புகுந்து விளையாடினார்கள் கூத்து அமைப்பு என்று சொல்லியிருந்தேன்.
ஆமா, கேடுகெட்டவர்கள், அங்கு கூத்தடித்தார்கள்.
ஒரு இணையத்தளத்தின் கட்டுரையில் இருந்து
பொதுச் சுடரை ஏற்றி மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய அரசியல் அசிங்கங்கள்
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்களில் இம்முறை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், இத்தகைய பேரெழுச்சி நிகழ்வுகளில் தன்னை தலைவர் என்றோ தளபதிகள் என்றோ, மாவீரர்களை ஈன்றெடுத்த உறவுகள் என்றோ நினைத்து சில அரசியல் அசிங்கங்கள் செய்யும் ஈனச் செயலை நினைத்தால் வயிறு குமட்டிக் கொண்டு வருகிறது.
இந்த அரசியல் அசிங்கங்களின் ஈனச் செயல் தொடர்பில் மக்கள் தங்களுக்குள்ளேயும், சமூக வலைத்தளங்களிலும் காரசாரமாக விமர்சித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மாவீரர் நாள் நடைமுறையில், பிரதான சுடரினை தலைவர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்ற சம நேரத்தில் மாவீரர்களோடு களமாடிய தளபதிகள் துயிலுமில்லங்களில் ஏற்றுவார்கள். ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்கள் ஏற்றுவார்கள். அவர்கள் வராதவிடத்து உடன் களமாடிய தோழர் தோழியர்கள், பிறகுதான் மற்றவர்கள்… மாவீரர்நாள் பண்பாடு, ஒழுக்கம் இவ்வாறு தான் இருந்தது.
இதுவரை காலமும் மிக பாதுகாப்பு கெடுபிடியான நேரம் கூட கரும்புலி மேஜர் போர்க்கின் தாயார் தான் வவுனியாவின் எல்லா ஈழ நிகழ்வுகளுக்கும் விளக்கேற்றுவார். (25-11-2016-இறைவன் அடி சேர்ந்து விட்டார்) கிளிநொச்சியில் மட்டும் என்ன அரசியல் நாடகம் இது?
களமாடியவர்களை விடுத்து களவாணிகள் பொதுச்சுடர் ஏற்றும் நிலை வந்திருக்கிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்?
தலைவர் ஒரு முறை சொன்னாராம், தமிழீழம் கிடைத்தவுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட போராளிகளோடு வாழப்போகின்றேன். தலைவர் அவர்கள் முதலில் மாவீர்களை அடுத்தபடி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட போராளிகளை நேசித்தார். இன்று அந்த போராளிகளுக்கும் இந்த பிரதான பொதுச்சுடர் ஏற்றும் பாக்கியம் இல்லாது போயிற்று.
நாமெல்லாம் மாவீர்ர் குடும்பங்களுக்கு இந்த நாளில் தொண்டர்களாக இருக்கவேண்டும்.மாறாக இந்த ஒரே ஒரு நாளில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையையும் மதிப்பையும் நாம் பச்சையாக சூறையாடக்கூடாது.
முழங்காவிலில் மாவை என்கிற அரசியல் அசிங்கமும், கனகபுரத்தில் சிறீதரன் என்கிற போலித் தமிழ்த் தேசியவாதியும் சுடரேற்றிய கொடுமையை என்னவென்று சொல்ல?
மாவீரர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகவும், அவர்களின் நினைவைச் சுமந்து தான் வருடா வருடம் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
காலில் செருப்புக் கூட இல்லாமல், கல்லு, முள்ளுகள், அடர் வனங்களுக்குள் நின்று களமாடிய அந்த மாவீரத் தெய்வங்களுக்கு, மக்களிடம் சென்று அரசியல் பணியாற்ற சொகுசு கார் இல்லாமல் போக முடியாத அரசியல் வங்குரோத்துக்கள் எல்லாம் பொதுச் சுடரேற்றும் காலக் கொடுமையை என்னவென்று சொல்ல?
கூட்டமைப்பினர் ஒரு வருடம் முழுக்க செய்யும் அரசியல் பித்தலாட்டங்களை வருட இறுதியான நவம்பர் 27 இல் மாவீரர் நினைவேந்தல் எனும் பெயரில் பூசி மெழுக முயலுவதனை யாரும் அனுமதிக்க முடியாது.
பிரித்தானியாவில் ஒக்ஸ்போட் மாநகரத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் பொதுச்சுடரை முதல் மாவீரன் 2ம் லெப் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் தந்தை ஏற்றி வைத்தார்.
அதே போல் உடுத்துறை, வவுனியா, மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்களில் கூட பொதுச் சுடர்களினை மாவீரர்களின் தாய், தகப்பன், உறவுகள் ஏற்றி வைத்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கறை படிந்த கரங்களால் சில இடங்களில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை காணும் போது விடுதலைக்காக வீரகாவியமாகிய சகோதரர்களை கொண்ட எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.
வேட்டி கூட கசங்காத இந்த அரசியல் அசிங்கங்கள் இங்கே செய்யும் ஈனச் செயல்களைப் பார்த்து வானத்திலிருந்து கண்ணீர் விடாதீர்கள் மாவீரத் தெய்வங்களே?
அரசியல்வாதிகள் பின்னிருந்து மக்களை சரியாக வழிநடத்த வேண்டுமே ஒழிய, மாபெரும் தியாகங்களைப் புரிந்த மாவீரத் தெய்வங்களின் குடும்பத்தினருக்கு உரிய மதிப்பினையும், கௌரவத்தினையும் வழங்க வேண்டும்.
மாவீரர்களின் தியாகத்தில் குளிரகாய்வதென்று இதனைத் தான் சொல்வார்கள்.
அதனை சிறிதரன், மாவை போன்றோர் பொதுமேடையேறி செய்துகாட்டியுள்ளனர். இதைவிட மக்களுக்கு யாரும் எளிதாகப் புரியவைக்க முடியாது.
இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகள் எவரும் மாவீரர் துயிலும் இல்லங்களில் மேடையேறுவதோ அல்லது உரை நிகழ்த்துவதோ மாவீரர் குடும்பங்களால், முன்னாள் போராளிகளால் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
இனிவரும் காலங்களில் ஆவது மாவீரர் பொதுச் சுடரை யார் ஏற்றுவது என்பது தொடர்பில் ஏற்கனவே எமது மண்ணில் இருந்த நடைமுறை உரிய முறையில் பின்பற்றப் பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பும் ஆகும்.
Newjaffna
*****************
என்னத்தைச் சொல்ல?
இதோ இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தமது கையால் தமக்கு குடை பிடிக்கிறார்கள்.
ஆனால் எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்கவும்கூட இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.
இது குறித்து இவர்களுக்கு வெட்கம் இல்லை. சொல்லப்போனால் பெருமையாக அல்லவா நினைக்கிறார்கள்.
வீதியில் வந்த மாணவர்கள் சுடப்படுகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பை; பற்றி பேசவேண்டிய எமது தலைவர்கள் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு போதாது என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் தலைவர்தானே. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு எதற்கு சிங்கள பொலிசாரின் பாதுகாப்பு?
சிங்களப் பொலிசாரின் பாதுகாப்பை வைத்திருப்பதும் அல்லாமல் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லவா கேட்கிறார்கள்.
இவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் சலுகைகள் இரண்டு லட்சம் ரூபா. இவர்கள் திரிவதற்கு 8 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம். போதாக் குறைக்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு.
இத்தனை கொடுத்தும்கூட இவர்கள் குடும்பத்துடன் வாழ்வது இந்தியாவில். ஏன் இவர்களால் வாக்கு பெற்ற மக்கள் மத்தியில் வாழ முடியவில்லை?
இவர்களை தேடிச் சென்று முறையிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நித்திரையில் இருப்பது, அல்லது திறப்பு என் கையில் இல்லை என்று கிண்டலாக பதில் சொல்வது.
இந்த கொடுமைகளுக்கு என்னதான் முடிவு?
இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களை நாம் சகித்தக் கொள்வது?
2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக நடந்தேறி முடிந்திருக்கிறது.
மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றுமுடிந்தாலும் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீதான விமர்சனங்களும் சரமாரியாக காணப்பட்டுவருகின்றன.
உண்மையில் கிழக்கிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வே மிகக்கூடுதலாக அவதானிக்கப்பட்டதாக தெரிகிறது.
நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளில் தங்கள் உறவுகளுக்கு அவர்கள் விதைக்கப்பட்ட மண்ணில் சுடரேற்றுகின்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்தார்கள்.
ஆன போதிலும் அந்த நிகழ்வுகளில் தங்கள் பிள்ளைகளுக்காக திரண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அழைப்புக்காகத் திரண்டதாகத் தோற்றம் காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.
அதாவது, துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
இவற்றில் குறிப்பாக கனகபுரம், முழங்காவில் மற்றும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான சுடர் ஏற்றியிருந்தனர்.
துயிலும் இல்லங்களுக்கு திரண்டிருந்த பெற்றோரிலோ உறவினர்களிலோ தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மாவீரர்கள் மூவர் அல்லது நால்வரை விடுதலைக்காகக் கொடுத்தவர்களே கூடுதலாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையேனும் பிரதான சுடர் ஏற்றவைத்துவிட்டு அதற்கு துணையாக அரசியல் பிரமுகர்கள் நின்றிருக்கலாம் என்பது தான் அனைவரது அங்கலாய்ப்பாகவும் ஏதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது.
இந்த இடத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜனநாயகப் போராளிகள் நடந்துகொண்டவிதம் அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. மாவீரர்களின் தாயார் ஒருவரே பிரதான சுடர் ஏற்றியிருக்கிறார். இந்த இடத்தில் தான் ஜனநாயகப் போராளிகள் தாங்கள் முன்னாள் போராளிகள் தான் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகளோ அரசியல் ஆதாயத்துக்காக மாவீர்களுக்கு பிரதான சுடர் ஏற்ற ஆசைப்பட்டு தங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றியபோதிலும் அதுகுறித்த ஒளிப்படங்களோ, செய்திகளோ சமூகவலைத் தளங்களையோ ஊடகங்களையோ அலங்கரிக்கவில்லை.
ஆனால் கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூலில் (கவனிக்க) நேரலையாக ஒளிபரப்பட்டப்பட்டது. அதனைவிடவும் தரமான ஒளிப்படங்களும் வெளியாகியிருந்தன.
எனவே தாயகத்தை மட்டுமல்லாது சர்வதேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்களையும் உற்றுப்பார்க்கும் அளவிற்கு அவருடைய முகநூல் காட்சிகள் அமைந்திருந்தன. இதுவரையில் இலட்சக்கணக்கான வாசகர்கள் அந்தக் காட்சியினைப் பார்த்திருந்ததை அவதானிக்கமுடியும்.
இதேவேளையில் இன்னொரு விடயமும் நடைபெற்றிருந்தது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது அந்த மாவீர்நாளின் பிரதான விடயமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உரை அமைவது வழக்கம்.
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் சுடர்ஏற்றிக்கொண்டிருக்க. விடுதலைப்புலிகள் பாணியில் அமைக்கப்பட்ட பிரதான சுடரினை சிறிதரன் ஏற்றியிருந்தார். அதன் பின்னர் பாராளுமன்றில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ஆற்றியிருந்த உரையினை துயிலும் இல்லத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
துயிலும் இல்லங்களில் உரைகளை தவிர்க்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையிலும் சிறிதரனின் ஏற்பாட்டுக்கு அமைய அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஒளிபரப்பட்டிருக்கிறது.
சரி, அவருடைய முகப்புப்புத்தகத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டுமழைகள் ஏராளமாக குவிந்துவருவதை அவதானிக்கமுடிகிறது. தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் வடிவேலு என்கிற நகைச்சுவை நடிகரை நினைவுபடுத்தும் வகையில் சிறீதரனின் உரையும் அதன் பின்னணியும் அமைந்திருந்தமை அடுத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.
“மண்டைக்குள்ள இருக்கிற கொண்டைய மறந்திட்டீங்களே” என்பது போல பாராளுமன்றத்தில் சிறீதரன் ஆற்றிய உரையின் மூலங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள் தமிழ்மக்கள்.
தமிழீழத் தேசியத் தேசியத்தலைவர் அவர்கள் ஆண்டு தோறும் ஆற்றிய மாவீரர்நாள் உரைகளில் ஒவ்வொரு பந்தியை களவாடி தன்னுடைய உரையாக பாராளுமன்றில் முழங்கியிருக்கிறார் சிறீதரன். தலைவருடைய உரையை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கது தானே என்கின்றனர் சிறீதரனின் ஆர்வலர்கள்.
அன்பான ஆர்வலர்களே,
அவர் தலைவருடைய உரையினை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவர் தன்னுடைய உரையின் போது எந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர்நாள் உரையில் தலைவர் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார் என்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கலாம்.
ஆனால் அவர் ஆற்றிய உரை இரண்டு உள்நோக்கங்களின் பின்னணியைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று பாராளுமன்றில் ஆற்றப்படுகின்ற உரையை மையப்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது.
இன்னொன்று அதே உரையை துயிலும் இல்லத்திலும் ஒளிபரப்பினால் பாராளுமன்ற உரையைத்தான் ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துவிடலாம்.
தலைமையை இலக்குவைத்தே அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், சொந்தமாக மாவீரர்கள் நினைவாக ஒரு உரையைக் கூட எழுதமுடியாத நிலையில் “கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன் வானம் ஏறி வைகுண்டம் போனேன்” என்றானாம் என்பது போல அவருடைய தலைமைக்கனவு என்கின்றனர் விமர்சகர்கள்.
சிறீதரனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை தங்களுடைய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடந்ததாக எண்ணிக்கொள்ளலாம். அந்த எண்ண ஓட்டம் பாமர மக்கள் மத்தியில் எடுபட்டும் இருக்கலாம்.
ஆனால் இந்த விடயங்களுக்குப்பின்னால் இன்னொரு நரித்தனத்தின் தந்திரம் இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.
மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றன, படங்களும் வெளியாகியிருந்தன. இவை ஒருவகையான திடீர் எழுச்சியாகவும் அரசியல்வாதிகளின் சாதனையாகவும் தெரியலாம். ஆனால் இந்த விடயங்கள் பல மாதங்களுக்கு முன்னரே அரச இயந்திரத்தினால் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
துயிலும் இல்லங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துவைத்திருந்த படையினர் அங்கு தங்களுடைய முகாம்களையும் நிறுவியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் கைவிட்ட சம்பவங்களை ஊடகங்கள் சில வெளியிட்டுமிருந்தன.
உண்மையில் துயிலும் இல்லங்களை விடுதலைசெய்வது என்பது பரந்த மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் என்று யாராவது கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
மைத்திரி அரசாங்கத்தின் பிரதான இயங்குதளமாக ரணில்விக்கிரமசிங்கவே விளங்கிவருகிறார். அவருடைய திட்டத்தின் அடிப்படையிலேயே துயிலும் இல்லக் காணிகள் சில விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் காணி விடுவிப்பிற்கான உரிமையை கூட்டமைப்பினர் கோரமுடியாது. காரணம் மண்வெட்டிகொடுப்பதையோ, கோழிக்குஞ்சு கொடுப்பதையோ அரசியலாக ஊடகங்களில் பயன்படுத்துகின்ற கூட்டமைப்பினர் தாங்கள் இவ்வாறு ஒரு கோரிக்கை விடுத்திருந்தால் அமைதி காத்திருப்பார்களா?
இந்த இடத்தில்தான் ரணிலின் திட்டமே இது என்ற விடயம் வலுக்கிறது. எதிர்வரும் காலத்தில் ரணில் – மைத்திரி அரசின் கூட்டுஅணி வெற்றிபெறுவது என்பது சிங்கள தேசத்தினை மட்டும் வைத்துக்கொண்டால் எட்டாக்கனியே. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் இருக்கின்ற மக்களின் மனங்களை நிரந்தரமாக அபகரிக்க ஒரே வழி மாவீரர்நாளை கொண்டாட அனுமதிப்பது என்ற தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கு அவர் வழிசெய்திருக்கிறார் என்றே கருதவேண்டும்.
அடுத்த மாவீர்நாளுக்கு முன்பாக இன்னும் பல மாவீரர் துயிலும் இல்லங்களும் விடுவிக்கப்படலாம்.
இதேவேளையில் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் நல்லாட்சியில் சிறந்து விளங்குவதாக காட்டுவதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளின் மாவீர்ர்களை நினைவுகூரும் அளவிற்கு நிலமை சுமூகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளமுடியும். இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீண்டுவருகின்ற சிங்கள ஆட்சிபீடத்தினை இன்னும் மீட்டுத்தரும் என்பதை அவர்கள் செயல்வடிவில் காட்டியும் வருகிறார்கள்.
இவ்வாறான நிலையில் மாவீரர்நாளை நடைபெற வைப்பதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதற்கான இன்னொரு ஆதாரத்தையும் முன்வைக்கமுடியும்,
துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளைச் செய்வதற்காக ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்தினை நாடி அனுமதி கோரியிருக்கின்றனர்.
பொலிஸார் மூன்று நிபந்தனைகளை முன்வைத்து அனுமதி வழங்கியிருக்கின்றனர்.
அவையாவன,
தமிழீழத் தேசியக் கொடி ஏற்றக்கூடாது, விடுதலை கீதங்கள் இசைக்கக்கூடாது, தமிழீழத் தேசித்தலைவரின் ஒளிப்படங்களையோ சீருடைகளையோ பயன்படுத்தக்கூடாது என்பன.
ஆக, மேலிடத்திலிருந்து கிடைத்திருக்கின்ற அனுமதியின் அடிப்படையிலேயே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளும் நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக மனம் உருகி சுடரேற்றி வணங்கினார்கள் என்பது மாற்றுக் கருத்துக்கிடமின்றிய ஆறுதல் தரும்விடயம்தான்.
ஆனாலும் இந்தத் தியாகங்களை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்ற தந்திரங்கள் தென்னிலங்கை மையப்பீடத்திலும் வடக்கின் அரசியல்மைய பீடத்திலும் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை அப்பாவி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
-கீதன்-
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
போரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்
நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.
2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்
2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.
கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.
அலை அலையாக வந்த மக்கள்
ஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.
அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.
ஒளிபெற்ற துயில் நிலம்:
மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.
உணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.
தவிப்பை தடை செய்ய முடியாது
துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.
எங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.
மாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள கருணா இன்று பிற்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் 800 மில்லியன் ரூபா பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த அரச வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
**
கருணா குழுவுடன் இணைந்து பல கொலைகளைச் செய்துள்ளேன்? நேரடிச் சாட்சி!
கருணா குழுவினருடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளை தான் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தனவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த சாட்சியளர் மேற்படி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இந்த விடயத்தை சாட்சியாளர் வெளிபப்டுத்திய போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய கடும் எதிர்ப்பினை முன்வைத்ததால் மன்றில் சிறிது நேரம் வாதப் பிரதிவாதங்கள் நீடித்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை படுகொலை செய்த விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணி லால் வைத்திய திலகவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் ஆரம்பமானது. முதலாவது சாட்சியாளரான அரச சாட்சியாக மாற்றப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி முதலாவது சாட்சியாக நேற்றும் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
பிரதிவாதி சட்டத்தரணிகளான அசித் சிறிவர்தன மற்றும் அனோஜ பிரேமரத்னவின் குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அவர் அளித்த சாட்சியம் வருமாறு :
அசித்: 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியின் கிழகில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் சேவையாற்றிய காலப்பகுதியில் கருணா குழுவுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டீரா?
பதில்: ஆம்
அசித்: அந் நடவடிக்கைகள் எவ்வாறானது என விளக்கமுடியுமா?
பதில்: அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட, உட்படாத பகுதிகளில் புலிகள் அமைப்புக்கு எதிராக கருணா குழுவினருடன் இணைந்து தாக்குதல்களை நடத்துவது. அவர்களை கொலை செய்வது.
அசித்: நீர் கூறுவது அனைத்தும் உண்மை என்பது தானே உம்முடைய நிலைப்பாடு?
பதில்: ஆம்
அசித்: இவ்வழக்கின் குற்றம் மற்றும் சதி தொடர்பில் நீர் கூறிவதும் அப்படியானால் உண்மை தானா?
பதில்: ஆம்
அசித்: உம்மை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று, ரவிராஜ் கொலையை வெளியே கூறாமைக்கு உயிர் அச்சுறுத்தல் காரணம். மற்றையது, கொல்லப்பட்டது ரவிராஜ் தான் என்பதை நீர் வானொலி ஊடாகவே அறிந்துள்ளீர். அப்படித்தானே?
பதில்: ஆம்
அசித்: நீர் பொய் சாட்சி கூறுகின்றீர் என நான் பரிந்துரைக்கின்ரேன்.
பதில்: அதனை நான் நிராகரிக்கின்றேன்.
அசித: ரவிராஜை கொல்லப் போகும் திட்டம் உமக்கு ஏற்கனவே தெரியும் தானே?
பதில்: இல்லை.
அசித்: கடந்த 2015.2.26 அன்று நீர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழக்கிய வாக்கு மூலம், அதாவது நீர் உண்மைகளை மட்டுமே கூறியதாக கூறும் வாக்கு மூலத்துக்கு அமைய ரவிராஜை சாமி கொலை செய்ய தீட்டிய திட்டம் உமக்கு தெரிந்துள்ளது. அது தொடர்பில் நீர் வாக்கு மூலம் அளித்துள்ளீர். ?
(இதன் போது எழுந்த சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய அக்கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வாக்கு மூலத்தை மன்றில் வாசித்து காட்டுவதற்கும் இடம்கொடுக்கக் கூடாது என்றார்)
அசித் : ரவி ராஜ் கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் நீர் பொலிஸ் சேவையில் இருந்தீரா?
பதில்: ஆம்
அசித்: அப்படியானால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்புக்கள் உமக்கும் இருந்தது?
பதில்: ஆம்
அசித்: அப்படியானால் நீர் சாட்சியம் அளிக்கும் போது கூறினீர், ரவி ராஜ் கொலையின் முக்கிய பிரதிவாதிகளான சாமி சரண் ஆகியோர் கொழும்பில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்ததாக. அப்படியானால் அது தொடர்பில் நீர் உமது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தீரா?
பதில்: இல்லை.
அசித்: ரவிராஜ் கொலைக்கு அவர்கள் தயாரானமை நீர் அறிந்திருந்தீர். அப்படி இருந்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யப் போவதை ஏன் நீர் அறிவிக்கவில்லை.?
பதில்: என்னிடம் புலி இயக்க முக்கியஸ்தர் ஒருவரை கொல்லப் போவதாகவே கூறினர்.
அசித்:இல்லை. நீர் ரவிராஜை கொல்லப் போகும் திட்டத்தை முன் கூட்டியே அறிந்திருந்தீர். ஆகவே தான் பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் சாமி தன்னிடம் கூறியதாக அந்த விடயத்தை கூறியுள்ளீர்?
பதில்: ஞாபகம் இல்லை.
அசித்: சரி, ரவிராஜ் கொலைக்கு முன்னர் உளவு பார்த்ததாக ஏதும் தகவல்களை சாமி கூரினாரா?
பதில்: ஆம், ரவிராஜின் வீட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கை ஒன்றினை சாமி, சரண், டூசேன், பிரசாத், வஜிர,செனவிரத்ன ஆகியோர் இணைந்து முன்னெடுத்ததாக கூறினார்.
( இதன் போதும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தமது எதிர்ப்பை முன்வைத்ததையடுத்து, நீதிபதி மணி லால் வைத்திய திலக, அந்த சோதனை நடவடிக்கையில் சாட்சியாளர் நேரடியாக பங்கேற்ராரா என கேள்வியை தொடுத்தார். அதற்கு சாட்சியாளர் இல்லை என பதிலளித்தையடுத்து அது தொடர்பில் கேள்வி கேட்க அனுமதியளிக்க மறுத்தார்.)
அசித்: உமக்கு பிறகு சாட்சியளிக்கவுள்ள 2 ஆவது சாட்சியாளரை தெரியுமா?
பதில்: ஆம்
அசித்: மூன்றாவது சாட்சியாளரை தெரியுமா?
பதில்: ஆம்
அசித்: 2006.11.09 ஆம் திகதி நீரும், ஏனைய இரு சாட்சியாளர்களும் சேர்ந்து தொழில் நுட்ப கல்லூரி சந்தியில் ரவிராஜை கொலை செய்ய முயன்ற போது அவ்விடத்தில் மோட்டர் சைக்கிளில் இருந்தீர் தானே?
பதில்: இல்லை. அதனை மறுக்கின்ரேன்.
அசித்: ரவிராஜ் கொலைக்கு முன்னரேயே, கொலை செய்யப்பட்ட தினம் நீர் செலுத்திய மோட்டர் சைக்கிள் உமக்கு தரப்பட்டது.
பதில்: இல்லை
கேள்வி: தலை கவசம் கூட ஒரு வாரத்துக்கு முன்பே உம்மிடம் கொடுக்கப்பட்டது என நான் யோசனை செய்கின்றேன்.
பதில்: அதனை நிராகரிக்கின்றேன்.
அசித்: நீர் கருணா குழுவுடன் இணைந்து செய்த குற்றத்தை மறைக்க பிரதிவாதிகளுக்கு எதிராக பொய் சாட்சி கூறுகின்றீர் என் நான் பிரேரிக்கின்றேன்.
பதில்: நிராகரிக்கின்றேன்.
அசித்: ரவிராஜின் கொலை இடம்பெற்ற தினம் சாமி உம்மை எங்கு வரச் சொன்னார்?
பதில்: பொரளை கனத்தை அருகே
அசித்: கனத்தை என்பது மிக விசாலமான பகுதி. அதன் முன்பாக ஒரு சுற்று வட்டம் உள்ளது. அந்த சுற்றுவட்டம் ஊடாக 5 பாதைகள் பிரிந்து செல்கின்ரன?
பதில்: ஆம்
அசித்: அப்படியாயின், கனத்தை அருகே வருமாறு சாமி கூறியதும் நீர் எப்படி சரியாக, மாதா வீதிக்கு மிக அருகில் போய் நின்றீர்? ஏற்கனவே உமக்கு பாதை அறிவிக்கப்படாமல், சதி தெரியாமல் இருப்பின் எப்படி அது சாத்தியமாகும்?
பதில்: இல்லை. சாமி வரச் சொன்னதாலேயே அங்கு சென்றேன்.
அசித்: அங்கு சாமி, சரண் வந்தனரா?
பதில்: ஆம். கறுப்பு முச்சக்கர வண்டியில் சாமி சரண், டூசேன் ஆகியோர் வந்தனர்.
அசித்: வேறு யார் வந்தனர்?
பதில்: பச்சை மற்றும் கிறீம் நிர முச்சக்கர வண்டிகளில்பிரதிவாதிகள் வந்தனர். கிறீம் நிற முச்சக்கர வண்டியில் கடற்படையைக் குறிக்கும் எழுத்துடன் கூடிய இலக்கத்தகடு காணப்பட்டது.
அசித்: அந்த முச்சக்கர வண்டிகளில் வந்தோர் யார்?
பதில்: ஞாபகம் இல்லை
அசித்: ஞாபகம் இல்லை என்பது பொய். கறுப்பு முச்சக்கர வண்டி மட்டுமே வந்தது. அதில் கருணா குழுவினர் வந்துள்ளனர்.?
பதில்: இல்லை மறுக்கின்றேன்.
அசித்: சாமி, சரண், டூசேன் ஆகியோர் இந்த வழக்கில் தற்போது இல்லாததால் நீர் தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறு பொய்யான சாட்சியம் அளிக்கின்ரீர்?
பதில்: இல்லை. அதனை மறுக்கின்ரேன்.
அசித்: மட்டக்களப்பில் கருணா குழுவினர் பல கொலைகளை செய்துள்ளனர்?
பதில்: ஆம்
அசித்: கருணா குழுவினருடன் இணைந்து நீரும் பல கொலைகளை செய்துள்ளீர்?
பதில்: ஆம்
(இதன் போது அந்த கேள்விக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். புலிகள் இயக்கத்தினரையே கொலை செய்ததாகவும் பிரதிவாதியின் சட்டத்தரணியின் கேள்வி தவறானது என வாதிட்டார். இதன் போது ஏனைய பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளான ரசிக பாலசூரிய மற்றும் அனோஜ பிரேமரத்ன ஆகியோரும் எழுந்து அசித் சிறிவர்தனவுடன் சேர்ந்து தொடர் வாதங்களை முன்வைத்தனர். பிரதி சொலிசிர்ரர் ஜெனரல் தேவையில்லாமல் குருக்கீடு செய்வதாகவும் கேள்வி சரியானதே எனவும் பதிலும் கிடைத்துவிட்டதாக அவர்கள் கூறினர். வாதப் பிரதிவாதம் முற்றிய நிலையில் பொதுவாக கொலைகளை செய்தீரா என எப்படி வினவ முடியும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளிடம் கேட்டார். இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, கடத்தப்பட்ட சீனி முதலாளி, மேலும் பல தன்மிழ் அப்பாவிகள் யார் என கேள்வி எழுப்பினார். அதற்குள் தலையிட்ட நீதிபதி மணி லால் வைத்திய திலக வாதத்தை நிறைவுக்கு கொண்டுவந்து சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து மூன்றாவது பிரதிவாதியின் சட்டத்தரணியான அனோஜ பிரேமரத்ன சாட்சியாளரான பிரித்தி விராஜ் மனம்பேரியை குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தினார்.
அனோஜ: சாமியின் அறிவுறுத்தல் படி போகும் போது யாரையோ ஒரு மனிதரை கொல்லப் போவதை நீர் அறிந்திருந்தீரா?
பதில்: புலிகள் இயக்க உறுப்பினர்.. என இழுக்கும் போதே
அனோஜ: புலிகள் இயக்கமோ, ஐ.எஸ். அமைப்போ, போகோ ஹராமோ ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்த ஒரு மனிதனை கொல்லப் போவதை அறிந்திருந்தீரா?
பதில்: ஆம்.
அனோஜ: நீர் இவ்வழக்கில் மன்னிப்பு பெற விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தானே தற்போது இப்படி சாட்சி சொல்வது. இதனைப் பெற சட்ட மா அதிபருக்கு நீர் நன்றி தெரிவித்தீர்தானே?
( இக்கேள்வியின் போது பிரதி சொலிசிர்ரர் ஜெனரல் மீள தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.)
அனோஜ: அரசுக்கு பக்கச் சார்பாக சாட்சியளிப்பதாக கூரினீர் தானே? அது தானே நிபந்தனை?
பதில்: ஆம்
( கனம் நீதிபதியவர்களே, அரசின் சார்பாக சாட்சியம் அளிப்பதாக அவர் கூறவில்லை. அரசாங்கத்துக்கு பக்கச் சார்பாக வாக்கு மூலம் அளிப்பதாகவே அவர் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.)
அனோஜ: உமக்கு நிபந்தனை பிணை கடந்த 2015.10.05 அன்று கிடைத்தது?
பதில்: ஆம்
அனோஜ: கஞ்சா தூள் 160 கிலோ விற்பனை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டது அதன் பின்னர் தானே?
பதில்: ஆம்
அனோஜ: குறித்த வழக்கில் இரு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின்னரேயே நீர் குற்றத்தை ஒப்புக் கொண்டீர். அதன் பின்னரேயே உமக்கு தண்டமும் 10 வருட ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதன் போது சட்ட மா அதிபர் சார்பிலும் உமக்கு குரைந்த பட்ச தண்டனையே கோரப்பட்டது. இவையனைத்தும் இவ்வழக்கில் அரச சாட்சியாக சாட்சியமளிப்பதற்கான நிபந்தனையல்லவா?
பதில்: இல்லை.
( இதன் போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த கடும் ஆட்சேபனை வெளிட்டார்.)
அனோஜ: நீர் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹனின் கீழ் எப்போது கடமையாற்றினீர்?
பதில்: எனக்கு ஞாபகத்தில் உள்ளதன் படி 2005 ஜனவரி முதல் டிசம்பருக்கு உட்பட்ட காலப்பகுதியில்
அனோஜ: 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரபல சீனி வர்த்தகர் நடராஜா ஸ்ரீ ஸ்கந்தராஜவை கடத்தியமை தொடர்பில் நீர் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாரா?
பதில்: ஆம்
அனோஜ: சட்ட மா அதிபர் அது தொடர்பில் குற்றம் சாட்டியுள்ளார் தானே?
பதில்: ஆம்
( இதன் போது அது குறித்து வேறு ஒரு வழக்கு இடம்பெறுவதால் அவ்வழக்குக்கு சாட்சியாளரின் சாட்சியாளரின் பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் அவர் ஒரு பிரதிவாதி என்பதல் அவருக்கு பாதக நிலைமை ஏர்படலாம் எனவும் சுட்டிக்கடடப்பட்டது. அதனால் அக்கேள்விகள் தவிர்க்கப்படல் வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் கோரப்பட்டது. எனினும் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமக்கு அக்கேள்விகளை தொடுக்க முடியும் என்பதையும், அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்)
இந் நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி மணி லால் வைத்திய திலக இன்று காலை10.30 க்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதுவரை பிரதிவாதிகளை கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் முதலாவது சாட்சியாளரை மெகசீன் சிறையிலும் விஷேட பாதுகப்புக்கு மத்தியில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர்விட்டார்.
நன்றி : வீரகேசரி
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா!
புலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் கடன் சுமையைக் குறைத்திருக்கும் !
இதை தமிழ்மக்கள் எப்போது உணர்வார்கள் ???
**
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
குறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.
மேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.
இதேவேளை, பிரான்ஸ், டென்மார்க்,சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் தேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு.
தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது.
புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments