வன்னியில் யுத்தமே நடக்கவில்லை நீங்கள் என்னவென்றால்…

தான் வெட்டி வைத்த கிணற்றைக் காணவில்லை என்று வடிவேலு பொலிஸில் முறைப்பாடு செய்கிறார். முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸாரிடம், தான் வெட்டிய கிணறு என்று கட்டாந்தரையை வடிவேலு காட்டிய போது, விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தன் சீருடையைக் கழற்றிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடுகிறார். இந்த நிலைதான் இப் போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் தெரியாது என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் முல்லைத்தீவு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு மத்தியில் அவர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

அவ்வாறானால் வன்னி இறுதி யுத்தத்தின் போது எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லையா? என்ற கேள்வி எழவேண்டும். இவ்வாறான ஒரு கேள்விக்கான படைத்தரப்பின் பதில் எவரும் சரண டையவில்லை என்பதாகக் கூட இருக்கலாம்.

இது மட்டுமல்ல, சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்று கூறுகின்ற இலங்கை அரசிடம் தமிழ்மக்கள் எந்தவிதமான நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பது நிறுத்திட்டமான உண்மை. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியது ஆட்சியாளர்களும் படைத்தரப்பும்.

நிலைமை இதுவாக இருக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் யார் விசாரணை மேற்கொண்டால் தமக்கு நீதி கிடைக்கும் என பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்த வகையில் சர்வதேச விசாரணை ஒன்றே தமக்குத் தீர்வுதரும் எனத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் தீர்மானிப்பது என்பது எந்தவகையிலும் நியாயமாகாது.

பாதிக்கப்பட்டவர்கள் தீர்மானிக்க வேண்டியது பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் தீர்மானிப்பதாக இருந்தால் நீதி கிடைக்குமா என்பதை சர்வதேசம் தான் தீர்மானிக் வேண்டும்.

எதுவாயினும் தமிழ்மக்களின் விடயத்தில் சர்வதேச சமூகத்திடம் பாராமுகம் இருந்தது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

தமிழ் மக்கள் மீது சர்வதேச நாடுகள் கரிசினை கொண்டிருக்கும் ஆயின், சர்வதேச விசாரணையை உலக நாடுகள் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

அதனைச் செய்யத் தவறியதால் போர்க் குற்ற விசாரணை என்பது சாட்டுப்போக்குக்குக் கூட நடைபெறாது என்றாகியுள்ளது. என்ன செய்வது? சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என தமிழ் அரசியல் தலைமை வலியுறுத்தியிருந்தால், இன்று நிலைமை வேறுவி தமாக அமைந்திருக்கும்.

ஆனால் அதைச் செய்யாததன் காரணமாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பற்றி எதுவும் தெரியாது என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நீதிமன்றில் கூறியுள்ளார்.

இன்னும் சிறிது காலம் கடந்தால் வன்னியில் யுத்தமே நடக்கவில்லை பின் எப்படி உயிரிழப்பு மற்றும் காணாமல் போதல் நடக்க முடியும் என்று படைத்தரப்பும் ஆட்சித் தரப்பும் கூட்டாகக் கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வலம்புரி

Advertisements