
மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்
மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்
லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)
(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)
கப்டன் கணேசன் (கணேஸ்)
(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)
கப்டன் வன்னியன்
(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)
(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)
(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)
(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)
(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதியழகன்
(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறிவழகன்
(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
லெப்.கேணல் ராஜன் பற்றிய குறிப்பு:
அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.
முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம்இ எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.
எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.
திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.
கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.
என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?
கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.
ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.
ராஜன்-றோமியோ நவம்பர்.
எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.
அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டுஇ இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.
1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.
அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள். அதில் ஒருவானாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.
பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.வியர்வைாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய், தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம்இ உறுதி,
இது எம் தாயகம், எங்கள் பூமி. இங்கு அந்நியனுக்கு என்ன வேலை? இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான்.
அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.
உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…
தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு. யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.
தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.
இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.
முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.
எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும்இ உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.
இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.
பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.
“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.
யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.
அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.
“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”
“ரங்கன்”
“அண்ணை நான் முழிப்புத்தான்”
“வெளிக்கிடுங்கோ…”
சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.
“சரி வெளிக்கிட்டாச்சு.”
நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.
முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.
விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.
ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.
“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ” ,“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”
“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”
“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”
“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”
கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போத, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,
இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.
கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.
அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.
Recent Comments