீரர்களின் உறவுகளும் முன்னாள் போராளிகளும் இம்முறை தாம் எப்படியும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்குச் சுடரேற்றி மாவீரர் நாள் நிகழ்வுகளைச் செய்ய வேண்டும். என்ற நோக்கத்துடன் கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துத் தமது கருத்துக்களைத் தெரிவித்ததுடன் ‘தாம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்று அங்குள்ள பற்றைக் காடுகளை அகற்றி சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தங்களின் பூரண ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றது. இங்கு நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறியள் என்ற நம்பிக்கையுடனும் துணிவுடனும்தான் நாம் 2009 ஆண்டின் பின்னர் இம்முறை மாவீரர் துயிலும் இல்லத்திற்குள்
செல்லவுள்ளோம்.’ என அச்சத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணிகள் 25.11.2016 அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனது ஒழுங்கமைப்புக்கமைவாக மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், கிளிநொச்சி வர்த்தகர்கள், கிளிநொச்சி பொது அமைப்புக்கள் போன்றன ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தன. அதேவேளை கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் மூலம் துப்புரவாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நடைபெறுவது அன்றைய தினமே ஊடகங்கள் மூலம் உலகம் முழுக்கத் தெரிந்திருந்தன. இதனை அறிந்த உலகத் தமிழர்கள் நீண்ட காலத்தின் பின்னர் தாயகத்தில் துணிச்சலாக கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை மாவீரர் நாளை அனுஸ்ப்பதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார்கள் இது வரவேற்கத்தக்க விடயம் எனக் கூறி தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்காக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்தே முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் போன்றவற்றிலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்கான சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு அங்கும் கடந்த முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நடைபெற்றிருந்த போது பல இடங்களிலிருந்தும் அதனைக் கேள்விப்பட்டவர்கள் அங்கு சென்று தம்மாலான பணிகளை மேற்கொண்டபோது எட்டிக்கூடப் பார்க்காத வவுனியா பரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீ..ஈசனும் இப்போது கிளிநொச்சிக்குச் சென்று தாம் முன்னாள் போராளிகள் என்று கூறிக்கொண்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் பொதுக் கல்லறை கட்டப் போகிறோம் என்று கூறி கிளிநொச்சியிலுள்ள எவருக்கும் தெரியப்படுத்தாமல் தாம் நினைத்தபடி கல்லறை கட்டுவதற்கான காரணம்தான் என்ன?

நீண்ட காலத்தின் பின்னர் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தைச் சிரமதானப் பணி மூலம் துப்புரவாக்கி ஒழுங்கமைத்த கிளிநொச்சியிலுள்ள மாவீரர்களது உறவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் செய்யமுடியாத மாவீரர் பொதுக் கல்லறை கட்டும் பணியையா வவுனியா பிரஜைகள் குழு கிளிநொச்சிக்குச் சென்று செய்ய முயற்சித்தது?

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் வவுனியா பிரஜைகள் குழுவைச் சேர்ந்த ஈழம் சேகுவோரா என்பவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கடந்த மாவீரர் நாளில் அரசியல் அசிங்கம் ஒன்றினை நிகழ்த்தியிருந்ததாகக் கூறியிருந்தார். இது அவருடைய அரசியல் நோக்கம் கருதிய கருத்தாகவே நோக்கப்படுகின்றது.

கடந்த 2016 நவம்பர்-27 மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்ட போது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பிரதான பொதுச் சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஏற்றி வைத்திருந்தார் என்பதே ஒட்டுக்குழுப் பின்னணிகொண்ட அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களின் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்குக் காரணம்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளன்று யார் யார் என்னென்ன பொறுப்புக்களைப் பொறுப்பேற்று மேற்கொள்வதென்பது தொடர்பான கலந்துரையாடல் மாவீரர்களின் உறவுகள், முன்னாள் போராளிகளை உள்ளடக்கி நடைபெற்ற வேளையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொறுப்புக்கள் பகிர்தளிக்கப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினரால் பிரதான சுடரை முன்னாள் போராளிகளில் ஒருவரை ஏற்றுமாறு கூறப்பட்ட போது அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி தொடக்கம் இம்முறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் செய்வதற்கு எமக்குப் பக்கபலமாக எம்முடன் கூட இருந்து செயற்படும் எமது மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் ஏற்றி வைப்பதே பொருத்தமானது என்று குறிப்பிட அதற்கு அவர் மறுத்ததுடன் மாவீரர்களின் உறவினர்களில் ஒருவரை ஏற்றி வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கூறப்பட்ட போதும் அவர்களும் அதனை மறுத்து ‘மாவீரர் துயிலும் இல்லத்தில் எங்களை சுடர் ஏற்றச் சொல்லிவிட்டு நீங்கள் விலகி நிற்கப் பார்க்கிறியளோ? இதில் ஏதாவது பிரச்சினை வரும் என்று யோசிக்கிறியளோ? இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் மட்டுமோ இதில் மாட்டுப்படுறது? இதில் நீங்களும் பிரதானமாகப் பங்காளியாகினால்தான் எங்களுக்கும் பலமாக இருக்கும், நீங்கள் மக்களாகிய எங்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களின் பிரதிநிதிதானே நாங்கள் எல்லலோரும் சிறீதரன்தான் பொதுச்சுடர் ஏற்ற வேண்டும் என விரும்புகிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அன்றைய தினம் மதத் தலைவர்கள் முன்னாள் போராளிகள் மாவீரர்களது உறவுகளுடன் இணைந்து மாவீரர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்திருந்தார் என்பதே உண்மை. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களும் உண்மை நிலையை அறியாதவர்களும் தமது வாய்க்கு வந்தபடி பலவாறாகக் கூவித் திரிகிறார்கள்.

மாவீரர் நாளை ஒரு பொது நாளில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஏனைய மாற்று இயக்கங்களிலிருந்து சாவடைந்தவர்களையும் மாவீரர்கள் என்ற பட்டியலில் சேர்த்து அவர்களையும் அந்நாளில் நினைவுகூர வேண்டும் என்ற கருத்தையும் ஆரம்ப காலத்தில் இயக்கங்களாக இருந்து செயற்பட்டு தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டோம் என்று கூறும் அரசியல் கட்சிகள் பலவும் கூறி வருகின்றன. இது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்? இதனை மாவீரர்களின் உறவுகள் விரும்புவார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள்தான் விரும்புவார்களா?

தமிழர்களின் விடுதலைக்காக உண்மையான அர்ப்பணிப்போடு போராடிய ஒரேயொரு விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலைத்து நீடிப்பதை சிறீலங்கா அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களான அரசியல்கட்சிகளும் அவர்களுக்குத் துதிபாடுபவர்களும் ஒருபோதும் விரும்பியதில்லை. அந்த மனநிலைதான் தற்போதும் அவர்களிடத்தில் ஆழப்புதைந்துள்ளது.

கடந்த 2016 நவம்பர்-27 இல் எவரும் எதிர்பார்க்காத வகையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை பேரினவாதிகள் மட்டுமல்ல ஒட்டுக்குழுக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானையே பிரிந்து செல்லக் காரணமாக இருந்தவர்கள் தாம் என்று கூறிப் பெருமை பேசிக்கொள்ளும் ரணில் தலைமையிலானவர்கள் விரும்புவார்களா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண் மாவீரர்களை நினைவுகூரும் நவம்பர்-27 மாவீரர் நாளை எதிர் வரும் காலங்களில் தாயகத்தில் தமிழர்கள் கடைப்பிடிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான தந்திரோபாயமான திட்டங்களை பேரினவாதிகள் செய்வார்கள் என்பதும் அதற்கு ஒட்டுக்குழுக்களும் துணைபுரிவார்கள் என்பதும் வரலாற்று உண்மை.

மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணி பிச்சினைகளைத் தோற்றுவித்து அதன் மூலம் அரசாங்கம் தலையிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களால்தானே இத்தனை குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன மாவீரர் நாள் கடைப்பிடிக்க முடியாது என்று தடைவிதிப்பதற்கான நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகள்தான் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை விரும்பாதவர்கள் பலரும் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றார்கள்.

இவ்விடயத்தில் தமிழ்மக்கள் குழம்பாமடையாமல் மிகவும் நிதானமாக இருந்து உண்மையின் பக்கம் நின்று செயற்படுவார்களாக இருந்தால் எங்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டங்களாலும் தமிழர்களை எதுவும் செய்துவிட முடியாது. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய மானமாவீரர்களை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து எவராலும் அழித்து அகற்றி விடமுடியாது என்பதும் மக்களின் உறுதியால் எதிர்வரும் காலங்களிலும் மாவீரர் நாள் எழுச்சி கொள்ளும் என்பதே உண்மை.
-காவியன்-