Search

Eelamaravar

Eelamaravar

Month

September 2011

தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை -பாடல்

ஓயாத அலைகள் 2 ல் வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 2 என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும்.

1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர்.

பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒருதடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.

செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.






இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !!

எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!!


லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர்.

—————————————————————————

லெப்.கேணல் நரேஸ், லெப்.கேணல் ரதன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்


சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட் மாவீரர்களினது 18ம் ஆண்டு நினைவு நாளும்


29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

——————————————————————————-

மேஜர் இனிதன் 4 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன் என்ற மாவீரனின் மூன்றாம் ஆண்டு வீரவணக்கநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

வடபேர்முனையில் பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் சிறப்புற செயற்பட்டு பலகளங்களை கண்ட மேஜர் இனிதன் 2007.09.27 அன்று முகம்மாலையில் சிறீலங்காப்படையினரின் படைநகர்விற்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

————————————–


27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களி்ன் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து



“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.”

” தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

 

வீரவரலாற்று பின்ணணி காணொளியில்



தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே


தேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி



வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

தாயக விடுதலைக்காக தம்முயிர் தந்த இம் மாவீரரை வணங்கி அவர்கள் நினைவாக இவ் ஆவணப்பதிவுகளை இற்றைப்படுத்திக்கொள்ளுகின்றோம்

வான்படை தளபதி கேணல் சங்கர் வீரவணக்கம்

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்
26-09-2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார்.

வான்படை தளபதி கேணல் சங்கர் வீரவரலாற்று பின்ணணி காணொளியில்

http://eelavarkural.files.wordpress.com/2009/09/air92.jpg

கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர்முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.

[eelam01100004.jpg]

அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவரது ஆளுமையையும் அனைத்துப் போராளிகளுடனும் உடனேயே நல்ல உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய தோழமையையும் கண்டுகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது.

கேணல் சங்கர் அண்ணாவுடன் 2001 ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த இராணுவ தாக்குதல்களாக இருந்தாலும் சரி முன்னேறிவரும் இராணுவத்தினரை மறித்துத் தாக்கும் பாதுகாப்பு படைநடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய இராணுவப் பகுப்பாய்வு நடைபெறுவது வழக்கம்.

ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என தலைவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயிற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவென வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழிமாற்றி விளங்கப்படுத்துவார் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் முக்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டிருந்தது.

வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சிமுகாமில் எங்களுடனே இருந்தார். “இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்” என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்கப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும். அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார்.

காடு சார்ந்த பயிற்சிகள் நடாத்துவதற்கான இடங்களைப் பார்ப்பதற்காக 03 கிலோமீற்றர் அளவு தூரம் நடந்து ஒரு குளத்தைச் சென்றடையவேண்டும். நாங்கள் மூன்று பேர் பயிற்சியாளர்களுடன் ஜி.பி.எஸ்.ஸின் துணையுடன் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்வதற்கு முன்பாகவே சங்கர் அண்ணா திசைகாட்டி(compass) யின் உதவியுடன் அங்கே சென்றடைந்துவிட்டார். நாங்கள் சென்றபோது சிரித்துக்கொண்டே வரவேற்றது பயிற்சியாளர்களுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.

முன்னர் இந்திய இராணுவத்தினுடனான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோம் என்று கூறுவார். அந்தக்காலத்தில் திசைகாட்டியின் உதவியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டுப்பட வேண்டிவரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டுவந்தோம் எனவும் சொல்லுவார். அக்குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும். சங்கர் அண்ணாவின் இவ்விசேட திறமைகளைப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.

விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கியமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் கவனமாக இருப்பார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். தியாகி திலீபனின் நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான அன்று சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களை சிறிலங்கா அரசபடைகள் தனது நாசகாரத் திட்டத்தின் மூலம் கொன்றுவிட்டது. சங்கர் அண்ணா – 1971 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ஐந்தாம் திகதி – அவரது நண்பர்களில் ஒருவரான கலாநிதி சிறிதரன் என்பவரின் நாட்குறிப்பேட்டில் குறித்த குறிப்பை இங்கு மீளவும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

அது இதுதான்.

“The most important thing in the Olympic games is not to win – but to take part…the essential thing in life is not to regret, But to have lived and fought well.”

வேங்கைச்செல்வன்

——————————-
கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்

அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை.

ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.

சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.

1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை
விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவலைகள்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா – ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் – 27.11.1963
மண்ணின் மடியில் – 26.9.1987

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்

-தமிழீழ தேசியத்தலைவர்-

தேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி


தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

வேரில் விழுந்த மழை தியாகதீபம் திலீபன்-காணொளி
தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும்
-தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்

தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!
தேசியத்தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடு – திலீபன்!

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு – அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் – விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.


அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே” – என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

‘இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!”.

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.
தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் – 1987ல் – நடாத்தினான். ‘ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்” – என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்”- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.


ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?”

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.

திலீபன் பாடல்!

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்

தீட்சண்யன்
15.9.94

லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்


25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

வீரமரணம் 25-09-1992

லெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

 


நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.’சுபன்’தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னர்ர் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.

சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

நன்றி எரிமலை

லெப்.பரமதேவாவின் 27வது ஆண்டு வீரவணக்கம்

https://eelamaravar.files.wordpress.com/2010/09/e0aeb2e0af86e0aeaae0af8d-e0aeaae0aeb0e0aeaee0aea4e0af87e0aeb5e0aebe.jpgதமிழீழ விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்து தமிழர்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் நிலங்களெல்லாம் சூறையாடப்பட்டு கொண்டிருக்கின்றது .கிழக்கில் பசில் ராஜபக்சவும் வெளிநாட்டு நிறுவனங்களும் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை தம் வசமாக்கிவிட்டனர் .

மாலை மரியாதைகளுடன் தற்போது கிழக்கை வலம் வரும் அதிகாரம் மிக்கவர்களுக்கு இவை பற்றி எவ்வித சிந்தனைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கையறு நிலையை எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கின்ன்றனர் . 30 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றோதொரு சூழ்நிலையில் தமிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன.

என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப்புலிகள் இதழில் பரமதேவாவின் வீரச்சாவு நினைவாக வெளியாகிய நினைவுக்குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து அந்த மாவீரனுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம் .

1983 செப்டெம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறான் பரமதேவா .1984 செப்டெம்பர் 22 ந் திகதி களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலைய தாக்குதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைகிறான் பரமதேவா .மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தை புதியதோர் திருப்பமென்றும் ஓராண்டு நினைவு என்றும் சிலர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சரியாக அதற்க்கு முதல்நாள் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது ஆயுத சன்னதனாய் கெரில்லாத் தாக்குதலை நடத்துகிறான் இந்த வீர மகன் .

ஒரு விடுதலை வீரனின் வாழ்க்கை இப்படித்தான் அமையமுடியும் .தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல் பிரிவு படைத் தளபதியான லெப். இரா.பரமதேவா சிங்கள போலீஸ் கொமாண்டோக்கள் நிறைந்திருந்த களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலுக்கு தலைமை தாங்கினான் .அஞ்சாத நெஞ்சனாக முன்னணியில் நின்று போரிட்ட பரமதேவா களத்திலே வீரமரணம் அடைந்தான் .

பரமதேவா மட்டக்களப்பு மண் சுமந்த வீரமகன் . 28 வயதான பரமதேவா நன்கு பயிற்ரப்பட்ட கெரில்லா போராளியாவார் . 19 வயது மாணவனாக மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலிருந்தே சிங்களபேரினவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பரமதேவா துடிப்போடு பங்குகொண்டிருந்தார் .

1975 மே 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா குடியரசு தினத்தை பகிஷ்கரிக்க மாணவர்களை அணிதிரட்டி போராடியமைக்காக பாடசாலையில் இருந்து பரமதேவா நீக்கப்பட்டார் . 1977 ஆம் ஆண்டு மட்டுநகரில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொலிசாரால் தேடப்பட்ட பரமதேவா அந்த இளம் வயதிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டான் . 1978 இல் இயக்க தேவைகளுக்காக செங்கலடி மக்கள்வங்கி பணத்தை பறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா பொலிசாருடன் நடத்திய சண்டையில் கையின் மேற்பாகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டான் .

1981 ஸ்ரீலங்கா அரசு விடுதலை வீரன் பரமதேவாவுக்கு 8 வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது . நீதி மன்றத்தில் கூடி இருந்தோர் குமுறி அழுதபோதும் பரமதேவா எப்போதும்போல சிரித்த முகத்தோடு அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டான் . போகம்பர , வெலிக்கட, நியுமகசின் ,மகர ஆகிய சிறைச்சாலைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா சிங்கள கைதிகள் மத்தியிலும் மரியாதைக்குரியவனாக இருந்திருக்கிறான் .1971 ஆண்டு ஏப்பிரல் கிளர்சியல் ஈடுபட்ட சிங்கள அரசியல் கைதிகளுடன் சிறைச்சாலையில் பயன் மிகுந்த சர்சகைகளை பரமதேவா நடத்தி இருக்கிறன்.

1983 செப்டம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு தமிழ் ஈழ போராளிகள் வெற்றிகமான நடவடிக்களில் பெரும் பங்கு வகுத்தவன் பரமதேவா .சிறையில் இருந்து தப்பியதும் அவன் ஓய்ந்து போய் நின்றுவிடவில்லை தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்ட பாதையில் மூலமே தமிழ் ஈழ இலட்ச்சியத்தை அடையமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட பரமதேவா விரைவிலே தமிழ் ஈழ மண்ணில் தனது கெரில்லா போராட்ட வாழ்க்கையை தொடங்கினான்.

விடுதலைப் புலிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலில் பரமதேவா முன்னணி வீரனாக நின்று செயல்பட்டான் கொக்கிளாயில் சிங்கள இராணுவத்தின் மீதான கெரில்லாத் தாக்குதலிலும் பரமதேவா முன்நின்றான். என்றும் சிரித்த முகத்தோடு காட்சி தரும் பரமதேவாவின் கூர்மையான அறிவையும் விடுதலைப் போராட்டத்தையும் போர்க்குணத்தையும் மாறுபட்ட விடுதலை இயக்கங்கள் கூட அங்கீகரிக்கின்றன . கிழக்கு மாகாணத்தில் பரமதேவாவின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை .

பரமதேவாவுடன் சேர்ந்து களுவாஞ்சிக்குடிபொலிஸ் தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கெரில்லாப் போராளியும் களத்திலேவீரமரணம்அடைந்தான்.

————————————————————————————-


 கிழக்கில் உதித்த தேசியச் சுடர் லெப்.பரமதேவா

எமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்-

தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.

1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார்.

இயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது.

மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்கலடி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

காலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய்மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல்க்கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல்க்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா.

சிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில்த் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில்ப் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார்.

1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது.

ஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொலிஸ்நிலையத் தாக்குதலில்ப் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ்நிலையத் தாக்குதலின்போது வீரச்சாவடைந்துவிட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது.

குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டுமண் வழங்கக் காரணமாக இருந்துள்ளது.

1984 புரட்டாதி 22ம் திகதி மட்டுமண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலைப்போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.

காட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.

லெப்.கேணல் பிறையாளன், செவ்வேள்,சீராளன்,புயலினி வீரவணக்கம்

24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும்


அதே நாள் திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்(24.09.2010).



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

லெப்.கேணல் சந்திரன், குயில்,அருணா,புத்தொளி வீரவணக்கம்

லெப்.கேணல் சந்திரன், லெப்.கேணல் குயில் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்
23.09.1990 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவு நாளும்

23.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் குயில் அவர்களின் வீரவணக்க நாள்

22.09.1998 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் அருணா(அருணன்) அவர்களின் 13 ம் ஆண்டு நினைவு நாளும்

22.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் புத்தொளி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Up ↑