மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருந்த நிலையில் இவற்றை உறுதி செய்யும் வகையில் மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள ஒப்பந்தத்தின் நகல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது.obama vs mahinda

மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் 2010 செப்ரெம்பர் மாதம் 22ஆம் நாளன்று கைச்சாத்தாகிய பொழுது அதன் அடுத்தபடியாக படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் மாலைதீவில் அமெரிக்கப் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின் நகல் வெளிவந்துள்ளது. இந்நகல் வெளியிடப்பட்டது என்று கூறுவதை விட அது கசிய விடப்பட்டது என்று கூறுவதே பொருத்தமானது. இதனை யார் கசிய விட்டார்கள் என்பது பற்றி ஆராய்வதோ அன்றி அதனைக் கசிய விட்டதால் எவருக்கு என்ன இலாபம் உண்டு என்று ஆராய்வதோ இங்கு அனாவசியமானது.

மாறாக இந்நகல் வெளிக்கொணரும் செய்திதான் இங்கு முக்கியமானது. உலகில் வல்லாதிக்கம் செலுத்த முற்படும் வல்லரசுகளாக இருந்தாலும் சரி, தத்தமது பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் பிராந்திய வல்லரசுகளாக இருந்தாலும் சரி, கடல்வழி சுதந்திரம் என்பது அவற்றின் இருப்பிற்கும், பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது.

அதிலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகை தாராண்மைத்துவ ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வந்து தனது பொருண்மிய நலன்களை விரிவாக்கம் செய்யும் மூலோபாயத்துடன் இயங்கி வரும் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் கடல்வழிச் சுதந்திரம் பேணப்படுவது அத்தியாவசியமானது. இதனால்தான் நீண்ட காலமாகவே அமெரிக்காவின் கழுகுப் பார்வை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பொதிந்துள்ளது.

‘இந்து சமுத்திரத்தை எவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களோ, அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசியா இருக்கும்? என்கின்றார் அமெரிக்காவின் நவீன கடல்வழி மூலோபாயங்களின் பிதாமகனாக விளங்குபவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கடற்போர் வியூகிகளில் ஒருவராக திகழ்ந்தவருமான அட்மிரல் அல்பிரட் தயர் மாகன்.

சோவியத் ஒன்றியத்துடன் பனிப்போரில் ஈடுபட்ட காலத்திலேயே இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பகீரத பிரயத்தனங்களில் அமெரிக்கா இறங்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவுடன் பிரித்தானியா சாம்ராச்சியம் சரியத் தொடங்க, அதன் எதிர்வினையாக மேற்குலகில் ஏற்பட்ட பொருண்மிய பின்னடைவுகளை சீர்செய்வதும், பிரித்தானியாவின் பிடி நழுவிப்போன கீழைத்தேய நாடுகளில் தனது பொருண்மிய நலன்களை நிலைநாட்டுவதுமே அமெரிக்காவின் அன்றைய மூலோபாயமாக இருந்தது.

ஆனால் அதற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் விளங்கியவர் இந்திரா காந்தி அம்மையார். தென்னாசியப் பிராந்தியத்தில் பாரத தேசத்தின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் சகல வெளித்தலையீடுகளையும் பகைமை நடவடிக்கைகளாக வரையறுத்து இந்திரா காந்தி அம்மையார் வகுத்த ‘இந்திரா கோட்பாடு’ அன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு பெரும் தலையிடியாக இருந்தது என்றால் மிகையில்லை. இதனையும் மீறி ஈழத்தீவில் தளம் அமைப்பதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளே 1980களில் தமிழீழ தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களையும், போர்ப் பயிற்சிகளையும் அளித்து ஜெயவர்த்தனாவை மண்டியிட வைத்து தனது கட்டுக்குள் கொண்டு வருதற்கு இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனாலும், இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுடன் ‘இந்திரா கோட்பாடு’ அவரது புதல்வர் ராஜீவ் காந்தியால் கைவிடப்பட, அமெரிக்காவுடன் படிப்படியாக நல்லுறவை இந்தியா ஏற்படுத்திக் கொண்டது. ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் முகிழ்த்த இவ் உறவு, சந்திரசேகரின் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது. எவ்வாறு முதலாவது வளைகுடா யுத்தத்தின் பொழுது தென்னிலங்கையில் அமெரிக்கப் போர் விமானங்கள் எரிபொருட்களை நிரப்புவதற்கு பிரேமதாசாவின் அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கியதோ, அவ்வாறான ஒத்துழைப்பை சந்திரசேகரின் அரசாங்கமும் வழங்கியது. இந்நல்லுறவு நரசிம்மராவின் ஆட்சியில் விரிவடைந்தாலும், வாஜ்பாயின் ஆட்சியில் அது மந்தகதியை எட்டியது.

இவ்வாறு மந்தகதியில் காணப்பட்ட அமெரிக்க – இந்திய நல்லுறவு, 2004ஆம் ஆண்டு சோனியா காந்தியின் தலைமையிலான கொங்கிரஸ் கட்சி டில்லியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மீண்டும் உத்வேகம்பெற்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்று அமெரிக்காவும், இந்தியாவும் பங்காளிகள். அணுசக்தி ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, பொருண்மிய ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, இராணுவ ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி எல்லா விடயங்களில் இன்று அமெரிக்காவின் தாளத்திற்கு சுருதி மாறாமல் இந்தியா ஆடுகின்றது.

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் ஜெனீவாவில் இரண்டு தடவைகள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமையும், டில்லி விடுத்த கோரிக்கைளை ஏற்று அதன் வீச்சை வோசிங்டன் நீர்த்துப் பெறப்போகச் செய்தமையும் இதற்கு மிகச்சிறந்த சான்றுகள் எனலாம். இப்படியானதொரு பின்புலத்திலேயே தற்பொழுது மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அடிக்கடி அரசியல் குழப்பங்களை எதிர்நோக்கும் ஒரு நாடு மாலைதீவு. அங்கு ஏற்பட்ட குழப்பங்கள் பிராந்திய வல்லரசு என்ற வகையில் இந்தியாவிற்கு நெடுங்காலமாகவே தலையிடியை கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில் இப்பொழுது மாலைதீவில் அமெரிக்கா காலூன்றத் தயாராகுவது இந்தியாவைப் பொறுத்தவரை ஒத்தடமும், ஆசுவாசமும் அளிக்கும் செய்தியாகவே அமைகின்றது.

மாலைதீவில் தரையிறங்கும் அமெரிக்கக் கழுகு இன்னும் சிறிது காலத்தில் ஈழத்தீவிலும் தரையிறங்கிவிடும் என்பதில் எவருக்கும் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. இன்று மாலைதீவில் அமெரிக்கா காலூன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது 2010ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ சேவைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இவ்வாறான ஒப்பந்தத்தை 2007 பங்குனி மாதம் 5ஆம் நாளன்று சிறீலங்காவுடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டது.

இவ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ரணிலின் ஆட்சியில் 2002ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், வாஜ்பாயின் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்புக் காரணமாக அது பிற்போடப்பட்டது. பின்னர் சோனியா பச்சைக்கொடி காட்ட, 2007ஆம் ஆண்டு அவ் ஒப்பந்தத்திற்கு மகிந்தர் உயிர்கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக இன்னும் சிறிது காலத்தில் மாலைதீவு போன்று ஈழத் தீவிலும் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மகிந்தருடன் அமெரிக்கா ஏற்படுத்தும் என திடமாக எதிர்பார்க்கலாம்.

இதற்கான சமிக்ஞைகள் 2009 மார்கழிமாதம் 7ஆம் நாளன்று அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகின்றன. தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கும் ஜோன் கெரி அவர்களின் மேற்பார்வையிலேயே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஈழத்தீவில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்கள் பற்றியும், இவற்றைத் தக்கவைப்பதற்கு கையாளப்பட வேண்டிய யுக்திகள் பற்றியும் இவ் அறிக்கை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

“ஏற்கனவே இருக்கக்கூடிய மனிதநேய மற்றும் அரசியல் கரிசனைகளுடன் அமெரிக்க நலன்களைப் பேணுவதில் சிறீலங்காவிற்கு இருக்கும் பூகோள-கேந்திர வகிபாகம் பற்றிப் பெரும்பாலும் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளனர். ஐரோப்பாவையும், மத்திய கிழக்கு முதல் சீனா உள்ளடங்கலாக முழு ஆசியப் பிராந்தியத்தையும் இணைக்கும் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையில் சிறீலங்கா அமைந்துள்ளது. கடல்வழி வணிகத்தை சீர்குலைக்கக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளையும், கடற்கொள்ளை நடவடிக்கைகளையும் தடுக்கும் பொதுவான கரிசனை அமெரிக்காவிற்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உண்டு.

சிறீலங்காவின் வகிபாகம் என்பது கடல்வழிப் பாதைகளோடு மட்டுமன்றி உலகின் மிகப் பெரும் சனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாததாக உள்ளது. சிறீலங்காவில் நிலவக்கூடிய இனமுரண்பாடுகள் இந்தியாவின் உறுதிநிலையை, அதிலும் அறுபது மில்லியன் தமிழர்கள் வசிக்கும் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் உறுதிநிலையை பாதிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் எமது உறவுக்கான கரிசனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சிறீலங்காவை அமெரிக்கா இழந்து விட முடியாது. இதற்காக சிறீலங்காவுடனான உறவை ஒரே இரவில் நாம் மாற்றியமைக்க வேண்டியதோ அல்லது அதன் அரசியல்-மனிதநேய தவறுகளை அலட்சியம் செய்ய வேண்டியதோ இல்லை. மாறாக சிறீலங்காவை எமது கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வகையில் எம்மிடம் உள்ள ஆற்றல்களை விரிவாக்கம் செய்வதற்கான புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

எமது உறவின் பொருண்மிய, வணிக, பாதுகாப்பு அம்சங்கள் ஊடாகப் பயன்பெறக்கூடிய பன்முகப்பட்ட மூலோபாயம் கைக்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகுமுறை நாம் விரும்பும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் கேந்திர நலன்கள் பேணப்படுவதற்கும் வழிகோலும். வெறுமனவே தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கிற்கு நிதியுதவி அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க மூலோபாயம் அமைய வேண்டும்.”

ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கையாக விளங்கும் தனியரசுக் கோரிக்கையைப் புறந்தள்ளி விட்டு மகிந்தரின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசியல் தீர்வையும், போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையையும் அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் வலியுறுத்துவதன் அர்த்தபரிமாணங்களை நாம் புரிந்து கொள்வதற்கு ஜோன் கெரி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகள் போதுமானது.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக கொழுந்துவிட்டெரியும் ஈழத்தமிழர்களின் தனியரசுக்கான வேட்கையை அதிகாரப் பரவலாக்கம் எனும் நீரை ஊற்றுவதன் மூலம் அணைத்து விட்டு ஈழத்தீவில் காலூன்றுவதே அமெரிக்காவின் இப்போதைய யுக்தியாகும்.

ஈழத்தீவில் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டுக் கொள்கையளவில் மகிந்தருக்கு ஆட்சேபனை கிடையாது. தானும், தனது குடும்பமும் சிறீலங்காவின் ஆட்சிக்கட்டிலில் நிரந்தரமாக அமர்ந்து கொள்வதற்கு அமெரிக்காவின் பிரசன்னம் வழிவகுக்கும் பட்சத்தில் அதனை ஆரத்தழுவி வரவேற்பதற்கு மகிந்தர் தயாராகவே இருக்கின்றார். இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இராணுவ சேவைகளை பகிரும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் அமெரிக்கா எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு தென்னிலங்கைச் சிங்களவர்களின் வாக்கு வங்கியை தான் இழக்கும் சூழலுக்கு வழிகோலும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உண்டு. தவிர அமெரிக்கா விதந்துரைக்கும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே பாமர சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பொருண்மிய நெருக்கடிகளை மேலும் அதிகரித்துத் தானும், தனது குடும்பமும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படும் புறநிலையை தோற்றுவிக்கும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவை எதிர்ப்பதன் ஊடாகவோ, அன்றி சீனாவுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமோ தான் நினைத்ததை நீண்ட காலத்திற்கு சாதிக்க முடியாது என்பதும் மகிந்தருக்கு நன்கு தெரியும். வடகொரியா விடயத்தில் அண்மையில் அமெரிக்காவிற்கு பக்கபலமாக சீனா எடுத்த நிலைப்பாடு இதனையே உறுதி செய்கின்றது. கடந்த காலத்தில் சூடானையும், லிபியாவையும் கைவிட்டது போன்று தன்னையும் என்றோ ஒருநாள் சீனா கைவிடும் என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும்.

இப்படியாக திரிசங்கு நிலையில் இருக்கும் மகிந்தருக்கு ஒரேயரு தெரிவுதான் உள்ளது: அமெரிக்காவின் காலில் மண்டியிடுவதுதான் அது. இதற்கான புறநிலையை தோற்றுவிப்பதற்காகவே இப்பொழுது அமெரிக்கா குத்தி முறிகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச்சப்பற்ற தீர்மானங்களுக்கு அடிப்படையாக விளங்குவது இதுதான். எப்பொழுது மகிந்தர் அமெரிக்காவிடம் மண்டியிடுகின்றாரோ அப்பொழுதே ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்காவின் கரிசனையும் முடிவுக்கு வந்து விடும்.

சீனாவும், அமெரிக்காவும் மோதும் நாள் வரும் பொழுது தமிழீழம் அமையும் என்ற கனவில் மிதந்து மாடமாளிகைகளில் ஒய்யாரமாக சுதந்திர சாசனம் எழுதும் நாடங்களில் விருந்துண்டு திளைத்து உலகத் தமிழர்கள் களைத்துப் போக, அமெரிக்காவிடம் மண்டியிட்டு ஈழத்தீவில் தமிழீழ தேசத்தின் அடையாளத்தை நிரந்தரமாக அழிக்கும் கைங்கரியத்தை மிகவும் கனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றப் போகின்றது.

அதாவது இப்பொழுது மாலைதீவில் தரையிறங்கும் கழுகு விரைவில் ஈழத்தீவிலும் களமிறங்கும் பொழுது ஈழத் தமிழர்களின் கதி இலவுகாத்த கிளியின் நிலைக்கே மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் உறவுகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பொழுது அதனை தடுத்து நிறுத்த முடியாது கையறு நிலையில் இருந்தது போன்ற நிலையையே மீண்டும் ஒரு தடவை உலகத் தமிழினம் எட்டப் போகின்றது.

இந்நிலையை நாம் தவிர்க்க வேண்டுமாயின் சனநாயகப் போராட்டம், இராசதந்திரப் போராட்டம் போன்ற மாயைகளிலிருந்து மீண்டெழுந்து தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் எமது போராட்ட மூலோபாயங்களை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலும், காலியிலும், அம்பாந்தோட்டையிலும் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை: அது சிங்கள மக்கள் கையாள வேண்டிய பிரச்சினை. ஆனால் அதற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பலியிடப்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு