சுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து…

 • ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 • இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முதல் ஈகைச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் அவர்கள் ஏற்றிவைக்க மீதி பதினெட்டு தியாகிகளுக்கும் ஐரோப்பா வாழ் இளையோர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் நடைபெற்றது.

ஈகைப்பேரொளி முருகதாசன் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம்செலுத்தப்பட்டது.

கடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த இளையோர் யேர்மன், பிரெஞ், ஆங்கில மொழிகளில் தற்போதைய தமிழர் அடக்குமுறைகள் பற்றியும் ஈகைப்பேரொளிகளின் தியாகங்கள் பற்றியும் எடுத்துக்கூறியிருந்தனர்


லண்டனில், தியாகி முருகதாசன் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இலண்டனில், நேற்று முந்தினம் முருகதாசனின் கல்லறையில் கூடிய பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு, சர்வதேச நீதி விசாரணை கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

ஈழத்தில் நடைபெற்ற நான்காம் போரினில் 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இலங்கையோடு இணைந்து கொண்டு நடத்திய தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ் சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர்.

ஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின. வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள்.

இந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள்.

முத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள்.

அப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த, முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

முருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.

தேசியத் தலைவன் மீதும் கொடியின் மீதும் ஆணையிட்டு உறுதி எடுக்கின்றோம், எந்த இடர் வரினும் ஈழம் வெல்லும் வரை புலத்தில் ஓயமாட்டோம்

மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

தாயக விடுதலைக்காய் தம்முயிரை தற்கொடையாக்கித் தந்த முருகதாசன் உள்ளிட்ட இன்னுயிர்த்தியாகிகளின் நினைவுப் பேரெழுச்சி நிகழ்வில் இவ் உறுதிப் பிரமானதை முன்மொழிந்த உலகத் தமிழ் இளையோர் எந்த இடர்வரினும் இலட்சியப்போர் வெல்லும்வரை ஓயமாட்டோம் என உலகுக்கு இடித்துரைத்துள்ளனர்.

 • கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஜநா முன்றலில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஈழ விடுதலைக்காய் தம்முயிரை ஈகம் செய்தவரை இறுதிவரை மறவோம் என்ற நெஞ்சார்ந்த உணர்வோடு வெளியிட்ட விடுதலைத் தீ தீர்மானம் வருமாறு

தமிழீழத் தனியரசை நோக்கிய எமது பயணத்தில்…..

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தமிழீழத் தனியரசு என்ற இலட்சிய வேட்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி – முருகதாசன் மீதும், தமது உயிரை வேலியாக்கி களமாடி வீர காவியமாகிய மாவீரர்களின் ஈகவரலாறு மீதும், தாய் மண்ணை இறுதிவரை நேசித்து மானச்சாவெய்திய எமது மக்கள் மீதும், மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

 • ஈழத்தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கொண்ட தமிழீழக் குடிமக்களாகிய நாம், எமது பாரம்பரிய – வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணில், எமக்கே உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசை நிறுவுவதில் அசையாத உறுதியும், தணியாத வேட்டையும் கொண்டுள்ளோம் என்பதை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கின்றோம்.
 • வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு அரசும், கொடியும், கொற்றமும் கொண்டு ஈழத்தீவில் ஆட்சிசெய்த நாம், எமது தாயக பூமியாகிய தமிழீழ மண்ணில் மீண்டும் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவி எமது இறையாண்மையை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ளோம்.
 • எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இழப்புக்களுக்கு ஆளானாலும், எமது இலட்சியத்தில் இருந்து விலகமாட்டோம் என்றும் இத்தருணத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

எமது இவ் இலட்சிய உறுதி மொழியினூடாக ஜநா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் உடனடிக் கவனத்துக்கான சில வேண்டுதல்களையும் விடுக்கின்றோம்.

அவையாவன:

 • தேசிய இனமாக விளங்கும் எமது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு, எமக்கேயுரித்தான எமது தாயக பூமியில் நாமே எம்மை ஆட்சிசெய்வதற்கும், தேசிய அரசுகளின் சமூகத்தில் எமது தமிழீழ தேசமும் இணைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தையும், இராசரீக உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும், உலக சமூகத்திற்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
 • தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை வாக்கெடுப்புக்களை நாம் நிகழ்த்துவதற்கு தாராண்மை – சனநாயக நல்லாட்சி கொண்ட மேற்குலக தேசங்கள் இடமளித்து ஒத்துழைப்பு வழங்கியமை போன்று, எமது தமிழீழ தாயக பூமியில் எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு வழிவகைசெய்து, தமது அரசியல் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்கான அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும், உலக சமூகத்திடமும் நாம் கோருகின்றோம்.

எமது இந்தக் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக:

 • தமிழீழ தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அந்நிய ஆயுதப் படைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் வெளியேற்றுவதற்கும்;
 • தமது சொந்த நிலங்களில் எமது உறவுகளை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கும்;
 • நவநாகரீக உலகின் மனச்சாட்சிக்குப் பெரும் கேடாக விளங்கும் வதைமுகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கும்;
 • எமது தாயக பூமியில் சிங்கள அந்நியக் குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும்;
 • எமது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை எமது தாயக பூமியில் ஏற்படுத்துவதற்கும்;
 • எமது மக்களின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும்;
 • எமது மக்களை மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கும்;
 • மூன்று தசாப்தகால இடைவெளியில் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பையும், இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அரங்கேற்றிய சிறீலங்கா அரசையும், அதன் ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும், நீதியின் முன்னிறுத்துவதற்கும்;
 • சிறீலங்கா அரசு மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும், ஆயுதப் படைகள் மீதும் இனவழித்தொழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சட்டபூர்வத் தளங்களில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும்;

விரைவாகவும், காலம் தாழ்த்தாதும், காத்திரமான முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

 • விடுதலை கிட்டும் வரை எமது விடுதலைத் தீ அணையாது! தனியரசை நிறுவும் வரை எமது சுதந்திரத் தாகம் தணியாது!

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசம் எம் உயிரிலும் மேலானது என்ற போர் பரணியோடு பிரகடனம் செயல்லுருப்பெற்றது.

CNN Documentary about V-Murugathasan