Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2011

மேஜர் நாயகன் வீரவணக்கம்

23.08.2001

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன்.

தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது.

இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.

நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவவளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினிமுகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான்.

நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான்.

எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

லெப்.கேணல் யோகா – லெப்.கேணல் தாயசிலன் வீரவணக்கம்

20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 7ம் ஆண்டு நினைவு.

பச்சை வயலே பனங்கடல் வெளியே பாடல் காணொளி

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள்

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.

120 m.m. கனரகப் பீரங்கியை தண்ணீருக்குள்ளால் இழுத்துச் செல்லும் பெண்புலிகள்.(மாமுனைத் தரையிறக்கச் சமர்)

ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.

தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.

முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி கேணல் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.

120 m.m. எறிகணைச் செலுத்தியை இயக்கும் பெண்புலிகள்

இன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியாபித்துள்ளது.

தமிழீழ படைத்துறை

மேஐர் சோதியா படையணி

2ம்லெப் மாலதி படையணி

http://aruchuna.net/

 

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம்

கடலன்னையின் பெண் குழந்தை

10-05-1973 – 16-08-1994

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது.

“உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள்.

சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.


காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள்.

இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.

சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.

———
அங்கையற் கன்னியில் அனல் விழி திறந்தது

கண் கண்ட தெய்வங்கள்

கரும்புலிகள் வாழும்

கரும்புலிகளை யாரால் அளக்க முடியும்

பாடல் இங்கே எழுத்து வடிவில்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
தந்தானானே தாரேனானா தானா ஏய்
தந்தானானே தாரேனானா தானா….

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்
கவிதைகள் பொய் ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே
யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்
சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை
யாருக்கு இங்கே இது தெரியும்
கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென
தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்
இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்
அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்
கவிதைகள் பொய் ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்
கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

——-

காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்-எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன்-தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை – நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை – நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ வீரவணக்கம்

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த் தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி “கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?” என ஏசுகின்றார். “நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்” என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.

“அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என அனுமதி கேட்கின்றான். அன்னை மெளனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்” என்றவன், ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. “நீ வீட்ட திரும்பிப் போ” என கூறு கின்றார். “இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்”. என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் “ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக் கிட்டவன்” எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை “பூட்டோ” எனும் பெயருடன் தொடங்கியது.

காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக் கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர் களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டிய படியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறி குறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பன வற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவு தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன் பாட்டைப் பெறும்வகையில் தன்னை தக வமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித் தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற் தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது. “பூட்டோ… பூட்டோ!” என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வ தேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும். முகாம் துடைத் தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான். இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணு வத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத் துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.


ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. “தொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம்” என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். “நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்” என கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பச் சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்.” “நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு” என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பல மாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத் திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரீட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலை வர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான்.

இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக் குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப் புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலர ணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப் பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாது காப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர் களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமை யாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நட வடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்திய மற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடி வெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர்.

கை என்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர் களுக்கென ஒரு சாதாரண மீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்பட லானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்திய டைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.

சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘GPS’ ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்ட வாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிர தேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.

அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் “பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது” வென கேட்க “யாரு, “கரும்புலி பூட்டோவா!” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.

மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு ” உதாரண புருசனை”” பட்டறி வால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த ஒரு “நம்பர் வண்” ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவ னது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.


குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

– தூயவன்-

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் ‘பூட்டோ’ என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முழுநீளத் திரைப்படம்
http://www.youtube.com/p/B0BD7C2FA469F2F2&hl=en_US&fs=1

அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே.

தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார். பூட்டோ ‘கலையரசன்’ என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.

சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான ‘உணர்வின் வரிகள் வரையும் கோடு’ என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.

இறுதி நாட்களும் எனது பயணமும் 13

வேலிக்கப்பால் படையினர் நிற்பார்களே என்ற உணர்வால் உந்தப்பட்ட என் கால்கள் திரும்பினாலும் கண்கள் வேலிதாண்டிப் பார்த்தன. வேலிக்கு அப்புறத்திலும் மக்கள் படுத்திருப்பதை கண் கண்டவுடன் கால்கள் உடனே நின்றுவிட்டன.

என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே நின்றேன். என்னை பலர் கடந்து போனார்கள். அதில் சிலர் தண்ணீர்போத்தில்களுடன் சென்றார்கள்.

அப்ப நான் இந்தப் பாதையாலயே போக வேண்டியதுதான் என்று எனக்குநானே சொல்லிக்கொண்டே நடந்தேன். என் தோளில் தொங்கிய துணியில் யாரோ பிடித்து நிறுத்தினார்கள். என்னை அறிந்தவர்கள் யாருமாக இருக்கலாம் என்று என் உள்ளுணர்வு சொன்னது. ஆவலோடு திரும்பிப் பார்த்தேன். எனது ஆடை முற்கம்பியில் கொழுவுப்பட்டிருந்தது. ஏமாற்றத்துடன் துணியை கம்பியிலிருந்து விடுவித்துக்கொண்டு திரும்பிய என்னை இரண்டு பையன்கள் கடந்து போனார்கள்.

“தம்பி ஒரு நிமிசம். தண்ணி எடுக்க எதால போகணும்? என்று பணிவுடன் கேட்டேன்.

“கனதூரம் போகணும்” என்று விட்டு என்னை அவதானித்தார்கள். பின்பு,

‘குடிக்க தண்ணி வேணுமாக்கா?’ என்றான் ஒரு பையன். ம் என்றேன். உடனே அரைப்போத்தல் நீருடன் என்முன்னே நீண்டது அவனது கை. எனக்கோ கடவுளையே கண்டது போலத்தான் இருந்தது.

மறுப்பெதுவுமின்றி வாங்கிப்பருகினேன்.

“நன்றி தம்பி” நேற்று மதியத்துக்குப்பிறகு இப்பத்தான் தண்ணி குடிக்கிறன்.  நன்றி’ என்றபடி போத்திலை நீட்டினேன். எப்படி எப்படி திரும்பித் திரும்பிப் போனால் தண்ணீர் இருக்கும் படகை ( Boat ) அடையலாம் என்று பாதையை தெளிவாக விளங்கப்படுத்திவிட்டு சென்றார்கள் அந்தப்பையன்கள்.

vanni-133

அவர்கள் அடையாளம் சொன்ன வழியை பின்பற்றி தொடர்ந்து சென்று தண்ணீர்படகு நின்ற இடத்தை நெருங்கிய போது நீள நீளமாக ஐந்தாறு வரிசைகள் நிற்பதைக் கண்டேன். இப்போது படகில் தண்ணீர் இல்லையாம்.

இனித்தான் கொண்டுவந்து ஊற்றுவார்களாம் என்று அதில் நின்றவர்கள் மாறிமாறி கதைத்துக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. இத்தனைபேர் சுற்றிவர நிற்கின்ற படகில் குனிந்து அள்ளுவதற்குள்  நையப் புடைந்து விடுவார்களே மனிதர்கள். வரிசையில் ஒரு பெண்ணைக்கூட கான முடியவில்லை.

காற்றுக்கூட நுளையமுடியாதவாறு நெருங்கி நிற்கும் ஆண்களின் வரிசைகளும்  தண்ணீரைக் கண்டதும் தலைகீழாய் மாறிவிடுமே. என்னால் தண்ணியள்ளுவது முடியாத காரியம் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது.

விண்விண் என்று தலையை வலித்தது. முகம் களுவியே இரண்டு நாட்களாகி விட்டன. களுவினால் கொஞ்சம் தெம்பாக இருக்கும். வரிசையில் நின்றவர்களை சுற்றிச் சுற்றிப்பார்த்தேன். நான்தான் எவரையும் அடையாளம் காணாவிட்டாலும் என்னை யாராவது கண்டால் வந்து கதைப்பார்கள் அல்லவா என்ற எண்ணமும் எழுந்தது. என்றாலும் வெளிச்சமான அந்த இடத்தில்  நான் மட்டும் தனிமரம்போல நின்று கொண்டிருப்பது சரியல்ல.

தண்ணீர் காவலுக்கென நிற்கும் படையினரின் பார்வையில் ஏன் விழுந்து வைக்க வேணும். சற்றுத்தூரம் நடந்துசென்றேன். ஈரமாய்கிடந்த அந்த படகடியைத்தவிர எல்லா இடத்திலும் மக்கள் கிடந்தார்கள்.

நித்திரையிலோ அரை மயக்கத்திலோ கிடந்த மனிதர்களிடையே சிலர் குந்தியிருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். நான் தண்ணீர் தொட்டியைவிட்டு நகர்ந்து சென்றேன்.

அப்போது என் காதில் விழுந்த சில குரல்கள் எனக்கு பழக்கப்பட்டன போன்று கேட்டன. நின்று கிரகித்தேன்.  அது எனதுறவுகளின் பேச்சுநடை. அந்தக்குரல்கள் கேட்ட இடம் நோக்கி உற்றுப்பார்த்தேன். அவர்களால் என்னை அடையாளம்காண முடியவில்லை. என்றாலும் அவர்களும்கூட என்னை அவதானித்தார்கள் .

“என்னயத் தெரியேல்லயா அண்ண?’ என்று என் பெயர் சொன்னேன்.

‘யாரோட தங்கச்சி வந்திங்க?’ என்று விசாரித்தார்கள். உடனேயே அவர்களருகில் அமர்ந்துவிட்டேன். அவர்களும்கூட தத்தம் குடும்பங்களைப்பிரிந்து தனிமனிதர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்.

‘அண்ண எனக்குக் கொஞ்சத்தண்ணிவேணும்’ என்று உரிமையுடன் கேட்டேன்.

vanni-131

‘தண்ணி இதில எடுக்கலாம். என்னத்தில எடுக்கிறது?’ என்றார்கள் படகைக்காட்டி. என்னிடமிருந்த புதிய சொப்பிங் பையொன்றைக் கொடுத்தேன். பக்கத்தில் கிடந்த பையன் ஒருவனை எழுப்பி

“தம்பி எழும்படா. அக்கா வந்திருக்கு. தண்ணிவேணுமாம்  கொஞ்சம் எடுத்துக்கொண்டு ஓடியா ஓடு ஓடு.’ என்றார் அந்த அண்ணர். அவர்களெல்லாம் என் நண்பர்கள். அந்தப்பையன் எழுந்திருந்து சோம்பல் முறித்தான்.  மறுக்காமல் சென்று தண்ணீரும் கொண்டுவந்து தந்தான். அவனுக்கு கோடி நன்றி சொன்னது என் மனது.

‘பிள்ள எனக்கும் கொஞ்சம் குடிக்கத்தாம்மா’ என்று பக்கத்திலிருந்த அப்பு ஒருவர் குவளையை நீட்டினார். அதை வாங்கி தண்ணீரை அள்ளி நான் முதலில் குடித்தேன். பின்பு குவளை நிறைய தண்ணீரை அள்ளி மகிழ்ச்சியோடு அப்புவுக்கும் கொடுத்தேன். அவர் குடித்தபின் மீண்டும் அதில் நீரை நிறைத்து அவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பையுடன் கிளம்பினேன். மிகுதியாக இருந்த தண்ணீரில் நன்றாக முகத்தை கழுவினேன்.

கை கால்களையும்கூட கழுவிக்கொண்டதன்பின் எவ்வளவோ பறவாயில்லாமல் இருந்தது. மீண்டும் வந்து அவர்களுடன் இருந்துகொண்டேன். எனக்கு தெரிந்த குடும்பங்களாய் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரிந்தவர்களை அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன குடும்பங்கள் எங்கே எங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று ஓரளவு இடங்களையும் குறிப்புக் கேட்டுக்கொண்டேன்.

பொழுது புலர்ந்தபின் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். அதில் எத்தனையோ நூறுமுகங்கள் தெரிந்த, அறிந்த, பழகிய முகங்கள்தான். எல்லோருடனும் இயல்பாகக் கதைக்க எவருமே தயாராக இல்லை. படையினரோ புலனாய்வுத்துறையினரோ கதைப்பதை அவதானித்துவிட்டால் தம்மை விசாரிப்பார்கள் என்ற அச்சம்தான் காரணம் என்பதை அறிவேன். வேதனையோடு தொடர்ந்து நடந்தேன்.

திடீரென யாரோ என் கையை பற்றி நிறுத்தினார்கள்.

‘எங்க மச்சாள் போறிங்க?’

‘யாரோட மருமகள் வந்திங்க?’

என்று என் மச்சாளும் மாமியும் அக்கறையோடு கேட்டார்கள்.

‘தனியத்தான் வந்தன். யாராவது எங்களோட வாங்க என்று கூப்பிட்டால் அவங்களோட போவன். அதான் இப்பிடியே திரியிரன்’ என்றேன் சிரித்துக்கொண்டு.

‘நீங்க எங்களோட வாங்க மச்சாள்’ என்று என் கையை பிடித்துக்கொண்டாள் சின்னவள். மாமியும் அன்பாக புன்னகைத்து அவளின் செய்கையை அனுமதித்தார். அதுவே எனக்கு பேராறுதலாய் இருந்தது.

முல்லைத்தீவின் அந்த பாரிய வெட்டைவெளியில் கிடந்த இலட்சக்கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் கிடந்தார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் எவரது ஆதரவுமின்றியே இருந்தார்கள்.

என்னை தம்மோடு வரச்சொல்லி மாமியைப்போல, மச்சாளைப்போல அவர்களுக்கும்கூட யாராவது கிடைப்பார்கள். எந்த சொந்தமோ பழக்கமோ முன்பின் தெரியாத யாருமோகூட அவர்களில் பலரையும் தம்பிள்ளை என்று அழைத்துச்செல்லத்தான் போகிறார்கள். அப்படி அவர்கள் யாருமே அழைத்துச்செல்லாவிட்டாலும் எதையோ சொல்லி எப்படியோ போகத்தான் போகிறார்கள். நான்கூட செல்லத்தயார் என்றால் போயிருக்கலாம்தான்.

‘என் மனைவி என்று அழைத்துச்செல்கிறேன். வருகிறீர்களா?’ என்று கேட்டார்கள்தான்.

பெரும்பாலானவர்கள் அங்குதான் கணவன் மனைவியாக நடிக்கும் நாடகத்தை கற்றுக்கொண்டார்கள்.

திருமணம் ஒரு தற்காப்பு ஆயுதம் போன்றதுதான்போலும். அதனால்தானே பதினெட்டே வயதில் என்னுடைய அக்கா மணம் முடிக்கவேண்டி வந்தது. அதனால்தானே ஏராளமான இளையவர்கள் குடும்பங்களானார்கள். அவர்கள் படையினரிடமிருந்து தப்புவதற்காகவும் சரி, போராட்ட பங்களிப்பிலிருந்து தப்புவதற்காகவும் சரி புத்திசாலித்தனமாக(?) எடுக்கின்ற நடவடிக்கைகளில் பிரபலமானது இந்த உடன் திருமணங்கள்தானே. இப்படியான செயல்களால் எண்ணற்றவர்களின் வாழ்க்கை நாசமாகிப்போயின.

vanni-132

ஏற்கெனவே காதலித்தவர்கள் கைகோர்த்துக்கொண்டால் அது பறவாயில்லை. நல்லதும்தான். அப்போதுதான் அறிமுகமாகிக்கொள்வது என்பது வேறு விடயமல்லவா? ஆனாலும் அப்போதைக்கு அதன் பெயர் பாதுகாப்பு. அவ்வளவுதான். சிலர் சில குழந்தைகளை தமது குழந்தைகள் என்று தூக்கிகொண்டு வந்தார்கள்.

பலர் தம் கழுத்தில் அணிந்திருந்த புலிப்பல் தாலிகளை மஞ்சள் கயிற்றோடு கழற்றிப்போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். கணவன் முன்னாலேயே மனைவி தாலியை கழற்றி போடுகின்றாளே என்று எவரும் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. சில கணவன்மாரே தான் கட்டிவிட்ட தாலியை கழற்றி எறிந்தார்கள்.

புலியை ஞாபகப்படுத்தும் எதுவும் படையினரின் கண்களில் பட்டுவிடக்கூடாது. அவர்களின் கோபத்திற்கோ சந்தேகத்திற்கோ ஆளாகிவிடக்கூடாது என்ற எண்ணமே எல்லோரிடமும் இருந்தது. என் எதிரிலேயே ஒரு இளங்குடும்பம் சண்டையிட்டது.

‘நான் சொல்றன் நீ கழட்ட வேண்டாம். போட்டுக்கொள்.’ என்று பிடிவாதம் பிடித்த கணவனை மனைவியானவள் எரித்து விடுபவளைப்போல பார்த்தாள்.

‘உங்களுக்கப்பா மண்டைக்க என்ன கிடக்கு? பாருங்க எந்த பொம்பிளயாவது மஞ்சக்கயித்தோட போறாளா எண்டு வடிவா பாருங்க.’ என்று அவள் சீறினாள்.

‘யாரும் போடாட்டி உனக்கென்ன? நீபோடு’ என்று அவனும் எகிறினான்.

‘வேணுமெண்டால் தாலிய சங்கிலியில போடு’ என்றான்.

‘சும்மா கிடவும். உமக்கு தாலிதான் வேணுமெண்டால் வைச்சுக்கொண்டு கிடவும் என்னைய விடும்’ என்று தாலியை அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள். அக்கணமே அவர்கள் கோபத்தோடு ஆளுக்கொருபக்கமாய் பிரிந்து சென்றுவிட்டார்கள்.

இதற்கெல்லாம் மாறாக கணவனை இழந்த சில பெண்களோ பெரிய பெரிய தாலிக்கொடிகளை கழுத்தில் போட்டுக்கொண்டார்கள். அச்சம் அவர்களை தலைகீழாய் மாற்றிவிட்டிருந்தது. எப்படியோ எல்லோருமே படையினரிடம் சரணடையத்தான் போகிறார்கள். அவர்கள் இவர்களின் கழுத்தை பார்த்தோ வயிற்றை  பார்த்தோ தரம் பிரிக்கப்போவதில்லை. வயதைப் பார்த்து பிரிக்கக்கூடும்.  அல்லது படையதிகாரி சரத் பொன்சேகா தன் படைவீரர்கள் முன்னிலையில் உரையாற்றிதைப்போல ஆண்களையெல்லாம் கடலில் எறிந்துவிட்டு பெண்களை எல்லாம் படையினரிடம் கொடுத்துவிடுவானோ தெரியாது. அதற்குள் எத்தனை குழப்பங்கள். எத்தனை தடுமாற்றங்கள்?

தொடரும்………….

– ஆனதி

http://www.mullai.org/

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11 12

இறுதி நாட்களும் எனது பயணமும் – 12

என் தலைமாட்டில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தவர்கள் தண்ணீரையும் உணவையும் பற்றியே கதைத்தார்கள்.

‘அதை இதுக்க வை. மற்றதை என்ர பேக்குக்குள வை. போத்தில் தெரியாமல் மறைச்சு வையப்பா. பிறகு கண்டதுகளும் வந்து தண்ணி கேக்குங்கள்’

‘அன்ரி அந்த போத்தில என்னட்ட தாங்க அன்ரி. நான் என்ர பேக்குக்குள்ள வைக்கிறன்’ என்றெல்லாம் கதைகள். தண்ணீருக்கு மணம் குணமெல்லாம் இல்லைத்தான் என்றாலும் தான் போத்தில் போத்திலாக அருகில் இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது.

எனக்கு  தாகம் தாகமாய் தவித்தது. தண்ணீரும் உணவும் சேகரித்துக்கொண்டு வந்தவனாகத்தான் இருக்கவேண்டும். அவன் பையொன்றின்மீது சரிந்தபோது அவனது தலை என் தலையில் இடித்தது.

‘ஓ யாரோ தெரியேல்லை’ என்று முணுமுணுத்தபடி எழுந்திருந்து உற்றுப் பார்த்தான். பின்பு சற்று தள்ளிச் சரிந்தான். எனினும் எங்களது தலைகளுக்கு இடையே ஒரு சாண் இடைவெளிதான் இருந்தது. அவன் வயிறுமுட்ட தின்றிருக்கிறான் என்பதை அவனது ஏப்பம் பறைசாற்றியது.

‘அந்த தண்ணி போத்தலை ஒருக்கா தாப்பா’ என்றான். அவன் நீர் அருந்தும் ஒலி தொண்டையில் கடகடத்தது. மீண்டும் சரிந்துகொண்டான்.

என்னருகே இன்னமும்தான் அந்த வயோதிப தம்பதி இருந்துகொண்டிருந்தது. இருட்டிவிட்ட போதும், பொழுது இரவின் நடுப்பகுதியாக இருந்தபோதும், ஏன் குந்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

vanni122

‘அப்பா நான் உங்கட பாக்கில தலைய வைச்சு படுக்கட்டுமா அப்பா’ என்றேன் நயமாக.

‘ஓம் பிள்ள படு படு’ என்றார் அந்த வயோதிபரும் ஆதரவாக. என் பையை தூக்கி பிடறிக்கு மறைப்பாக வைத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் இருந்த பக்கமாக சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.

அந்தநேரம் எனக்கொரு சிறிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. மனதுக்கு சற்று ஆறுதலாகவும் இருந்தது. இதே அப்பாவையும் அம்மாவையும் இன்னொரு தடவை கண்டால்கூட இவர்கள்தான் என்று இனங்கண்டு கொள்வேனா? இல்லை. ஏனெனில் அவர்கள் தோற்றத்தால் என்னில் எந்த நினைவுப் பதிவையும் ஏற்படுத்தவில்லை. மிகமிக மங்கலாகத்தான் என் நினைவில் அவர்களது தோற்றம் பதிந்துள்ளது. என்றாலும் அவர்கள் தந்த இந்த ஆதரவு உணர்வை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.

அவர்கள் யாருக்காக காத்திருக்கிறார்களோ? அவர்கள் யாரை நம்பி வந்தார்களோ? அந்த வயோதிபர்களை தாங்குவதற்கு போகுமிடத்தில் யாராவது இருப்பார்களோ என்னவோ? என்றெல்லாம் விடைதேட முயாத வினாக்களுடன் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன்.

எவ்வளவுநேரம் உறங்கினேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நல்ல உறக்கம். நீண்ட நாட்களுக்குப்பின்பு வெடியோசைகள் உலுப்பியெழுப்பாத ஒரு உறக்கம்.

விழிப்பு நிலையை அடைந்தபோதும் முகங்களை அடையாளம்காணும் அளவுக்கு வெளிச்சம் போதவில்லை.நள்ளிரவு தாண்டிய பொழுதா அல்லது அதிகாலையா என்று எனக்கு இனங்காணத் தெரியவில்லை.

வயிறு பயங்கரமாய் பிராண்டியது. நாக்கு மடமடப்பது போன்ற உணர்வு. தண்ணீர் குடித்தே தீரவேண்டும் என்றிருந்தது. என் தலைமாட்டில் இருந்த குடும்பம் இன்னமும் கலகலத்துக்கொண்டுதான் இருந்தது. அவர்களது பேச்சில் எந்த கவலையுமே தென்படவில்லை.

vanni123

‘அண்ண, தண்ணி கொஞ்சம் தாறிங்களா?’ என்று எழுந்தமானத்தில் கேட்டுவிட்டேன். தருவான் என்ற நப்பாசையில்தான் கேட்டேன். அவனோ தன்பாட்டில் இருந்தான் ஒன்றுமே விளங்காதவனைப்போல அல்லது நான் அவனை கேட்கவில்லை என்பதைப்போல. எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. முன்பின் அறியாத அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?

‘நீ யார்? உனக்கு எதுக்காக நான் தண்ணி தரணும்?’ என்று நாகரீகமோ மனச்சாட்சியோ இல்லாமல் அவன் தாறுமாறாக சத்தம்போட்டுவிட்டால்? அப்படி நடந்துகொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள்தானே. இவர்களும் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால்? சுயநலம்மிக்கவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அவர்களது பேச்சே சொல்கிறதே.

சாமத்தில்கூட தாகம் ஏற்படுமா? அதுவும் இத்தனை தவிப்பாய்? உச்சிவெய்யிலில் நிற்பதைப்போல அந்த இரவிலும் தண்ணீருக்காக ஏங்கினேன். மெதுவாக எழுந்து அமர்ந்துகொண்டேன். தலைமாட்டில் கிடந்த அவன் கேட்டான்,

‘அக்கா நீங்க இயக்கமோ?’

‘தண்ணி கொஞ்சம் தாறிங்களா? என்றேன்.

‘உந்த பொம்பிளயள் நித்திரையா போகட்டும். இப்ப கேட்டால் தறாளவை.’ என்றான்.

‘ஒரு மூடித்தண்ணி காணும். நாக்கை மட்டும் நனைக்கத்தான்’ என்றேன் என்னையும் அறியாத கெஞ்சலாய்.

‘ம். பிறகு எடுத்து தாறன். அதுசரி நீங்க இயக்கமோ?’

‘ம்’ என்றேன்.

‘இயக்கம்விட்ட பெரிய பிழை என்னெண்டால் கட்டாயமாய் ஆக்களை பிடிச்சதுதான். கடைசில படுமோசமாய் நடந்துகொண்டார்கள்’ என்று அவன் பிரசங்கமே பண்ண தொடங்கிவிட்டான்.

இலட்சக்கணக்கான மக்கள் பசியோடும் தாகத்தோடும் கிடக்கும்போது இவன் என்னடா என்றால் ஒரு சொல்லுக்குக்கூட அர்த்தம்கெட்ட பிரசங்கம் செய்கிறானே.

எனக்கு அந்த தடியன்மீது எரிச்சலாய் இருந்தது. போத்தில் போத்திலாய் தண்ணீரை வைத்துக்கொண்டு ஒரு மூடியில் தரக்கூடியளவு சொட்டுத்தண்ணீரைக்கூட தாகத்தோடு தவிப்பவனுக்கு ஈய விரும்பாத இவனெல்லாம் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட பங்களிப்பை செய்திருப்பான்.

மனிதநேயம் அற்றவன்தான் இவனென்று சில கணங்களிலேயே புரிந்துவிட முடிகிறது. தாய்நாட்டுக்காக தம்மை தேய்த்தவர்களிடம்போய் போராளிகளைப்பற்றி வசைபாடி கொண்டிருக்கிறானே. விமர்சிப்பது மட்டுமா?

‘அப்ப உங்கட ஊர் எது?’

‘வீட்டுக்காரர் போட்டினமோ?’

‘நீங்க எத்தினையாம் ஆண்டு காயப்பட்டிங்க? எத்தினபேருக்கு இப்ப கைகால் இல்லாமல் போட்டுது. கை கால் எல்லாம் இல்லாட்டி கஸ்ரம்தான் என்ன?’

vanni124

என்ற அவனுடைய தொடர்ச்சியான கேள்விகளாலும் விளக்கங்களாலும் என்னுள் எழுந்த கோபத்திற்கு அவனை அறைந்தால் என்ன என்றிருந்தது.

‘எனக்கு ஏலாமல் கிடக்கண்ண. என்னட்ட கதை கேட்காதிங்க’ என்றேன் பொறுமையாக.

‘என்னப்பா அங்க யாரோட அலட்டிக்கொண்டு கிடக்கிறியள். ஆமிக்காரர் தண்ணிப்போத்தல் குடுக்கிறாங்களாம். போய் அஞ்சாறு வாங்கி வாங்களன்’ என்று கட்டளை இட்டது பெண் குரல்.

அது அவனுடைய மனைவியாகத்தான் இருக்கவேண்டும். அவளின் குரல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

‘சும்மா இரப்பா. இருக்கிறது நமக்கு காணும்தானே.’ என்று குரலை தாழ்த்தி இரைந்தான் அவன்.

‘நீங்கள் என்னப்பா. சும்மாதானே குடுக்கிறான். நாலைஞ்ச வாங்கியந்தால் நூறு நூற்றைம்பதுக்கு விக்கலாமெல்லே’ என்று அவள் நியாயம் சொன்னாள்.

‘அப்ப நீ போய் வாங்கி வா. என்னைய கொஞ்சநேரம் கிடக்கவிடு’ என்று அவன் உறுமினான். பின்பு புறுபுறுக்கத் தொடங்கினான்.

‘இருக்கிற இடத்துக்கு எல்லாம் வருகிதுதானே. போய் அடிபட்டு விழுந்தடிச்சு வாங்கிறவனுக்குதானே அதில உள்ள கஸ்ரம் தெரியும்.’ என்று அவனும்

‘இந்த மனுசனுக்கு ஒண்டும் தெரியாது. பிழைக்கத்தெரியாத மனுசன்’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லி அவளும் இரைந்தாள்.

எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. என்ன மனிதர்களோ என்ன குணங்களோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஒரு போத்தில் தண்ணீர் ஐந்நூறு ரூபா என்றாலும் நான் வாங்கத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அவனிடம் பேச எனக்கு துளியும் விருப்பமில்லை. அவனிடம் வாய் திறப்பதில்லை  என்ற முடிவோடு இருந்து விட்டேன்.

தாகம் என்னை பயங்கரமாய் இம்சித்தது.  இப்படித்தானே அந்தப்பையன்களுக்கும் இருக்கும். அவர்கள் அன்மையில் காயமடைந்தவர்கள் என்பதால் என்னைவிட அதிகமாக துன்பப்படுவார்கள்.

இப்போது என்னிடம் ஒரு போத்தில் தண்ணீர் இருந்தால் அவர்களுக்கும் கொடுப்பேனே என்று வெறும் நினைவுகளோடு ஏங்கினேன்.

சற்று நேரத்தின் பின்  தலை மாட்டில் கிடந்த குண்டன் கதை கேட்டான். நான் செவிடு போல இருந்து விட்டேன். எனக்குள் ஒரே எரிச்சலும் குமைச்சலுமாக இருந்தது. அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து குந்திக்கொண்டேன்.

“என்னக்கா நித்திரை வரேல்லயோ?’ என்று கதையை வளர்க்க எத்தனித்தவனுக்கு இடமளிக்காமல் எழுந்து நின்றேன். சுற்றயலை பார்த்தேன். மிக மங்கலாய் தான் வெளிச்சமிருந்தது.

மின் விளக்குகள் ஒளிர்ந்த இடங்கள் மட்டும் பளீரென தெரிந்தன. பலியிடப்பட்ட பிணங்களைப்போல மக்கள் தாறுமாறாக கிடந்தார்கள். இந்த வேளையில் தண்ணீர் தொட்டிக்குச் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும். எப்படியாவது வயிறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குடித்தேதீர வேண்டும். பையை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டேன்.

‘என்னக்கா போகப்போறிங்களோ?’ என்று அந்த குண்டன் மீண்டும் கேட்டான். நான் அருகிருந்த அந்த வயோதிப தம்பதியரிடம் சொன்னேன்

“அம்மா அப்பா போயிட்டு வாறன். நான் தண்ணி தேடப்போறன். எனக்கு ஆறுதலாய் இருந்ததுக்கு உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு மெதுவாக நடக்கமுற்பட்டேன்.

கால்கள் பாரமாய் கனத்தன. என் கால்களே எனக்கு அத்தனை பாரமாய் இருக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது. என்னால் சீராக நடக்க முடியவில்லை. இலேசாக தலை சுற்றியது.

குறுக்குமறுக்காக மக்கள் படுத்துக்கிடந்தார்கள். கால் வைத்து நடக்க இடமே போதவில்லை. நினைவு வந்தவளாய் திரும்பிப் பார்த்தேன். என் கால்மாட்டில் கிடந்த பையன்களையும் கானவில்லை. போய்விட்டார்கள் போலும்.

மிககவனத்துடன் மற்றவர்களின் கால்களிளோ தலைகளிலோ இடறுப்பட்டு விடாமல் நடந்தேன். எங்கே செல்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. தன்ணீர் எங்கே கிடைக்குமென்றும் தெரியாது.

வரிசையாய் மின்குமிழ்கள் எரிந்த இடத்தை நோக்கி நடந்தேன். அருகே சென்றபோதுதான் அந்த மின்குமிழ் வரிசை கம்பி வேலி என்பதை அறிந்தேன். அடடா வேலியருகே வந்து விட்டேனே. அப்புறத்தில் படையினர் அல்லவா நிற்பார்கள் என்ற உண்மை அப்போதுதான் உரைத்தது. விர்ரெனக் கிளம்பிய எச்சரிக்கை உணர்வு என் கால்களை வேகமாக திரும்பவைத்தன.

தொடரும் ……………

– ஆனதி

தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது.

இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன.

2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன.

தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன்  எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது.

கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம் எடுத்துவரும் முயற்சியையும், இல்லாது அழிப்பதற்கு நரித்தனமான உள்ளடி வேலைகளும் வெளிப்படையான சதிகளும் தந்திரங்களும் பல முனைகளில், சர்வதேச மட்டத்தில் போட்டிபோட்டு நடைபெற்றுவருகின்றன.

தமிழினம் தொடர்ந்து அடிமையாக அழிந்துபோவதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக பெருகிவிட்ட வந்தேறுகுடியான சிங்களவன் மட்டும் காரணமல்ல, சிங்கள இனத்தின் ஆதிக்க அராஜகத்திற்கு துணையாகி, சில அயல் நாடுகளும், ஈழத்தமிழரின் அழிவில் முக்கிய பங்கு வகித்தே வந்திருக்கின்றன.

உலக அரங்கில் தமிழனுக்கென்று ஒரு நிலப்பரப்பு இல்லாத காரணத்தால், தமிழனின் குரல் சரியான இடங்களுக்கு தடங்கலின்றி சென்று சேரவில்லை, புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழன் காலூன்றியதன் பிற்பாடே சில தகவல்கள் உலக அரங்கில் அறிமுகமாகியிருக்கின்றன.

அயலில் செல்வாக்காக இருக்கும் சில நாடுகள் திரிவுபட சொல்லுபவைகளை கேட்டு  ஆடிக்கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும். இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் தகமை வாய்ந்த ஐநா மன்றமும்  தர்கரீதியாக அராய்ந்து நியாயத்தை நிலைநிறுத்த தவறிவிட்டமையே ஒரு பழமையான, இன மக்கள் அழிந்து போவதற்க்கும் சிதைவுக்கும் மூல காரணமாகும்.

பல ஆண்டுகளாக கேட்பாரற்று, தினம் தினம் சித்திரவதைப்பட்டு செத்து அழிந்து கொண்டிருக்கும் சிறுமைப்பட்ட ஒரு இனமாக, செயற்கையாக வேண்டுமென்றே ஈழத்தமிழர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

இது ஏன் எதற்கு! இதற்கு ஒரு முடிவுமில்லையா! என்கிற கேள்வி தமிழர்களைத்தாண்டி உலகமட்டத்திலும் இப்போ எழுந்திருக்கிறது, இருந்தும் சில சக்திகள் இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தடுத்து மூடிமறைக்க முயன்றாலும், மூடிவிடமுடியாத நிலைக்கு “இன அழிப்பு” படுகொலைகள் பற்றிய அவலங்கள் உலகத்தை அச்சுறுத்தும் வண்ணம் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சம்பந்தப்பட்ட தமிழர்தரப்பு தொடர்ந்து முனைப்புடன் செயற்படாவிட்டால், சந்தற்பம் பார்த்து காத்திருக்கும் துரோகக்கூட்டங்களும் எதிரியும் சேர்ந்து உலகின் பார்வையை திசை திருப்பி குற்றச்சாட்டுக்கள் வீரியமற்று, விடயம் மூடி மறைக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும்.

வீரியமான இன மக்கள் என்று அறியப்பட்ட  ஈழத்தமிழினம் காலப்போக்கில் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகள் போல,  அருகி அழிந்து போவதற்கான அபாயத்தை சிங்களவனுடன் சேர்ந்து உலகத்திலுள்ள சில நாடுகள்  செய்து முடித்துவிடும்..

ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்குவதற்கு முன், பல ஆண்டுகாலமாக அடக்குமுறை கொடுமையிலிருந்து மீழ்ச்சிபெற, அரசியல் ஈதியாக தமிழர்கள் எடுத்த முயற்சி எதையும் பெரும்பான்மையான சிங்கள இனம் மதித்து நடந்துகொள்ளவில்லை. நீர்மேல் எழுத்தாக அவை காணாமல்ப் போய்விட்டன.

வேறு வழியின்றி பட்டுணர்ந்த அனுபவத்தை ஞானமாக்கி மாற்றுவழியில் உயிரை பணயம் வைத்து மான உணர்வோடு தமிழினம் தொடர்ந்த ஆயுதப்போராட்டமும் வெற்றிபெறும் தறுவாயில் சில நாடுகளின் சுயநலத்தாலும் தவறான அணுகுமுறைகளாலும் பொய்ப்பிரச்சாரத்தாலும் வஞ்சகமாக தடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் எந்த அடிப்படையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை தமிழினம் உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தும் கூட, உலக வல்லாதிக்க சூழ்ச்சிக்காரர்கள் சிலரின் கயமையினால், சிறிய இனமான தமிழினத்தின் குரல் நாகரீகமான உலக அரசியல் மட்டத்திற்கு சென்றடைய விடாமல் தடுக்கப்பட்டது.

காலம் கடந்து, இன்று பல நியாயவாத நாடுகள் போராட்டத்தின் நியாயம் அறியப்பட்டிருப்பதாக ஒப்புக்கொள்ளுகின்றன.

சனல்4 ஆவணப்படத்தை கண்ணுற்றபின் பிரித்தானிய அரசு, இலங்கை அரசாங்கத்தின் செயலை கண்டித்து போர்க்குற்றத்திற்கான விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுச்செயலர் கிளாரி கிளிண்டன், அவர்களும் தமிழர்களின் ஆயுதப்போரட்டத்தின் நியாயத்தை தாம் முன்பு தவறாக புரிந்துகொண்டதாக கவலை தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது கருத்து கூறியிருக்கிறார்.

யதார்த்தமான நியாயத்தின் பிரகாரம் ஈழத்தமிழரின்  விடுதலை போராட்டத்தை பகுப்பாய்ந்து பார்த்து  நியாயக்கூறுகளின் வரையறைக்குட்பட்டு போராட்டத்தின் தாற்பரீகத்தை பரிசீலிக்க உலகம் முயற்சிக்கவில்லை. செல்வாக்கும் வல்லமையும் சுயநலன் சார்ந்த குறுகிய ஆதிக்க மனப்பாண்மையும் ஒரு இனத்தின் வாழ்வுக்கான உரிமைப்போராட்டத்தை சீரழித்திருக்கிறது.

கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து இலங்கைத்தீவை சிங்களவரிடம் கையளித்துவிட்டுப்போன ஐக்கிய ராய்ச்சியம், தொடங்கலாக, பான் கீ மூனை பொதுச்செயலாளராக கொண்டியங்கும், இன்றைய ஐநா, அதிகார மையம்வரை ஈழ படுகொலைக் குற்றத்திற்கு ஒத்திசைவாகிய சூத்திரதாரிகளாக நாகரீக உடைக்குள் மறைந்திருக்கின்றனர்.

அப்படியிருந்தும் நியாயம் வெளியே மிதந்துவரும் இந்தச்சமையத்தில் சில சக்திகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு கண்களை இறுக்கமூடிக்கொண்டு தமது தவறுகளை மூடிமறைப்பதற்கு தொடற்சியாக ஆயிரம் ஆயிரம் நியாயம் தப்பாக கற்பித்து தப்பிக்கொண்டிருக்கின்றன.

தமிழர்தாயகத்தின் 70 சத வீதத்திற்கும் மேலான பகுதிகளை சிங்கள ஆதிக்கத்திடமிருந்து மீட்டெடுத்து, தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவந்து, உலகமே வியந்துபார்த்த சிறந்தொரு ஆட்சியை நடத்திய விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகள் சிலவற்றின் துணைகொண்டு முழுமையாக அழித்து ஆக்கிரமித்து மீதமுள்ள தமிழர்களையும் இல்லாதொழிப்பதற்கு ஸ்ரீலங்கா சிங்கள அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது.

போர் நிறைவுற்றதாகக் கூறப்படும் கடந்த இரண்டு வருடங்கள் தாண்டியும், தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தின் பகுதியில் உள்ள தமது சொந்த வீடுகளில் திரும்ப குடியமரக்கூட அனுமதிக்கப்படவில்லை. காலா காலமாக வாழ்ந்துவந்த பெரும் பகுதியை நிரந்தரமாக இராணுவ முகாம்களுக்கும் இராணுவக்குடியிருப்புக்களுக்கும் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளிடமும், தமிழர்கள் பறிகொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்காலிக கொட்டகைகளில் எந்தச்சுதந்திரமும் இல்லாமல் இராணுவ காவலுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழர் தாயக நிலப்பரப்பின் பெரும் பகுதியை சிங்கள அராஜகத்தின் சின்னமாக, புத்தர்சிலைகளும் அரசமரக்கன்றுகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் தமிழர்கள், எதிர்த்து வாய் திறக்க முடியாமல் கொலை அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது.

ஊடக சுதந்திரத்திற்குட்பட்டு தமிழர்கள் தமது தரப்புச்செய்திகளை வெளியிட முடியாத அடக்குமுறை தொடர்கிறது. சமீபத்தில் உதயன் பத்திரிகை செய்தி ஆசியரியர் செய்தி வெளியிட்டு படுகொலை செய்யப்படுமளவுக்கு விசமத்தனமாக தாக்கப்படிருக்கிறார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதையும் தீர்மானிக்கமுடியாத அடக்குமுறை அராஜகம் தாண்டவம் ஆட்டுவதாகவும், தமிழினம் அடிமைகள் ஆக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் மிகப்பிரபலமான றொய்ட்டர், செய்தி ஸ்தாபனம் தனது செய்தியில் கவலை தெரிவித்து பகிரங்கப்படுத்தியுள்ளது.

மஹிந்தசிந்தனை எனப்படும் துவேசமான கபட சிங்கள வேலைத்திட்டத்தின் கீழ், காடைச் சிங்களவர்களையும் இராணுவத்தையும் தூண்டிவிட்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஆதரவாக யாழ் குடா நாட்டுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தி குறைக்கும் சதியும் நடைபெறுகிறது.

அரசாங்க அதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலை கழுவப்பட்டும், மிரட்டப்பட்டும் தமிழருக்கு எதிராக அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

மறுபுறம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை, இராணுவத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்குகொள்ளச் செய்யும் வகையில் அவர்களை துப்பாக்கி முனையில் திறந்தவெளியில் கொத்தடிமைகளாக இராணுவம் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் சிங்கள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன.

இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் எடுபிடி வேலைகள், கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆகியவற்றில், இவர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும். அந்த இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் இப்பணிகளில் சுமார் 8,000 க்கு மேற்பட்ட இளம் ஆண் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே அஞ்சத்தோன்றுகிறது.

விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டோம் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சர்வாதிகார மிடுக்குடன் பாதுகாப்பு அமைச்சின் செயலரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான, கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமான பாணியில் திடுக்கிடும் தீர்மானம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையின் நிம்மதி இழப்புக்கும், அழிவுக்கும் காரணமாக இருந்துவந்த துவேச மனப்பாண்மையை, சிங்கள இனவாதிகள் எவ்வளவோ பாடம் கற்று கழுமரம் ஏறும் தறுவாயில்க்கூட கைவிடத்தயாராக இல்லை.

கோத்தபாய ஒன்றும் இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதியுமல்ல, நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தகுதி கொண்டவருமல்ல, இராணுவச்சிப்பாயாக இருந்து, அண்ணன் மஹிந்தரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றவர் என்ற தகுதி மட்டே உடையவர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்கள் குளறுபடியான குறைப்பிரசவமான கருத்துக்களை வெளியிட்டாலும்,பேசுவதற்கான ஒரு தகுதியாவது இலங்கை அரசு மட்டத்தில் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரியான மஹிந்தவின் தம்பி என்ற ஒரு தகுதியையும் பாதுகாப்பு சம்பந்தமாக சில கருத்துக்களை பத்திரிகைகளுக்கு கூறவல்லவருமான கோத்தபாய, தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தீர்வுத்திட்ட அதிகார அலகுகள் பற்றிய முடிவுகளை ஒரு இராணுவ ஆட்சியாளரின் தலைமைத்துவ தொனியோடு எழுந்தமானத்தில் கூறியிருக்கிறார்.

தம்மிடம் “இறைமையுடன் கூடிய அரசமைப்பு” ஒன்று இருக்கிறது என்றும். அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் மட்டும் அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாளுமன்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். வேறு தேவையும்  தமிழருக்கு இல்லையென்றும், மேலதிகமாக தமிழர்களுக்கான திர்வுத்திட்டம் என்று எதுவும் தேவையில்லை என்றும், நாட்டின் சகல அதிகாரங்களையும் கொண்டவர்போல கோத்தபாயவின் கூற்று அமைந்திருந்தது.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின்போதே கோத்தபாய தனது அடக்குமுறை கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல் கயமைகள் பாராளுமன்றத்தில் தமிழரை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். மூன்றாம் தரப்பு ஒன்று, அல்லது சர்வதேச தலையீடு இல்லாமல் சிங்களவர்களை நம்பி இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை தீர்க்கப்படமுடியாது என்பது இலங்கையில் வாழும் ஒரு தெருப்பிச்சைக்காரனும் தீர்ப்பு கூறுமளவுக்கு நிலைமை இருக்கிறது.

இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது என்றும் கோத்தபாய தனது புலமையை வெளிப்படுத்த தவறவில்லை.

ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கை இறைமையுள்ள?? ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. இலங்கையின் இறைமைக்குட்பட்டு சரியான தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எம்மை நிச்சியமாக உலகம் நம்பவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா, மற்றும் அதிக சனத்தொகை கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவும், நிச்சயமாக எங்களைத்தான் ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு, ஆபிரிக்க நாடுகள் அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. அவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று இந்தியாவின் நிலைப்பாட்டையும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது??. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான் என்றும் கூறியிருக்கிறார்.

ஆரம்பகாலம் தொட்டு விடுதலைப்புலிகளின் மாவீரர்களின் விபரங்களின்படியும், இறுதி யுத்தத்தின்போதான மாவீரர்களின் அண்ணளவான கணக்குப்படியும், போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே போராட்டம் நிறித்திவைக்கப்பட்டிருக்கும் காலம்வரை மாவீரரான போராளிகளின் எண்ணிக்கை அண்ணளவாக முப்பத்து இரண்டாயிரத்திலிருந்து, முப்பத்து ஆறாயிரம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதே காலங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சரியான தொகை ஒருபோதும் அரசதரப்பு வெளிவிடவில்லை. ஒவ்வொரு சந்தற்பத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு எண்ணிக்கை கூறப்பட்டு வந்திருக்கிறது. இருந்தும் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை நாற்பதினாயிரத்திற்கும், அதிகமாக இருக்கலாம். ஆயுதம் தூக்கி போராடிய இரண்டு தரப்பிலும் மரணித்தவர்களின் தொகையை கணக்கிட்டால் கிட்டத்தட்ட எண்பதுனாயிரம்பேர் மாண்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது, 2009 ஏப், கருணாநிதியின் உண்ணா மறுப்பு நாடகத்தின் பின்னரான “”ஒரு சிலநாட்களில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஸ்தலத்தில் நின்றிருந்த ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்””.

அவைபோக கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின்னரான முள்ளிவாய்க்கால் முற்றுகையில் குறைந்தபட்சம், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், காணாமல்ப்போனவர்களின் பெரிய பட்டியல் கணக்கற்ற பெருந்தொகையாக இருந்துகொண்டிருக்கிறது. இப்படி அதிர்ச்சியளிக்கும் தமிழர்களின் இன அழிப்பு கணக்கு இருக்கும் நிலையில், கோத்தபாய அவர்களுக்கு தமிழர்களின் பல இலட்சம் படுகொலை அழிப்பு சிறிய தொகையாக தெரிகிறது. இப்படியான வக்கிர எண்ணம் குடிகொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இறைமை, முறைமை, என்று இலக்கணம் பேசமுடியுமே தவிர, முடிவான தீர்வுத்திட்டம் எதையும் நிறைவேற்றப்போவதில்லை.

இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்று சாகக்கிடக்கும் இந்த சர்வாதிகார கோத்தபாய விடுத்திருக்கும் அறிக்கை பலமொழிகளிலும் மொழிபெயர்த்து உலக அரங்கில் பகிரங்கப்படுத்தவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம், என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், என்று அப்பட்டமான அடக்குமுறையை வெளிப்படுத்தி தனது கழுத்தறுப்புத் திட்டத்தை இந்தியாவின் ஒப்புதலோடு கூறியிருக்கிறார்..

இந்தியாவுடன் இணைந்து நடத்திய படுகொலைகளை கோத்தபாய, தமிழருக்கான அதிகாரப்பகிர்வு என்று ஹெட்லைன்ஸ் ருடே, க்கு கூறியிருக்கிறார்.

வட இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அத் தொலைக்காட்சி செவ்வியை, ஊமை பிரதமர் பார்த்திருக்காவிட்டாலும் அந்நாட்டின் புலனாய்வுத்துறை கவனித்திருக்கக்கூடும். கோத்தபாயவின் வாக்குமூலத்தை ஒப்புக்கொள்வதுபோலவே அந்நாட்டின் வெளிவிவகாரத்துறையின் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் நிலைப்பாடும் இருப்பதாகவே அவரது சமீபத்திய நாடாளுமன்ற பேச்சு அமைந்திருந்தது.

இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, “சேனல் 4′ ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். “அது இப்போது முக்கியமல்ல”.  இலங்கை பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாக, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடுழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது என்று கோத்தபாய கூறியதை சற்று மாற்றி எஸ் எம் கிருஸ்ணா கூறிவிட்டு தூக்கத்தை தொடர்ந்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் கூற்றுப்படி இனப்படுகொலை ஒன்றும் முக்கியமில்லை, செத்தவர்களின் பேரால் சில வீடுகளை கட்டித்தருவதாக சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று மடைத்தனமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன என்று தனது நாட்டில் நடைபெறும் சாக்காட்டு செய்தியை  அசாதாரணமாக அந்த தொலைக்காட்சி செவ்வியின்போது கோத்தபாய ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய சர்வாதிகாரிக்கான தொனியில் அமைந்த கோத்தபாயவின் தலைக்கனமான பேச்சு அப்பட்டமாக  ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கிறது.

கோத்தபாயவின் சர்வாதிகார நிலைப்பாட்டை ஆமோதிக்கும் விதத்தில் இந்திய ஊழல் நாட்டின் பொம்மை பிரதமர் மன்மோஹன் சிங் கோத்தபாயவின் நிலைப்பாட்டை நிராகரிக்க முடியாது என்றும் எதிர்க்க முற்பட்டால் இந்தியா அழிந்துபோகும் என்று தனது கவலையை வைக்கோ அவர்களுக்கு அப்பாவியாக தெரிவித்து அழுதிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அயல்நாடான இலங்கை மீது ஒருபோதும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியாது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இலங்கையின் சிங்களவருக்கான அபிவிருத்தி மற்றும் வர்த்தக தொடர்புகளில் இருந்து இந்தியா விட்டு விலகும் போது அந்த இடத்தை சீனா பிடித்துவிடும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காக சீனா ஏற்கனவே இலங்கைக்கு கடற்படை உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றைக்கூட தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை.

அத்துடன் சீனா  பாகிஸ்தானை நெருங்கிய நட்பு நாடாக வைத்திருக்கிறது, அப்படியிருக்கையில் நாம் இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை முறித்துக் கொண்டால் அது இந்தியாவிற்கு பாதகமாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதை, தலைப்பா கட்டிய ஊமை, பொம்மை பிரதமர் வெட்கமில்லாமல் வைகோ அவர்களுக்கு சொல்லிவிட்டு சப்பாத்தி சாப்பிட சென்றுவிட்டது எனத்தெரியவருகிறது.

சீனா அதி நவீன படகுகளை கொடுத்து ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் மூலம் தமிழக மீனவர்களை அழிப்பது தெரிந்திருந்தும். இந்திய மத்திய அரசு ஸ்ரீலங்காமீது, ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை. வைகோ அவர்களின் சந்திப்பின்போது பொம்மை பிரதமர் அதை அப்பட்டமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.

தனது நாட்டிலுள்ள தமிழ் மக்களை அழிக்கும், ஒரு சிறிய அயல்நாடான இலங்கையை கண்டிக்காமல் தண்டிக்காமல் சர்வதேச போர்க்குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்க இந்திய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, தனது நாட்டின் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கொள்கையளவில்க்கூட அக்கறைப்படாமலிருப்பது இலங்கை தமிழ் இன அழிப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்பது புரிகிறது.

மன்மோஹன் சிங்கின், இந்தக் கருத்தின்படி,, சீனாவுடனும், ஸ்ரீலங்காவுடனும், எந்தவிதத்திலும் இந்தியாவால் மோதமுடியாது என்பது தெரிகிறது. இவ்வளவு மோசமான பலயீனம் இந்திய மத்திய அரசிடம் இருப்பதால் ஈழத்தமிழர்களை ஈழத்திலும், தமிழகத் தமிழர்களை இந்திய கடற்பரப்பிலும் தொடர்ந்து பலிகொடுத்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழி இந்தியாவுக்கு இல்லை என்றும், இது ஒன்றும் தப்பில்லை. என்றும், மன்மோஹன் சிங், ஏதோ ஒன்றிற்காக, சம்பந்தப்படாத ஏதோ ஒன்றை இரையாக்குவது சரியே என்று நியாயப்படுத்துவது புரிகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றைக்கும் தமிழினத்திற்கு எதிராக இருப்பதால், இலகுவாக ஈழப்போராட்டத்தில் இந்தியா ஊடுருவி அப்பட்டமாக ஸ்ரீலங்காவிற்கு உதவி செயற்பட  முடிந்திருக்கிறது. அதற்கு பக்க பலமாக கூட்டாளிக் கட்சியான திமுக எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ஒத்துழைத்து வருகிறது.

படுதோல்வியடைந்து தமிழ்நாட்டிலிருந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டு, எதிர்க்கட்சி என்ற நிலைக்கும் இல்லாமல் ஓலம்பாடி ஒப்பாரி அரசியல் செய்துகொண்டிருக்கும், திமுக, 2008, 2009, ல் குடும்ப பதவிக்காக தமிழின அழிப்பில் மத்திய காங்கிரஸுடன் கைகோர்த்து செயற்பட்டது. இன்று தமிழ் நாட்டிலிருந்து விரட்டப்பட்டாலும் ஸ்பெக்ரத்தில் குற்றவாளிகளான குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காகவும், நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகுற்றம், போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும், காங்கிரசை விட்டு விலக முடியாத வில்லங்கத்தில் மாட்டியிருக்கிறது. இதை திமுகவின் கூட்டாளியான தோல் திருமா,  திமுக இன்று சூழ்நிலைக்கைதியாக இருக்கிறது என்று நக்கலடித்து குத்திக்காட்டினார்.

சமீபத்தில் இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. – கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் விதி எண் 193 ன் கீழ் விவாதிக்கப்படவேண்டுமென நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

தி.மு.க.வும் தனது பங்கிற்கு நோட்டீஸ் ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அப்போ திமுக திருந்தி தமிழ் இன உணர்வுடன்   நோட்டீஸ் தாக்கல் செய்திருப்பதாக அப்பாவிகள் சிலரால் நம்பப்பட்டது.

ஆனால் நேற்றைய தினம் திமுக நோட்டீஸ் தாக்கல் செய்ததன் தந்திரம் விதி எண் 193ன் கீழ் நடைபெற இருக்கும் விவாதத்தின் கருப்பொருளே மாற்றியமைக்கத்தான் என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது.

Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு குறிப்பேடு வினியோகிக்கப்பட்டது.

அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என இந்திய அரசு கவனமாக இருப்பது தெரிகிறது. இந்த வரிகள் மாற்றியமைக்கப்படுவதற்கு திமுக எம்பி, ரி ஆர் பாலு சமர்ப்பித்த நோட்டீஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதால் காங்கிரஸ் திமுக கூட்டுச்சதியின் பின்னணியிலேயே நிச்சியம் இந்த மாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது.

வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கையில் திமுக அதிகமாக இருப்பதால் திமுக வின் நோட்டீஸ் முன்னிலைப்படுத்தப்பட்டதாக நியாயப்படுத்தவும் தகுதி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமா, திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்திருந்தாலும். இச்சந்தற்பத்தில் தந்திரவாதியான, திருவாளர் திருமா பாராளுமன்றத்தில் சமூகமளிக்கவில்லை.

இறுதியாக: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தீர்வு பெற்றுத்தரும் என்று யாராவது நம்பினால் அதைவிட பெரிய கற்பனைக்கோட்டை வேறு எதுவுமாக இருக்கமுடியாது. அரசியலோ ஆயுதப்போராட்டமோ ஈழத்தமிழர்கள் சரியாகத்தான் செய்துகொண்டு வந்திருக்கின்றனர், வருகின்றனர். குறுக்கே புகுந்து நாசகார வேலைகளில் இந்தியா எப்போதும் மூக்கு நுழைத்து சேறடித்தே வருகிறது.

சம்பிரதாயத்திற்கு வேண்டுமென்றால் சிலர் சொல்லுவதுபோல் இந்தியாவை இணைத்து பயணிப்போம் என்பது சரியாகவும் இருக்கக்கூடும்.ஆனால் காரியம் தடங்கலும் கழுத்தறுப்பும் மிஞ்சுமே தவிர கால் காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.

இன்று தமிழினத்தினதும், தமிழினத்தினது நட்புச்சக்திகளினதும் குறியாக, போர்க்குற்றத்தில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்காக உலக அரங்கில் திரண்டுவரும் அனைத்து ஆதரவையும் திரட்டி,, குற்றவாளிகளை கூண்டிலேற்றி, கழுமரத்தில் ஏற்றி, தலை முழுக முனைப்பாக முயற்சிக்க வேண்டும். மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும்.

போர்க்குற்றம் என்கிற ஒரேயொரு அஸ்திரம்தான் இன்று பலரை திகைப்பூண்டில் மிதித்த வழிப்போக்கனைப்போல திகைக்கவைத்து. அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி, தீர்வுத்திட்டம், என்று ஏதேதோ பேசவைத்து, போர்க்குற்ற விசாரணையை திசை திருப்பி இழுத்தடிக்க அல்லது இல்லாமல்ச்செய்ய புலம்ப வைக்கிறது.

கூட்டத்தோடு கூட்டமாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பலர் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுப்பதை தமிழர்கள் பலர் இன்னும் இனங்காணவில்லை. குற்றவாளி ராஜபக்க்ஷவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றினால் மற்றக்குற்றவாளிகளை ராஜபக்க்ஷ இனங்காட்டி உதவுவார். எல்லாமே சுபமாக முடிவுக்கு வரும்.

மீண்டுமொருமுறை தமிழினம் நன்கு சிந்தித்து இன்றைய எமது முக்கிய பணி போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே  முதன்மையானது என்று உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.மற்றவை எல்லாம் சரியாக நடப்பதாகவே படுகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

Up ↑