“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது.

தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் அங்கு மாவீரர்களுக்கான துயிலும் இல்லம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து உணர்வோடு கலந்துகொண்டிருந்தமையும், மாவீரர்களுக்கு துயிலும் இல்லம் அமைய வேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், அதற்காக அவர்கள் எமக்கு அளித்த ஒத்துழைப்பும், உதவிகளும் அளப்பரியது.

உலகத் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றுகின்ற ஒரு தளமாகவும், ஈழத் தமிழர்களின் போரியல் வாழ்வையும், வரலாற்று தொன்மைகளையும் எடுத்தியம்பும் அருங்காட்சியகமாகவும் எதிர்காலத்தில் திகழவுள்ள “உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்” மாவீரர் துயிலும் இல்லத்திற்கான பகுதியில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் சிறந்ததோர் வரலாற்று பதிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையில், அவரது புனித அஸ்தி இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,பொருத்தமான ஒரு நாளில் முன்னறிவித்தலுடன் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உரிய மரியாதையுடன் பாலா அண்ணாவின் புனித அஸ்தி விதைக்கப்படும் நிகழ்வு பிரம்மாண்டமாக இங்கு இடம்பெறும் என்பதை உலகத் தமிழர்களுக்கு தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகின்றது.

Advertisements