தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ,
பொங்கல் பண்டிகையின் ஆணிவேரான விவசாயிகள் தற்கொலை ,
தமிழ் நாட்டுக்கு தண்ணி தேவையில்லை ,
தமிழன் அதிகாரத்தில் -ஆட்சியில் இல்லை,
தமிழர்கள் வளங்கள் சூறையாட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன ,
தமிழ் உணர்வென்பது இல்லை,
வெள்ளை நிறத்திலும் ஆங்கிலத்திலும் மோகம் !

ஒட்டு மொத்த அந்நிய அடிமைத்தன மோகத்திலும் ,
நாம் இந்தியன் , இந்தியன் என கோசம் போட்டுக் கொண்டிருக்கும் அடிமைத் தமிழ்நாட்டு தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அதுவும் ஒரு சில தமிழர்கள் குரல் கொடுப்பது ஏன் ?

முதலில் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுங்கள், கிளர்ந்தெழுங்கள் !

தமிழ்நாட்டு அடிமைகளுக்கு எதற்கு விடுமுறை ? ஜல்லிக்கட்டு ஒரு கேடு ?

***

“எண்ணெயும் தண்ணியுமாய்தான் இந்தியாவில் தமிழர்கள் இருக்கிறார்கள்” கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்று அறிவித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலில் காத்திருக்கும் தமிழக மக்களின் கோபத் தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது மத்திய அரசு. தமிழர்களின் உணர்வுகளில் தொடர்ந்து வேல்பாய்ச்சும் வேலையில் மத்திய அரசு ஏன் ஈடுபடுகிறது? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளை நம்பாமல் இளைஞர்கள், சுய எழுச்சியாக போராட்டங்களை நடத்திவரும் வேளையில், இந்த அறிவிப்பு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்துப் பேசிய தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் வெ.பாரதி, தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. முல்லை பெரியார், காவிரி நதிநீர்ப் பங்கீடு போன்ற பிரச்னைகளில் தமிழகத்துக்கு ஆதரவாக, நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் தண்ணீர் தரக்கூடாது என்பது இந்திய அரசுடைய நிலைப்பாடு. அதன் தொடர்ச்சியாக, நமது பண்பாடு மற்றும் அடையாளத்தையும் இப்போது அழிக்கப் பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டு, கீழடி, தற்போது பொங்கல் விடுமுறை என எண்ணெய்யும், தண்ணியுமாய் இந்தியாவில் தமிழர்கள் இருக்கிறோம். இவ்வளவு வெளிப்படையாக இதுவரை யாரும் செய்ததில்லை.இந்தியாவிற்கான ஒற்றைப் பண்பாட்டை அவர்கள் முன்னேறுத்துகின்றனர். இது, இயல்பிலே தமிழர்களிடம் உள்ள எதிர்க்கும் குணத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர்களால் முடிந்ததைச் செய்கின்றனர். எல்லாவற்றையும் தமிழர்கள் எப்படி முறியடித்தார்களோ, அதேபோல் இதையும் முறியடிப்பார்கள்” என்றார்.

‘மே பதினேழு’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறும்போது, ‘இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் நாடு. ஒரு நாட்டை எப்படி வரையறுப்பது என்று முறை இருக்கிறது. அதன் உள்ளே இருக்கக்கூடிய தேசியங்களை அங்கீகரிக்க வேண்டும். தனக்கான தேசியத்தை ஏற்றுக்கொள்வது மனிதனுடைய அடிப்படை உரிமை என்று ஐ.நா. சாசனம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழ் தேசியம் என்பது என்னுடைய அடிப்படை உரிமை. இந்தப் பண்பாட்டை, அடையாளத்தைப் பாதுகாப்பது இந்திய அரசியல் சாசனம். இந்த அரசியல் சாசனத்தை நடைமுறைபடுத்துகின்ற, பாதுகாக்கின்ற கடமை அரசுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு இனத்தின் மொழியை, பண்பாட்டை மறுப்பது மனித உரிமைக்கு எதிரானது.

அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாக இருந்தாலும் சரி. ஒரு மனிதனுடைய பொருளாதார சுதந்திரம், பண்பாட்டு சுதந்திரம் ஆகிய இரண்டையும் யாரும் தடுக்க முடியாது. அதன்படி, ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டு அடிப்படை உரிமை. பொங்கல் என்ற பண்பாட்டு விழாவை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்றாலே இந்திய ஒற்றுமையை மறுக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏதோ ஒரு அடையாளத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இதுபோல தேசிய அடையாளங்களில் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்றால், ஐ.நா. சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒரு தேசிய இனத்தின் உரிமையை மறுக்கக்கூடிய அதிகாரம் இந்திய அரசுக்குக் கிடையாது. ஜல்லிக்கட்டை சர்வதேச அரங்கில் கொண்டு நிறுத்தினால் இந்திய அரசு குற்றவாளிக் கூண்டில்தான் நிற்க வேண்டி வரும். பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய யூனியன். இந்த அடையாளத்தை மறுக்கும் வேலையைத் தான், தற்போது பி.ஜே.பி அரசு தொடங்கியுள்ளது. ‘இந்தியா என்பது வெவ்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாடு கிடையாது. அதன் அடையாளம் ஒன்றுதான்’ என்று பாதுகாப்புத் துறை செயலாளர் அஜித் தோவல் சொல்கிறார். இதைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்லியது. ஒரே பண்பாடு என்றால் இந்துத்துவப் பண்பாடு என்று நிலைநிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. அதை மறுக்கக்கூடிய பண்பாடுகளை எல்லாம் ஒழித்துக்கட்டும் வேலைதான் தற்போது நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகை எல்லாம் இந்துத்துவ அடையாளத்துக்குள் வரவில்லை, அதனால் அதை எதிர்க்கிறார்கள். ஏன் ஹோலி பண்டிகையைத் தடை செய்யவில்லை? பெண்கள் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ள அந்த விழாவை இந்த அரசு அங்கீகரிக்கிறது என்றால் எதனை உணர்த்த விரும்புகிறார்கள்? தமிழர்கள் பண்பாட்டு ரீதியாக தனித்த அடையாளங்களுடன் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இது, அவர்களுக்கு சிக்கலாக உள்ளது. அதனால்தான், தங்கள் பண்பாட்டைக் காக்க முயலும் தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் மீதெல்லாம் தாக்குதலைத் தொடுக்கிறது பி.ஜே.பி. இது பண்பாட்டு, இன ரீதியிலான சண்டை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த அறிவிப்பை, தனியார் நிறுவனங்கள் எப்படிக் கையாளும் என்றும் பார்க்க வேண்டும். ஏற்கனவே, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை தரவேண்டிய அவசியம் இல்லை, கிறிஸ்தவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ரம்ஜான் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்கிற நடைமுறைதான் தற்போது இருக்கிறது. விடுமுறை என்பதின் அர்த்தமே மற்றவர்கள் கொண்டாட்டத்தில் பங்குபெறுவது தானே தவிர, அவர் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை” என்று ஆவேசமாக சொல்லி முடித்தார்.

vikatan

Advertisements