சம்பந்தர் ஐயா சொல்லுங்கள் தமிழர்களை நட்டாற்றில் விடவா போகிறீர்கள்?

ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சம்மதம் தெரிவித்து விட்டார். சமஷ்டியைக் கைவிட்டுவிட்டார் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்தது அமைச்சர் அமரவீர மட்டு மல்ல ஏற்கெனவே, இரண்டு அமைச்சர்கள் சம்பந்தர் சமஷ்டியைக் கைவிட்டு விட்டார் என வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

கூடவே பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கு வதற்கும் சம்பந்தர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் அமரவீரவின் வாக்குமூலம் கூறுகிறது.

யார் என்ன கூறினாலும் இரா.சம்பந்தன் அவர் கள் மெளனமாகவே இருப்பார் என்பதும் உண்மை.
இது ஒரு புறம் இருக்க, விடுதலைப் புலிகளின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டமைப் புக்கு வாக்களிக்க, அவர்கள் பாராளுமன்ற ஆசன ங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றதும் கூட்டமைப்பு என்ற அமைப்பை மெல்லக் கைவிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக களநிலைமை மாற்றப்பட்டது.

இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதையும் கடந்து இரண்டு பேர் தீர்மானித்தல் என்ற நிலை மைக்கு தமிழ் அரசியல் தலைமை உள்ளது.

தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தால் நாம் எதையும் தீர்மானிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இரா. சம்பந்தர் தரப்பு இருப்பதுதான் மிகப்பெரும் அபத்தம்.

தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நடைபெற்றது.

எனவே தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றவர்கள் தேர்தலின் போது தாம் வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.

இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தை எல்லாம் மறந்து ஒற்றையாட்சிக்கு இணக்கம் தெரிவித்ததுடன் பெளத்த மதத்தை முன்னுரிமைப்படுத்துவதற்கும் உடன்பட்டுள்ளது என அமைச்சர்களால் கூறப்படுகிறது.

இதனடிப்படையிலேயே இரா.சம்பந்தன் சிறந்ததொரு ஜனநாயகவாதி என்றும் சம்பந்தர் போன்ற தலைவர் இருக்கும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர்.

ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் தராமல் வெறும் சப்புச்சவலையாக அமையப் போவது உறுதி.

தன்னுடைய காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடவேண்டும் என்பதற்காக எல்லாவற் றையும் விட்டுக் கொடுத்து விட்டால் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை சம்பந்தர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

தவிர, எத்தனையோ தியாகங்களை தந்துபோன எங்கள் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் சமாதி கட்டுவோமாயின் அது அவர்களுக்கான தல்ல நமக்கானது என்பதையும் புரிதல் அவசியம்.

எதுவாயினும் தமிழ் மக்களுக்கான உரிமை என்பதில் தனித்து சம்பந்தர் மட்டும் முடிவு செய்வதென்பது ஒரு போதும் சாத்தியப்படாத விடயம்.

தமக்கான தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆகையால் தமிழ்மக்களின் கருத்துக்கள் அறியாமல் அவர்களின் ஆலோசனைப் பெறாமல் ஒற்றையாட்சி என்றும் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்றும் சம்பந்தர் உடன்படுவது தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் செயலாகும்.
இது தொடர்பில் தமிழ்மக்கள் விழிப்புடன் இருப்பது என்பது மிகமிக அவசியம்.

வருகின்ற சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அந்தோ கதிதான்!

தமிழினத்தின் உரிமைகள் விடயத்தில் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது. உரிமை கிடைக்காத விடத்து தமிழன் வாழ முடியாது என்பதே பொருளாகும்.

எனவே தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்குள் வேறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகளை கொண்டிருக்கலாம்.

அதற்காக தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

வரப்போகின்ற அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றதா? என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவை.

நடைமுறைக்கு வர இருக்கின்ற சீர்திருத்த அரசியலமைப்பு என்பது தமிழ்த் தரப்பின் ஆதரவோடு வெளிவருவது என்ற அங்கீகாரத்துக்குட்பட்டது. இது முன்னைய அரசியலமைப்புக்கு இருக்காத அங்கீகாரத்தைக் கொடுப்பதாக அமையும்.

எனவே சீர்திருத்தப்பட்ட அரசியலமைப்பு அமுலுக்கு வந்த பின்னர், அது தொடர்பில் குறை கூறுவதோ! அன்றி பிழை காண்பதோ! நியாயப்பாடானதாக இருக்காது.

தவிர நாமும் சேர்ந்து தயாரித்த அரசியலமைப்பை பின்னணியில் குறைகூறுவது ஏற்புடையதல்ல என்பது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கும்.

ஆகையால் வருகின்ற அரசியலமைப்புத் தொடர்பில் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் தரப்புக்களின் தலையாய கடமையாகும்.

இதேவேளை பெரும்பான்மை இன மக்கள் எதிர்ப்பார்கள், அதனால் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அரங்கேறாமல் போகும் என்றெல்லாம் பயம் கொள்வது வெறும் நடிப்பேயன்றி அதில் வேறு எந்த அர்த்த மும் இருக்க முடியாது.

ஏனெனில் இந்த நாட்டில் இதுகாறும் நடை பெற்று வருவது தமிழ் மக்களுக்கான உரிமை மறுப்பு. அந்த உரிமை மறுப்பை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போராட்டம் சர்வதேச ஆதரவுடன் நசுக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தை முடிவுறுத்தியதென்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று எவர் நினைத்தாலும் அது இந்த நாட்டுக்கே கேடாகும்.

ஏனெனில் தமிழ் மக்களின் போராட்டத்தை தோற்கடித்தது என்பதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் வேறுபட்ட திசைகளில் பயணிக்கக்கூடிய கோடுகள்.

ஆக, தமிழ் மக்களின் போராட்டத்தை முடிவுறுத்துவதென்பதில் ஒரு தரப்பு வெற்றி என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.

ஆகையால் வெளிவரப்போகின்ற அரசியலமைப்பில் சிங்கள மக்கள் என்ன நினைப்பார்கள், அவர்கள் எதிர்ப்பார்களா? என்ற கேள்விகளுக்கு அறவே இடமிருக்க முடியாது.

மாறாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சம உரிமையோடு, சம அதிகாரத்தோடு வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இதுவே முதன்மையானது. இந்த உண்மையை ஆட்சியாளர்களிடம் எடுத்துரைத்து வலியுறுத்த வேண்டியவர்கள் தமிழ் அரசியல் தரப்பினர்.

ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஏதேனும் நடப்பதாகத் தெரியவில்லை. ஏதோ அரசியலமைப்பு சீர்திருத்தம் வெளிவந்தால் போதும் என்ற எண்ணத்துடன் தமிழ் அரசியல் தலைமை இருப்பது போன்றே நிலைமை தெரிகிறது.

இத்தகைய நிலைமை தமிழ் மக்களுக்கு பேராபத்து. அந்தப் பேராபத்து என்பது குறுகிய காலத்துடன் அறுபடப் போவதில்லை. காலாகாலமாக அதுவே அனுபவிப்பாக அமையும். எனவேதான் வருகின்ற சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்காகப் பயன்படுத்த தமிழ் அரசியல் தலைமைகளும் நம் புத்திஜீவிகளும் அதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஆராய்ந்து நமக்குச் சாதகமாக ஆக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் அந்தோகதிதான்.

வலம்புரி

Advertisements