tamilini 5“உள்ளிருந்து குமுறும் நெருப்பு ”

தமிழை உரைத்த இனி
வருவாளா மீண்டும் இனி
அரசியல் புரட்சி மொழி
இன்று கொடுத்தோமே பலி

மௌனத்தில் புதைத்தாள்
மரண வதைகளை அன்று
மௌனியாய் துயில்கிறாள்

வீரமகள் பேழையில் இன்று
காடையரின் கைக்கூலிகளே வாரும்
காவுகொடுத்த உயிரின் கதை கேளும்
மாற்றானுக்கு மாலையிடும் மடையர்களே வாரும்
மங்கையை இழந்ததன் பின்னணியைப் பாரும்

மரணத்தின் பின் முழக்கமிடும் மகான்களே
அரவணைக்கா உம் அனுதாபம்
அந்தியேட்டி பதாதையிலும்
அனைத்துலக செய்தியிலும் எதற்கு ..?

தலைமைப் போராளியையே மறந்த
தமிழ்பேசும் தனவான்களே ..
தாயப்பூமியில் இன்னும் எத்தனையோ
தமிழினியர் தவிக்கிறாரையா ..!

கோடி விலை கொடுத்து நயன்தாரவையும்
கொட்டகை மேளமிட்டு நமீதாவையும்
கூப்பி அழைக்கும் பறந்துபோன பறவைகளே
பார்வையை கொஞ்சம் திருப்பிப் பாருங்கள்

வெள்ளையனுக்கு பிறந்தவன் என்ற எண்ணத்தில்
வீராப்பு மொழியுரைக்கும் வித்தகர்களே

எதிரியுடன் கைநனைக்கும் எம்மினப் புறாக்களே
இவளின் கதையையும் கருத்தினிலே பாரும்
துயிலட்டும் தீபமொன்று
எரியட்டும் மனதில் என்றும்
தீபங்களைத் தானே அழிக்கலாம்
தமிழனின் தியாகம் தீயாய் வாழும்

————–” வன்னியூர் செந்தூரன் “——thamilini (1)

தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கல்

இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி நேற்று உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.

சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத்தமிழ்மகள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்தார்.

தமிழ் ஈழத்தின் தொன்மை வரலாறு, சிங்களரின் கொடிய அடக்குமுறை, அனைத்துலக நாடுகளின் அணுகுமுறை அனைத்தையும் தேர்ந்து தெளிந்திருந்த இந்த வீராங்கணை இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 2013 வரை சிறப்புத் தடுப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. தடுப்பு முகாமில் சொல்ல இயலாத சித்ரவதைகளுக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகிற அந்த வீர தமிழ் நங்கைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பொதுவாக வெளியிடுவதில்லை.
நெடுதுயர்ந்த கம்பீரமான தோற்றமும், இனிய பண்புகளும் நிறைந்த வீராங்கணை தமிழினியின் நல்லடக்கம் நாளை நடைபெறுவதாக அறிகிறேன். வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***thamilini

காவியமொன்று காற்றடங்கிப்போனது.

சுதந்திரப்பறவை
சிறகுடைந்து
சிறைக்குள் வீழ்ந்துபோனது.

புனர்வாழ்வு பூதத்தின்
இனவாத வாயுக்குள்
குதறுண்டுபோனது.

குற்றுயிராய்
சிறைமீண்டதும்
கொடியபுற்றுநோய்
கொண்டுபோனது.

பதினெட்டு ஆண்டுகள்
பரணி பாடிய
பறையொன்று
ஒலியிழந்து போனது.

பெண்ணியம் பேசிய
பெருமேதையொன்று
மண்ணின் பசியோடு
விண்ணுலகம்போனது.

விடுதலையின்
கண்ணியம் காத்த
கண்ணகியொன்று
கண்ணகன்றுபோனது.

கழப்பின்றி
களப்பணியாற்றிய
காவியமொன்று
காற்றடங்கிப்போனது.

ஜயகோ
நேற்றுவரை
மூசியடித்த
புயலொன்று
புகழுடலாய்போனது.
-தூயவன்-thamilini_12

தமிழினி …..

நான் தமிழீழத்தில் நின்ற காலங்களில் அதிகமாக சந்தித்து உரையாடிய, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கை தமிழினி. அரசியல், கலை இலக்கியம், பெண்விடுதலை, தமிழீழ விடுதலைப் போராட்டம், அண்ணன் பிரபாகரன் அவர்களின் ஆளுமைத் திறன், விடுதலைப் போராடக் காலத்தில் போராளிகளுக்குள் மலரும் காதல், இயக்கம் அதைக் கையாளும் விதம், பெண் போராளிகளுக்கு பெண்ணியம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படவேண்டிய தேவை குறித்து பல நாட்கள் பலமணிநேரங்கள் கலந்துரையாடியிருக்கிறோம். என்னை அண்ணா… என்று அன்பொழுக அழைக்கும் அன்புத் தங்கை அவர். என்னையும் என் ஓவியங்களையும் ஆழமாக உள்வாங்கியவர். மிகத் தெளிவாக கருத்துகளை வெளிப்படுத்தும் அற்புதமான பேச்சாளர். மிக ஆழமான வாசகர். ரசிகர். எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் உடையவர்….தமிழீழம் கிளிநொச்சியில் நடைபெற்ற என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி, மற்றும் புயலின் நிறங்கள் ஓவிய நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றினார். வேறுசில நிகழ்வுகளிலும் நாங்கள் இருவரும் கலந்துகொண்டிருக்கிறோம்.

முள்ளிவைக்காளுக்குப் பிறகு அவர் சரணடைந்த செய்தியறிந்தேன். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் அனுபவித்து வரும் சித்திரவதைகள் குறித்த செய்திகள் கசிந்து என்னை வந்தடைந்த போது எனக்கு மிகவும் வேதனையாகவும் துன்பம் தருவதாகவும் இருந்தன. அந் நேரத்தில் எல்லாம் போராளிக்கே உரிய கம்பீரமான அவரின் தோற்றப் பொலிவு என் கண்களில் நிழலாடும்…..

சில மாதங்களுக்கு முன் என்னோடு தொடர்புக்கு வந்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. வணக்கம் அண்ணா, நலமேயுள்ளேன். இலங்கையில்தான் இருக்கிறேன். உங்களின் தொடர்பு கிடைத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உங்களின் ஓவியப்பணிகள் தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என்று செய்தியும் அனுப்பினார்.
அவர் எழுதிய சில கவிதைகள் மற்றும் சிறுகதைகளை படித்து மகிழ்ந்தேன். அவர் உடல் மற்றும் மனக் காயங்களிலிருந்து மீண்டுவிட்டார் என்றே எண்ணியிருந்தேன்… ஆனால் இவ்வளவு விரைவாக நம்மை விட்டுச் செல்வார் என்று எண்ணவில்லை.

தமிழினி… தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எண்ணிலடங்கா வரலாற்றுச் சுவடுகளில்…
நீங்கா இடம் பிடித்திருக்கிறீர்கள். என்னோடு நீங்கள் பேசியவை என் காதுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே….இருக்கும். நாம் அமர்ந்து பேசிய அந்த இடங்களும் உங்கள் உடல்மொழியும் என் கண்களில் என்றும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.

தங்கையே….தமிழினியே….சென்று வா….
உனக்கு என் வீர வணக்கம்.

ஓவியர் புகழேந்தி.
19.10.2015.

**thamilini 3

தமது இனத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்தார் தமிழினி! – சிங்கள ஊடகவியலாளர் புகழாரம்

விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினிக்கு சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை கொழும்பு நியூஸ்டுடே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலிக்கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினி ஒருபோதும் சிங்கள மக்கள் தொடர்பில் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது.

தமது இனத்தின் விடுதலைக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார். அதே நேரம் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் அவர் எதுவித விட்டுக் கொடுப்புகளுக்கும் தயார் இல்லை என்பதையும் உணர்த்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் கைது செய்யப்பட்டதே தவறானது. எனினும் அதன் பின்னர் நடைபெற்ற சட்ட இழுத்தடிப்புகள் மற்றும் தடுத்துவைப்பின் கொடூரங்கள் காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாகவே மரணம் அவரை சீக்கிரமாக அழைத்துக் கொண்டுவிட்டது.

தென்னிலங்கையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள சிங்களப் பெண்கள் குறித்தும் தமிழினியிடம் விசாலமான பார்வை இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் சிங்களப் பெண்களின் மனச்சாட்சிக்கான தமிழ்க்குரலாக அவரை அடையாளப்படுத்தலாம்.

தமிழினியின் மறைவு எங்கள் சகோதரியின் மறைவாகவே எங்களால் உணரப்படுகின்றது என்றும் மஞ்சுள வெடிவர்த்தன தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.thamizhini

*
தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்தவர் வீரப்புதல்வி தமிழினி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி அவர்கள் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டது முதல் தனது பல்துறைசார் திறன்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். பேச்சாற்றல், படைப்புத்திறன் என்பவற்றுடன் சிறந்த அரசியல் அறிவுமிக்கவராகவும் விளங்கிய தமிழினி அவர்கள் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் என்கிற நிலையில் இருந்து ஆற்றிய பணிகள் ஏராளம்.

தமிழீழப் பெண்களை அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக மாற்றியதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ‘பிரிகேடியர்’ சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இணைந்து தாயகத்தில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்த சமகாலத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசால் 2009 இல் தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புப் போரின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிங்கள கொடுஞ்சிறையில் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழினி அவர்கள் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சிறை வாழ்வில் அனுபவித்த கொடுமைகள் யாவும் புனர்வாழ்வு காலத்திலும் தொடர்கதையாகிய நிலையில் தளராத மன உறுதியுடன் இயல்பு வாழ்வில் அடியெடுத்துவைத்த தமிழினி அவர்களது வாழ்க்கைப் பயணம் இன்று அதிகாலையுடன் முடிந்துபோனமை பெரும் துயரமாகும்.

தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்த தமிழினி அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாததென்றாலும் அவர் உயிர் மூச்சாய் கொண்ட இலட்சிய தாகம் உயிரோடுதான் உள்ளது. அந்த இலட்சிய தாகத்தை ஈடேற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கடமையாகும்.

தமிழினி அவர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பில் எமது அகவணக்கத்தை செலுத்துவதோடு அவரது இழப்பால் துயருற்று வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

***thamizhini 2
எங்கள் தமிழினிக்கு இறுதிப் பரணி…….!

எங்கள் தமிழினி போய்விட்டாள்
கரிய உருவமும்
காந்தம் கவ்விய பேச்சும்
நீள் துயிலில் நெடும்பயணத்துக்கு தயார்

காலம்
எங்கள் வல்லமை யாவற்றையும்
கபளீகரம் செய்துவிட்டதுபோல
காய்ச்சி விழும் ஈயம் போல
கண்ணீர் சுடசுட விழுகின்றது
பெண்ணின் உண்மைப்பேரழகை
எங்கள் தெருக்களில் பரவித்திரிந்த
கண்ணுக்கும் கருத்துக்கும் அழகான
புறநானூறொன்று விண்ணுலகம் போயிற்று

சிவகாமி
அவளின் பள்ளிப்பருவத்தில்
எங்கள் கிளிநொச்சி மருநிலத்தில்
பொங்கித்திருந்த புல்லரிக்கும் பேச்சை
அள்ளிப்பருகியிருந்தோம் நாம்.
பரந்தனின் உயர்தரம் கற்கின்றபோது
அவளுக்குள் இருந்து நெருப்பொன்று
எட்டிப்பார்ப்பாதை கண்ணுற்று
சிலிர்த்தது எங்கள் மண்
எங்கள் தோழிகளுக்கு நெஞ்சு சிலிர்க்கும்படி
ஒரு வல்லவள் ஒருவள் வாய்க்கின்றாள் என
எங்கள் புளுதித்தெருக்களில்
பூகம்பக்குஞ்சுகள் பொரிப்பதற்கு அடைகாத்தன.

பெண் கண்ணாடிச்சந்திரன் என
செல்லமாய் நாமழைத்த
மகளிர் அணியின் மலை சரிந்தது.
தொண்ணூறில் ஜெயந்திநகரில்
செல்வம் மாமா
மண்ணின் தேவைபற்றி
புரட்சி மாரி பொழிந்தார்.

சிலிர்த்து எழுந்தாள் சிவகாமி
அதன் பிறகு வெள்ளைச்சீருடையில்
அவளை பல மாதங்களாய் காணோம்.
பின்னொரு நாளில் அவளின்
புதிய பிரசவத்தை பார்த்தோம்.
நிலமதிரப் பிறந்த நெற்றித்திலகமென
உலகறிய நம் தமிழினி நடந்தாள்.

எங்கள் தங்கச்சிகளுக்கு
தலைவியென அக்காவாய் இருந்து
அகன்ற வானத்தை கொடுக்க
பகலிரவாய்த் தேயந்தாள்.

மண்ணைக்காக்கவென இல்லங்களை விட்டு
எழுந்துவந்த சூரியப்புதல்விகளுக்கு
அகல்விளக்காய் அன்னையாய்
பரந்திருந்திருந்தாள் எம் பெண்ணரசி.
வெண்கலப்பானையில் சுண்டிவிட எழும்
கலக்கமற்ற முரசு ஒன்று
அவள் நாவிலே நிரந்தரமாய் இருந்தது.

தமிழினி இருக்கின்றான் என தமிழ் மகிழ்ந்திருந்தது.
புதுமைப்பெண்ணாருத்தியின்
பூகம்ப வார்த்தைகள் கண்டு தலைமகன்
அடிக்கடி நிமிர்ந்திருக்கின்றான்.
தமிழினி போய்விட்டாள்

தலைமகளே!
பாலா அண்ணனும் தமிழ்ச்செல்வனும்
உன் தங்கைகளும் இருக்கிற இடத்தில்
ஆயிரம் பெருமூச்சுக்களோடும்
வார்த்தைகளில் சொல்ல முடியா
நீயடைந்த வதைகளோடும்
இளைப்பாற ஆரம்பித்திருக்கிறாயா
எங்கள் மண்ணின் கங்கையே காவிரியே
வாகையே வளர்ந்து சென்ற இமயமே!

போருக்குப்பிறகு உன்னை ஊரில் காணவில்லை
உன்னை ஈன்றவளிடம் அடிக்கடி குசலம் விசாரித்தோம்.
சிறைகளில் நீயிருந்த தவங்களை
தாய் வந்து கண்ணீரோடு இதயங்களில் ஊற்றினாள்.
அக்கா பாவம் என்று

உன்னை பெற்றெடுத்தவள் சொல்கின்றபோது
அதன் பின்னிருந்த ஆயிரம் அர்த்தங்களை
உள்ளத்தில் புதைத்து உக்கினோம்.
உன் வேதனைகளுக்கு சேலை கட்டி
உன் வேட்கைகளை ஒப்பனை பூசி மறைத்து

மனிதகுல வேடனும் அவன் கூட்டங்களும்
மணவறையில் ஒரு பெண்ணுக்கு தோழியாய்
உன்னை இருத்தினாலும்
எங்கள் பெருமைக்குரிய பெண்ணே!

எங்கள் கண்ணுக்குள் நிற்பது
களத்தில் நின்ற தமிழினிதான்!
உன் வண்ணங்கள் எது என்பது
எங்கள் வாசலுக்குத்தான் தெரியும்
உன் வார்த்தைகள் எது என்பது
ஈழக்காற்றின் இதயத்துக்குத்தான் தெரியும்.
உன்னை யாரும் வென்றுவிடவில்லை.

மீண்டும் மஞ்சங்களை நோக்கி மட்டும்
பெண்கள் சாய்க்கப்படும் நிர்ப்பந்தங்கள்
இம்மண்ணில் முளைவிடுகையில்
நீ சென்றுவிடுதல் உசிதமென
சிந்தித்தாயோ என்னவோ!

இறுதி வேட்டுக்களொடு
சபதமெடுக்கும் உன் தோழிகள் முன்னே
விதைகின்ற உன் சந்தணமேனியை
வெறும் பாடையேல் ஏற்றி
வெறும் பட்டாசுகள் கொழுத்தி
இடுகாட்டில் எரிக்கிற
இதயம் கனக்கும் நாளில் நிற்கின்றோம்.

உன் வாசம் எப்பொழுதும் மண் வாசமாய் இருந்தது.
இன்றுவரையும் உன் வாழ்வும் வீடும்
ஏழ்மையின் அடையாளமாய் இருந்தது
அது விடுதலைப்போராளிக்கு
தங்க விருதுபோன்றது.
அப்போதும் இப்பொழுதும்
இறுதிவரையும் தமிழினிக்காக காத்திருப்பதாக
உன் அம்மா இருந்தாள்.

மாலதி சோதியா நளாயினி துர்க்கா
விதுசா அங்கயற்கண்ணி……
இம்மண் ஆரத்தழுவிய வீரத்தங்கைகளோடு
நீ மகிழ்கின்ற நாட்களா இது.
என் உடன் பிறந்த தங்கை இன்மொழியும்
அங்கேதான் இருக்கின்றாள்
இந்த அண்ணன் நலம்விரித்ததாய் சொல்லிவிடும்!

கடலென திரளத்தவிக்கும் மண்ணில்
நீ தனியே துயில்கிறாய்
காற்றென உன்னை பற்றி
பேசத்துடிக்கும் ஊமைகள் மத்தியில்
நெடும்பயணம்போகிறாய்
தேவாரம் திருவாசகத்தோடு மட்டும்
தமிழினி எங்கள் தலைவிக்கு
இறுதி விடைகொடுக்கவோ!

அவன் தீரத்தை வரித்து
அவள் வீரத்தை பாடி விடையளிக்க
இதயச்சிறைகளை உடைக்கவோ!
பட்டுச்சேலையுடுத்தி அனுப்பும்
பதுமையா இவள்
பட்டொளி வீசிபறக்கும்
எங்கள் பரம்பரையின் வீரக்கொடி போர்த்தியல்லவா
இந்த பூகம்பத்தை பூமியில் விதைக்கவேண்டும்!

எங்காத்தாள் என்று சொல்லி
எங்கள் பரம்பரை தமிழினி என்ற பெயரை
தலையில் வைத்துக்கொண்டாட
இறுதி வணக்கத்தை செய்ய முடியாத
சாபம் தமிழன் எனக்கு!

எங்கள் புழுதி வீதிகளில்
புதியவளாய் பிறந்து பெருமை தந்து
மண்ணுக்காய் தேய்ந்து
சொல்லிமாளா வதை சுமந்து
எமை பிரிந்து செல்லும்
கறுத்த மல்லிகையே கற்பகமே
கஸ்தூரியே காந்தப்பேச்சே!
விடை தந்தோம் எங்கள் விழியின் உறங்கும் நெருப்பே!

–பொன் காந்தன்cwdr_thamilini_1
தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்…
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்…
ஆயுதம் ஏநத வைத்த
தலைவன் வழியில்…
அடிமை விலங்கினை
உடைத்தெறியவென
பூக்களும்….
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த
வீர மங்கையான நீ….
போர்க்களத்தில்….
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்… பூவாய்…
உலா வந்தாய்..!!

இன்றோ…
நீ இறந்தநாள் என…
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்…..
உனது சரித்திரம் அப்படியல்ல…

தலைவன் நிழலில்…
தலைவனின் பார்வையில்…
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள்
இசைக்கப்பட்டு…
தேசமெங்கும்
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க…
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் – தமிழீழ
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க…

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக…
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள…

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்…
நினைவுகளைச் சுமந்து
“புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்” என
துயிலும் இல்லத்தில்
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்….
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய
உன் புனித வித்துடல்,

இன்றோ….
சாதாரண சாவாய்…
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக…
வீர வணக்கத்தோடு…
உயர் பதவி நிலையோடு…
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை…

இன்றோ….
சூனியத்தில் இருந்து
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக…..
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று – வெறும்
அஞ்சலி மட்டுமே செய்து
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்…
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்…

இன்று…

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்…
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்….
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி… எழுதியே…
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

கவியாக்கம்:- வல்வை அகலினியன்.

**TAMILINI-6

உறவுக்கூடுகள் கலைந்து போனது!

ஈழத்தெருக்களில்
முழங்கிய உன் குரல்
அடங்கிப்போய் அமைதியாய்
கிடக்கின்றது.
உறவுக்கூடுகள்
கலைந்து போனதால்…

கொடிய நோய் வந்த
செய்தி எமக்கு தெரியாமல்
உரிமை சிறகொடிந்த
தோழிகளாய் நாம்
தொலைந்து
தொலை தூரமாகிப் போனோம்.!!

நேற்றைய காற்று
சாவு செய்தியை
காவி வந்தது.!!

எம் இனம் எங்கனும்
கலகலப்பிழந்தது
ஏற்க மறுத்தது மனது.!!
ஏற்றுக்கொண்டது நியதி

ஈழப்பெண்களின் வீரம்சொல்லி
நீ பாடிய தெருக்களில்
உன் தீரம் சொல்லி
கூவிட முடியா
வாயடைத்து நிற்கின்றோம்

உலகத்தமிழ் இனமே
ஊமையாய் அழுகின்றது
உண்மைகள் தெரியாது..!!

கவியாக்கம்:- மிதயா கானாவி