மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள்.

மன்னார் பலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த ஸ்ரீலங்கா படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது .

 

லெப் கேணல் தர்மா / சரிதா

அக்கா !…
அல்பா பகுதியை உடைச்சுக்கொண்டு ஆமி வந்துட்டான்.
இது ஒரு பெண் போராளியின் குரல்.

நேரம் நண்பகல் பதினோரு மணியாக இருந்தது.

எத்தனை நிலை (பொசிசன் ) உடைச்சிட்டான் ?…
எவ்வளவவு ஆமி இருக்கும் ?…
இது அந்த மகளிர் கட்டளை தளபதியின் குரல் …

ஒரு … 60 – 70 பேர் இருக்கும் அக்கா.

நீங்கள் எத்தனை பேர் ?….

என்னுடன் 3 பேர் அக்கா ஒரு பிரச்சனையும் இல்லை வலப்பக்கமும் இடப்பக்கமும் உடைக்க விடாமல் மற்ற பிள்ளைகள் சண்டை பிடிக்கினம்.
நீங்கள் 3 பேரும் உள்ளுக்குள் வர விடாமல் சண்டை பிடியுங்கோ. இப்ப ஒரு அணியை உங்களுக்கு உதவிக்கு அனுப்புகிறேன். அப்படியே சண்டை பிடியுங்கோ நாங்கள் உள்ளுக்கு வந்தவனை பொக்ஸ் அடிச்சு (பெட்டி வடிவ வியூகம்) ஒருத்தனையும் தப்பவிடாமல் கொல்லுவம் என்றாள். அந்த பெண் தளபதி சிறிதும் பதட்டம் இன்றி.

உதவிக்கு அனுப்பப்பட்ட அணி சென்று சேரும் போது 2 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் ஒரு போராளி மட்டுமே போரிட்டுக்கொண்டு இருந்தாள். களமுனை மிகக்கடுமையாக இருந்தது . இப்போது இராணுவமும் அதிக தூரம் போராளிகளின் நிலைகளுக்குள் வந்து விட்டான். நிலைமை கை மீறிக்கொண்டிருந்தது. அந்த நேரம் உதவி அணியும் வரவில்லை.
உடனடியாக வெவ்வேறு நிலைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய அணியுடன் முறியடிப்பு சமரில் இறங்கினாள்.
சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சரிதா /தர்மா ஸ்ரீலங்கா படைகளின் அத்தனை ஆயுதங்களும் பெண் போராளிகளின் மன உறுதியின் முன் மௌனிக்க ஆரம்பித்தன சீற்றத்துடன் புறப்பட்ட சிங்கங்கள் தமிழ் பெண்புலிகளின் முன் மண்டியிடத் தொடங்கின. இன்னும் ஒரு காவலரண் தான் மீளக்கைப்பற்ற வேண்டி இருந்தது . சண்டை தொடர்ந்தது அந்நேரம்.

அந்த நிகழ்வு நடந்தது தர்மாவை எதிரியின் குண்டுச் சிதறல்கள் மிகப்பலமாக தாக்கியதில் தர்மா தூக்கி வீசப்பட்டாள்.

Lt Col saritha

சில நிமிடங்களில் களமுனையில் சிங்களவனின் கை ஓங்கியது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை தர்மாவின் கட்டளை புலியின் உறுமலாய் ஒலித்தது அந்த உறுமல் ஒலித்த வேகத்தில் பெண்புலிகள் பாய்ந்து சென்றனர். ஓலமிட்டபடி சிங்கங்கள் கால் தெறிக்க இறந்த தமது சகாக்களையும் விட்டு விட்டு ஓடித்தப்பினர். களமுனை அமைதியானது. அன்றைய வெற்றியின் நாயகிகளாக பல பெண்புலிகள் வீரச்சாவு அடைந்து இருந்தனர். எராளமான சிங்கள படையினர் இறந்து இருந்தனர். அவர்களின் உடலங்கள் ஆங்கங்கே சிதறிக்கிடந்தன. அந்த வெற்றியை கண் ணுற்றவாறு. அந்த சமர்க்களத்தின் தளபதி லெப் கேணல் சரிதா /தர்மா மயக்கமுற்றாள்.

தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டடத்தில் அமைந்துள்ள வட்டுக்கோட்டை அதன் தெற்கே உள்ள அராலி மத்தியில்அமைந்துள்ள ஊரத்திக்கிராமம், மேற்கே காரைநகர் தொடக்கம் ஊர்காவல்த்துறை வரை ஆழம் குறைந்த கடல்ப்பகுதியையும் , தெற்கே பரந்த வயல் வெளியையும் கொண்டது மழைக்காலத்தில் பச்சை ஆடையில் அழகிற்கு அழகு சேர்ப்பாள் ஊரத்தி என பெயர் சூட்டப்பட்டது. 1991 அக்கிராமத்தின் மத்தியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது அக்கோவில்தான் ஊரில் உள்ள அத்தனை பேரும் , ஒன்று கூடும் இடம். கோவில் அருகே சிறுவர் பாடசாலையுடன் இணைந்த வாசிகசாலை (இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது ) உள்ளது.

அங்கே 1982ம் ஆண்டு காலப்பகுதியில் அப்பப்போ போராளிகள் வந்து சென்றார்கள். அப்போதுதான் தர்மாவுக்கு போராளி களுடன் தொடர்பு ஏற்ப்பபட்டது. ஈ பி ஆர் எல் எப் , புளொட் மற்றும் ரெலோவுடன் , அப்போது அவரின் வயது 12 வயது குறைவாக இருந்தாலும் நாட்டுபற்று அளப்பெரிதாக இருந்தது.

இப்படி இருக்கும் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப் சீலன் அண்ணா வீரச்சாவு அடைந்தார். அவர் நினைவாக தனது தம்பிக்கு சீலன் அண்ணாவின் பெயர் சூட்டினாள். இக்காலப்பகுதியில் ரஞ்சன் என்ற போராளியின் தொடர்பு ஏற்ப்பட்டது. அதன் பின்புதான் தர்மாவின் வாழ்வில் முதலான மாற்றம் ஏற்ப்பட்டது. தர்மா ரஞ்சன் என்ற போராளியிடம் தான் விடுதலைப் புலிகளில் (அக்காலப்பகுதியில் ரைகர். பெரிஸ் என்பார்கள்) இணையப்போவதாக கூறினாள்.
அதற்கு அவர் உங்களுக்கு வயது குறைவு அதோட எங்களின் அமைப்பில் பெண்கள் பிரிவு இல்லை நீங்கள் தொடர்ந்து படியுங்கோ காலம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தர்மாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அவளது இயக்க கனவு தொடர்ந்தது 1987ம் ஆண்டு இந்தியா ஆக்கிரமிப்பு படையினர் தமிழீழத்தினை முற்றுகையிட்டனர். மானிப்பாயின் சுதுமலையில் தமிழீழத்தேசியத்தலைவர் செய்த வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடனத்தில் தர்மாவின் குடும்பமே கலந்து கொண்டது. தர்மாவின் கரத்தை பற்றியவாறு நானும் நின்றேன். அன்று தான் என் வாழ்வில் கிடைத்தலுக்குரிய பேறு பெற்றேன் எங்கள் தமிழீழக் கடவுள் தலைவனை கண்டேன் .
பிரகடனம் முடிந்து ஊர் திரும்ப வீதியில் ஏறினோம். இந்திய ஆமியின் வாகனங்கள் தொடராக சென்றன மக்கள் ஆரவாரமாகக் கை அசைத்தனர். நானும் எனது கைகளை தூக்கினேன். என்னை கை காட்ட விடாது தர்மா தடுத்துவிட்டார். நான் தர்மாவின் முகத்தை பார்த்தேன். அந்நேரம் அருகில் நின்ற போராளி ஒருவர் இப்ப கை காட்டுங்கோ பின்னர் வருவதை நீங்களே அனுபவியுங்கோ என்றார். தர்மாவின் தடுத்தலும் போராளியின் சொல்லும். இந்த இரண்டுக்குரிய அர்த்தமும் அப்போது எனக்கு விளங்கவில்லை பின்னர் புரிந்தது.

(இந்திய இராணுவம் எமது மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த போது)

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது. பன்னிரண்டு நாட்களும் தர்மா திலீபன் அண்ணாவின் மேடையில் முன்றலில்த் தான் இருந்தாள். அவரின் வீரச்சாவின் பின் தர்மா விட்ட கண்ணீர் இப்போதும் என் மனக்கண்ணில். திலீபன் அண்ணாவின் வீரச்சாவை தொடர்ந்து தமிழீழத்தில் பதட்டம் அதிகரித்தது அந்நேரம் போராளிகளின் தொடர்பும் விட்டுப்போனது. ஆனாலும் தர்மாவின் போராட்ட செயல்பாடுகள் நிற்கவில்லை.
அது தீவிரம் பெற்றது.

1987. 10.01 எனக்கு இன்றைக்கும் பசுமையாக அன் நிகழ்வு இருக்கின்றது. தர்மவைச்சுற்றி என் நேரமும் இருக்கும் சிறுவர் பட்டாளத்தை அவசரமாகக் கூட்டினாள். அவளின் முதலாவது சொல் இடியாகத் தாக்கியது சாவுக்கு பயந்தவர்கள் இக்குழுவில் இருந்து இந்த நொடியே வெளியேறுங்கள் , துணிந்தவர்கள் இருங்கள் என்றாள்.

எங்கள் சிறுவர் குழுவின் தலைவி தர்மா தான். நான் அதன் செயலாளராக இருந்தேன்.

அமைதிநிலவியது ….

அங்கிருந்து சுமார் ஏழுபேர் வெளியேறினார். நான் அமைதியாக அவள் முகத்தை பார்த்தேன். என்னுடன் தர்மா உட்பட பதினைந்து பேர் இதில் ஒன்பது பெண்கள் தர்மா பேசத்தொடங்கினாள் :

இதில் இருக்கிற பலர் ஏற்க்கனவே பல இயக்கத்துடன் தொடர்பாக இருந்தீர்கள் ஆனால் இப்ப எங்களுக்கு தெரியும். டைகர்ஸ் தான் உண்மையான இயக்கம் என்று. எனவே நாங்களா இப்படியே குழுவாக இருந்து டைகர்ஸ் போராளிகளின் தொடர்பு கிடைத்தவுடன் இப்படியே இணையவேண்டும்.

இதில் உங்களுக்கு சம்மதமா?…. என்றாள்.

ஒருமித்த குரல் எல்லோரும் ‘ ஓம் ‘ என்கிறார்கள்.

அங்கே கூடி இருந்தவர்கள் எல்லோரும் ஒருமனதாக அக் குழுவிற்கு தமிழீழ மக்கள் படை என்று பெயர் இட்டனர். சுருக்கமாக ரிபி என அழைத்தனர் ரிபியுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரிபியினர் செய்து கொடுத்தனர்.

ரிபி குழுவில் இருந்தவர்களின் வயதை நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் ! ஆக குறைந்த வயது எட்டு கூடிய வயது பதினெட்டு.
தர்மாவின் வயது பதினேழு.
தர்மாவைபற்றி எழுதும் எனது வயது பதினொன்று.
தர்மாவின் சிறப்பான வழிநடத்தலில். நாங்கள் இயங்கிக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் விதமாக எமது இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. உணவு வழங்குதல் இந்தியபடைகளுக்கு தெரியாமல் போராளிகளை கூட்டிச் செல்லுதல் இரண்டுமே தான் எங்களுக்கு போராளிகள் தந்தார்கள்.

அதன் பின்னர் இரவு காவல் கடமையிலும் எமது அமைப்பை இணைத்தனர். இந்திய படைகள் எமது மண் மீது அநியாயமான போரை தொடுத்தபோது தர்மா இயக்கத்தில் இணையும் தனது முடிவைத் தெரிவித்தபோது போராளிகள் மறுத்துவிட்டனர். இல்லை தங்கச்சி நீங்கள் இப்ப செய்யற பணியைச் செயுங்கோ நாங்கள் தேவையான போது உங்களை கூ ப்பிடுகி றோம் என்கிறார்கள்.

1989 ஆண்டு தர்மாவுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு வந்தது. படிப்பைத் தொடர்ந்த படித்து கொண்டு தனது போராட்டக் கடமைகளை தர்மா செய்தாள்.

தர்மாவின் குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது ஆனால் எந்நேரமும் போராளிகளை ஆதரித்து அவர்களுக்குத் தம்மாலான உதவிகளை செய்து கொண்டு இருப்பார்கள். தர்மாவின் குடும்பம் பெரிது செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் நான்காவது பிள்ளைதான் தர்மா. இவள் பின்னே மூவர் அவளது இயற்பெயர் இலங்கேஸ்வரி. வட்டுக்கோட்டை மத்திய கல்லுரியில் கபோத சாதராணம் ( O/L ) வரை கல்வி கற்றாள். மதம் என்ற முட்டாள் தனமான கருத்தை எதிர்ப்பாள்.

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 04/09 /1989 அராலி யாழ்ப்பாணம் ,

மதம் தமிழனின் எழுச்சியை அடக்க
அந்நியர்கள் விதைத்த
அழகான விச விதைகள்
மதம்
தமிழை மெல்ல
கொல்லும் விஷம்
அந்நிய மோகத்தை விடு
எங்கள் அன்னைத் தமிழே
உயிரென தொழு ;;

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து பெறப்பட வரிகள் அவை.

தர்மா 1995 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தாள்.
தனது ஆரம்ப பயிற்சியை வன்னிக்காட்டில் பெற்றாள்.
முல்லைத்தீவுப் படைத்தளத்தை வீழ்த்திய ஓயாத அலை ஒன்று தொடக்கம்…
அவள் கண்ட களங்கள் ஏராளம்….
சத்ஜெய , கிளிநொச்சி ஊடறுப்புத் தாக்குதல் , ஜெசிக்குறு தொடக்கம் ஓயாத அலை இரண்டு ஓயாத அலை மூன்று இதில் ஆனையிரவுப் படைத்தளம் மீட்கப்பட்டது. உட்பட தீச்சுவாலை எதிர்ச்சமர். ….
இப்படியே அவள் களம் நீண்டது….
தர்மா ஓய்வின்றி களத்தில் சுழன்றாள்.

ஒருமுறை இவளுடன் இரண்டு போராளிகள் ஜெசிக்குறு களமுனையில் பிறிதொரு காவலரண் நோக்கிச் செல்லும் போது , கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி மூவரும் மயக்கம் அடைந்தனர் . இரண்டு நாட்கள் மயக்க நிலை, பல கருத்துக்கள் அங்கே நிலவிய போதும்….

மேஜர் சோதியா படையணி சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்க அக்கா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்.

தர்மாவுக்கு ஆபத்து ஏதோ நடந்திருக்கு தேடிப்பருங்கோ என்று. எதேர்ச்சையாக அவ்வழியே வந்த ஆண் போராளிகளினால் இவர்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 10.03 1998

ஜெசிக்குறு களமுனை
அப்பா ஆயிரம்
அறிவுரைகளை ஊட்டினாலும்
ஒன்றை ஆணித்தரமாய்க் கூறினாய்
மனிதரை நேசி தமிழைச் சுவாசி.

தர்மாவுக்கு தலைவரின் பணிப்பின் பேரில் துர்க்கா அக்காவினால் கள ஒய்வு வழங்கபட்டது.

2001 ஆண்டு ஓர் நாள் முகமாலையில் சண்டை ஆரம்பித்தது. புதுக்குடியிருப்பில் நின்ற தர்மா உடனே முகமாலை கள முனைக்குச் சென்றாள். அந்நேரம் அங்கே வந்த துர்க்கா அக்காவினால் அனுமதி இன்றி கள முனைக்கு வந்ததால். தண்டனையாக நடந்து புதுக்குடியிருப்புக்கு செல்லுமாறு பணித்தார்.
நடந்து வந்த தர்மாவை பளைப்பகுதியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வந்தார் துர்க்கா அக்கா.
நான் கேட்டேன் ‘தர்மா அக்காவை ஏன் உங்களுக்கு தண்டனை வழங்க பட்டது’ ?… என்று
.
அதற்கு தர்மா அக்கா சொன்ன. ‘எங்கட குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தலைவர் என்னை சண்டைக்கு விட வேண்டாம் என்று சொன்னார்.
அதுதான் அனுமதி இல்லாமல் சண்டைக்கு போனதுக்கு அக்கா தண்டனை தந்தா’ என்றார் தர்மா.
‘இதுக்கு வருதப்படுகிரிங்களா ?’ என்று நான் கேட்ட போது. ‘அனுமதி இன்றி களமுனை செல்வது பிழை என்றால் இந்த பிழையை நான் தொடர்ந்து செய்வேன்.’ என்றா தர்மா.

தர்மா எப்போதும் களமுனையில் வாழ்ந்தவள். ஒய்வின்றி உழைத்த போராளி, யுத்தத்தின் மூலமாக தமிழீழத்தை மீட்கலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவள். தலைவரையும் நாட்டையும் தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த போராளி.

08.05.2008 அன்று மன்னார் பலம்பிட்டி களமுனையில் விழுப்புண் அடைந்து. 08.06.2008 அன்று கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் தனது தாயான சிவபாக்கியத்தின் மடியில் தலை சாய்த்திருந்து கதைத்துக் கொண்டுடிருக்கும் போது வீரச்சாவடைந்தாள்.

இறுதிவரை களமுனையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த தர்மா தனது அன்பு நண்பியும் சோதியா படையணி துணைத் தளபதியுமான லெப் கேணல் செல்வி வீரச்சாவடைந்து , சரியாக பதின்நான்காம் நாள் வீரச்சாவு அடைந்தாள்.

கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் லெப் கேணல் செல்வி அக்காவின் விதைகுழி வரிசையில் சரியாக பதின்நான்காவது ஆளாக விதைக்கப்பட்டாள் லெப் கேணல் தர்மாவாக.

புனிதத்தின் சுவடாக ஒளிர்வாய் எம்மினத்தின் விடியலுக்காய் !….

என்றும் சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் தர்மாவிற்கு வீரவணக்கம்