கடந்த வாரம் 01.12.2016 வியாழக்கிழமை நாடா புயலில் சிக்கி மரணித்த சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த அமரரின் மரணத்தின் பின் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் மனதை நெருடுவனவாக உள்ளன. அன்றையதினம் இவரது மரணத்திற்கு மேலதிகமாக தச்சன்தோப்பு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவரும் சாவகச்சேரி கற்குழி பிரதேச வாசி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மொத்தமாக அன்றையதினம் மூன்று மரணங்கள் சாவகச்சேரி பிரதேசத்தில் சம்பவித்திருந்தன. மூன்று மரணங்களும் சட்டரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியவையே இதில் ஒன்றும் இயல்பான இயற்கை மரணங்கள் அன்று.

வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட உடலங்கள் மீதான மரணவிசாரணைகளின் பொருட்டு பிணக்கூறாய்வுகள் இடம்பெறவேண்டிய நிர்ப்பந்தத்தில் வைத்தியசாலையில் பிணக்கூறாக்கும் ஊழியர் விடுப்பில் இருந்துள்ளார். அவருக்கு பதில் கடமையாற்ற யாரும் அற்ற சூழலில் வைத்தியசாலைக்கான பொறுப்பு வைத்திய அதிகாரியால் தேவராசா அந்தியகால சேவை நடத்துனர்களிடமிருந்து பிணக்கூறாக்கும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கூறாய்வு அதிகாரியால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் உடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதற்காக மறுநாள் அடக்கம் செய்யப்பட்ட அசாதாரணநிலையால் இறந்தவர் வீட்டாரிடம் தேவராசா அந்திய கால சேவை நடத்துனர்களால் 13000.00 பிணக்கூறாக்கலுக்காக அறவிடப்பட்டுள்ளது. (இது தவிர 5000.00 பிணப்பதமாக்கலுக்கும் 2000.00 அகற்றப்பட்ட கழிவுகளை முகாமைசெய்வதற்கும் அறவிடப்பட்டுள்ளது அது எமக்கு அப்பாற்பட்ட விடயம்) அரச வைத்தியசாலையில் பிணக்கூறாக்கல் இடம்பெற்றமைக்கு தனியாருக்கு கொடுப்பனவு அதனை தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கௌரவ நிமித்தம் அவர்களும் செலுத்தியுள்ளனர்.

இதில் முக்கியமான விடயமாக பிணக்கூறாக்கும் ஊழியருக்கு பதிலீடு அற்ற நிலையில் வைத்தியசாலை இயங்குகின்றதா? அவருடைய விடுப்பு வைத்திய அதிகாரியால் எப்படி அனுமதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக சம்பவங்கள் இடம்பெற்றும் அவர் மீள கடமைக்கு அழைக்கப்படவுமில்லை இதற்கான காரணம் யாதோ?

அவ்வாறான சூழல் இருப்பினும் வெளியில் இருந்து வைத்திய பொறுப்பதிகாரியால் ஊழியர்கள் என என்ன அடிப்படையில் அன்றைய கடமைக்கு அழைக்கப்பட்டனர்?

அந்தியகால சேவை நடாத்துனர்களிற்கும் வைத்திய அதிகாரிக்கும் இடையே உள்ள வர்த்தக உடன்படிக்கை என்ன?

மிகப்பலத்த சிரமத்தின் மத்தியில் சாவகச்சேரி பிரதேசத்திற்கென அமையப்பெற்ற வைத்தியசாலையின் மேற்படி கூறாய்வு பிரிவு நிறுவப்பட்டிருந்தும் இந்த நிலை தொடரக் காரணம் என்ன?

இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தப்படவேண்டிய ஒரு விடயம் சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னர் தென்மராட்சி மட்ட குமுகாய அமைப்புக்கள் 77 இணைந்து ஒப்பமிட்டு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி;க்கு எதிராக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தொடக்கம் மாகாணசபை வரை மகஜர் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு மேலாக தென்மராட்சி அபிவிருத்திக்குழுப் பிரமுகர்களால் சாவகச்சேரிக்கு மாமனிதர் ரவிராஜ் உடைய திருவுருவச் சிலை நிறுவல் விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் மீண்டும் ஒரு வேண்டுதல் கையளிக்கப்பட்டிருந்தது. இது விடயம் தொடர்பில் குறித்த வைத்திய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றல் கட்டளை வழங்கும் வண்ணம் பணித்தும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தலையீட்டால் அது அமுல்படுத்துவதில் தாமதம் என அறிய முடிகின்றது. இதற்கான காரணமாக கடந்த காலத்தில் 120 மில்லியன் பெறுமதியான ஒதுக்கீடு சாவகச்சேரி தள வைத்தியாலைக்கு கிடைக்கப்பெற்றதை சத்தியமூர்த்தி தன் சொந்த அரசியலில் பிரதேச வாதத்திற்காக மல்லாவி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தன்னிச்சையாக மாற்றி சாவகச்சேரி தள வைத்தியசாலை முகாமைத்துவ குழுவுடன் முரண்பட்டமையே காரணம் என அறியமுடிகின்றது. ஆக அனுபவிப்பது சாமானிய மக்களே!

‘சாவகச்சேரியில் சாகிறதென்றால் பிணக்கூறாய்விற்கும் பணத்தை வைத்துக்கொண்டு சாகவேண்டிய நிலை உருவாகியுள்ளது’

– கார்த்திகையான்

Advertisements