tamilini 5தமிழ் கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர்.

தகைசார்ந்த ஆளுமை, கொள்கைப் பற்று, உறுதியான செயலாற்றல், பண்புகளுக்குள்ளே மிளிர்ந்து வெளிப்பட்ட அழகிய பெண்மை போன்றவற்றின் உறைவிடமாக அவர் திகழ்ந்தார்.

இயற்பெயர் சிவகாமி. சுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு வயது 43.

நடுத்தரப் பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்ணாக தனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அவர் உயிர் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் மட்டும் போராடி மறையவில்லை.

அடக்குமுறைகளுக்கும், ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்ற அரசியல் ஆணாதிக்கச் செயற்பாடுகளுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது.

தமிழ்ப் பெண்களின் கௌரவமான வாழ்க்கைக்கு, ஒவ்வொரு இளம்பெண்ணும் ஆற்றல் மிகுந்தவராக ஆளுமை மிக்கவராக, தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவராகத் திகழ வேண்டும் என்பதற்காக அவர் அயராமல் செயற்பட்டிருந்தார்.

இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் நாட்டின் மீதும் பற்றுகொண்டு பாடுபட்ட அவர் இறுதிக்காலத்தில் தனக்காகப் போராடினார்.

முன்னைய போராட்டம் அவருக்கு வெற்றியளித்திருந்தது. பின்னைய போராட்டம் அவரைப் புற்றுநோயின் பிடியில் சிக்கி பூவுலக வாழ்க்கையில் இருந்து நீங்கச் செய்துவிட்டது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர், சந்திரிகாவாக விடுதலை அமைப்பில் உட்புகுந்து, சாம்பவியாகத் திகழ்ந்து தமிழினியாக – அனைவருக்கும் ஓர் இனிய அரசியல் தலைவியாக ஆளுமையோடு செயற்பட்டிருந்தார்.

இரண்டு தளங்களில் அவருடைய வாழ்க்கை அடங்கியிருந்தது. அவரைப் பொறுத்தமட்டில், இரண்டு தளங்களுமே, பெண்மைக்கும் பெண்களுக்குமான உரிமைகளுக்கான போராட்ட களங்களாகவே அமைந்திருந்தன.

அந்தப் போராட்ட களங்களில் அவர் வித்தியாசமானவராக, விட்டுக் கொடுக்காத கொள்கைப் பிடிப்புள்ளவராக, உறுதியான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

இரண்டாவது தளமாகிய அவருடைய வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவரை, பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அரசியல் இராணுவ சூழல்களில் சிக்கியிருந்த அவரை, தவறான அனுமானத்துடன் நோக்கினார்கள். அந்த நோக்கு அவரைப் பெரிதும் புண்படுத்தியிருந்தது.

சாதாரண பெண்களை, பண்பட்டவர்களாக, சமூகத்தின் கண்களாக, உரிமைக்கும் நீதிக்கும் நியாயத்திற்கும் போராட வல்லவர்களாக உருவாக்குவதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையின் முதல் தளத்தில் செயற்பட்டிருந்தார். அற்காகத் தனது வாழ்க்கையையே அவர் அர்ப்பணித்திருந்தார்.

ஆனால் அந்த அர்ப்பணிப்பை சரியான முறையில் அடையாளம் காணாதவர்கள் அவருடைய மனம் பெரிதும் புண்படும் வகையில், அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது தளத்தில் நடந்து கொண்டார்கள். அதனால், அதற்கு எதிராகவும் அவர் போராட வேண்டியிருந்தது.

முன்னைய போராட்டத்தில் அவர் கம்பீரமான ஆளுமையோடு செயற்பட்டிருந்தார். ஆனால் இரண்டாவது களம், ஒரு வகையில் அவரைப் பெரிதும் மனதளவில் துன்புறுத்தியதாகவே குறிப்பிட வேண்டியுள்ளது.

அதனால் அவர் தளர்ந்து போனார். தனிமையில் வாடினார். போதாக்குறைக்கோ என்னவோ அவரை, கொடிய புற்றுநோயும் பற்றிப் பிடித்து பழிகொண்டுவிட்டது.

சமூகத்திற்காகவும், மானுடத்திற்காகவும் பாடுபட்ட பலர் கொடிய நோய்களுக்கு ஆளாகி மடிந்து போன வரலாறு நிறையவே இருக்கின்றன. அந்தப் பட்டியல் வரிசையில் தமிழினியின் வாழ்க்கையும் இப்போது இணைந்திருக்கின்றது.

தமிழர் வரலாற்றில் வீரமங்கைகள் பலரைப் பற்றி பதிவு செய்திருக்கின்றார்கள். அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் அரசகுலத்துப் பெண்கள் வீரம் செறிந்தவர்களாக ஆளுமை மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என வரலாறுகள் கூறுகின்றன.

அவர்களைப் பற்றிய வரலாற்றுக் கதைகள் நிறையவே இருக்கின்றன. அதேநேரம் அரச ஆட்சி முறை மாற்றம் பெற்று ஜனநாயக ஆட்சிமுறை தோற்றம் பெற்ற காலத்திலும் பல பெண்கள் ஆளுமை மிக்கவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். சமூகத்தின் கண்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழினியின் வாழ்க்கை வித்தியாசமானது. சேற்றில் செந்தாமரை மலர்ந்தது போன்று, அடக்கு முறைகளுக்குள்ளே ஆளுமை மிக்கவராக, கருணை கலந்த வீரம் செறிந்த மங்கையாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

பரந்தனைச் சொந்த இடமாகக் கொண்டு, பதின்ம பருவத்தில் அவர் கல்வி கற்றவேளை, இளமைப் பருவத்தில் (இருபதாவது வயதில்) காலடி எடுத்து வைத்தபோது, அவர் மாணவர்களுக்கான அரசியல் செயற்பாட்டில் பிரவேசித்திருந்தார்.

அதுவே விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளே அவருடைய பிரவேசமாகவும் அமைந்துவிட்டது.

சந்திரன் பூங்கா என்றால் கிளிநொச்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கிளிநொச்சி நகரைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

தற்காலத்து இளைஞர்களுக்கு அந்தப் பூங்காவின் வரலாறு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்திரன் என்ற போராளியின் நினைவாகவே சந்திரன் பூங்கா உருவாகியது. உருவாக்கப்பட்டது, இப்போது அது இராணுவத்தினருடைய போர் வெற்றிச் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சந்திரனுடைய போராட்ட வாழ்க்கை சிவகாமியைப் பெரிதும் கவர்ந்திருந்தது. கவர்ந்திருந்தது என்பதைவிட அவருடைய மாணவ பருவ வாழ்க்கை, வித்தியாசமான ஒரு திசையில் திரும்புவதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்றே கூற வேண்டும்.

சந்திரன் சிவகாமியின் சகோதர உறவு முறையானவர் என கூறுகின்றார்கள். விடுதலைக்கான ஆயுதப் போராட்ட களத்தில் மறைந்துபோன சந்திரனின் நினைவாக, சிவகாமி சந்திரிகா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

தொண்ணூறுகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரிகா விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒருவராக,

ஆயுதமேந்திப் போராடியவர்களுக்கு அவசியமான அடிப்படை அரசியல் அறிவையும் தெளிவையும் ஊட்டுபவராகத் திகழ்ந்தார். ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு முன்னதாகவே, அரசியல் செயற்பாட்டில் அவர் திறமை காட்டியிருந்தார்.

ஆயுதமேந்திப் போராட வேண்டும். பல களமுனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அவருடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த போதிலும், அவரால் முழுநேர களப்போராளியாகப் பங்கெடுத்துச் செயற்பட முடியவில்லை.

அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டவில்லை. மாறாக போhராட்டத்தில் இணைந்து கொண்ட இளம்பெண்களை, பண்பட்டவர்களாக, அடிப்படை அரசியல் அறிவும் சமூகப் பிரக்ஞையும் கொண்டவர்களாக உருவாக்குவதற்கான அரசியல் கல்விச் செயற்பாட்டில் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

முன்னணி போர்க்களங்களில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவலே பேர்க்களத்தில் சாதனை புரிந்து மறைந்த சந்திரனின் நினைவாக, சந்திரிகா என்றும் பின்னர், சாம்பவி என்ற போர்க்களத்தில் மறைந்துபோன போராளியின் பெயரைச் சூட்டிக்கொள்ளவும் அவரைத் தூண்டியிருந்தது.

சிவகாமி, சந்திரிகா என்ற பெயரில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசியல் பிரசார மேடைகளில் அவர் ஆற்றிய உரைகள் தினசரிகளில் முக்கிய இடம் பிடித்திருந்தன.

அந்தக் காலப்பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்கா அரசியலில் புகுந்து ஜனாதிபதியாக மாறியிருந்தார். இதனால் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசம் ஆகியன உள்ளிட்ட வடபகுதியின் தினசரிகளில் எந்த சந்திரிகா என்ன சொன்னார் என்பது சாதாரண மக்களுக்குக் குழப்பம் தருவதாக அமைந்தது.

இதனையடுத்து, சிவகாமி தனது சந்திரிகா என்ற பெயரை, சாம்பவி என மாற்றி சூடிக்கொண்டார்.

சிவகாமிக்கு சாம்பவி என்ற பெயரும் நிலைக்கவில்லை. உரிமைகளுக்காகப் போராடிய அதேவேளை, தூய தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டபோது,

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலருடைய பெயர்கள் தூய தமிழ்ப்பெயர்களாக மாற்றப்பட்டன. அப்போது சாம்பவியாக இருந்த சிவகாமி தனது பெயரைத் தமிழினியாக மாற்றிக்கொண்டார். அதுவே அவருடைய நிரந்தரப் பெயராகிப் போனது.

யுத்தம் முடிவுக்கு வந்து, செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்திருந்தபோது, தமிழினி விசேட படை அணியினரால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர விசாரணையின் பின்னர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டபோது,

அவர் தமிழினியாகத் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. மீண்டும் சிவகாமியாக, தனது தாயாருடனும் சகோதர சகோதரிகளுடனும் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்றே அவர் விரும்பியிருந்தார்.

தனது குடும்பத்தினருக்காகச் செயற்பட வேண்டும் என எண்ணியிருந்தார். அந்த எண்ணமும் அவருக்கு சீராக நிறைவேறவில்லை.

புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர், விடுதலையாகி சமூகத்தில் அவர் இணைந்து கொண்ட போதிலும், அவருடைய பாதுகாப்பு அங்கு உறுதிப்படுத்தப்படவில்லை. சுடு சொற்களால் அவரைப் பலரும் சுட்டெரித்தார்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்து அவர் மீது பகிரங்கமாகப் பல கண்டனங்கள் எழுந்திருந்தன.

புலம்பெயர் தமிழர்களின் ஊடகங்களும் அவரைப் பெரிதும் சாடி வந்தன. மறுபக்கத்தில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அவர்களை முள்ளின்மேல் இருப்பதைப்போன்று புலனாய்வாளர்களும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள்.

பதிவுகள், விசாரணைகள் என்று மீண்டும் மீண்டும் பழைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்வதும் விசாரணைகளை நடத்துவதுமாக அவர்கள் முன்னாள் போராளிகளை நிம்மதியிழக்கச் செய்திருந்தார்கள். (இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கின்றது).

இத்தகைய ஒரு சூழலில்தான் அவர் அஞ்ஞாத வாசம் செய்ய நேர்ந்தது. அந்த ஆளுமை மிக்க தலைவியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக, சமூகத்தில் பலருக்கும் தெரியாத ஒன்றாக மாறிப் போனது.

உயர்ந்த கம்பீரமான தோற்றம். தீட்சண்யமானதாயினும் கருணை நிறைந்த பார்வை. அதில் ஒரு கட்டுக்கோப்பும், கண்டிப்பும் துல்லியமாகத் தெரியும். ஆழமான கருத்துக்கள் செறிந்த அமைதியான வார்த்தைகள்.

எதிரில் இருப்பவர்களைச் சிந்திக்கச் செய்யும் வல்லமை கொண்டiயாக அவைகள் இருக்கும். அவருடைய மேடைப் பேச்சு சாதாரணமானது என்றே கூற வேண்டும்.

அடுக்குமொழி கிடையாது. கேட்போரைக் கவர்ந்து இழுக்கின்ற கவர்ச்சியும் இருக்காது. ஆனால் நீரோடை போன்று அமைந்திருக்கும். ஆயினும் கேட்பவர்களை கருத்துக்களினால் கட்டிப்போட்டு விடும்.

பன்முக ஆற்றல் கொண்டிருந்த அவர், கவிதை எழுதுவார். சிறுகதைகள் எழுதியுள்ளார். சிறந்த நாடக நடிகை. இயல்பிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். கவிதைகள் கதைகளை ரசித்து வாசிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர்.

தான் விரும்பியவற்றை, தன்னுடன் இருந்த பெண்களைக் கூட்டி வைத்து, ஒரு நாடகம் நடிப்பதைப் போன்று நளினங்களுடன், அந்தந்த கதைகள் அல்லது கவிதைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றி, ரசனையோடு வாசித்துக் காட்டி மகிழ்வார்.

மற்றவர்களையும் மகிழ்விப்பார் என்று அவருடன் நெருங்கிப் பழகிய பெண்கள் கூறுவார்கள்.

தன்னுடன் பணியாற்றிய பெண்கள், சீரான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். கம்பீரமாகத் திகழ வேண்டும். ஆளுமையுடன் செயற்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை விடயங்களில் அவர் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்று அவர்கள் இப்போது நினைவுகூர்கின்றார்கள்.

தமிழினியினால் வழிகாட்டப்பட்ட பல பெண்கள் இன்று புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைந்து – அந்த சமூக சூழலுக்கு ஏற்ற வகையில் ஆளுமை உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.

சிலர் பொதுப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களாகவும், கவிஞர்களாக, எழுத்தாளர்களாகவும்கூட திகழ்கின்றார்கள். போராட்ட கால வாழ்க்கையில் மட்டுமல்ல.

போருக்குப் பிந்திய வாழ்க்கைச் சூழலிலும் தலைநிமிர்ந்து வாழத்தக்க வகையில் தமிழினி தங்களை வழிநடத்தியிருக்கின்றார் என்று அவர்கள் தமிழினியைத் துயரத்துடன் நினைவுபடுத்துகின்றார்கள்.

விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழினி எவ்வாறு உயிர் தப்பினார்?

போராடச் சென்ற அவர் ஏன் இறுதி நேரத்தில் குப்பியடித்துச் சாகவில்லை? என்று, அவர் மனிக்பாம் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டதும் பலரும் வினா எழுப்பியிருந்தார்கள்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், படையினருக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், அவர்களுடைய போராட்டம் பற்றிய தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இராணுவத்தினரிடம் பிடிபடாமல் தப்புவதற்காகத் தனது உயிரை மாய்த்துக்கொள்ளாமல், அவர் விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்து தப்புவதற்காகவே இராணுவத்தினரிடம் சரணடைந்த துரோகச் செயலைப் புரிந்திருந்தார் என்று அவர் மீது பழி சுமத்தப்பட்டிருந்தது.

ஆயினும் பின்னர் காலப்போக்கில் அது அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு என்பது பலருக்கு உறைத்திருந்தது.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில் ஆழமாக ஈடுபட்டிருந்த அவரை அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தனது அரசியல் நலன்களுக்காக அவரை தனது அணியில் இணைத்து அரசியல் செய்வதற்கான திட்டம் ஒன்றையும் வைத்திருந்தது.

அதனால் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், படையினரால் கைது செய்யப்பட்ட கேபி போன்றவர்களை வடமாகாணத்தின் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதுபற்றிய தகவல்கள் ஊடகங்களில் அப்போது பரவலாகவும் உறுதியான முறையிலும் கசிந்திருந்தன. இதுவும்கூட தமிழினி மீதான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்த சீற்றத்திற்கும் கோபத்திற்கும் ஒரு காரணமாக இருந்தது.

ஆயினும் அவர் சாதாரண ஒரு பெண்ணாக, சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவே, இறுதிச் சண்டையின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தார்.

அவர் ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போதிலும், ஏனைய போராளிகளைப் போன்று போராளிகளுக்கான முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படவில்லை. மாறாக அவர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு எவ்வாறு சென்றார்; என்பது பற்றிய விமர்சனம் இருக்கின்றது.

உண்மையாக அப்போது என்ன நடந்தது என்பதுபற்றிய தகவல்கள் வெளிப்படவில்லை. ஆனால், அவர் மனிக்பாம் முகாமில் தாயாருடன் இருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பது உண்மை.

விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்தலைவர்களில் ஒருவராகிய தமிழினி இராணுத்தினாரல் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு சென்று விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சியளித்தார்.

புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அவரிடம் விசாரணை செய்தவர்கள், அவரை பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவராகக் காணவில்லை.

அதாவது, தென்பகுதியில் பொது இடங்களிலும், பொதுமக்கள் மீதும் முக்கிய அரசியல்வாதிகள், படையதிகாரிகள், முக்கியஸ்தர்கள் மீதும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், துபபாக்கிப் பிரயோகங்கள் என்பவற்றுடன் தொடர்புகொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

மாறாக அவர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவே கண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே அவர் மீது பாரதூரமான குற்றச் சம்பவங்களுடன் – பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் அல்லது குற்றச்செயல்களைப் புரிந்திருந்தார் என்று குற்றம் சாட்டவில்லை.

தமிழினியின் கம்பீரமான தோற்றமும், எதிராளியையும் சிந்திக்கச் செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க பேச்சுத் திறனுமே, அவர் கைது செய்யப்பட்டிருந்தபோது,

அவரை விசாரணை செய்தவர்களும் அவருடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதியும், அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கான அவருடைய நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தது என கூறவேண்டும்.

தமிழினி கைது செய்யப்பட்டதும், அவருடைய வழக்கில் பிரபல சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாத்துரை வினாயகமூர்த்தியே, அவருக்காக முன்னிலையாகியிருந்தார்.

பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனம் ஒன்றே வினாயகமூர்த்தியை தமிழினிக்காக முன்னிலைப்படுத்தியிருந்தது.

அப்போது, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தும், அவர்களுடைய பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும், விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தார் என்ற சாரப்பட, தமிழினிக்கு எதிராக எழுந்திருந்த சீற்றமும்,

குற்றச்சாட்டுக்களும் சட்டத்தரணி வினாயகமூர்த்தியை, தமிழினிக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதில் இருந்து ஒதுங்கச் செய்திருந்தது. இதனால் சில வழக்குத் தவணைகளில் தமிழினிக்காக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், நோர்வேயில் வசித்து வரும் தமிழினியின் சகோதரி துஷித் ஜோன்தாசன் என்ற சட்டத்தரணியை அவருக்காக ஏற்பாடு செய்திருந்தார்.

ஆயினும் அவர் தன்னுடன் பணியாற்றிய மஞ்சுள பத்திராஜா என்ற சட்டத்தரணியை தமிழினிக்காக முன்னிலையாகச் செய்திருந்தார்.

சட்டத்தரணி ஜோன்தாசனின் பணிப்பில் மஞ்சுள பத்திராஜா கிரமமாக தமிழினிக்காக நீதிமன்றத்தில் வாதாடி வந்தார். அதற்காக அவர் கட்டணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தமிழினியின் வழக்கை விசாரணை செய்த முன்னாள் கொழும்பு நீதவான் ஹப்புஆராச்சி மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோர் குறுகிய கால தவணைகளையே விதித்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளின் உயர் மட்டத் தலைவர் என்ற ரீதியில் அவரைத் தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என்பதிலும், அவருடைய பாதுகாப்பிலும் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் நேரடியாகச் சென்ற பார்வையிடுவதற்கான அதிகாரம் நீதவான்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதனால் தமிழினியின் வழக்கை விசாரணை செய்த நீதவான் ஹப்புஆராச்சி தமிழினியை அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சென்று பார்வையிட்டு அவருடைய நிலைமைகளை நேரடியாகக் கண்காணித்திருந்தார்.

அந்த நேரத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் கடும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என இரண்டு ரகங்களில் பட்டியலிட்டு விசாரணைகளை மேற்கொண்டு,

அதற்கேற்ற வகையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள். அரசியல்துறை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தமிழினியை அவர்கள் தீவிரவாதப் பட்டியலில் இணைத்திருந்தார்கள்.

அதனால் அவருக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுக்களைப் பாதுகாப்பு அமைச்சினால் சுமத்த முடியவில்லை.

ஆயினும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில் அவர் விடுதலையாகியதன் பின்னர், என்ன செய்வார், எப்படி நடந்து கொள்வார் என்பதைத் தீர்மானிப்பதில் பாதுகாப்பு அமைச்சு தடுமாற்றமடைந்திருந்தது.

விடுதலைப்புலிகளின் உயர் மட்ட அரசியல் தலைவியாக இருந்த தமிழினி வெளியில் சென்றதும், விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?

புலம்பெயர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற விடுதுலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு அந்த அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கமாட்டார? என்பது போன்ற கேள்விகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைக் குடைந்து கொண்டிருந்தன.

இருப்பினும் அவரைப் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தி விடுதலை செய்யலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

அரச தரப்பினர் தமிழினியை தமது அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை தமிழினி உறுதியாக மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் விடுதலையாகியதும், பொதுப் பணிகள் எதிலும் பங்கெடுக்கப் போவதில்லை. குடும்பவாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன் என அடித்துக் கூறியிருந்தார்.

அதற்கான உறுதிமொழிகளும் அவரிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையிலேயே அவரை விடுதலை செய்வதற்கு அவர்கள் தீர்மானித்துப் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பியிருந்தார்கள். அதன் பின்னர் தமிழினி விடுதலையாகினார்.

விடுதலைப்புலிகளின் சுதந்திரப்பறவைகள் என்ற அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்த தமிழினி சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாக வெளியில் வந்த போதிலும், சுதந்திரப் பறவையாக அவரால் வாழ முடியாமல்போனது வருந்தத்தக்கது.

தமிழினியைப்போலவே ஆற்றல் மிகுந்த பல முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான பெண்கள், தமிழ் சமூகத்தினால் சரியான முறையில் அடையாளம் காணப்படாததாலும், அவர்களுடைய பெறுமதி உணரப்படாததாலும்,

சமூக வாழ்க்கையில் இயல்பாக இரண்டறக் கலக்க முடியாமலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமலும் – அதற்கான வாய்ப்பு வசதியைப் பெற முடியாமலும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதே, தமிழினி என்ற சீரிய தன்மை கொண்ட தலைவிக்கு செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

செல்வரட்னம் சிறிதரன்