தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்று கடந்த 14.12.2016 உடன் பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தன் வாழ்நாளில் எல்லோருக்குமே முன்னுதாரணமாக திகழ்ந்தவர் பாலா அண்ணை. பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்கள் பேசுவது ஒன்றாகவும், செய்வது இன்னொன்றாகவும் இருக்கும். இதில் விதிவிலக்காக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
அப்படியான விதிவிலக்கான மனிதர்களில் பாலா அண்ணையும் ஒருவர். சொல்லிலும் சரி, செயலிலும் சரி ஒரு புரட்சிக்காரனாகவே பாலா அண்ணை வாழ்ந்தார். மக்களை ஆழமாக நேசித்த ஒரு புரட்சிக்காரனாகவே அவர் மடிந்தார். இறுதிக் காலங்களில் அவரது எண்ணமும், கரிசனையும் தனது மக்களைப் பற்றியே இருந்தது. மரணம் சம்பவிக்கும் இறுதி நாட்களில் கூட மக்களுக்குத் தன்னால் எதனையும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமே அவரிடம் இருந்தது. அப்படிப்பட்ட பாலா அண்ணையிடம் இருந்து இன்றைய அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் கற்றுக் கொள்வதற்கு நிறையவே பாடங்கள் உள்ளன. அவையெல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் நாம் எழுதுவதென்பது சாத்தியமில்லை.
எனவே தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான முனைப்புக்கள் வீச்சுப் பெற்றுள்ள இன்றைய சூழமைவில், அரசியல் தீர்வு விடயத்தில் பாலா அண்ணையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பாகவே இக்கட்டுரை விரிகின்றது.
ஒரு புரட்சிகரமான ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தம்மைத் தாமே ஆளும் உரிமையை, அதாவது தன்னாட்சியுரிமையை, தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோகராகவும், தத்துவாசிரியராகவும் 1978ஆம் ஆண்டு இணைந்து கொண்டவர் பாலா அண்ணை. இவ் இலட்சியத்தை அடைவதற்காகப் பிரித்தானியப் பல்கலைக் கழகம் ஒன்றில் தான் வகித்த விரிவுரையாளர் பதவியை தூக்கியெறிந்து விட்டு 1983ஆம் ஆண்டு இந்தியா சென்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவின் ஆயுதப் பயிற்சி கிடைப்பதற்கும், மாமனிதர் எம்.ஜி.ஆர் அவர்களின் நிதியுதவி கிட்டுவதற்கும் வழிசமைத்தவர் பாலா அண்ணை.
இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்ட பொழுது, அதனால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சவால்களை நுட்பமாக எதிர்கொண்டவர் பாலா அண்ணை. தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனமாக ஈழ சுதந்திர சாசனம் என்ற ஆவணத்தை பாலா அண்ணை உருவாக்கினார். இதற்கு ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் ஆகிய மூன்று ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் ஆதரவைப் பெற்றுத் தனி ஈழமே ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஒருமித்த இலட்சியம் என்பதை இந்திய அரசுக்கு இடித்துரைத்தார். எனினும் இதனை இந்தியா நிராகரித்தது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களையும் இந்தியா முடக்க முற்பட்டது.
அப்பொழுது மீண்டும் பாலா அண்ணையின் சாணக்கியம் வெளிப்பட்டது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஏற்படுத்தப்படும் எந்த விதமான அரசியல் தீர்வும் ஈழத்தீவில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை ஏற்கும் வகையில் அமைய வேண்டும், ஈழத்தமிழர்களின் தாயகமாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற நான்கு மூலக் கோட்பாடுகளை அன்று பாலா அண்ணை முன்னிறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக உருப்பெற்ற இந்த நான்கு கோட்பாடுகளையும், ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களையும், மிதவாத அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பாலா அண்ணை ஏற்றுக் கொள்ள வைத்தார். இந்த நான்கு கோட்பாடுகளுமே பின்னர் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு திம்புக் கோட்பாடுகளை உருவாக்கியதன் மூலம் நான்கு விடயங்களை அனைத்துப் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலா அண்ணை தெளிவுபடுத்தினார். முதலாவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனவே ஈழத்தமிழர்களுக்கானது மட்டுமன்றி, அவர்களின் தொப்புள் கொடி உறவுகளான மலையகத் தமிழர்களுக்குமானது என்பது. இரண்டாவது, வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தமிழர் தாயகம், அல்லது தமிழர் மாநிலம் என்ற விடயத்தில் எந்த விதமான சமரசத்தையும் ஈழத்தமிழர்கள் செய்ய மாட்டார்கள் என்பது. மூன்றாவது, ஈழத்தீவின் பூர்வீக குடிகள் என்ற வகையிலும், வரலாற்றுக் காலம் தொட்டு ஈழத்தீவின் வடக்குக் கிழக்கு மாநிலத்தில் தமக்கான இராச்சியங்களையும், சிற்றரசுகளையும் கொண்டவர்கள் என்ற வகையில் தாம் ஒரு தேசிய இனம் என்பதை அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது. நான்காவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டாலே ஒழிய அத்தீர்வைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது.
தான் தத்துவார்த்த வடிவம் கொடுத்த இந்தத் திம்புக் கோட்பாடுகளில் இறுதிவரை பாலா அண்ணை உறுதியாகவே இருந்தார். 1987ஆம் ஆண்டு டில்லியில் தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து ராஜீவ் காந்தியுடன் நடாத்திய சந்திப்பாக இருந்தாலும் சரி, கொழும்பில் 1989ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆண்டு வரை பிரேமதாசாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, 1994ஆம், 1995ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சந்திரிகா அம்மையாருடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலுமே தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய திம்புக் கோட்பாடுகளில் பாலா அண்ணை உறுதியாகவே இருந்தார் (திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் மலையக மக்களின் குடியுரிமை உறுதி செய்யப்பட்டதால், அவ்விடயம் தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்று என்ற நிலையை விட்டு நீங்கியது).
நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஓரங்கமாக 2002ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுக்களில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டது. அது அன்றைய காலகட்டத்தில் சில மேதாவிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.
பாலா அண்ணை சமஸ்டிக்குள் சறுக்கி விட்டார் என்று ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரபல ஆங்கில இணையம் ஒன்றின் ஆசிரியர் அன்று முணுமுணுத்தார். அன்றைய காலகட்டத்தில் அவரது குரல் நான்கு சுவர்களுக்கு வெளியில் வரவில்லை என்பது வேடிக்கையானது. மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் பாலா அண்ணை ஈடுபடுகின்றார் என்று ஈரோஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான மதில்மேல் பூனைகள் சிலர் குற்றம் சுமத்தினார்கள். ஈராஸ் அமைப்பைக் கலைத்து விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதன் தலைவர் க.வே.பாலகுமாரன் உள்ளடங்கலான போராளிகள் இணைந்து கொண்ட பொழுது வெளியேறிய ஒரு சில மதில்மேல் பூனைகளே அன்று இவ்வாறு கொக்கரித்தார்கள்.
இன்னொரு புறத்தில் பூகோள அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது பாலசிங்கம் நடந்து கொள்கின்றார் என்று இன்னுமொருவர் காட்டமாக விமர்சித்தார். 1980களில் புளொட் அமைப்பை அரசியல் ரீதியில் பாலா அண்ணை பலவீனப்படுத்தியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கான பழிவாங்கலாக அன்றைய காலப்பகுதியில் அந்நபரின் விமர்சனம் இருந்தது.
இவையெல்லாவற்றையும் கடந்து இன்னும் சிலர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களைக் கடுமையாக விமர்சித்தார்கள். ‘தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைச் சுடுமாறு கூறிய பிரபாகரன், இப்பொழுது தமிழீழத்தை பாலசிங்கம் கைவிடுவதற்கு அனுமதித்து விட்டார்’ என்று தமிழீழ தேசியத் தலைவரை நோக்கி வசைபாடினார்கள். இவை எல்லாவற்றின் உச்சகட்டமாக பாலா அண்ணை பயணிக்கும் பாதை தவறானது என்று வன்னியில் அன்று விசுவநாதன் உருத்திரகுமாரன் ஒப்பாரி வைத்தார்.
இன்று பாலா அண்ணை உயிருடன் இல்லை. ஆனால் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சமஸ்டி பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டைக் காற்றில் பறக்க விட்டுத், தமிழர்களை ஒரு சிறுபான்மை இனமாகச் சிறுமைப்படுத்தி, பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கு சாவுமணி அடித்து விட்டு சமஸ்டி பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முன்னிறுத்தும் சமஸ்டி முறையில் தமிழர்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ஆனால் சமஸ்டியில் சறுக்கியதாக மேதாவிகளால் அன்று விமர்சிக்கப்பட்ட பாலா அண்ணை சமஸ்டி பற்றி என்ன கூறினார்?
2002ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 3ஆம் நாளன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டார்:
‘இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும் வரை எமது இராணுவக் கட்டமைப்பு பேணப்படும். அதற்குப் பின்னரான காலத்திலும் மாநில சுயாட்சி அல்லது சமஸ்டி அமைப்பின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான பொறிமுறை பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். எனவே எமது ஆயுதப் படையணிகள் தமிழ் மக்களின் உயிர்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக இருந்தே ஆக வேண்டும்.’
இவ்வாறு தமிழ் மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்புப் பொறிமுறை பற்றிக் குறிப்பிட்ட பாலா அண்ணை, வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் எந்தவிதமான சமரசங்களும் இடம் கிடையாது என்பதை 2003 பங்குனி மாதம் 16ஆம் நாளன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய இன்னொரு செவ்வியில் அடித்து கூறினார்:
‘புவியியல் ரீதியான அலகு என்ற கோட்பாடு சமஸ்டி அரசியல் தீர்வுக்கு அடிப்படையானது. உலகளாவிய ரீதியில் காணப்படும் சமஸ்டி அமைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவான பண்பியல்பு இதுவாகும். எனவே ஒரு புவியியல் ரீதியான அலகு அமைவது அவசியமாகும். தமிழர்களைப் பொறுத்தவரை வடக்குக் கிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வரலாற்று ரீதியான நிலப்பரப்பு எமக்கு உள்ளது. இதனைத் தமிழ்த் தாயகம் என்று மட்டும் அழைக்காது முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய தமிழ் பேசும் தாயகமாகவே நாம் அழைக்கின்றோம். எனவே தொடர்ந்தேட்சியான தமிழ் புவியியல் அலகு என்பது எந்தவிதமான சமஸ்டித் தீர்வுக்கும் அடிப்படையாக அமைய வேண்டும். இதனை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால் சமஸ்டித் தீர்வு என்பது சாத்தியமாகாது.’
அச் செவ்வியின் இன்னொரு பகுதியில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றிய கேள்வி எழுந்த பொழுது, பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டார்:
‘சமஸ்டி அடிப்படையிலான மாநில சுயாட்சி அமைப்பில் தமிழர்களுக்கென்று தனியான மாநில நீதித்துறையும், மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் இருக்கும். இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் உறவைப் பேணும் விதத்தில், மத்தியும், மாநிலங்களும் அதிகாரங்களைப் பகிரும் வகையில், தமிழர்களுக்கான தனித்துவமான நிர்வாகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் கொண்ட சமஸ்டி அலகு வடக்குக் கிழக்கில் இயங்கும்.’
இவ்வாறு 2002ஆம், 2003ஆம் ஆண்டுகளில் தான் வழங்கிய ஊடகச் செவ்விகளில் குறிப்பிட்ட பாலா அண்ணை, தமிழீழ மக்களின் பிரிந்து செல்லும் உரிமை பற்றி 2005ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட போரும் சமாதானமும் என்ற நூலில் பின்வருவருமாறு குறிப்பிட்டிருந்தார்:
‘சுயநிர்ணய உரிமையின் உள்ளக வெளியக அம்சங்கள் ஒன்றோடு ஒன்று இணையப் பெற்று இருக்கின்றன. மக்களின் சம உரிமைகளும், சுயநிர்ணய உரிமையும் உள்ளீட்டாக நிறைவு செய்யப்படுவது அரசுகளின் கடப்பாடு என்பதை ஐ.நா. பிரகடனங்கள் வலியுறுத்தியுள்ளதை நாம் பார்த்தோம். ஒரு அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே இந்த உரிமைகள் (சம உரிமையும் சுயநிர்ணய உரிமையும்) நிறைவு காணப்பட்டால் மட்டுமே ஒரு அரசானது பிரதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்த முடியும். ஆனால் ஒரு மக்கள் சமூகத்திற்கு அதன் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரசாட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்டால், அம் மக்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு, அதாவது பிரிந்து சென்று அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டும் உரிமைக்கு உரித்துண்டு. உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரச அடக்குமுறைக்கு ஆளாகும் மக்கள் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதை, 1970இன் ஐ.நா.பிரகடனத்தையும் கனடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி நிறைய ஆய்வுப் பிரசுரங்கள் வெளியாகியுள்ளன.
சுயநிர்ணய உரிமையின் உள்ளக, வெளியகப் பரிமாணங்களின் உறவுநிலையை ஆதாரமாகக் கொண்டே விடுதலைப் புலிகளின் கொள்கை நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய வேண்டும்.’
அதாவது பாலா அண்ணையைப் பொறுத்தவரை, தனியரசுக்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும், வடக்குக் கிழக்கு இணைந்த ஒன்றுபட்ட தமிழர் தாயகத்தை ஏற்றுக் கொள்ளும் விதத்திலும், தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கும் வகையிலும், ஒரு தேசிய இனம் என்ற விதத்தில் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் அவர்களின் உரிமையை மறுதலிக்காத வண்ணமும் அமைய வேண்டும். அந்தத் தீர்வு சமஸ்டித் தீர்வாக இருந்தாலும் சரி, வேறு வடிவங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, தமிழர்களின் உயிர்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்கான இராணுவக் கட்டமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அவ்வாறு அல்லாது எந்தத் தீர்வும் எக்காலத்திலும் தமிழர்களுக்குப் பயன்தரப் போவதில்லை.
இதுதான் இன்று சமஸ்டி பற்றிப் பேசுபவர்களுக்கும், அன்று பாலா அண்ணையை விமர்சித்தவர்களுக்கும் பாலா அண்ணை விட்டுச் சென்றிருக்கும் பாடமாகும்.
– கலாநிதி சேரமான்
Recent Comments