இன்குலாப் அய்யா அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

praba-inkulap

எப்பொழுதெல்லாம் தமிழீழ மக்களுக்கு வழித்ததோ அப்பொழுதெல்லாம் தனது குருதி சிந்தும் கவிதைகளால் உயிரை கரைத்த கவிஞன் இன்குலாப் அய்யா அவர்கள் இன்று இயற்கை மரணமடைந்துள்ளார்.

பதிவு இணையதளம் சார்பாக அவருக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்துகின்றோம்.

இன்குலாப் இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.

தர்க்காவில் ‘பேய் ஓட்டுகிறேன்’ என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.

இவரது கவிதைகள் ‘ஒவ்வொரு புல்லாய்’ எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் ‘ஆனால்’ எனும் நூலாகவும், நாடகங்கள் ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘குரல்கள்’ எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் ‘பாலையில் ஒரு சுனை’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. ‘பொன்னிக்குருவி’ ‘புலி நகச் சுவடுகள்’ எனும் கவிதை நூல்களும், ‘மணிமேகலை’ நாடக நூலும் தயாராகி வருகின்றன.

இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

**********

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி:

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி எனப்பாடியவர் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் மக்கள் கவிஞர் என சிறப்பிக்கப்படுபவருமான கவிஞர் இன்குலாப் இன்று காலமானார்.

தமிழகத்தின் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இன்குலாப் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

எஸ். கே. எஸ். சாகுல் அமீது என்னும் இயற்பெயர் கொண்ட இன்குலாப் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தவர். பாடசாலைப் படிப்பைக் கீழக்கரையில் முடித்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்தார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்

முதலில் மார்க்சிய கம்யூனிஸ இயக்க ஆதரவாளரான அவர், பிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார்.

தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு, கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி, அவ்வை மற்றும் மணிமேகலை ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட மொத்த கவிதைகளின் தொகுப்பு , ‘ஒவ்வொரு புல்லையும்’ என்னும் பெயரில் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்தது.

மார்க்சிய ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலையம் வெளியிட்டுள்ளார். இவரது ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்னும் புகழ் பெற்ற பாட்டு இன்று வரை எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது.

சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளாராக இருந்த போதிலும் பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்வு இன்குலாப்பை மார்க்சியம் நோக்கி போகச் செய்தது.

மார்க்சிய கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று. கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.

மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது என்று சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கவிஞர் இன்குலாப் எழுதிய ஈழம் குறித்த கவிதை

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி:

நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை

வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?

ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?

எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?

கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!

உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்மௌன மொழிகளில்!;

***

குருதி சொட்டும் செம்மொழி

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இவை
விடை வேண்டும் கேள்விகள்

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்

விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….

கவிஞர் இன்குலாப்

***inkulab-1

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர் -ரவிக்குமார்

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப்.

திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1965 ல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்ட மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுத் தனது கருத்தியல் பிரச்சாரத்துக்கு உவப்பான கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப்போயினர். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காமல் மௌனம் காத்தனர். ஒருசிலர் அந்த சம்பவத்தால் மார்க்சியத்தை நோக்கித் திரும்பினர். அத்தகைய சிலரில் ஒருவராக இருந்தவர் இன்குலாப்.

‘இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது காலனியமும் நிலப்பிரபுத்துவமும் கலந்து உருவானது. இங்கே ஓர் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அது பாராளுமன்ற அரசியலால் மட்டும் சாத்தியமாகாது’ என்ற புரிதலோடு கிராமப் புறங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளிடையே அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை இன்குலாப் ஆதரித்தார்.

1970 களின் முற்பகுதியில் உருவெடுத்த வானம்பாடி கவிதை இயக்கத்தில் ஒருவராகத் துவக்கத்தில் அறியப்பட்ட இன்குலாப் மிகக் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டார். ஆனால் ,

” இதயம் குமுறும் நீக்ரோ – கையில்

ஏந்தும் கறுப்புத் துப்பாக்கியால்

ஆஞ்சலா டேவிஸ் புகைகின்றாள் – வெள்ளை

ஆதிக்க முகத்தில் உமிழ்கின்றாள்”

என அவரது ‘வெள்ளை இருட்டு ‘ தொகுப்பில் இடம்பெற்ற துவக்க காலக் கவிதைகளில் வானம்பாடி இயக்கத்தின் தடம் பதிந்தே இருந்தது.

விடுபட்ட பிரச்சனைகளை எழுதியவர்

திராவிட இயக்கத்தால் உந்தப்பட்டவர் என்றாலும் அந்த இயக்கத்தின் கவனத்திலிருந்து விடுபட்டுப்போன பெண் விடுதலை, தலித் பிரச்சனை முதலானவை குறித்து ஆரம்பகாலம் தொட்டே கவிதைகளை எழுதி வந்தவர் இன்குலாப். அவரது அந்தக் கருத்தியல் சார்புதான் ‘கண்மணி ராஜம்’ ஸ்ரீ ராஜராஜேச்சுவரம்’ முதலான கவிதைகளை அவர் எழுதக் காரணமாக அமைந்தது.

‘கண்மணி ராஜம்’ கவிதை பாடநூல் ஒன்றிலிருந்து நீக்கப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அதுபோலவே ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தபோது அதை விமர்சித்து இன்குலாப் எழுதிய ’ராஜராஜேச்சுவரம்’ கவிதையும் போராட்டங்களுக்குத் தூண்டுகோலானது. அக்காலங்களில் திமுக ஆட்சியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இன்குலாப் அறியப்பட்டார்.

ஈழப் பிரச்சனையும் இன்குலாப்பும்

1980 களின் முற்பகுதியில் ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. ‘கறுப்பு ஜூலை’ என ஈழத் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் 1983 ஆம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொதித்தெழச் செய்தன.

அந்த நேரத்தில் சிங்களப் பேரினவாத வன்முறையைக் கண்டித்த தமிழகத்து மரபான இடதுசாரிக் கட்சிகள் அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிவதாக ஈழத் தமிழரிடையே முகிழ்த்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க மறுத்தன.

அதனால் தமிழ்த் தேசியத்துக்கு இடதுசாரிகள் எதிரானவர்கள் என்பதுபோன்ற கருத்து பரவியது.

அந்த அவப்பெயரை மாற்றும் விதமாக தேசிய சுய நிர்ணய உரிமை குறித்த மார்க்சிய லெனினிய கருத்தாக்கங்களை முன்வைத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆதரவான நிலைபாட்டை எடுத்த இடதுசாரிகள் மிகச்சிலரில் இன்குலாப்பும் ஒருவர்.

இட ஒதுக்கீடும் இன்குலாப்பும்

ஈழப் பிரச்சனைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டு இடதுசாரிகளின் கருத்தியலை சோதிப்பதாக ‘மண்டல் பரிந்துரை அமலாக்கம்’ அமைந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என வலதுசாரி சக்திகள் பெரும் கலவரங்களில் இறங்கின. அந்த நேரத்திலும்கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே மைய நீரோட்ட இடதுசாரிகள் மேற்கொண்டனர்.

ஆனால் மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக்கொண்ட இன்குலாப் முதலான சில இடதுசாரி அறிவுஜீவிகள்தான், மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்பட்டத்தை ஆதரித்துக் களமிறங்கினர்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கப் பற்றாளர்களும் இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு நிற்பதற்கு வழிவகுத்த அபூர்வமான தருணம் அது. அந்தப் பிணைப்பு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் வேரூன்ற இடம் தராமல் இன்றளவும் தடுத்துக்கொண்டிருப்பது அந்தப் பிணைப்புதான்.

இன்குலாப் செவ்வியல் இலக்கியம் முதல் நவீனத் தமிழ் இலக்கியம்வரை ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.

ஆனால் தமிழுக்கு உரிமை கொண்டாடிய புலவர் மரபைச் சேர்ந்தவர்களைப்போல மொழியின் வழிபாட்டாளாரக இல்லாமல் தமிழ் மொழியையும், இலக்கிய மரபுகளையும், பண்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிற விமர்சன குணம் அவரிடம் இருந்தது.

1980 களின் பிற்பகுதியில் ஈழத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் கவிதைகளை அழகியலோடு எழுத முடியும் என அவை உணர்த்தின.

அதற்கு முன்னதாகவே வானம்பாடிக் கவிஞர்களின் ‘ரொமாண்ட்டிக்’ பாணியிலிருந்து விடுபட்டு அரசியல் கவிதைகளை அழகியலோடு சொல்ல முற்பட்டவர் இன்குலாப்.

மத அடையாளம் தவிர்த்த பகுத்தறிவாளர்

அது மட்டுமின்றி ஒரு படைப்பாளி அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் போராளியாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் மத அடையாளத்தைத் தவிர்த்து ஒரு பகுத்தறிவாளராகவே வாழ்ந்தவர். அதனால்தான் ,

” சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!”

என்று அவரால் பாட முடிந்தது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பென்ணுரிமை, தலித் பிரச்சனை – ஆகிய இரண்டையும் தொடர்ந்து முக்கியத்துவம் தந்து பேசிவந்தவர் இன்குலாப். அவர் எழுதி கே.ஏ.குணசேகரன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட ‘மனுசங்கடா’ என்ற பாடல் இப்போது தலித்துகளின் புரட்சி கீதமாக போற்றப்படுகிறது. அவரால் எழுதப்பட்டு மங்கை அவர்களால் மேடையேற்றப்பட்ட ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் பெண்ணியப் பிரச்சனையை மிகவும் நுட்பமாகப் பேசுபவை.

மரபான இடதுசாரிகளால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலைபாட்டை மேற்கொண்டிருந்தவர் அவர். தமிழ்த் தேசியவாதிகளில் ஒருவராக அடையாளம் காணப்படக்கூடிய அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியவர். ஆனால் இப்போது அடிப்படைவாதமாக சுருக்கப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை. அவர் எழுதிய ‘ என் பெயர் மருதாயி ‘ என்ற கவிதையைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

“அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!

உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த

காலகாலமாய் நானும் நடக்கிறேன்

கற்புத் தோன்றிய அன்றைக்கே

நானும் தோன்றிவிட்டேன் –

தாய்மொழி – தமிழ்

பெயர் – மருதாயி

தொழில் – பரத்தை”

என்று முடியும் அக்கவிதையைப் பண்பாட்டுக் காவலர்களால் எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?.

தமிழ்நாட்டில் அரசவைக் கவிஞர்கள் இருக்கிறார்கள், தன் முன்னேற்றக் கவிஞர்கள் இருக்கிறார்கள், இலக்கியமே எமது குறி என்று அரசியல் வாடைபடாத புனிதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே அரசாங்கத்தால் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் இன்குலாப் எந்தவொரு அரசு அங்கீகாரத்தையும் பெறவில்லை.

” வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை”

அரசு அங்கீகரிக்கும் என பாரதியை நோக்கி எழுதுவதுபோல ஒரு கவிதையில் இன்குலாப் எழுதினார். அரசு அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதன் பொருள் அவர் பிணமாக வாழவில்லை என்பதுதான். அந்த மகத்தான மக்கள் கலைஞனுக்கு என் அஞ்சலி

(* கட்டுரையாளர் கவிஞர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்)

**inkulap
காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும் கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தையாளன் இதழில் படித்து இருக்கிறேன் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

.நூல் முழுவதும் கவிதை விருந்து இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
ஆசிரியன்
ஆசாரியனாய் நுழைகிறான்
கையில் பிரம்புடன்
மனசில் பூநூலுடன்
மனிதர்களில் பலர் மனசாட்சியை அடகு வைத்து விட்டுத்தான் வசந்தம் அடிகிறார்கள் .என்ற நடப்பியலை சாடி புத்திப் புகட்டும் விதமான கவிதை நன்று .
” மனச்சாட்சியை உறங்க விட்டுருந்தால்
வசப்பட்டிருக்கும் வசந்தம் .”

வேலையநிடமிர்ந்து விடுதலைப் பெற்றோம் .ஆனால் வெறுமை ஏழ்மை லிருந்து விடுதலைப் பெறவில்லை .பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .ஏழை மேலும் ஏழை ஆகிறான் .இந்த அவலம் உணர்த்தும் நல்ல கவிதை ஒன்று .

ஆகஸ்டு 15 முன்னிட்டு எழுதிய கவிதை !

கண்ணீர் கோடு !
ஒரு பக்கம் மட்டுமே
கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிகிற
அறுபதாண்டு மரம் இது .
கன்றாய் நட்ட இதனது பாத்தியில்
குடம் குடமாய் ஊற்றினோம்
எங்கள் வியர்வையை
அடியுரமாய்
எரிக்கப்பட்ட எங்கள் சாம்பல் !
.
மனிதநேயத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார் கவிதைகளில் .திண்ணியம் கொடூர நிகழ்வை கண் முன் கொண்டு வந்து மனிதே நேயம் கற்பிக்கிறார் .

ஐயா நீதிமானே !
ஐயா நீதிமானே
எங்களுக்கு எங்களைத் தவிர
யாருமில்ல
சாட்சி சொல்ல
செருப்பால் அடிச்சதையும்
காய்ச்சுன இரும்புக் கோலால்
ஒவ்வொருத்தன் காலில் உழுந்து
மன்னாப்புக் கேட்டதையும்
தண்டம் கட்டியதையும்
எல்லாத்துக்கும் மேலே
பீ தின்ன வச்சதையும் !

இரண்டு வரிக் கவிதையின் மூலம் இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

பன்னீரில் இல்லை
ரோஜாவின் அழகு !

அவர் நினைத்து எழுதிய பொருள் தவிர படிக்கும் வாசகனுக்கு பல பொருள் தோன்றும் .

சித்தர்களின் பாடல்கள் போல ஜென் தத்துவம் போல வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன .

ஞானி ; ” முடிவில் ஒன்றுமில்லை .”
பாமரன் ; ” தொடக்கதிலிருந்தே ஒன்றுமில்லை .”

மீன்கள் பறவைகள் விட மனிதன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

நீந்தத் தெரிந்தது நீந்துகிறது !
பறக்கத் தெரிந்தது பறக்கிறது !
படகிலோ
வண்டியிலோ
குந்தாமல் !

மறைந்தும் மறையாமல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வாழும் மாமனிதர் பற்றிய கவிதை ஒன்று .மிக நன்று .

தோழர் ஆண்டன் பாலசிங்கம்
இரண்டாம் ஆண்டு நினைவாக !
விடுதலை உச்சரித்த சொல்
பேசிய குரல்
ஒரு மரணத்தோடு முடிவடைவதில்லை
அது
காற்றின் துணுக்குகளில் தவழ்கிறது .
உயரும் விடுதலைக் கொடியின்
படபடப்பில் எழும் முதலோசை
தோழர் ஆண்டன் பாலசிங்கம்
உம்குரலாக இருக்கும் .!

தொழிலாளர்கள் பாடுவதுப் போன்ற கவிதைகள் உள்ளன .மொத்தத்தில் வாசகனுக்கு சிந்தனை விதைக்கும் கவிதைத் தொகுப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப்அவர்களுக்கு பாராட்டுக்கள்