tamilini 5“ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்டஒரு ஜீவன் எம்மைவிட்டு ஏகிவிட்டது. புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும்.

சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டு வந்தவர். அதன் காரணமாகப் போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுப் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்.

தமிழ் மக்களுக்கிடையே எழுச்சிபெற்ற விடுதலைப் போராட்டமானது இனத்துக்கான விடுதலைப் போராட்டம் என்ற மட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது சமூக விடுதலை நோக்கியதாக, பெண் விடுதலையை நோக்கியதாகப் பல்பரிமாணம்மிக்க ஒரு போராட்டமாகவே நடைபெற்றது.

தனித்துவமான பண்பாட்டுடன் கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகத்தின் போக்கில் பெண் அடக்கு முறை என்பது காலாதிகாலமாக இருந்தே வந்திருக்கிறது.

அத்தகைய ஆணாதிக்கச் சமூகத்தில்,பெண்களும் ஆண்களுக்குச் சமனான உரித்தைப் பெற்றவர்கள் என்ற பாரதியின் புதுமைப் பெண் சிந்தனைக்கு விடுதலைப் போராட்டமானது செயல் வடிவம் கொடுத்திருந்தது என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு வீரவீராங்கனைகளாக வீரியம் பெற்றார்கள். எம் சமூகத்தில் தாய் தந்தையர்க்கும் பின்னர் கணவருக்கும் பின்னால் அடங்கி ஒடுங்கி, நாணிக்கோணி வாழ்ந்த எமது பெண்கள் சமர்க்களத்தில் தீரத்துடன் போராடும் வல்லமை பெற்றார்கள்.

சமூகக் கட்டமைப்புகளைத் தலைமையேற்று நடாத்தும் வல்லமை பெற்றார்கள்.

அத்தகைய பெண் தலைமைத்துவத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சகோதரி தமிழினி அவர்கள் விளங்கியிருக்கின்றார்.

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் சகோதரி தமிழினி அவர்களின் இழப்புத் தொடர்பாக எமது மக்கள் கொண்டிருக்கின்ற கவலையும் கரிசனையும் அந்தப் பெண் போராட்ட காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் அவரிடத்தில் காணப்பட்ட தலைமைத்துவப் பண்பையும் பறைசாற்றுவனவாகவே அமைகின்றன.

சகோதரி தமிழினி அவர்கள் புனர்வாழ்வுச் சிறையில் இருந்த காலப்பகுதியில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அப்போது, தமிழினி அவர்களை அரச தரப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறும், அவ்வாறு போட்டியிட்டால் அவருக்கு விடுதலையை வழங்குவதாகவும் அப்போதைய அரசாங்கம் தமிழினியுடன் பேசியதாகவும்,

அந்தப் பேரத்துக்கு சகோதரி தமிழினி அவர்கள் சோரம் போகவில்லை என்பதையும் அறிந்து பெருமைப்பட்டேன்.

இடையறாத இலட்சிய தாகத்தடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ் மக்களின் விடுதலை பற்றியும் தமிழ்ப் பெண்களின் உயர்ச்சி பற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.

அவரது எண்ணங்கள் ஈடேற இதய சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தமிழினி அவர்கள் ஒரு முன்னாள் போராளி என்ற நிலையில் தானும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம் என்ற நிலையிலும் தமிழினி அவர்களை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட அவரது கணவர் பாராட்டுக்குரியவர்.

அந்த முன்னுதாரண புருஷரினதும், தமிழினி அவர்களின் குடும்பத்தினரதும் ஆற்றொணாத் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

thamilini-funeral-1

வீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கை.

தமிழீழ தேசிய ராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளீர் அணியின் அரசியல் பிரிவு பொறுப்பாளாராக இருந்த பெருமதிப்பிற்குரிய தமிழினி என்ற சிவகாமிஜெயக்குமரன் கடந்த 18-10-2015 ஞாயிறு அதிகாலை காலமானார் என்ற செய்தி எம் ஆழ் மனதில் மீளா பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. தாம் கொண்டிருந்த மண்ணின் விடுதலை என்ற பற்றுறுதியில் இருந்து இறுதிவரை விலகாமல் இருந்த தமிழினி தமிழீழ தாயக விடுதலைப் போரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் களத்திலும், அரசியல் பிரிவிலும் போராடியதன் அடையாளச்சின்னமாக விளங்குகிறார். இனவிடுதலை, பெண்விடுதலை, சமூகவிடுதலை என்ற புரட்சிக்கர கோட்பாட்டுத் தளங்களில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வழிகாட்டுதலில் ஆண்களுக்கு இணையாக பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்குகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தினார்கள். அவ்வரிசையில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேச விடுதலை உணர்வின் பாற் ஈர்க்கப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி 2009 மே மாதம் வரை மக்களோடு மக்களாக களத்தில் நின்று தமிழீழ மக்களையும், தாயக விடுதலையையும் தன் உயிருக்கு மேலாக நேசிக்கிற தனது உணர்வினை மெய்ப்பித்தார்.

மக்களையும், மண்ணையும் உயிராக கடைசி வரை நேசித்து வாழ்ந்த தமிழினி மறைவு தமிழ்த் தேசிய இனத்தின் ஈடுசெய்ய முடியா இழப்பு. கடந்த 2009 ஈழப்போரின் முடிவிற்கு பின் தமிழினி சிங்கள பேரினவாத ராணுவத்தினால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளாகி மனதும் உடலும் சுகவீனமாகி, திட்டமிட்ட தவறான சிகிச்சையால் உயிர்கொல்லி புற்றுநோய்க்கு ஆளாகி மறைந்திருப்பது சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு அம்பலப் படுத்தி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரினில் பிடிப்பட்ட, சரண் அடைந்த முன்னாள் போராளிகள் பலரும் இப்படியாக மர்மமான முறையில் மரணமடைந்து வருவது ஏற்கனவே எம்மைப் போன்ற தமிழ் அமைப்புகள் இனவாத சிங்கள பேரினவாத அரசின் மீது சுமத்தி வருகிற இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கிறது..

சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறைக்கு எதிராக முக்கியமாக தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புலிகள் கட்டமைத்த மக்கள் ராணுவத்தில் பங்கேற்று களத்தில் நின்ற பெண்களின் வீரத்திற்கும் தீரத்திற்கும் சாட்சியாக இருந்தவர் தமிழினி. வீரமும் தீரமும் மட்டுமல்லாது தனது மிகுந்த அறிவுத்திறனால் அரசியல் பிரிவு மகளிர் அணியில் தலைமை பொறுப்பாளராக உயர்ந்த நன்மதியாளர் தமிழினி. “தமிழினி ஒருபோதும் சிங்கள மக்களிடம் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை” என்று சிங்கள பத்திரிக்கையாளர்களே பாராட்டும் வண்ணம் அரசியல் பிரிவில் மிகுந்த முதிர்ச்சியோடும் நுண்ணறிவோடும் செயல்பட்டவர்.

நான் ஈழம் சென்றிருந்த காலத்தில் பெருமதிப்பிற்குரிய தமிழினி அவர்களை சந்திக்கிற மகத்தான வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அச்சந்திப்பில் என் மீது அவர் காட்டிய அன்பும், அக்கறையும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதவை. அவருடனான கலந்துரையாடலில் அவர் தமிழக அரசியலையும், உலக அரசியலையும் எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தார் என்பதையும், உலக அரசியல் அறிவில் அவர் எத்தகைய நிபுணத்துவம் கொண்டிருந்தார் என்பதையும் நான் அறிந்தேன். ஆயிமாயிரம் மாவீரர்களின் இலட்சியக்கனவான தமிழீழ சோசலிச குடியரசு நாட்டினை உருவாக்குதலில் பெண்களின் கடமை குறித்து தனக்கென தனித்துவமான பார்வையை தமிழினி கொண்டிருந்தார். கனவும், இலட்சிய நோக்கும், புரட்சிக்கர சிந்தனையும், தலைமை மீது அளவுக்கடந்த பற்றுறுதியும் தமிழினி அவர்களை தனித்துவப்படுத்தின.

இறுதிக்காலங்களில் பேரினவாத சிங்களக் கரங்களில் அவர் சிக்குண்டு பட்டப் பாடுகள் அளவற்றவை. மிகச்சிறந்த குண இயல்புகளோடு, சித்தாந்த தெளிவோடு, உலகம் தழுவிய அரசியல் பார்வையோடு விளங்கிய பெருமதிப்பிற்குரிய போராளி தமிழினி சிங்கள பேரினவாதம் மிதித்துப் போட்ட எம் காந்தள் மலர்களில் ஒன்றாக திகழ்கிறார். விடுதலைப் போரில் தமிழ்த்தேசிய இனம் அடைந்த துயர்களில்,இழப்புகளில் ஒன்றாக தமிழினியின் இழப்பும் இருக்கிறது. எந்த இலட்சியத்திற்காக அவர் களத்தில் நின்றாரோ, அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு உயிர் உள்ளளவும் உழைப்போம் என அவர் மறைந்த இந்த துயர்ப் பொழுதில் நாம் தமிழர் கட்சி உறுதியேற்கிறது.

பெருமதிப்பிற்குறிய போராளி தமிழினி அவர்களுக்கு எனது புரட்சிகர வீரவணக்கத்தினை நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

**thamizhini
தமிழீழ தேசம் பெருமைகொள் சமூக அரசியற் விடுதலைப் போராளி தமிழினி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

அனைத்துலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போர்க்களத்திலும் அரசியல், சமூகத் தளங்களிலும் பெரும் சாதனைகளில் நிகழ்த்திய அற்புதமான பெண் ஆளுமைகளில் ஒருவராக தமிழினி அவர்கள் திகழ்ந்திருந்தார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விடுதலை அடைந்த சுதந்திர ஈழத்திருநாட்டில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக, சமூக நீதிமிக்க சமூகத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்வை போராட்டத்தில் அர்ப்பணித்த தமழினிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவரது குடும்பத்தினரதும் உலகத் தமிழ் மக்களதும் பெருந்துயரில் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியின் முழுமையான வடிவம் :

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளினர் அரசியற்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய தமிழனி அவர்கள் காலமாகிய சேதிஅறிந்து உலகத் தமிழினம் ஆறாப் பெருந்துயரில் மூழ்கியிருக்கிறது.

விடுதலை அடைந்த சுதந்திர ஈழத்திருநாட்டில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக, சமூக நீதிமிக்க சமூகத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்வை போராட்டத்தில் அர்ப்பணித்த தமழினிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவரது குடும்பத்தினரதும் உலகத் தமிழ் மக்களதும் பெருந்துயரில் தன்னை இணைத்துக் கொள்கிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழீழத்தின் பெண் போராளிகள் போர்க்களத்திலும் அரசியல், சமூகத் தளங்களிலும் ஆற்றிய பெரும் சாதனைகள் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்த்தவை. பலஅற்புதமான பெண் ஆளுமைகளை தமிழீழ விடுதலைப் பேராட்டம் உருவாக்கியருந்தது.

பெண்கள் தொடர்பாகசமூகத்தில் நிலவிய இறுக்கமான மதிப்பீடுகள் காரணமாக பல்வேறு துறைகளிலும் பெண்களால் சாதனைகளை நிலைநிறுத்த முடியும் என்பது நிறுவப்படாத சமூக யதார்த்தம் நிலவியதொரு சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகள் பல்வேறு துறைகளிலும் சாதணைகள் படைக்கும் புதமைப்பெண்களாக உருவெடுத்தனர். சிறப்பான தலைமைத்துவ ஆளுமைகள் உருவாகின.

இவர்களில் ஒருவராக சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்டதோர் அற்புத ஆளுமையாக தமிழினி அவர்கள் தன்னை நிலைநிறுத்தியவர்.

தமிழீழவிடுதலைப் பேராட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சரிசமமாகப் பங்குபெறவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த தமிழினி அதற்காக மிகவும் கடுமையாக உழைத்தவர்.

சமூகத்தில் நிலவிய பல்வேறு வகையான பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராகவும் குரல் கொடுத்த தமிழினி அவர்கள், ஈழத்தமிழர் தாயகத்தில் தேசிய விடுதலையும் சமூக விடுதலையும் பெண்விடுதலையும் அமையப் போகும் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் ஊடாக வென்றெடுக்கப்படவேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன் போராட்டக் களத்தில் நின்றவர்.

தனது 18 வருட பேராட்ட வாழ்வின் ஊடாக ஒரு பண்பட்ட, பக்குவமான போராளியாவும் தலைவியாகவும் உயர்ந்து நின்ற தமிழினி அவர்கள், தான் சந்திக்கும் எவரையும் தனது கருத்துக்களால் கவர்ந்து கொண்டவர்.

மிகவும் தெளிவாக, நிதானமாக நட்புக் கலந்த முறையில் அவர் உரையாடும் பாங்கினால் இவர் தலைமை தாங்கிய தமிழீழ மகளிர் அரசியற் துறைக்கு வலுச் சேர்த்தவர்.

சந்தித்த சிங்கள மற்றும் அனைத்துலகத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள், ஊடாகவியலாளர்கள், இராஜதந்திரிகள் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டவராக விளங்கியவர்.

மே 2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழின அழிப்பின் ஊடாக சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த வேளை சிங்களத்தின் போர்க் கைதியாகிப் போக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினியும், ஏனைய ஆயிரக்கணக்கான போராளிகளும் உள்ளாகிக் கொள்கின்றனர்.

சுதந்திர வேட்கையுடன் நிமிர்ந்து நின்ற எமது போராளிகள் இத் தருணத்தில் பட்டிருக்கக்கூடிய வேதனைகள் எழுத்துக்களால் முழமையாக வடிக்க முடியாதவையாகவே இருக்கும்.

தமது தோழர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசம் சிங்களப் படையினரால் சிதிலமாக்கப்பட்டு, மக்கள் அனைவருமே தமது மண்ணில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு துன்புறுவுதைக் காணும் எந்தப் போராளியினால்தான் அதனை சகித்துக் கொள்ளமுடியும்?

தமிழினியின் நிலையும் இத்தகையதாகத்தான் இருந்தது.

சிங்களப் படையினர் தம்மிடம் போர்க்கைதிகளாகிய போராளிகளை சித்தரவதை செய்து துன்புறத்திய விதம் குறித்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் எம்மை ஒருபுறம் தாளாத வேதனைக்கும் மறுபுறும் ஆறாத அறச் சீற்றதத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.

தமிழினியும் மிகப் பெரும் கொடுமைகளை சந்தித்தே சிங்களத்தின் பிடியில் இருந்து வெளிவர வேண்டியிருந்தது.

பின்னர் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்ட தமிழினி தனது நினைவுகளையும் உணர்வுகளையும் கவிதைகளாக, கதைகளாக வெளிப்படுத்தும் ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தினார்.

போராட்டக்களத்தில் அவரது பங்களிப்பும் சிங்களத்தின் சிறையில் பட்ட துயரங்களும் இணைந்த நிலையில் வரலாற்றில் நின்று நிலைக்கக்கூடிய நல்ல பல ஆக்கங்களை படைக்கக்கூடிய ஆற்றல் அவருக்குஉண்டு என்பதனை அவரது படைப்பக்கள் வெளிப்படுத்தின.

அவர் இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருப்பாராயின் அவர் காலத்தால் அழியாதவொரு படைப்பாளியாகவும் பெண்களதும் குழந்தைகளது நல்வாழ்வுக்கும் உதவுபவராகவும், சமூகநீதிமிக்க சமூகம் ஒன்றைக் கட்டிஎழுப்புவதற்கான ஒரு சமூகப் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்தியிருப்பார் என்றெ நம்புகிறோம்.

தமிழினிக்கு தாயக,புலம்பெயர் மற்றும் உலகத்தமிழ் மக்கள் செலுத்திய இறுதிவணக்கம், மக்களுக்காக உண்மையாகப் போராடிய பேராளிகள் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியமாக இருக்கிறது. மக்கள் மனங்களில் இருக்கும் தமிழினி போன்ற போராளிகளின் நினைவுகள்
இப்போராளிகளின் அரசியற்கனவுக்கு வலுச்சேர்ப்பதா அமையும் என்பது திண்ணம்.

தமிழினி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை கலந்த இறுதி வணக்கம் !

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

**
விதைக்கப்பட்டது தமிழினியின் வித்துடல்

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.

முன்னதாக, பரந்தன், சிவபுரத்தில் உள்ள தமிழினியின் இல்லத்தில், பெருமளவு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இல்லத்தில் நடந்த இறுதிக்கிரியைகளை அடுத்து, இறுதி வணக்கக் கூட்டம் எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்றது.

thamilini_last_003 thamilini_last_005 thamilini_last_006 thamilini_last_007 thamilini_last_008 thamilini_last_009  thamilini-funeral-3

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண அமைச்சர் குருகுலராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதையடுத்து,தமிழினியின் வித்துடன், பேரணியாக கோரக்கன்கட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது கணவன், இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட பின்னர், வித்துடல் விதைக்கப்பட்டது.