ரஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட அ.தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் விளைவாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா எடுத்தாலும் தன்னை அரசியலில் நன்கு நிலைநிறுத்திய பின் ஈழத்தமிழர்களின் நியாயங்களை நன்குணர்ந்தவராக அவர்களின் துயருக்கு நீதி வேண்டிநின்ற ஒருவராகவே மறைந்து விட்டார். ஒரு வகையில் பார்த்தால் 1991 காலத்தில் தன்னையும் தன் கட்சியையும் வலுப்படுத்த வேண்டுமெனில் காங்கிரசாருடன் கூட்டமைப்பதைத் தவிர அவருக்கு வேறு தெரிவும் இருக்கவில்லை. இக் கூட்டின் வாயிலாகவே தமிழகத்தின் ஆட்சியை முதன் முதலில் கைப்பற்றிக் கொள்ள அவரால் முடிந்ததுள்ளது.

இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் விரோதப் போக்கு இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் ஈழத்தமிழர்களிற்கு எதிராக பலவகைகளில் இனவழிப்பு நடக்கின்ற போதிலும் குறிப்பாக இந்திரா காந்தி அம்மையாரின் காலத்தின் பிற்பாடு இந்திய மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் ஆளும் அரசுகளிற்குச் சார்பாகவே செயற்பட்டும் வந்தன.

ஈழவிடுதலை இயக்கங்களிற்கு பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கி தன் பிராந்திய நலனை மையப்படுத்தி மாத்திரமே இந்தியா இங்கு தொழிற்பட்டது. இதனால்தான் பல்வேறுபட்ட குழுக்களிற்கு பயிற்சியளித்து அவற்றை தம்மிடையே மோத வைத்து தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க இந்திய ஆய்வு பகுப்பாய்வுப் பிரிவு (RAAW) முயற்சித்தது. இதன் நோக்கங்களை ஆரம்ப முதலே இனங்கண்டு தமிழீழம் ஒன்றே இலட்சியம் என போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. உண்மையில் ஈழத்தில் இயக்கங்களிடையே இடம்பெற்ற ஆயுத மோதல் மற்றும் அவற்றாலெழுந்த அழிவுகளிற்கான முழுப் பொறுப்பையும் இந்தியாவே ஏற்க வேண்டும்.

விடுதலைப் புலிகளில் தலைவர் பிரபாவை படுகொலை செய்து மாத்தையாவை தலைவராக்கும் எத்தனம் இந்திய இராணுவத்தை நேரடியாக அனுப்பி தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை சிதறடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வேரோடழிக்கும் தனது திட்டம் தோல்வியடைந்த பின் விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவர் நிலையிலிருந்த மாத்தையாவை தனது முகவராக்கி அவரின் மூலமாக தலைவரை கொலை செய்து தலைமையை கைப்பற்ற ”றோ” எடுத்த முயற்சிகளை ”ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற நுரலின் மூலம் விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியும் விவரித்துள்ளார்.

பலதரப்பட்ட முனைப்புகளும் தோல்வியடைந்த பின்னர் உலகளாவிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பாவித்து லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் பேரழிவுகள் ஏற்பட்ட போது இலங்கை அரசுடன் கூட்டிணைந்து செயற்பட்டது இந்திய அரசு. கலைஞர் கருணாநிதி தலைமையிலான மாநில அரசும் இவ் அழிவுகளை கண்டும் மத்திய அரசிற்கு எவ்வித அழுத்தங்களையும் வழங்காது வாளாவிருந்தது.

ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாத மத்திய இந்திய மத்திய அரசுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் சரி பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் சரி வெளிவிவகாரக் கொள்கைகளில் பெருத்த மாற்றம் எதுவும் ஏற்பட்டுவது குறைவு. 90களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் மறைவுடன் அமெரிக்காவுடன் இருந்த விரோதத் தன்மை விலகி இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அந் நாட்டுடன் ஒரு சமரச போக்கை கையாளத் தொடங்கியதை தவிர பெரியளவில் எவ்வித மாற்றங்களையும் குறிப்பிட முடியாது. இது ஈழத்தமிழர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியபடி இன்னமும் தொடர்கின்றது.

இலங்கையின் ஒருமைப்பாட்டையே இந்தியா விரும்புகின்றது. இதனால் இலங்கை அரசு எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. 2009 இன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சினையின் தீர்வு முயற்சியில் பின்னடைவுகள் ஏற்படுகின்றதேயன்றி ஒரு அடி கூட முன்னோக்கி நகரவில்லை. போரில் பல்வேறுபட்ட உதவிகளை நல்கி புலிகளை முறியடித்த இந்தியா அதன் பின் தீர்வு நோக்கி எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை. உப்புச் சப்பற்ற மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டதை முற்போக்கானது என்று கருத இங்கு இடமில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் 282 ஆசனங்களைப் பெற்று தனிப்பெருங்கட்சியாக ஆட்சியமைத்த போது ஈழத்தமிழர் விடயத்தில் பெருத்த மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் எந்தவொரு மாற்றமுமே நிகழவில்லை. ஆகக் குறைந்தது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தானும் நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என இலங்கை தேசிய அரசின் இரு கட்சிகள் உத்தியோகரீதியாக அறிவித்துவிட்ட போதிலும் இந்தியா அவற்றை கண்டுகொள்ளவேயில்லை. மொத்தத்தில் இலங்கையின் ஒருமைப்பாடு என்றதற்கப்பால் சிந்திப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் கொள்கைவகுப்பாளர்களும் பின்னடிக்கின்ற அதேவேளை ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பலமாக எழும் குரல்களை நசுக்கிவிடவும் தயங்கியதில்லை.

இறுதியாக எழுந்த குரல் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து இறுதியாக எழுந்த மிக பலமான குரல் ஜெயலலிதாவினுடையதாகும். அப்பலோ வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட செப்ரெம்பர் 22 முதல் யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ”கூடா நட்பு கேடு தரும்” என்பதற்கிணங்க அவரது இறுதிக் காலம் அமைந்து விட்டது. ஒரு மாநில முதலமைச்சருக்கு ஏற்பட்ட இக் கதியை மத்திய அரசு தெரிஞ்சும் தெரியாமலும், கண்டும் காணாமலும் விட்டதன் காரணம் தான் என்ன?

அ.தி.மு.க தலைமைப் பதவி வெகுவிரைவில் சசிகலாவை சென்றடையும். அதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த தருணத்தில் ஈழத்தமிழர் சார்பாக எதிர்வரும் காலங்களில் அ.தி.மு.க எடுக்கப் போகும் நிலைப்பாடனது முன்னாள் முதல்வரின் மரணத்தின் போதான மத்திய அரசின் மௌனத்திற்கான பதிலைத் தரும்.

ஈழத்தமிழர்களது உரிமைப் போராட்டத்தில் பாதகமான களச்சூழல்கள் துரதிரஸ்டவசமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 1987 இல் அப்போது பலமாக அரண் செய்த முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் எதிர்பாராவிதமாக மரணித்தார். இப்போது மிக பலமாக ”தமிழீழம்” தான் ஒரே தீர்வு என குரலெழுப்பிய முதல்வர் ஜெயலலிதா மரணித்துள்ளார். எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முறியடிக்கும் பலமான தலைமையை ஈழத்தமிழர்கள் பெறாத வரையில் அவர்களின் துயரங்கள் தீரப்போவதில்லை.

-பாலசிங்கம் செவ்வேள்-

Advertisements