அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கப்போகும் ரொனால்ட் ட்ரம்பிடம் மைதிரிபால சிறிசேன சிறீலங்கா மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கடை அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம், எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமென தமிழ் மக்களுக்குச் சொல்லி வாக்குப்போட வைத்த சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் இதற்கு ஏதாவது மாற்றுக் கருத்துத் தெரிவித்தார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த சட்டத்தரணி கரிகாலன்.

தொடர்ந்து இவர் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஒற்றையாட்சிக்கெதிராகவோ, வடக்குக் கிழக்கு இணைப்புக்கெதிரா, பௌத்த மதத்திற்கெதிராக இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தெரிவித்திருந்தார். இதற்கு இரா.சம்பந்தன் ஏதாவது மறுப்புத் தெரிவித்தாரா? எனக் கேள்வியெழுப்பியதுடன், ஆக மொத்தத்தில் சிங்களவர்கள் கோயில் மாடுகளாகவும், சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் குழுமாடுகளாகவும், தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் அடிமாடுகள் எனவும் தெரிவித்துள்ளார்.

*
முத்தி நெறி அறியாதவர் – மூக்கர் தமிழர் மனம் அறியாதவர் – கயவர்

சமஷ்டி முறைமை அவுட் என்றாகி விட்டது. இனி ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதுதான் முடிவு. ஒற் றையாட்சிக்குள் தீர்வு என்றால் எல்லா அதிகாரங்களும் கிடைத்து விடும் யாரேனும் நம்பினால் அதுதான் மிகப்பெரும் மடமைத்தனம்.

ஆக, தமிழர்களுக்கான தீர்வு என்பது எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அப்படியானால் இதுவரை நடந்த மண்மீட்புப் போர், எங்கள் பிள்ளைகளின் தியாகம், உறவுகளின் இழப்பு, சொத்தழிவு, இடப்பெயர்வு என அனைத்தும் வீணாகிவிட்டதா? என்ற கேள்வி எழும்.

இந்தக் கேள்விக்கு விடையில்லை. இவையெல்லாம் சேர்ந்துதான் எங்கள் மூத்த அரசியல் தலைவர், காளி அம்மன் மீது கொண்ட அளப்பெரும் கருணையால் தேசியக் கொடியும் சிங்கக் கொடி மீது அளவற்ற பற்றும் கொண்ட, சீமான் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தர் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.

இது ஒன்று போதும் எங்கள் இனம் இதைச் சொல்லிச் சொல்லியே சீவியம் நடத்தும். என்ன செய்வது? போராட்டம் தோற்றது என்பதற்கப்பால் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பொறுப்பேற்ற எங்கள் அரசியல் தலைமை இருக்கிறதே; அதுதான் எங்கள் ஊழ்வினையின் அடையாளம் என்று கூறிக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் மக்கள் கூறினாலும் இருவரைக் கொண்ட அமைப்பாகவே அது இப்போது உள்ளது. மற்றும்படி ஒருசிலர் அரசை முடக்குவோம் என வீராப்பு பேசுகின்றனர். இது அவர் களின் பாத்திரத்துக்கான வசனம். இதுகூட அந்த இருவரில் ஒருவரால் எழுதப்பட்டதாக இருக்கலாம்.
இவ்வாறு பேசப்படுகின்ற வீராப்பு வசனத்தை கேள்வியுற்றதும் முதலில் சிரிப்பவர்கள் அந்த இரு வருமாகவே இருக்க முடியும் .

என்ன செய்வது? இம்மை மறுமை தெரியாத நிலையில் எங்கள் அரசியல் தலைமைக்கு முறைப்பாடு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நினைத்தால் இதயம் கருகிப்போகும்.

சரி, இவைதான் ஒருபுறம் என்று விட்டுவிடலாம் என்றால் இன்றுவரை; இந்த நிமிடம் வரை தமிழ் அர சியல் தலைமை எங்களுக்கு சமஷ்டித் தீர்வை எடுத்துத் தரும். வடக்கு – கிழக்கை இணைக்கும் என்று நம் புகின்ற அப்பாவிகளை நினைக்கும் போது கண்கள் கலங்கிக் கொள்கின்றன.

சரி, அவர்கள் ஆளும் இனம். நாங்கள் ஆளப்படும் இனம். வந்து பிறந்துவிட்டோம் வாழத் தெரியவில்லை என்று பேசாமல் இருந்தால்,

வடக்கில் சிங்கள மீள்குடியேற்றம். ஆனால் தமிழன், தானிருந்த தனது பூர்வீக மண்ணில் குடியிருக்க அனுமதி மறுப்பு.

புத்த விகாரைகள் வடக்கில் அமைப்பு. இந்து ஆலயங்கள் உடைப்பு என்பதாக நிலைமை இருப்பதால் நாளும் நம் இதயம் நொருங்குகிறது.

பேசாமல் இருந்தாலும் விடுகிறார்கள் இல்லை. தமிழன் வாழ்ந்த பூமியையும் புத்தர் பிறந்த இடமாக காட்டுவதிலேயே அவர்கள் கரிசினை கொள்கின்றனர்.

இந்நிலையில் ஒற்றையாட்சில் தீர்வு என்பதற்கு எங்கள் அரசியல் தலைமை உடன்படுகிறது என்றால், இதைவிட அநியாயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

என் செய்வோம்? முத்தி நெறி அறியாத மூக்கரோடும் தமிழ் இனத்தின் பிரச்சினை தெரியாத கயவரோடும் வாழ்வதென்பது முடியாத காரியம் அவ்வளவு தான்.

*
வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தன், சுமந்திரன் விலகவேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்!

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக அங்கம் வகிப்பதாகவம், இருவரும் சமஷ்டி அமைப்பு முறை வேண்டுமென்றோ, அல்லது வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

பௌத்த மதத்திற்கு தான் முதலிடம் என்பதனை எதிர்க்கவில்லை என மகிந்த அமரவீர தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என்று சொல்லி, இரா.சம்பந்தன் போன்ற தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது, கொடுத்து வைத்த விடயம் எனவே, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் காலத்தில் ஒன்றுமில்லாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதாக சொல்கின்றார்கள்.

வழிகாட்டல் குழுவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான தமிழ் மக்களின் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இந்த வழிகாட்டல் குழுவில் இருந்தால், வழிகாட்டல் குழுவில் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இருவரும் சட்டம் தெரிந்தவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லக்கூடியவர்கள். ஏன் வழிகாட்டல் குழுவில் எந்த விடயங்களையும் கேட்காவிடின், வழிகாட்டல் குழுவில் இருவரும் என்ன செய்கின்றீர்கள் என மீண்டும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றும், அந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அரசாங்கத்துடன் பேசி என்னென்ன விடயங்கள் அரசியல் சாசனத்தில் வர வேண்டுமென்ற விடயங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏமாற்ற கொழும்பு முயன்றால், அரசை முடக்கும் போராட்டம் என்றால், இதுவரையில் அரசாங்கம் ஏமாற்றவில்லை என தெரிவிக்கின்றார். சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறுவது அனைத்தும் பொய்யானதா? இதுவரையில் நீங்கள் ஏமாற்றப்படவில்லையா? ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதம் கிடைக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டுமாயின் ஏற்புடைய ஒரு நாளில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்ன விடயங்களைச் சொல்ல வருகின்றார்.

ஆளும் கட்சியில் உள்ள பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒற்றையாட்சியினை மாற்ற முடியாது.
வடகிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறுவதன் பின்னர், வழிகாட்டல் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக இருவர் இருக்க வேண்டியதன் தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி, எமது குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் உடனடியாக அரசாங்கத்துடன் பேசிய பின்னர் வழிகாட்டல் குழுவில் இணைவதைப் பற்றி யோசிக்கலாம்.

வுழிகாட்டல் குழுவில் இருந்து அனைத்தும் மறுதலிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டல் குழுவில் இணைவதன் நோக்கம் என்ன? வழிகாட்டல் குழுவின் ஊடாக வடகிழக்கு இணைப்பினைச் சாதிக்க முடியுமாயின் ஏன் இதுவரை அந்த விடயம் பேசப்படவில்லை.

அத்துடன் 40 கூட்டங்கள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும் ஏன் இந்த விடயங்கள் பேசப்படவில்லை. கடந்த மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடுவதாக கூறியிருந்த போதிலும், அந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இடைக்கால அறிக்கையின்றியே, விவாதம் நடைபெறப் போகின்றதா? பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனூடாக விவாதம் நடைபெறப் போகின்றதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
விவாதம் 6 உப குழுக்களின் அறிக்கை மீதானதா? அல்லது இடைக்கால அறிக்கை வெளியிடப்படப் போகின்றதா? வடகிழக்கு இணைப்பு, பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயங்களை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விவாதத்திற்கு போவதா? ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுத்தவரையில் அவ்வாறு போவதாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வழிகாட்டல் குழுவில் இருந்து விலகி அரசுடன் திடமான பேச்சுவார்த்தையினை நடாத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கோரவிடின், மறுதலித்த அரசாங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்.

இவ்வாறு மறுதலிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டல் குழுவில் இருப்பது அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்கா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

மேலும் அரசைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே, வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டு என அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**

அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அதேநேரம் அவரின் முணுமுணுப்பும் மெல்லக் கேட்கிறது.

பத்திரிகை வாசித்துவிட்டு இப்பெரியவர் எதை எழுதுகிறார் என்று நினைத்து சரி, ஒருக்கால் பார்த்து விடலாம் என முடிவு செய்தேன். அந்த எழுத்து இப்படி இருந்தது.

தம்பி சுமந்திரனுக்கு வணக்கம். எனக்கு வயது எண்பத்தைந்து இனி நாங்கள் சருகுகள். இருந்தும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். ஏற்புடையதாயின் ஏற்றுக்கொள்க.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பிலான விசாரணை முடிவில் குற்ற வாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், நிரபராதிகள் ஆகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தான் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

எண்பது வயதும் எனது அனுபவமும் அப்படி ஒரு முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது. ஆனாலும் ஓர் ஐயம்! எங்கட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூர் விசாரணையில் திருப்தியடைவது போல தெரிவி த்ததால சிலவேளை ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்து விடுமோ என்று திசை மாறினேன்.

ஆனால் நடந்தது நான் முன்பு நினைத்து போலத் தான். அதுமட்டுமல்ல, திருகோணமலையில் நடந்த படுகொலை தொடர்பிலும் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர்.
இவைமட்டுமல்ல, இதற்கு முன்பும் ஏகப்பட்ட விடயங்கள் எனக்குத் தெரியும். அவற்றையெல்ல்லாம் எழு துவதற்கு என் வயது இடந்தரவில்லை.

அதேநேரம் நல்லாட்சி என்றாலும் என் பாதுகாப்புப் பற்றி நான் கவனம் எடுக்காவிட்டால் வேறு யார் தான் கவனம் எடுப்பார்கள்? ஆகையால் அவற்றை விட்டு விடுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, தம்பி சுமந்திரன்! மேலும் அறிவது, நடந்து முடிந்த வன்னிப் பெருயுத்தம் தொடர்பில என்ன மகன் நடக்குது? சர்வதேச விசாரணை நடந்த முடிந்து விட்டது என்று தாங்கள் கூறியதாக பத் திரிகை மூலம் அறிந்தேன்.

நீங்கள் கூறியதை தம்பி மாவை வன்னிக்கூட்டம் ஒன்றில் வைத்து வழிமொழிந்தார்.
ஆனால் பலரும் சொல்கிறார்கள் சர்வதேச விசாரணை நடக்கவில்லை. சர்வதேச விசாரணைதான் தேவை என்று.

அட! காலன் அழைக்கின்ற நேரத்தில உமக்கேன் இந்த ஆய்வென்று தாங்கள் மனதுக்க நினைத்தாலும் பரவாயில்லை. என்ர இறுதிக் காலத்துக்குள் சர்வதேச விசாரணை நடந்து விட்டதா? அல்லது நடக்குமா? என்பதை அறிய வேண்டும் என்பதுதான் என் பெருவிருப்பம்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றால் அந்த விசாரணை எங்கே? அதற்கு நடந்தது என்ன? அல்லது வன்னி பெருநில யுத்தத்தின் போது எங்களைப் பாதுகாக்காத பரம்பொருள் போல சர்வதேச விசாரணையும் அருவத் திருமேனியாய் விறகில் தீ போல்; பாலில் நெய் போல்; சங்கில ஒலி போல; உள் ளதோ? யாமறியேன்.

அது சரி, ரவிராஜ் படுகொலை விசாரணையின் தீர்ப்புக்குப் பின்னரும் உள்ளூர்த் தீர்ப்பு உத்தமம் என்று தாங்கள் கருதுகிறீர்களா? என்பதையும் அறிய ஆவல்.

ஏனென்றால் உள்நாட்டுத் தீர்ப்பில் நம்பிக்கை உண்டு என்பது போல எங்கோ ஓரிடத்தில் தாங்கள் கூறி யதாக ஞாபகம். பின்னர் அண்மையில் கரவெட்டியில் நடந்த நிகழ்வொன்றில், இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதென்று தாங்கள் உரையாற்றியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

அட தம்பி! எப்பதான் நாங்கள் உண்மையை உண்மையாக அறியப் போகிறோம். உண்மை ஒன்றுதான். இந்த ஓர் உண்மைக்குள் உண்மைதான் இருக்கும். உண்மை பற்றிக்கூறும் மற்றவை அனைத்தும் பொய்யாகும்.

ஏதோ எங்கட சனங்கள் பாவம் மகன்! நம்பி புள்ளடி போட்டவையள். ஏதோ பாத்து நடவுங்கள். என்ர நண்பன் சம்பந்தரை நலன் விசாரித்ததாகவும் கூறவும்.

வலம்புரி

Advertisements