தமிழ்ச்செல்வம்
ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பலவீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர்
நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றிகாலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில்தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங் கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட்பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் ஒரு உயரியபோராளிக்குக் கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய மதிப்பு எதிரியால் கொல்லப்படுவதுதான்.
அத்தகைய போராளியான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வாழ்வும், வரலாறும் பிறருக்காக உழைத்து அவருக்காகவே மகிழ்வோடு மடிந்த வரலாற்று மனிதர்களின் வரலாற்றுத் தடங்களோடு இணைந்துவிட்டது. சர்வதேச ரீதியிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடாக இன்று ‘சே’ பார்க்கப்படுகின்றார். தமிழின எழுச்சியின் வெளிப்பாடாக இன்று தமிழ்ச்செல்வன் கணிக்கப்படுகின்றார்.
இப்படிப்படட்வாக்ள வரலாறுகளாலே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அதற்குரிய தகமைகளைப் பெறுவதும் அதன்வழி இறுதியில் வெல்வதும் நிகழ்கின்றது. அந்தவகையில், தான் வாழும் சூழலில் பாதிப்படைந்து போராளியாகி அத்தடைகளைத் தாண்டுவதின் மூலம்சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தி இறுதியில் அப்போராட்டத்திற்கே உரமான தமிழ்ச்செல்வன் தமிழ்கூறும் நல்லுலகின் மதிப்பைப் பெறுகின்றார்.
1967இல் பரமு விசாலாட்சி இணைக்கு தமிழ்ச்செல்வனாகி, 1984இல் விடுதலைப்புலிகளுக்குத் தினேஸ் ஆகி, 2007இல் தமிழ்மக்களுக்கு தமிழ்ச்செல்வமாகிய கதைதான் இது. 1984 – 2007 வரை 23 ஆண்டுகள் தன் இளமைப்பருவம் முழுவதையும் விடுதலைக்கு ஒப்புக்கொடுத்த அவரது போராட்டம் முப்பரிமாணம் கொண்ட தளத்திலே இயங்கியதாக கணிக்கமுடியும்.
அவரது போராட்ட வாழ்வு விடுதலையமைப்பின் வளர்நிலையின்படி மலர்ச்சிப் பாதையோடு ஒத்தது. மூன்று காலகட்டங்கள், மூன்று வௌவேறு சூழல்கள் – இவற்றிற்கு முதலில் இசைவாக்கம் பெற்றும் பின்னர் ஈடு கொடுத்தும் அவர் செயற்பட்டதின் தடங்களே அவரது ஆளுமையின் உருவகமாகின்றன. எமது விடுதலைப்போராட்டத்தின் திருப்புமுனை ஆண்டாகக் கருதப்படும் 1970களை அண்மித்து அவர் பிறப்பெடுக்கின்றார்.
பிற்காலத்தில் அறியப்பட்ட அவரது சிறந்த ஆளுமைக்குரிய பண்புகள் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட குடும்பப் பின்னணியாலும் விடுதலைப்புலிகளின் தொடர்புள்ள சூழலால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவை அவரை ஒரு வழமையான மனிதனாக மாறவிடாது போராளியாக்கி விடுகின்றது. அவருக்குப் பெற்றோரால் இடப்பட்ட பெயர் தமிழ்ச்செல்வன் என்பதும் அவரது புன்சிரிப்பும், மலர்ந்த முகமும் இயல்பிலேயே உள்ள தென்பதும் குறிப்பிடத்தக்கது.
“இளவயதிலும் சரி இப்போதும் சரி எதையும் தனக்கெனச் சேர்த்துவைக்கும் பழக்கமற்றவன்” என அவரது மூத்த சோதரரில் ஒருவர் கனடாவில் துயர்பகிர்வின் பொழுது நா தழுதழுக்கக் கூறினார். உண்மையில் இப்போது எண்ணிடும் பொழுது அவரை பிற் காலங்களில் சந்தித்த எவரும் ஏதாவது பயன்களை அவரிடம் இருந்து பெறாமல் சென்றதில்லை என்பதும் எம் நெஞ்சின் நீங்காத பதிவுகளாய் உள்ளது.
விடுதலைப்புலிகள் கரந்துறைப் போர்முறையினைக் கைக்கொண்ட வேளையில் அவர் இயக்கத்தில் இணைகின்றார். இயக்க மரபிற்கேற்ப தனியாகவும், குழுவாகவும் வீர உணர்வுள்ள போராட்டச் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்ட காலமது. அவரது சிறப்பு இயல்புகள் தேசியத் தலைவரை ஈர்த்தமையும், அதன் விளைவாகத் தேசியத் தலைவர் பிற்காலத்தில் தான் சந்திக்கப்போகும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கத்தக்கதொரு நம்பகமான துணைவனைப் பெற்றதும் நாம் கவனிக்கத்தக்கது.
1987 – 1990 வரை இந்தியப்படைகளுக்கு எதிரான துணிகரமான, இடைவிடாத தாக்குதலை நடத்திய உணர்ச்சிகரமான போராளியாக அவர் அறியப்படுகின்றார். கரந்துறைப் போர்முறைக் காலகட்டத்திலே போராளிகளின் இருப்பும், பாதுகாப்பும் மக்களின் கைகளிலேயே இருக்கும். ‘சே’ முன்பொருக்கால் எழுதினார்.
“ஒரு புரடச்கக்கரனுககுத தேவையானவை எவை? வலிய கால்கள், பிச்சைக்காரன் வயிறு,எளிய சுமை”. தமிழ்ச்செல்வன் வெறும் கால்களுடன் தென்மராச்சி மண்ணிலே இந்தியப் படையோடு மோதிய காலத்தில் அலைந்து திரிந்தார். தென்மராச்சி மக்களின் அபிமானம் பெற்ற ‘செல்லப்பிள்ளையாக ‘ எங்க வீட்டுபிள்ளையாக அவர் ஆகிவிடுகின்றார்.
எத்தனை அன்னையர் அவருக்கு உணவூட்டியும்,கண்போலக் காத்தும் நின்றனர். பிற்காலத்தில் எத்தனை உயர்நிலைக்குச் சென்றாலும் தனக்குதவிய மக்கள் நெருக்கடிகளுக்கு உட்பட்டபொழுது முடிந்தளவு உதவிகளைச் செய்ய அவர் தயங்கவில்லை. அவரது நன்றி மறவா இப்பண்பு உயரியது. அவ்விளவயதில் கபடமற்ற மனதோடு தன்னோ டொத்த தோழரோடு போராடிய காலம் அவர் வாழ் வின்பொற்காலமாக அவர் மனதில் பதிந்திருந்தது.
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக அவர் பதவியேற்றபின் அடிக்கடி அவர் அசைபோடும் மலரும் நினைவுகளாகவும், மக்கள் உறவில் கவனமின்றி செயற்படும் போராளிகளுக்கு அறிவுரையாகவும் இந் நினைவுகளை மீட்டுக்கொள்வார். அப்போது அவர் மலர்ந்த முகம் மேலும் மலரும். இப்போது இரண்டாம் காலகட்டம். இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னான கட்டம். விடுதலைப்புலிகள் நகர்வுப் படையணியாகி மரவுவழிப் படையணியாகப் படி வளர்ச்சி கண்ட காலம். ஒருபுறம் பாரிய படைநடவடிக்கைகள் மறுபுறம் அரசியல் நிருவாக அலகுகள் கட்டமைப்பு என இருவேறுபட்ட பணிகளோடு மருத்துவததுறையில் மறைவான ஆனால் நிறைவான வளர்ச்சிக்கான ஏற்பாடுகளென அவர் பணியாற்றினார்.
1995 இல் சந்திரிக்கா அரசோடான பேச்சுக்களிலும் தலைமை தாங்கித் தனக்கான பட்டறிவையும் பெற்றுக்கொள்கின்றார். 1995 ஏப்பிரலின் பின் மீண்டும் போர் வெடித்தமை, இடப்பெயர்வு, வன்னிவாழ்வு, முல்லைச்சமர், ஜெயசிக்குறு, ஓயாத அலைகள் என வரலாற்று நிகழ்வுகளால் எம்வரலாறு நிரம்பிவழியும் போதெல்லாம் தமிழ்ச்செல்வன் தலைவர் அருகில் சிறப்புடனும், சிரிப்புடனும் நின்றார். ஒரு மனிதனால் இத்தனை பணிகளையும் சுமந்திட முடியுமா என மற்றவர் ஏங்கிடுமளவு பளுச்சுமந்தார்.
தலைவன் முகமறிந்து – மனமறிந்து – விருப்பு வெறுப்பறிநது – ஓயாத சிநத்னையின் பொழுது தலைவரிடமிருந்து வெளிப்படும் அறிவுறுத்தலறிந்து அவற்றினை நடைமுறைச் செயற்பாடாகமாற்ற அவர் பட்டபாடு, தலைவரின் சுருக்கமான ஆனால் மிக அடர்த்தியான கூற்றுக்களை விரிவான பேச்சுக்களாக மொழிபெயர்த்து அவர் பாரதிபாடிய கண்ணனின் (கண்ணன் என் தோழன் – என்சேவகன், என் சீடன்) பல்வேறு அவதாரம் எடுத்தார். இக் கட்டத்திலே எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன் கண்ணன் என்னகத்தே கால்வைத்தநாள்முதலாய் எண்ணம் விசாரம், எதுமவன் பொறுப்பாய்.
என பாரதி பாடியபாடல் நினைவிற்கு வருகின்றது. இப்போது மூன்றாம் கட்டம். புலிகளின் சருவதேச வருகை நிகழ்ந்த காலம். சருவதேச தொடர்பு பெருகிய காலம். திடீரென இயக்கம் இராணுவ அரசியற் செயற்பாட்டிற்கு அப்பால் இராசதந்திரம் எனும் உச்சஅரசியல் நுண்ணுணர்வுத் திறன்மிக்க செயற்பாட்டில்கால்வைத்த நேரம். இங்கும் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு நிகழ்கின்றது. பாலா அண்ணையின் துணையுடன் இவ்வளவு சடுதியான மாற்றங்களுக்கெல்லாம் அவர் தன்னை உட்படுத்தினார்.
தன்முத்திரை பதித்து உலகத்தாரிடம் மிகப் பிரபலம் பெற்றார். புலிகள் என்றால் அது தமிழ்ச்செல்வனின் பூ மலர்ந்த முகமே என சருவதேசமே உணரும் பிம்பம் அவருடையதாகியது. இக்கட்டத்திலேயே ஒரு சிறப்பை இங்கே நாம் பதிவு செய்யவேண்டும். சருவதேச உறவுகள், சருவதேச கற்கைநெறிகள் என பெருமெடுப்பில் இராசதந்திர உலகம் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையிலேயே கற்றுப்பிள்ளையாக தமிழ்ச்செல்வன் களமிறங்கினார். அதற்கு முகம் கொடுக்கும் ஆற்றலையும் அவர் தன்னுள் வைத்திருந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடும் போராளிகளுக்குள்ளே அளவற்ற ஆற்றல் வலிமை பெருகும் என்பது வரலாற்று விதி. எத்தகையசிக்கல்களைக் கொண்டதாக இராசதந்திர உலகம் அமைந்தாலும் அங்கும் அடிப்படை மனித உறவுகளைச் சீராகப்பேணல் என்பதே. பாலா அண்ணையின் வழிகாட்டலோடு இதிலும் தமிழ்ச்செல்வன் தகுதிநிலை பெற்றார் என்பதற்கு போவர் அவர்களின் இரங்கலுரையேசான்று “அவருக்கூடாகவே புலிகள் அமைப்பு தொடர்பானபிம்பம் சருவதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டது.
அவரின் வழியே புலிகள் சருவதேசத்தில் அறியப்பட்டார்கள்” என்கின்ற கருத்துப்பட போவர் பேசினார். இப்பொழுது தன்கடன் முடித்து அவர் நிறை வெய்திவிட்டார். ஆனால் எம்பணி நிறைவெய்தவில்லை. அவரிடமிருந்து நாம் பெற்றதென்ன? கற்றதென்ன? வரலாறு எழுப்பும் வினாவிது. தன் ஒவ்வொரு வருகையின் பொழுதும் மகிழ்வையும், கலகலப்பையும், பரபரப்பையும் கூடவே கொண்டு வரும் – பிறர் எவராயினும் எழுந்து நின்று மதிப்பளித்து நலம் விசாரிக்கும்போது குளிரவைக்கும் – அவரவர் மன அலைவரிசையில் அவரவர் குறைநிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் தன்மையை எம்மால் முற்றாகப் புரியமுடிந்ததா? நம்பமுடியாத பொறுமையுடனும் எவருக்கும் கிட்டாத இனிமையுடனும் ஆதிக்கம் காட்டாத – கோபிக்காமல் பாதிப்பேற்படுத்தும் நிருவாகம் அவரது.
நவீன முகாமையியல் கூறும்தலைவனாகிவிடு, ஆனால் அதிகாரியாகவிராதே –
நல்லெண்ணத்தை நம்பு – அதிகாரத்தை நம்பாதே – நான் என்று சொல்லாதே நாம் என்று சொல் – மதிப்பை வேண்டிப்பெறாதே உன் தகுதியால் பெறு என்று நீளும் கூற்றுக்களோடு பிறரை உற்சாகப்படுத்தி, தூண்டி வேலைவாங்கும் தன்மையை அவர் கைக் கொண்டார்.
“மதி உணர்ச்சியோடு மன உணர்ச்சியையும் கொண்டிருந்தார்”. அவரது மன ஆழத்தில் மக்களுறவே ஆழப்பதிந்திருந்தது. “எம் மக்கள் எம் மக்கள் என்றும் மக்களிடம் போங்கோ மக்களிடம் போங்கோ” என்றும் எப்போதும் போராளிகளிடம் கூறியவண்ணமேயிருப்பார்.
மக்களைப் பற்றிக் கதைப்பதோடு நில்லாமல் மக்களோடும் கதையுங்கள் என்றார்.
அவரது இலக்கினை நிறைவேற்றுவதே அதற்குரியவராக எம்மை உருவாக்கிக் கொள்வதே எமது பணி. அதுவே அவருக்கு நாம் செய்யும் உச்ச மதிப்பு. ஏனெனில் இறுதிக் காலத்தில் அவரது உள் மனதில் பெரும் கவலையாக இருந்தது மக்கள்படும் துயரே. அதை நாம் நீக்க முற்படும்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீண்டும் எம்மிடம் தோன்றுவார். “சே எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரைக் காணமுடியும்” என்கின்ற கூற்றை அவருக்குரியதாக்கி எமது ஆழ்ந்த அன்பையும் நன்றியையும் அவரிடமே விட்டுச்செல்கின்றோம்.
-க.வே.பாலகுமாரன்
நன்றி: விடுதலைப்புலிகள்
Recent Comments