jeyalalitha-appollo-setup-5மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்படுகிறன. இது எதற்காக என்று கேள்வியுடன் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறந்தவர்களின் உடல் பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும் பதனிடும் முறை. எம்பால்மிங் என்ற வேதியியல் முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

உடல் கெடாமல் இருக்கும். அதற்கான அடையாளம் தானா இது அல்லது அவர்களது குடும்ப வழக்கப்படி முதல்வர் இறந்த பின்னர் அவருக்கு ஏதாவது சடங்கு செய்யும்போது, முகத்தில் கரும்புள்ளிகள் ஏதாவது வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்று அந்த மருத்துவமனை அறிவித்தது.

நீண்ட சிகிச்சைக்குப் பின்னர், பலனின்றி இறந்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடம்பு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டது.

jeyalalitha-appollo-setup-4

இந்த சடங்கின்போது, ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி வெளியானது. பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான் சடங்குகள் செய்தார் என்று கூறப்பட்டது.

இந்த சடங்கின்போது அவரது முகத்தில் நான்கு புள்ளிகள் வைக்கப்பட்டதா? அல்லது உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தப் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் கெடாமல் இருக்க என்றால் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. பிறகு ஏன் அந்த நான்கு புள்ளிகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

jeyalalitha-appollo-setup-1எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா? சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்:

* முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் ஜெயலலிதா பூத உடல் முப்படையினரிடம் எத்தனை மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பூத உடலை முப்படையில் பெற்றுக் கொண்ட நபரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் ஜெயலலிதா, பூத உடல் மீது வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசிய கொடியை எடுத்து சசிகலா நடராஜனிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவதற்கு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த அடிப்படையில் எந்த வரிசையில் வாரிசுதாரர்களிடம் சட்டவிதிகளின்படி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் தேசிய கொடியை இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத நபரிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கலாம் என சட்ட விதிகள் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இந்து சமய அடிப்படையில் நடைபெற்றுள்ளது எனில் இந்து வாரிசு உரிமை சட்டப்படி தேசிய கொடியை முப்படை வீரர்களிமிருந்து பெறுவதற்கு சட்ட அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதை அடிப்படையில் எந்த சட்டபிரிவின் கீழ் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் மொத்தம் எத்தனை குண்டுகள் முழுங்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முதல்வர் பதவியிலிருந்த காரணத்தினால் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையும், குண்டு முழக்கமும் மற்றும் அவரது பூத உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளது எனில் எந்த சட்டப்பிரிவின் கீழ் இந்த நடைமுறை அனுமதிக்கப்படுகிறது என்ற விவரம் தர வேண்டும்.

* ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெறுவதற்கு முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அல்லது எத்தனை மணி நேரத்திற்கு முன்பு ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றது போல தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்தெந்த முன்னாள் முதல்வர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது என்று விவரம் தர வேண்டும்.

* அரசு மரியாதை கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில் விண்ணப்பம் செய்ய வேண்டிய நபரின் பெயர், முகவரி தர வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்யும் தகுதி யார், யாருக்கெல்லாம் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய உயிலின் நகல் தர வேண்டும்.

* உயிலானது எந்த தேதியில் எழுதப்பட்டது எந்த தேதியில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். அரசிடம் கொடுக்கப்பட்ட உயிலினை பெற்றுக் கொண்ட அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு மற்றும் உயிலை பெற்றுக் கொண்டமைக்கு பதிவேட்டில் பதிவு செய்யயப்பட்டு வழங்கப்பட்ட எண் விவரம் தர வேண்டும்.

* தமிழக முதலமைச்சராக பன்னீர் செல்வம் எந்த தேதியில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நேரம், நாள் விவரம் தர வேண்டும்.

* முதலமைச்சர் பதவி ஏற்றபொழுது அவருடன் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றார்கள் என்ற விவரம் தர வேண்டும். அவர்களுக்கு ஆளுநர், பதவி பிரமாணம் எத்தனை மணிக்கு செய்து வைத்தார். எந்த தேதியில் என்ற விவரம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பணி பொறுப்பு ஏற்று கையொப்பமிட்ட பதிவேட்டின் நகல் தர வேண்டும்

* முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்து கொடுத்த கடித நகல் தர வேண்டும்.

* முதலமைச்சராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன பொறுப்பு வைத்திருந்தார் என்ற விவரம் தர வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தவிர வேறு என்னென்ன பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அரசு எத்தனை மணிக்கு வெளியிட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் எந்தெந்த தேதிகளில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் என்ற விவரம் தர வேண்டும்

* முன்னாள் முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் உடல்நலம் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் கொடுத்த நகல் தர வேண்டும்.

* தமிழக அரசின் முதல்வராக பொறுப்பு வகித்து இறந்த பின்னர், மரபுபடி தற்காலிக முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ்நாட்டின் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் இப்போது மட்டும் மரணமடைவதற்கு முன்பு முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனில் முன்னாள் முதல்வருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்துவதற்கு எந்த வகையில் சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமானது யாருக்கு சொந்தமான இடம் என்ற விவரம் தர வேண்டும்.

* இடமானது அரசின் பராமரிப்பிலும் அரசுக்கு சொந்தமாகவும் உள்ளது எனில் அந்த இடத்தில் தமிழக முன்னாள் முதல்வர்களை நல்லடக்கம் செய்ததற்கு வழங்கப்பட்ட அனுமதி கடித நகல் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் எந்த தேதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* கட்டணமானது என்னென்ன வகைக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். அப்போலோவில் ரூம் வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். மருந்து வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களும் சேர்த்து மொத்தம் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தனித்தனியே வழங்கப்பட்ட தொகை தேதி வாரியாக மற்றும் கொடுக்கப்பட்ட வரைவோலை, காசோலை, பணம் விவரம், வங்கியின் விவரம், காசோலை எண் உட்பட அனைத்து தகவல்களும் தர வேண்டும்

இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்.டி.ஐ கேள்விகள் தபால் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

****
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடிவெள்ளி மறைந்தது!

அரசியலில் சக்தி மிக்கவராகத் திகழ்ந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார் என்ற செய்தி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு ஆகிய நோய்த் தாக்கத்தினால் கடந்த செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் கட்டத் தலைவர் இல்லாத கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஜெயலலிதா கட்டி எழுப்பி உள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் இரண்டாகப் பிரிந்த கட்சியை மீண்டும் ஒன்றாக்கி அரியணையில் ஏற்றிய பெருமை ஜெயலலிதாவைச்சாரும். அரசியல் சனக்கியாரான கருணாநிதிக்கு தக்க பதிலடி கொடுத்து தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. வைகோ,ராமதாஸ், விஜயகாந்த ஆகியவர்களின் கட்சிகளுக்கு அரசியல் அங்கீகரம் பெற்றுக்கொடுத்தவர். தனது தேவை முடிந்ததும் அவர்களை அரசியல் அநாதையாக்கி தனது கட்சியை முன்னுக்குக் கொண்டு வந்த அரசியல் வித்தகர்.

ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றி விசாரிப்பதற்கு மத்திய தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள் அப்பலோ வைத்தியசாலைக்கு படையெடுத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் சென்றது அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்பட்டது. தயாளு அம்மையாரும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சந்தித்ததற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. இப்போது கருணாநிதியின் உடல் நிலைபற்றி தயாளு அம்மையாரிடம் சசிகலா விசாரித்ததை ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. ஜெயலிதா பூரணமாக சுகமடைந்து வீடுதிரும்ப வேண்டுமென கட்சிபேதமின்றி அனைவரும் பிரார்த்தித்தனர். விதி விலக்காக விஜயகாந்த் மட்டும் ஜெயலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கு காய்ச்சல் நீர்ச்சத்துக் குறைவு ஆகியவையே காரணம் எனக்கூறப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளிப்பதற்காக இலண்டனில் உள்ள வைத்திய நிபுணர் ஐந்து முறை அப்பலோவுக்கு விஜயம் செய்தார். ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்குவதற்காக சிங்கப்பூரில் இருந்து இருவர் வரவழைக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவர் குழு ஜெயலலிதாவைப் பார்வையிட்டது. சுமார் 27 வைத்தியர்கள் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன கடந்த 4 ஆம் திகதி இரவு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ நிர்வாகம் அறிவித்தது. இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்கள் கதிகலங்கினர். ஜெயலலிதா குணமடைந்துவிட்டார். எப்போது வீடு திரும்புவதென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என அப்பலோ அறிவித்தது. ஜெயலலிதா சுகமடைந்து வீடு திரும்புவர் என சந்தோசத்தில் மிதந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அப்பலோவை முற்றுகையிட்டனர்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் தமிழகத்தைத் தொற்றிக்கொண்டது. இதற்கிடையில் அரசியல் காய் நகர்த்தல்களும் ஆரம்பமாகிவிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சென்னைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டது. யார்மூலம் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதென்ற விபரம் வெளியாகவில்லை. ஆதரவுக் கடிதம் பெறுவதற்காகவே அவர்கள் சென்னைக்கு அழைக்கப்படிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் அவரது கட்சியைச்சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டது. அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மோடியால் அறிவிக்கப்பட்ட செல்லாக்காசு பற்றிய செய்திகள் அனைத்தும் பின் தள்ளப்பட்டு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய செய்தி முன்னிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருடைய உடல் நிலை பற்றி அறிய தமிழகம் ஆவலாக இருந்தது. அவருடைய நோய், அவருக்குச்சிகிச்சை வழங்கப்படும் முறைபற்றிய செய்தி அனைத்தும் இரகசியமாக கையாளப்பட்டன. எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தலால் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையை அப்பலோ நிர்வாகம் வெளியிடவில்லை என்ற பிரச்சினை எழுந்தது. பின்னர் அப்பலோவின் சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகின. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அவ்வப்போது தகவல் வெளியிட்டனர்.

தமிழக ஆளுனர் வித்யாசாகர், ராகுல்காந்தி, ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராமதாஸ், அன்புமணி உட்பட மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பலோவுக்குச் சென்றார்கள். யாருடைய கண்ணிலும் ஜெயலலிதா சிக்கவில்லை. அப்பலோவில் யாரோ சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளைபோல ஜெயலலிதா சுகமாக இருக்கிறார். என ஒப்புவித்தார்கள்.

ஜெயலிதாவின் இழப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய பேரிடி. ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க் கட்சிகளுக்கு ஜெயலலிதா இல்லாத அரசியல் மிகவும் இலகுவானதாக இருக்கப்போகிறது.

ஜெயலலிதா இறந்துவிட்டதாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான செய்தியால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிலர் கொதித்துப்போய் வன்முறையைக் கையில் எடுத்தனர். ஜெயலலிதா இறக்கவில்லை என அப்பலோ அறிக்கை வெளியிட்டதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நிம்மதியாக நித்திரைக்குப் போனவர்கள் கலையில் எழுந்ததும் ஜெயலலிதா மரணமான செய்தி அதிர்ச்சியளித்தது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வெளியான செய்தியைக் கேள்விப்பட்ட ஐந்து பேர் அதிர்ச்சியில் இறந்துவிட்டனர். மூவர் மாரடைப்பால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமாவும் ஏழைகளுக்கு செய்த உதவியும் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியது. எம்.ஜி.ஆரின் அரவணைப்பும் ஆதரவும் ஜெயலலிதாவை முதல்வராக்கியது. அரசியலுக்குள் நுழைந்த போது அரசியல் பற்றிய பாலபாடம் எதுவுமே தெரியாதவராக இருந்த ஜெயலலிதா தனது ஆற்றலின் மூலம் அரசியல்வித்தகர்களை எல்லாம் ஆட்டிப்படைத்தார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர். இவர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் வரை ஜெயலலிதாவின் மரணச்செய்தி வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மரணமான பின்னர் இரகசிய அரசியல்காய் நகர்த்தல்கள் பல நடைபெற்றுள்ளன. ஜெயலலிதாவின் மரணம் பற்றிய அறிவித்தல் அரசியல் சாசன முறைப்படி அறிவிக்கப்படவில்லை. அப்பலோ வைத்திய சாலையின் அறிக்கையாகவே வெளியானது. ஜெயலலிதாவின் இறுதிக்கிரியை இன்று மாலை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இனிமேல்தான் தமிழக அரசியல் சூடுபிடிக்க உள்ளது.

தமிழக அரசியல் சதுரங்கத்தின் பகடைக் காயாக ஜெயலலிதாவை யாரோ பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆரின் உடல் நிலைபாதிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சைபெற்று மீண்டும் வந்து முதலமைச்சரானார். சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை பெற்றபின் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் விமானத்தில் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரைக் காப்பற முடியவில்லை. ஜெயலிதாவின் உடல் நிலை பற்றிய உணமைகளை ஏன் வெளியிடவில்லை. மேலதிக சிகிச்சைக்காக அவரை ஏன் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்விகளுக்கான பத்தி இப்போதைக்கு வெளிவராது மர்மமாகவே இருக்கப்போகிறது.

வர்மா

Advertisements