ஆழிப்பேரலை இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
—-வே. பிரபாகரன்
கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று….
‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’
அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.
இடையில் ஒரு நாள்…..
சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது.
அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…? “அம்மா….!” என்று அழுவானோ….? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.
காலம் அசைந்தது.
“பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்….. கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்…..” அவர்கள் அறிந்தார்கள்.
‘எவ்வளவு காலமாகிவிட்டது….? எப்படி இருக்கிறானோ…? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.
சோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுக்கும் கேள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.
மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து, பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.
“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…. கனக்க நேவியும் முடிஞ்சுதாம்…..” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.
எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, “ஈழநாதம்” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது…. அந்த படங்கள்….! அந்தப்படம்….! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…. கண்கள் இருண்டன…..! உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்…..? அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம்! அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே….. அதே பிள்ளைதான்.
கறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், “சோறு காய்ச்சனை கரியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்.
வீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா….” என்றபோது,” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…. அந்த மகன்!
சோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.
தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.
கந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.
1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.
கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போகவைத்தது குடும்பநிலை.
குடும்பச்சுமை பகிர்ந்து உழைச்சு, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டு நிலை.
மன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வழியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.
மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பனி.
சிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி, வெடியோசைகளால் நிறைந்து நகர்ந்து கொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் பெண்டுகல்செனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளுள் ஒன்று, விநியோக வேளைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலைப் பிய்த்தது.
காட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிட்சை முடிய புகைப்படப் பிரிவில் பணி.
கிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம் .
எங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.
இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல், பகலை இரவாக்கி துங்க முயலும் வாழ்வு.
முகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன் தான். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.
வரதனும், மதனும் உற்ற நண்பர்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான். இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.
ஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒற்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியில் பணி செய்தவர்கள் ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.
மதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில்நின்று கூத்தாடி…. ஊன்று தடியோடு துள்ளியோடி… கும்மாளமடித்தபடி திரிந்து….. அவன் ஓய்வதில்லை .
திருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழற்றிவிட்ட இடதுகாலுகுப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொழுவப்பட்டிருன்தது பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உயர்ந்த நண்பன் அவன்.
இரவெல்லாம் படகொடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் துங்கமுயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டித் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டுத் துள்ளி ஓடி அவர்களுடியே அன்பான சினப்பிற்க்கும் ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்: ஆனால் பகலில் ஓடித்திரிவான்.
சண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில்…. மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.
எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப் போல பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இலந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன், சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.
மதனுக்கிருந்த இயல்பான குழ்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியில் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்துபோய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப் போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு மதன் ஒரு மரக்குத்தியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் துண்டவும் தன்மானம் தடுத்தது. ஊன்று தடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாலியை எடுத்த , வரதனுக்கு குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.
வரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதியுங்க்கோடா” என்று எங்களுக்கு புத்தி சொல்பவன். அது, வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.
அம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்டகாலம். எங்கு இருக்கின்றார்களோ…..? ஆமிப்பிரசினைகளால் ஒடுக்கபட்டுத் திரிகின்றார்களோ….? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை. மூன்றாம்தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது: பதில் வரவே இல்லை.
இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களைக் கொண்டவங்கள்…. தம்பி…. தப்பி ஓடிவந்து எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை… என்ன நடந்ததோ…..? கடவுளுக்குத்தான் தெரியும்!” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.
காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.
கிளாலியின் விரிந்த கடல்.
தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.
இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம். அந்த மரண வளையத்திலும், கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் அயநிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.
நாகதேவன்துறையில் போருத்தபட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூடப் பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.
எதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடைசெய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ட்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும் ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.
கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக் கொண்டிருக்குக்கும் கடற்கரும்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.
அந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.
விடிகாலைகளில், பயணம் போன எம்மக்கள் செத்த பிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.
அவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு, நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி, அவனைத் தாக்கித் திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஒட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்; “இப்பமட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலேயே முடியும்.”
அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம். அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவை , அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.
“ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?” என்பதற்கு, ஒரு தத்து வார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
வரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலேயே இருக்கு. அந்த ஒரு நொடிப்போழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பேன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொறுங்கும்” என்பான்.
மதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்தது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோணும். அதை நான் சாதிச்சே தீருவேன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”
மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர் 1975 ஆம் ஆண்டு, செப்ரெம்பர் திங்கள் 7 ஆம் நாள். அந்த வீரமைந்தனைப் பெற்றால் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் பொது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கேன்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்….” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.
கிளாலியின் கடற்போர் முனை.
ஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.
அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலிக்குப் போய்ப்போய்த் திரும்பிவரவேண்டியிருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இலகியதில்லை.
ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஒட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரபினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.
மறுநாள்….
முகாமின் ஒரு மூஇயில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக , அவர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.
25.08.1993.
வழமையான இரவு.
நிலவு உலா வராத இருண்ட வானம்.
சிலிர்ப்பூட்டும் குளிர்.
உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.
கடற்புலிகள் காவல் உலா வர, மக்களின் பயணம் துவங்கிவிட்டது.
சக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’, ‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்.
கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62 ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிககியின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.
அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கலர்ரிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான்; “இன்றைக்கு இடிச்சே தீருவேன். திரும்பி வரமாட்டேன்.”
நேரம் நாடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்த்தது.
ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.
ஆனால் பகைவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனை இருமுனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.
சண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காதுகொடுத்தான்.
மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில்; ஏற்க்கனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின் படி,‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.
சுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்க்கு அவகாசமில்லாமல், மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தேழுந்த ஒளிவெள்ளம் மறைந்தது, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115′ இலக்க ‘வோட்டர் ஜெற்’ றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
தான் நேசித்த கடலோடும்….. காற்றோடும்….. எங்கள் மதனும்…. அவனது ‘புலேந்திர’ னும்..…
அந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.
புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டைமுனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.
புலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு ‘வோட்டர் ஜெற்’ படகு, வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.
இருள், ஆளை ஆள் பார்க்க முடியாத இருள். வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம் கண்டு; அது அவனுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.
சரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான்; அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்…..! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்….! எதிரியின் படகு…….
எங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்…..
நாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121′ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்துவிட்டார்கள்.
ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள்; கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள். சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.
எங்களுக்காக….. மக்களுக்காக…. மண்ணுக்காக….!
விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து
மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயூ என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.
தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயூ அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.
விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.
போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார்.
இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் கேணல் ராயு.
ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..
அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பொரியார் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்தபோதும் தமிழீழ தேசம் விடியும் நாள்வரை வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மைகருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம்செய்ய எப்படி முடியும்? ஒய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழித்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம்போல் எம்முள் பாய்கின்றன.
பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்துவிடும் அலாவுடன் 1983ம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எதுவித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயு எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சி பெறவேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும்போது பொன்னமானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சிமுகாமின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். அவருடனேயே தமிழிழத்தில் கால்பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
தொலைத் தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயு கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலுக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன் கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார்.
துரோகி ஒருவன் வீசியகுண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயுவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயுவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிகுண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலைகொடுத்தான். பலாலி, காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப் பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.
பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப்படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக் கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்தபின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள்வரை தலைவரின் தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீககவனத்துக்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத் தொடர்பு, வெடிமருந்து, இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச்சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.
இந்தியப்படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரை, இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார், ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கனவாய் வளர்தெடுத்ததுவரை, எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிகுண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.
இந்திய அமைதிப்படைகளின் வந்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருன்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர் தலைவரை அடைந்த ராயு ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.
இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயு உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூறுகிறான்.
“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும்தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன்மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன்முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்துகொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”
இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைகளுக்குப் பொறுப்பாகவிருந்து பல வெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்குக் காத்திரமான பங்களித்த “பசீலன் 2000″ அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆணையிரவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனதில் “பசிலன் 2000″ இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழினுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய வகை ஆயுதங்கள் ராயுவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.
இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கைறையைத் தன் பொறுப்பின் கிழ் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேசிப்படித்து விடயங்களை நுணிகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடிமருத்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக் கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப் பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள் என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்யவேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக்கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் தேசத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றும் வரை அவர் ஓய்வதில்லை, சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.
1992ம் ஆண்டு ஆயுத வெடிபொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புகளைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்களை மேற்கொண்டார். அப்பொழுது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்குதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது.
அந்நாட்களில் ராயுவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோ கூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக் கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் அவர் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயு நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். அதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஒய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.
சிறுத்தைப் படைப்பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்புமிக்க அதிரடிப்படையை உருவாக்கவேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் என்னத்தை முழுமையாக உணர்ந்த ராயு தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்டபோது ராயுவின் மீதான சுமை இரட்டிப்பானது.
பயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயு எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு எதுவுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொடக்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டனவாக வேயிருந்தன. நாங்கள் எல்லாவற்றிலுமே கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயு அண்ணையின் செயல்கள்தாம். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயு அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்”
ராயுவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக ஈடுபடுத்தப்பட்டதுடன் சிறுத்தைப்படையணிப் போராளிகளாற் படைத்துறை உள்கட்டமைப்புகள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியிற்றுறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதர்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியேயிருந்தார். இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் பிரமிக்கவைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார்.
“ராயு அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குரித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதிந்துவைத்துவிடுவார். தேவைப்படும்போது எல்லாவற்றையும் உடன்க்க்குடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்துக்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்திற் புத்தகத்துடன் அமர்ந்துவிடுவார். தான் வாகனத்தை ஓட்டும்போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக் கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயு அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்துவிடுவார். எப்போதும் அதிகாலைவேளையில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்துவிடுவார். இப்படியான இயல்புகலாற்றான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்கமுடிந்தது”
உண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ்குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்கமுடிந்தது.
வன்னிப்போர்க்களத்தில் எமது படைத்துறை பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புகளுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயு வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின்போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயுவின் உழைப்பே காரணமாகும்.
முல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்களில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்னுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புகளும் ராயுவிடமே விடப்பட்டன. “ராயு எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயுவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப்படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார்.
“எங்களைப் பொருத்தவரை அப்போது எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில், அப்போது ஆட்லறிபற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்துவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயு அண்ணை அந்த இரும்புக் குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகரமுடியாமல் முடங்கிவிடுவோம்.
சிலவேளைகளில் நம்பிக்கையின்மைகூட ஏற்படும். “ராயு அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கைதான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயு அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின்படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின்போது எமது ஆட்லறிகள் துல்லியமான சூடுகளை வழங்கின.”
ஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும்மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப் பிரிவைப் பயன்படுத்துவதில் ராயு வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின்போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாமையால் மரபுவழிப் படைகள் அக்காலநிலைகளிற் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஐயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின்போது எமது ஆட்லறிப்பிரிவான கேணல் கிட்டு பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயுவே தலைமைதாங்கி வழிநடத்தினார்.
எல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல் சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆட்லறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழல்களிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பகல் சண்டையில் நாம் குதித்தபோது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்துச் சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது.
வரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போது ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக்காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற்றுறையால் “அக்கினிக்கேலா” நடவடிக்கைக்கெதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வேடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின.
போர்க்களங்களில் ஆயுதவலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காகாத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாததென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒருநாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தரியாத எங்கள் தளபதி ராயு கொடும் நேயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவரால் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தில் வாடினர்.
ராயுவின் நோயின் கடுமை அதிகரித்துக் கொண்டேபோனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்றுவிட்டன. எங்கள் அன்புக்குரிய ராயு மீட்கப்பட முடியாதநிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதை செரிக்க முடியாதவராக இருந்தார்.
“வருத்தமென்று சும்மா படுத்துக்கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறிவருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயுவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்கமுடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்கநிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.
ஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயு அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாறேன்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயு நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கும். ஆனால் 25.08.2002 ஆம் ஆளன்று எல்லாமே பொய்த்துப்போயின.
விடுதலைப்புலிகள் (புரட்டாதி, ஐப்பசி 2002)
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.
மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
மக்கள் கண்ணீரை தன் இதயத்தில் இடியாக இறக்கி ஆறுதல் கொடுத்து அன்புகாட்டி அவர்கள் விடிவுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்து போராடிய உண்மை தலைவன் எங்கே…
காலில் விழும் மக்களை கூட ஏளனமாக பார்த்து மக்கள் கண்ணீரை துடைக்க முயற்சிகள் எடுக்காமல் மக்கள் போராட்டங்களிற்கு செவி கொடுக்காமல் மக்கள் அவலங்களை பாராமுகமாக உதாசீனம் செய்து இந்திய இலங்கை அரசுகளைதிருப்திப் படுத்தும் அவர்கள் எங்கே..
எல்லோரும் தலைவர்கள் ஆகி விட முடியாது. மக்களை உயிரில் சுமப்பவர்கள் மட்டுமே உண்மையான தலைவர்கள்.
உண்மையான தலைவர்கள் மக்களில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதில்லை. மக்களோடு மக்களாகவே எளிமையின் வடிவமாக வாழ்வார்கள். சிறந்த தொண்டனால் மட்டுமே சிறந்த தலைவனாக இருக்க முடியும். மக்களின் மன உணர்வுகளை புரிந்து செயல்ப்படுபவன் மட்டுமே மக்களின் தலைவன் ஆகலாம். மக்களுக்காக குரல் கொடுக்கும் தகுதியும் அத்தகையை மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர்களுக்கு மட்டுமே உண்டு.
அத் தகைமை எமது தமிழீழத் தேசிய தலைவன் வே பிரபாகரனுக்கு மட்டும் பொருந்தும்….!
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.
Recent Comments