உலகெங்கும் விடுதலைக்கான போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. நமக்கு ஏன் விடுதலை வேண்டும்?

என்ற கேள்வியிலிருந்துதான் விடுதலைக்கான போராட்டங்கள் தொடங்குகிறது. இந்த ஏன் என்ற கேள்வி தத்துவ ஞானி சாக்ரடீஸ் கற்றுத் தந்தது. ஏன் என்று கேட்கப் பழக வேண்டும். இதிலிருந்துதான் நமது வெற்றி தொடங்குகிறது. இயல்பாக நடைபெறுகின்ற ஓட்டப்பந்தயங்களில்கூட கடினமாக உடல் வலிமையை அனைத்தையும் ஒருங்கிணைத்து பின்னரே தமது இலக்கை அடைய முடிகிறது. அதை அடைந்த பின்னர் ஏற்படும் மகிழ்ச்சி தாம் இழந்த ஆற்றலை பன்மடங்கு கூட்டித் தருகிறது. சாதாரண ஒரு ஓட்டப்பந்தயத்தில் தனி நபருக்கான வெற்றியே அந்த நபரின் ஆற்றலை உயர்த்துகிறது என்றால், ஒரு இன விடுதலைக்கான வெற்றி எப்படி நம்மை உயர்த்தும் என்பதை நாம் உணரத் தொடங்கக் கூடிய காலநிலையில் இயங்கி வருகிறோம்.

உலகெங்கும் வாழும் தேசிய இனங்கள் தமது தேசிய அடையாளத்தை காத்துக் கொள்வதற்கான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வல்லாண்மை அரசுகள் அந்த தேசிய இனங்களை நொருக்கி அதன்மீது ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த ஒற்றை அடையாளத்தை திணிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனாலும்கூட அதிலிருந்து பீறிட்டுத்தான் விடுதலைக்கான போராளிகள் உருவாகிறார்கள். ஏன் விடுதலை வேண்டும் என்று கேட்டால், முதலில் நாம் தன்மானத்தோடு வாழ வேண்டும். தன்மானத்தோடு வாழ்வதற்கு விடுதலையே அடிப்படையாகும். அதன்பின்னர்தான் மற்றவற்றைக் குறித்து யோசிக்க முடியும்.

தன்மானம் ஏன் வேண்டும் என்று கேட்டால், நமது உரிமைகள் மறுக்கப்படும்போது, நமக்குள் ஏற்படும் தாழ்வு எண்ணங்கள் நம்மை அடுத்த நிலை குறித்து சிந்திக்க விடாமல் தடுத்துவிடுகிறது. ஆகவே, தன்மானத்தோடு வாழ்வதற்கு நமக்கு உரிமை வேண்டும். எதிலெல்லாம் உரிமை. உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் இவை மட்டும் உரிமைக்கான அடித்தளமாக மாறிவிடுமா? என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.

காரணம் மேற்கண்டவைகள் ஒரு சாதாரண மாந்த வாழ்வின் தேவைகள். இவற்றை எல்லாம் கடந்து நாம் நமது அடையாளத்தை காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நமக்கான அடையாளம் என்னதென்றால், நாம் இந்த இனத்தை சார்ந்தவர்கள் என்பது. இது நமது வாழ்வின் முகவரியாகும். இந்த முகவரி இன்றி இந்த உலகில் நாம் வாழ்வதால் பயன்கிடையாது. அப்படியானால் இந்த முகவரி எவ்வாறு நம்மிடமிருந்து பறிபோனது என்பதை சிந்திக்கும்போது நமக்கு ஏற்படும் இயல்பான ஒரு உந்துதலே நம்மை போராட தூண்டுகிறது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் தமது அடையாளத்தை காத்துக் கொள்வதற்காக தனித்தன்மை வாய்ந்த தமது அடையாளத்தை உயர்த்துவதற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறது. நாகலாந்து, மிசோரம், பஞ்சாப், காஷ்மீரம் என்று இந்த பட்டியல் தொடர்கிறது. இவர்கள் ஏன் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அடிப்படை காரணம் ஒன்றிருக்கிறது.

ஒரு இனம் என்று இருக்குமேயானால் அந்த இனத்திற்கான மொழி இருக்கும். அந்த மொழி தான் அந்த இனத்தின் முகவரியாகும். ஒருவேளை அவர்களுக்கான மொழி சிதைந்துவிட்டால், அவர்கள் தாம் இந்த இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு இயலாமல் போகும். அப்படியானால் உரிமை என்பது அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை மட்டுமல்ல, அவர்கள் உரையாடுவதற்கான அடிப்படையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும். சீனத்திலே திபெத்தியர்கள் தமது தேசிய அடையாளத்தை காத்துக் கொள்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டத்தின் நியாயம் உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த தேசிய இனம் சீன வல்லாதிக்க அரசால் ஒடுக்கப்படுகிறது. வெறும் வாழ்வியல் தேவைகள் மட்டுமே ஒரு இனத்தை சிறப்புற செய்யாது. மாறாக, அந்த இனத்திற்கான தேவைகளில் அடிப்படையாக தமது இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவைகளைத் தாண்டி தமது வாழ்வியல் தேவைகளான ஆன்ம ஒன்றிணைப்பு இங்கே அவசியமாகிறது.

இவர்கள் ஆத்மார்த்த ரீதியாக ஒன்றிணைவதற்கு எது காரணம் என்று பார்த்தோமேயானால், அங்கே மொழி பேராதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் தாய்க்கு நிகராக தாய் மொழியை நேசிக்கிறார்கள். தாயை மறப்பதும், மொழியை மறப்பதும் இருவேறு நிலைகள் அல்ல. ஆனால் அகண்ட உலகையும் சர்வதேசியத்தையும் பேசிக் கொண்டிருக்கும் சிலர் என்ன மொழியிலாவது பேசலாம். ஆனால் எல்லோருக்கும் பொருளாதார தன்னிறைவு தேவை என்பதை தொடர்ந்து தவளையைப் போல் கத்திக் கத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இனம் ஏன் மொழிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதை நாம் எந்தவித சமரசம்இன்றி ஏற்ற இறக்கமின்றி நேரிய சிந்தனையோடு, நேர்மையாக ஆய்வு செய்தோமென்றால், மொழிதான் அந்த இனத்தின் அடிப்படை தன்மையை உயர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, இன்றுவரை நாம் கற்கும் கல்வி நம் மொழி சாராத கல்வியாகவே இருக்கிறது. இதன் காரணமாக நமது அறிவியல் வளர்ச்சியாகட்டும், அல்லது மென்பொருள் கண்டுபிடிப்புகளாகட்டும், செய்மதி கோள்களின் அறிவுத்திறனாகட்டும் நம்மால் பெரிய மாற்றுதலை கொண்டுவர முடியவில்லை.

ஆராய்ச்சிகளிலும் விண்வெளி, ஆழ்கடல், அறிவியல், வேதியியல், பொருளியல், கோட்பாட்டியல், தத்துவயியல், இயற்பியல் என எதை எடுத்துக் கொண்டாலும் இது ஒட்டுமொத்தமாய் ஒரு இனத்திற்கான பொது பயன்பாடாக இல்லாமல், ஒரு குறைந்தபட்ச வளர்ந்த பொருளாதார தன்னிறைவு பெற்ற ஒரு இனத்தின் பயன்பாடாகவே இருக்கிறது. இதுவே ஒவ்வொரு தேசிய இனத்தில் ஏற்றத்தாழ்வுகளை இறுக்கி உறுதிப்படுத்துகிறது.

மாறாக, நாம் மேற்கண்ட அனைத்து ஆய்வுகளும் நமது தாய்மொழியிலேயே இருக்குமேயானால் அதற்கான பாடநூல்கள், பாட திட்டங்கள் அனைத்தும் நமது தாய் மொழிக்குள்ளேயே கற்றுத்தரப்படுமேயானால், ஒரு இனத்தைச் சார்ந்த அனைவரும் ஏற்றத்தாழ்வற்ற முறையில் தமது தாய்மொழியிலே அறிவு முதிர்ச்சி பெறுவதற்கு பெரும் உதவிப் புரியும். ஆனால் நடப்பது என்ன? நாம் எதைப் படிக்க வேண்டும் என்றாலும், பள்ளி இறுதி வகுப்பை முடித்து, கல்லூரிக்குச் சென்றால் சட்டம், மருத்துவம், கலை, அறிவியல் என எந்த உயர்கல்வி என்றாலும் அவற்றை ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும், ஆங்கிலத்தில்தான் கற்க வேண்டும் என்ற கேடு நிலை ஒரு இனத்தின் அவலமான படிமங்களாக நிறைந்திருக்கிறது.

இந்த தன்மை எவ்வாறு நம்மை அடிமைப்படுத்தும் என்றால், உயர்கல்வி கற்கும் அல்லது உயர்கல்வியில் உரிமம் பெறும் மொழியே நமது ஆதிக்க மொழியாக முன்னுரிமையோடு செழித்து வளரும். ஆனால் நமது தாய்மொழியோ பள்ளிக் கல்வியோடு முடிவுக்கு வருவதால், பள்ளிக் கல்வி முடித்தவர்களின் வாழ்வு மிக சாதாரண வாழ்வாகவும், பள்ளிக் கல்வியை கடந்து உயர்கல்வியிலிருக்கும் மற்றவர்களின் வாழ்வு உயர்நிலை வாழ்வாகவும் மாறிவிடுகிறது. அடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால், நமது ஏற்றத்தாழ்விற்கு மொழியே பெரும் காரணமாக இருப்பதை உணர முடியும். ஆகவே நமது மொழியை காக்க வேண்டும் என்றால், அந்த மொழியை காப்பதின்மூலம் ஒரு இனத்தை காக்கக்கூடிய நிலையை நாம் எட்ட வேண்டும். இது எங்கெல்லாம் ஆதிக்கவாதிகள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவைப் பொருத்த மட்டில் தமிழ்நாட்டின் மீது இந்தி என்கிற ஒரு மொழியே தமிழ் மக்களின்மீது அறையும் அளவிற்கு துணிவு வந்தது. ஆனால் அதை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட கடும் போராட்டங்கள் அதை பின்னுக்குத் தள்ளியது.

ஆனால் அக்கால அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளாக மட்டும் இருந்த காரணத்தினால் இந்த நாட்டின்மீது பற்றற்று, இனத்தின் மீது பாசம் இல்லாமல், மொழியின் மீது ஆவல் இல்லாத காரணத்தை நாம் அடையாளம் காணலாம். தமிழ் ஆய்ந்த தலைவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும்கூட 1967லிற்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழ் ஆய்ந்த தலைவர்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது. இதுவரை தமிழில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. மாறாக, தமிழ்மொழி முன்னைக்காட்டிலும் மிக வேகமாக பின்னடைவை சந்தித்து. ஒரு மொழியின் மீது, மொழி அடையாளத்தின்மீது ஆதிக்கம் செலுத்த துணியும்போதுதான் மொழியையும், இன அடையாளத்தையும் காத்துக் கொள்வதற்கான சிந்தனை போராட்டமாக உருமாற்றம் பெருகிறது. இதுதான் உலகெங்கும் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு அடிப்படை காரணியாகும்.

தமிழீழ போராட்ட வரலாற்றில் சிங்கள பாசிசம் தமிழ் மொழியை சிதைக்க நினைத்து தொடங்கிய பணிகளே தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டமாக வலிமை அடைந்தது. அது, உலக வல்லரசுகளுக்கெல்லாம் சவாலாக நின்றது. தேசிய இனங்களை ஒடுக்கும் சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள பாசிச வெறியர்களோடு அணி சேர்ந்தது. இந்த நாடுகளில் தேசிய அடையாளங்களை காத்துக் கொள்வதற்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கு திறனற்று, அந்த போராளியின் மீது கோழைத்தனமாக வன்முறையை ஏவி, அழித்தொழிக்க நினைக்கும் இவைதான் உலகெங்கும் ஜனநாயகத்தை போதிக்கும் சைவப்பூனையாக காட்சித்தந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்னதென்றால், எத்தனை அடக்குமுறைகள் நிகழ்ந்தாலும், அந்த அடக்குமுறையிலிருந்து சிலிர்த்து, சீறி எழும் தேசிய இனங்களை எவ்வித கருவிக்கொண்டும் ஒடுக்கி வைக்க முடியாது. அவை வரலாற்றின் தேவையை முன்னிருத்தியே தமது போராட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வரலாற்று தேவை என்பது இன, மொழி அடையாளங்களை காக்க நடைபெறும் போராட்டமாகும்.

தமிழீழ மண்ணில் நிகழ்ந்து முடிந்த மாபெரும் மனித பேரவலம்கூட இன அடையாளத்தை ஒரு தேசிய மொழி ஆளுமையை காத்துக் கொள்வதற்காக நிகழ்த்தப்பட்ட போராட்டம்தான். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பலியானபோதும், இந்த போராட்டத்தில் உள்ள நேர்மை, இந்த போராட்டத்தோடு இணைந்து போயுள்ள உயிரோட்டம் யாராலும் சிதைக்க முடியாத அளவிற்கு பெரும் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது.

மகிந்தாவைப் போன்று ஓராயிரம் மகிந்தாக்கள் ஒன்றிணைந்தாலும் எமது தேசிய தலைவரின் ஆளுமையை வீழ்த்தமுடியாது. வசந்த காலத்தில் பசுமையாய் தெரியும் இலைகள், இலையுதிர் காலத்தில் குப்பை மேட்டில் குவித்து சேர்க்கப்படும். ஆனால் மரத்தின்வேர் எல்லா காலங்களிலும் அந்த மரத்தை காத்து, நிலைப்படுத்தும். மகிந்தா போன்றவர்கள், இலைகளைப் போன்றவர்கள். இவர்கள் விரைவாக குப்பை மேட்டிலே குவிக்கப்படுவார்கள். ஆனால் எமது தேசிய தலைவர் ஆணிவேர் போன்று கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இதை அசைக்க இந்த உலகில் இனிதான் ஒரு ஆற்றல் தோன்ற வேண்டுமேஒழிய, இதுவரை இதை அழிக்க பேராண்மை படைத்த ஆற்றல் இல்லை என்பதைத்தான் நாம் ஒட்டுமொத்த நாடுகள் சேர்ந்து ஒரு சிறிய நாட்டின்மீது படையெடுத்தபோது பார்த்து வெறுத்துப்போனோம்.

இவ்வளவு கேவலங்களை நிகழ்த்தி, இதை வெற்றி என்று அறிவிப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை என்றால், அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எந்த அரசியல்வாதிக்கும் வெட்கமே கிடையாது. அதனால்தான் எமது தேசிய தலைவர் சொன்னார், நாம் புரட்சியாளர்கள். அரசியல்வாதிகள் அல்ல என்று. ஆகவே, உலகெங்கும் இருக்கும் ஒட்டுமொத்த தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து நமக்கான தேசிய அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கவும், நமக்கான மொழி ஆளுமையை செழித்து வளரச் செய்யவும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு நமக்கு ஒரு மண் தேவை. அந்த மண் தமிழீழ தாயகம். தமிழீழ தாயகத்தை அடையும்வரை நமது போராட்டத்தில் தொய்வு ஏற்பட கூடாது, நமது போராட்டத்தில் திரிபு ஏற்பட கூடாது.

நமது போராட்டத்தில் சிதைவு ஏற்பட கூடாது. ஒன்றிணைந்து போராடி, தமிழீழம் வெல்வோம். எமது தமிழ் தேசிய தலைவர் தலைமையிலே தமிழர்களுக்கான ஆட்சி அமைப்போம். உலகெங்கும் தமிழ் காக்க ஓரணியில் திரளுவோம். ஒப்பற்ற மொழியால் புதுயுகம் படைப்போம் என்பதை உறுதியாக ஏற்போம். வெற்றி பெறுவோம்.

-கண்மணி