jeyalalitha-ltteஜெயலலிதா – புலிகள் உறவு: ஓர் சிறப்புப் பார்வை

செல்வி ஜெயலலிதாவுடன் நல்லுறவுப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த விருப்பை வெளிப்படுத்தக்கூடிய கடிதங்களை இங்கு இணைக்கின்றோம்.

இதில் முதலாவது கடிதம் வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் எழுதப்பட்டிருந்தது. முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்துக் கருத்து வெளியிட்ட செல்வி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 13.03.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் செய்தியை உள்ளடக்கிய கடிதம் ஒன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அவரது பின்கதவுத் தொடர்பாளர் ஒருவர் ஊடாக, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது (காலத்தின் தேவை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், செல்வி ஜெயலலிதாவிற்கும் இடையில் பின்கதவுத் தொடர்பாளராக விளங்கியவரின் பெயரை வெளியிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்):

கடந்த காலத்தில் எமது போராட்ட வரலாற்றில் எமக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் தமிழக முன்னாள் முதல்வர், எமது மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் எமக்காக பெரும் பெரும் உதவிகளை செய்து அந்த நெருக்கடிகளில் இருந்து நாம் மீண்டெழுவதற்கு பெரிய அளவில் உதவினார்.

அதேபோல் தற்போது எமது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாரிய மனித அவலத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு அ.தி.மு.க தலைவியான மதிப்பிற்குரிய ஜெயலலிதா அக்கா அவர்கள் எமக்காக உண்ணாவிரதம் இருந்து அரசியல் ரீதியாக எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து பி.பி.சி தமிழோசைக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இது எமக்கும், எமது மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளது.

இதற்காக மதிப்பிற்குரிய அக்கா அவர்களிற்கு நன்றியை தெரிவிக்குமாறு எமது தலைவர் அவர்கள் என்னிடம் கூறினார். தயவு செய்து இச்செய்தியினை அக்கா அவர்களிடம் அறிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.ltte-jeyalalitha-letter

பா.நடேசன்
பொறுப்பாளர்
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.”

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய செய்திக்கு பின்னரான நாட்களில் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய சிறீ சிறீ ரவிசங்கர் அவர்கள், வவுனியா வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலம் பற்றி செல்வி ஜெயலலிதாவிற்கு எடுத்து விளக்கியதோடு, இது தொடர்பான நிழற்படங்களையும், ஒளிப்படங்களையும் கையளித்திருந்தார். அக்காலப் பகுதியில் சிறீ சிறீ ரவிசங்கர் அவர்களுடன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் அவர்களும் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிவந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த அதிரடியான கருத்து ஒன்றை செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டிருந்தார். 25.04.2009 அன்று தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே இக்கருத்தை செல்வி ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அதாவது தனி ஈழமே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்றும், தனது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய அரசாங்கம் புதுடில்லியில் அமையும் பட்சத்தில் இந்தியப் படைகளை அனுப்பித் தமிழீழத்தை தான் நிச்சயம் நிறுவிக் கொடுப்பார் என்றும் தனது தேர்தல் பரப்புரையில் செல்வி ஜெயலலிதா சூளுரைத்திருந்தார்.

இதனையடுத்து மறுநாள் 26.04.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் செய்தியை உள்ளடக்கிய கடிதம் ஒன்று, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில், கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட அக்கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“நடுவப் பணியகம்
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
2009.04.26

செல்வி.ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர்,
அ.இ.அ.தி.மு.க
தமிழ்நாடு.

நேற்று சேலத்தில் இடம்பெற்ற அ.இ.அ.தி.முகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தோம். எமது தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள் எல்லோரும் அதைப்பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்கள். ஏழு கோடி தமிழக மக்களின் குரலாக அம்மாவின் குரல் ஒலித்ததைக் கண்டு எல்லா கவலைகளையும் துன்பங்களையும் மறந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக அம்மா அவர்களுக்கு தலைவர் அவர்கள் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அத்துடன் எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

–நன்றி-
“புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்”

(பா.நடேசன்)
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.”

*********jayalalitha-france-22

ஈழமும் சைக்கிளும் எம் சகோதரியின் அடையாளம்!

மேலதிக வாய்ப்புகளுக்காகவோ அடுத்த பரிணாமத்தை எட்டுவதற்காகவோ விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது, திரைத்துறையிலும் அரசியலிலும் சர்வசாதாரணம். ‘ராஜதந்திரம்’ என்று அதைக் குறிப்பிட்டாலும், சந்தேகத்துக்கிடமின்றி அது ஒரு சரணாகதி! ஆனால், வளர்ச்சிக்கான விதிகளில் ஒன்றாகவே அது ஏற்கப்பட்டுவிட்டது. இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்….. இந்த விஷயத்திலும் அவரைத் தொட்டுத்தொடர்ந்து அவரைப்போலவே விதிவிலக்காக ஜொலித்திருக்கிறார், அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா!

‘சாமர்த்தியம்’ என்கிற பெயரில் ராஜதந்திரப் போர்வைகளை சகோதரி ஜெயலலிதா தன்மீது போர்த்திக் கொண்டதில்லை. தன்னுடைய சுயத்தையும் தனித்தன்மையையும் விட்டுக்கொடுக்காத இரும்பு மனுஷியாகவே இறுதிவரை இருந்திருக்கிறார், இறந்திருக்கிறார்.

தன்னை நேசித்த ஒரு மாபெரும் மக்கள் திரளை, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக ஆக்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அது தமிழ்நாட்டில் இப்போதும் எப்போதும் எந்தக் கலைஞனாலும் எட்டமுடியாத உயரம். மக்கள் நாயகனாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அவர் உருவாக்கிய வலுவான இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற எவராலும் இயலாது என்றே பரவலாகக் கணிக்கப்பட்டது. அந்த யூகங்களையெல்லாம் தவிடுபொடியாக்கியவர், சகோதரி ஜெயலலிதா.

தவறென்று கருதும் எதையும் துணிவுடன் எதிர்க்கும் குணம் திரைப்படத் துறையில் இருந்தபோதே ஜெயலலிதாவுக்கு இருந்தது. அத்துடன், பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிற அறிவுக்கூர்மையும், உடனுக்குடன் முடிவெடுக்கிற தெளிவும் இருந்தது. அறிவுக்கூர்மை – என்பது அவரது ஆங்கில அறிவை மட்டுமே சார்ந்ததல்ல……. அரசியல் அறிவைச் சார்ந்தது. வெறும் சர்ச் பார்க் மாணவியாகவோ, கதாநாயகியாகவோ இருந்துவிடாமல், மக்கள் தலைவியாக அவரைத் தலைநிமிர வைத்தது அதுதான்!

சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து பிரிக்கவே முடியாத அடையாளங்களில் ஒன்றாக சைக்கிளைப் பார்க்கிறேன். அப்படிப் பார்க்க நியாயமான காரணம் இருக்கிறது.

சைக்கிளில் சுமையோடு வந்த ஒரு பெண் தன்னைக் கடந்து சென்றதைப் பெருமிதம் பொங்க தந்தை பெரியார் பார்த்தது ஒரு வரலாற்று நிகழ்வு. பெண், எவரையும் சார்ந்திருக்காமல் தன்னைத்தானே சார்ந்து நிற்க முடியும் என்கிற சுயச்சார்பியல் தத்துவத்துக்கு, சைக்கிள் மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதை உணர்ந்துகொண்டு, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க ஜெயலலிதா முடிவெடுத்தது, மிகமிக முக்கியமான ஒரு வரலாறு. வெறும் இலவசம் மட்டுமல்ல அது! வானம் வசப்படும் என்பதைப் பள்ளி மாணவிகளுக்கு உணர்த்திய பாடம்.

வீட்டை விட்டு வெளியே போக நேரும் தருணங்களில் தந்தைக்காகவோ கணவனுக்காகவோ காத்திருந்தார்கள் மகளும் மனைவியும்! அது ஒரு காலம். இன்று, ஆண்துணைக்காகக் காத்திராமல், இரு சக்கர வாகனமொன்றில் தாயும் மகளுமாக என்னை கடந்து பறந்து போய்க் கொண்டிருக்கிற காட்சியைப் பார்க்கிற போதெல்லாம், ஜெயலலிதா என்கிற பெண்ணரசியை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இது அவர் போட்ட விதை. அதனால்தான் சொல்கிறேன் – சைக்கிள் அவரது அடையாளமென்று!

அவரது முக்கியமான அடையாளங்களில் இன்னொன்று – ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவரது சமரசமற்ற குரல். ஈழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.ஆரின் பங்கு எவ்வளவு வலுவானதாக இருந்ததோ, அதே அளவுக்கு வலுவானதாக இருந்தது – இனப்படுகொலைக்கு நீதிகேட்ட ஜெயலலிதாவின் குரல்.

2009ல், ஈழத்தில், தமிழினப்படுகொலையை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருந்த சமயத்தில், இங்கேயிருந்து அதை பராக்கு பார்த்துக் கொண்டிருந்த ஓர் அரசின் கையாலாகாத்தனம் கண்டு கொதித்தவர்கள் நாம். நமக்கு ஆறுதலாக அமைந்தது, 2011ல், இனப்படுகொலைக்கு நீதிகேட்டு தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்.

2011 மே மாதம் மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா. முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். அந்தத் தீர்மானம் தெளிவானதாக, துல்லியமானதாக, இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கப்பார்த்த இலங்கையின் செவுளில் அறைவதாக இருந்தது.

“ஐ.நா.செயலர் நாயகம் பான் கீ மூன் அமைத்த குழு, அப்பாவித் தமிழ்மக்களை இலங்கை ராணுவம் குண்டுவீசிக் கொன்றதையும், மருத்துவமனைகள் மீது கூட குண்டுவீசப் பட்டதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படியெல்லாம் தமிழ்மக்களைக் கொன்றுகுவித்தவர்களை ‘போர்க் குற்றவாளிகள்’ என்று ஐ.நா. அறிவிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தை இந்தியா தரவேண்டும்…….

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே, தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர். சமஉரிமையுடனும், சமஅந்தஸ்துடனும், சுயகௌரவத்துடனும் வாழ அனுமதிக்கும்படி தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாக, தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இலங்கை. இந்திய அரசு இதில் தலையிட்டு, சிங்களருக்கு இணையான சம அந்தஸ்தையும் சம உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கும்படி இலங்கையை வலியுறுத்த வேண்டும். அதுவரை இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்……

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிற மனித நேய உதவிகளைக் கூட, இலங்கை தடுக்கிறது. போரின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது. போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்போரையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிப்போரையும் மனிதாபிமானமின்றி நடத்துகிறது…..

போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்த வசதியுமற்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த மண்ணில் குடியேற உடனடியாக வழிவகுக்க வேண்டும். இந்த விஷயத்திலும் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும்…….”

என்றெல்லாம் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் வலியுறுத்தியது. அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“ஒருபுறம், மருத்துவமனைகள் மற்றும் போர்த் தவிர்ப்பு வலயத்தில் (NO FIRE ZONE) கூட இலங்கைப் படைகள் குண்டுமாரி பொழிந்தன. இன்னொருபுறம், அப்பாவித் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கூட அவர்களைப் போய்ச் சேர்ந்துவிடாதபடி தடுத்தது இலங்கை. தமிழ்மக்களைப் பட்டினி போட்டது. பெருவாரியான தமிழர்கள், உணவு மற்றும் குடிநீர் கூட கிடைக்காமல் உயிரிழக்க நேர்ந்தது……

ஐ.நா. குழு அறிக்கை, இந்த மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்கிறது. என்றாலும், இதற்கெல்லாம் காரணமான ராஜபக்சவையும் அவரது தோழர்களையும் ‘போர்க்குற்றவாளிகள்’ என்று அது குறிப்பிடவில்லை. போர்க்குற்றவாளிகள் – என்று அவர்களை அறிவிக்கும்படி, ஐ.நா.வை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்…..” என்று தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஜெயலலிதா பேசியது குறிப்பிடத்தக்கது.

2013 மார்ச் மாதம், இன்னொரு முக்கியமான தீர்மானத்தைத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றினார் சகோதரி ஜெயலலிதா. சுதந்திரத் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – என்று பேராண்மையுடன் பறைசாற்றியது அந்தத் தீர்மானம்.

திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்திய இலங்கை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படாத நிலையில், சென்ற ஆண்டு (2015), தமிழக சட்டப் பேரவையில் சகோதரி ஜெயலலிதா இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தமிழக மக்களின் தார்மீகக் கோபத்தைப் பிரதிபலிப்பதாக அது இருந்தது.

“2009ல் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து ஓர் இனப்படுகொலையை நடத்தியது இலங்கை அரசு. அதில் தொடர்புடையவர்களை ‘போர்க்குற்றவாளிகள்’ என்று ஐ.நா. அறிவிக்க வலியுறுத்தும்படியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் 2011ல் இந்திய அரசை வலியுறுத்தினோம்…..

அதற்குப் பின், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். 2012ல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்கெல்லாம் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை…..

இப்போது, நிலைமை தலைகீழாகிவிட்டிருக்கிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கையே விசாரித்துக் கொள்ள வழிவகுக்கிற தீர்மானம் ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட இருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. இது இயற்கை நீதிக்கு முரணானது….

இலங்கை செய்த இனப்படுகொலை குறித்து இலங்கையே விசாரணை நடத்தினால் நிச்சயமாக நீதி கிடைக்காது…. சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை நிலைநிறுத்தும். இந்த விஷயத்தில் இலங்கை வட மாகாண சபை தீர்மானத்துக்கேற்ப சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்…..

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தும் வலுவான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டுவரவேண்டும்…..”

தீர்மானத்தை முன்மொழிந்தபோது முதல்வர் ஜெயலலிதா முன்வைத்த இந்த வாதங்கள், உலகத் தமிழர்கள் அத்தனைப் பேருக்கும் ஆறுதலளித்தது.

இடைப்பட்ட ஒரு இக்கட்டான தருணத்தில், அது 2013 என்று நினைக்கிறேன்….. ‘இலங்கை செய்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் ஒருவரித் தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டுவரவேண்டும்’ என்கிற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் முன்வைத்தது. அதன்பிறகே, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தின.

ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டு, சகோதரி ஜெயலலிதா வலியுறுத்திய ஐந்து விஷயங்கள் முக்கியமானவை.

  • இலங்கை அரசு செய்தது திட்டமிட்ட இனப்படுகொலை.

  • இலங்கை செய்த போர்க்குற்றங்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச விசாரணையே வழி. உள்நாட்டு விசாரணையை ஏற்கமுடியாது.

  • போர்க்குற்றவாளி இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

  • பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

  • சுதந்திரத்தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு அவசியம்.

ஈழத் தமிழ் உறவுகளுக்கு நீதிகேட்ட அந்தத் தேவதையின் இந்தப் பிரகடனத்தை வார்த்தைக்கு வார்த்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவரது அரசைத் தொடரப் போகிற தலைவர்களுக்கு இருக்கிறது. அவர்களில் பலரும், ஈழம் மலர உறுதுணையாக இருந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் வழியில் வந்தவர்கள்…. ஈழத்துக்கு நியாயம் கேட்ட சகோதரி ஜெயலலிதாவின் பின்னால் நின்றவர்கள். தமிழர் இதயத்தில் ஜொலிக்கும் அந்த இருபெரும் நட்சத்திரங்களின் கனவை நிறைவேற்றுவதில் ஒருபோதும் அவர்கள் பின்வாங்கிவிடக் கூடாது.

சகோதரி ஜெயலலிதாவின் இயல்பான குணம், எந்தச் சூழ்நிலையிலும் தனது நிலையிலிருந்து பின்வாங்காதிருந்தது! அது, அவரது இயல்பான போர்க்குணம். அதுதான், எந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த பீரங்கிவண்டியிலிருந்து தள்ளிவிடப் பட்டாரோ, அதே இடத்தில் 30 ஆண்டுகள் கழித்து அவரது உடலைக் கொண்டுவந்து வைத்திருக்கிறது.

அன்று, எம்.ஜி.ஆர். என்கிற நாயகனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்திய லட்சக்கணக்கான மக்கள், இன்று அதே இடத்தில் அவரது அரசியல் வாரிசுக்குக் கண்கலங்க அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போது போலவே இப்போதும், தமிழக மக்களின் கண்ணீருடன் உலகெங்குமிருக்கும் எங்கள் ஈழத்து உறவுகளின் கண்ணீரும் கலந்திருக்கிறது. அதை அறிந்தே எழுதுகிறேன் இதை!

சகோதரி ஜெயலலிதா வலியுறுத்தியதைப் போலவே, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் குற்றவாளி இலங்கை கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தால், சர்வதேச விசாரணை நடத்தப்பட்டிருந்தால், ‘நடந்தது இனப்படுகொலை தான்’ என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். கனவுகண்ட தனித் தமிழீழம் மலர்ந்திருக்கும். சகோதரி ஜெயலலிதாவின் உடல் மீது, இந்திய தேசியக் கொடியுடன், எங்களது தமிழீழத் தேசத்தின் கொடியும் சேர்த்துப் போர்த்தப்பட்டிருக்கும். நமது அண்டை நாடு ஒன்றிலும், தேசத்தின் துயராக, இந்தத் தாயின் மரணம் அறிவிக்கப்பட்டிருக்கும்.

அந்த ஆதங்கத்தை மறைத்துவைத்துக் கொள்ள முடியவில்லை என்னால்! அந்த ஆதங்கத்துடன், தாயாய்த் தமிழரைத் தாங்கிய எங்கள் தேவதையை நினைந்து நினைந்து நெகிழ்ந்து போகிறேன்.

புகழேந்தி தங்கராஜ்

jayalalitha-france

 

Advertisements