மன்னார் உயிலம்குளம் சோதனை நிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொண்ட அதேவேளை, மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் ஊடான அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

எனினும், வன்னி மீதான பொருளாதாரத் தடையினை சிறீலங்கா அரசு மேலும் இறுக்குகின்றது. பொருளாதாரத் தடையை இறுக்கியபடி வன்னி மீது பரவலாக வான்வழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் வான்படையினை அழிக்கும் நோக்கில் இரணைமடு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. வேவு விமானம் மூலம் வேவு எடுக்கப்பட்ட தகவல்களினதும், தரைவழியாக எடுக்கப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் இந்தத் தாக்குதல்களை நடத்திய சிறீலங்கா வான்படையினர், பின்பு அதனை அண்மித்த காட்டு பகுதிகள் மீதும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் முகாம்கள், பயிற்சி முகாம்களை இனம்கண்டுபிடித்து தாக்குதல் நடத்துகின்றார்கள்.

இதன்போது விடுதலைப் புலிகளின் வான்படைத்தளம், பயிற்சித்தளங்கள் முதன்மையானவர்கள் கூடும் இடங்கள், பெரும் முகாம்கள், வெடிபொருள் களஞ்சியங்கள், ஆயுத வெடிமருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு இலக்காகின்றன. இத்தாக்குதல்கள் வெற்றி அளிப்பதற்கான காரணம் வேவு விமானத்தின் வேவு நடவடிக்கை மட்டுமல்ல, விண்வெளி ஊடாகப் பெறப்பட்ட தகவல்களும்தான் என்பது இங்கு முக்கியமானது. கிழக்கு மாகாணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா, அடுத்து வன்னி மீது இலக்கு வைத்தது. அதற்கு முன்னதாக அது மன்னார் மாவட்டத்தை கைப்பற்ற திட்டமிட்டு, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் சிறீலங்கா படையினர் கடல்வழியாக தரை இறக்கம் ஒன்றைச் செய்து மன்னார் மாவட்டத்திற்கான தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள்.

இதன்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னாரின் முசலி பிரதேசம் சிறீலங்கா படையினர் வசம் வீழ்கிறது. இதில் இருந்த விடுதலைப் புலிகள் மன்னாரின் வடபகுதி நோக்கி நகர்கின்றார்கள். சிறீலங்காவின் தென்பகுதிமீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்த முசலிப் பிரதேசமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வன்னியில் இருந்து வெடிபொருட்கள் புத்தளம் ஊடாக தென்பகுதிக்கும் கடத்தும் பாதையாக மன்னார் முசலி பிரதேசம் பயன்பட்டது. இதனைக் கைவிட்ட விடுதலைப் புலிகள் பின்னர் ஏனைய வழிகளூடாக தங்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக வில்பத்து சரணாலயம் ஊடான பாதை பயன்படுத்தப்பட்டது.

அன்று வில்பத்து சரணாலயத்தின் வடபகுதியில் விடுதலைப் புலிகள் தளம் ஒன்றையும் அமைத்திருந்தார்கள். நிலைமை இவ்வாறிருக்க, களத்தில் போர் நிலமைகள் வலுவடைகின்றன. ஆங்காங்கே களமுனைகள் புதிதுபுதிதாக திறக்கப்படுகின்றன. மன்னார் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன. அதேவேளை மணலாற்றுப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்குள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் களமுனையுடன் மோதல்களைத் தொடங்குகின்றார்கள். இதனால் தாக்குதல்கள் பல பகுதிகளிலும் வலுப்பெறுகின்றன. இதேவேளை சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராளிகளின் சிறுசிறு அணிகள் படையினரின் காவலரண்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல், துப்பாக்கிசூடு போன்றவற்றை நடத்துகின்றார்கள்.

இவை தொடர்ச்சியாக வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடந்தேறிக்கொண்டிருந்தன. வன்னி எங்கும் போர்களமுனைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து விடுதலைப் புலிகள் தமது ஆழணி பலத்தினை பலப்படுத்துகின்றார்கள். அரசியல் போராளிகள் வீதிகளுக்கு இறங்கி மக்களிடம் போரட்ட வலுவிற்கான ஆணியினை திரட்டுகின்றார்கள். தளபதிகள், பொறுப்பாளர்கள் என இதில் பரவலாக எல்லோரும் ஈடுபடுகின்றார்கள். இதில் குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் என்னவெனில் போராளிகளை இணைப்பதற்காக தளபதி பால்ராஜ் அவர்கள் மக்களிடம் நேரடியாக இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் போரளிகளையும் அணி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் குடும்பமாகிவிட்ட முன்னாள் போராளிகளுக்கு அவர்களது குடும்பத்தினரைக் கருத்தில்கொண்டு கொடுப்பனவு கொடுக்கப்படுகின்றது.

அதாவது மாதாந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பால்ராஜ் அண்ணை, போராளிகள் இணைப்பில் இறங்கியதன்பின் முன்னாள் போராளிகளின் மனைவிமாரே தங்கள் கணவரை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவைத்த சம்பவங்களும் நடந்தது. முல்லை மாவட்ட முன்னாள் போராளியின் மனைவி ஒருவர் கணவனை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவிட்டு, “நீங்கள் பால்ராஜ் அண்ணையுடன் போங்கள். அப்பத்தான் அவர் மணலாத்தில உங்களை வைத்திருப்பார். அங்கு நின்றால் வீட்டிற்கு வந்துபோவது இலகு. அப்பதான் களமுனையையும் வீட்டையும் பாப்பிங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதேபோல் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகள் தளபதி தீபன் அவர்களின் கீழும், மன்னார் மாவட்ட போராளிகள் தளபதி பானு அவர்களின் கீழும் அணிதிரள்கின்றார்கள்.

இவ்வாறு முன்னாள் போராளிகளின் அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இவர்கள் ஏற்கனவே துப்பாக்கி பிடித்து பயிற்சி எடுத்தவர்கள் என்பதால் அடிப்படை பயிற்சி அளிக்கத் தேவையில்லை. சூட்டுப்பயிற்சியுடன் இவர்கள் படை அணியாக மாறுகின்றார்கள். இது ஒருபுறம் நடந்தேறுகின்றது. மறுபுறத்தில் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் மக்களிடம் அவசர அழைப்பினை விடுக்கின்றார். 2006ம் ஆண்டின் இறுதிப்பகுதி அது வீட்டுக்கொருவர் நாட்டிற்கு என்று அழைப்பு விடுக்கின்றார். விடுதலைப் புலிகளின் இந்த அறைகூவலினை அன்று இருந்த விடுதலைப் புலிகளின் ஊடகங்களான ஈழநாதம், புலிகளின் குரல், தமிழீழ தேசிய தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஏடு, சுதந்திரப்பறவைகள் மற்றும் தெருவெளி நாடகங்கள் ஊடாக முரசறையப்படுகின்றன.

இப்போதுதான் அங்கு புறநானுற்றிலும் மிஞ்சிய மகிமை வன்னியில் நடந்தேறுகின்றது. வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்காக இணைகின்றார்கள். பெற்றோர்களால் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் இணைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த செய்திகளை தாங்கியபடி அன்றைய ஈழத்தின் ஊடகங்கள் செய்திகளை முதன்மையாக வெளியிட்டன. ஆனாலும் ஒரு சில பெறறோர் பிள்ளைகளை இணைப்பதற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்காமல் பின்னடித்தார்கள். தமது பிள்ளைகளுக்கு திருமண வயதிற்கு வரும் முன்னரே மணம் முடித்து வைத்தார்கள். திருமண வயது வாராதவர்களுக்கு திருமணப் பதிவு செய்வதை பதிவாளர்கள் மறுத்தார்கள்.

இதனால், பதிவில்லாமல் சிலர் கலாச்சாரத் திருமணங்களை செய்து வைத்து தங்கள் பிள்ளைகள் போராட்டத்திற்கு செல்லாது தடுத்தார்கள். தாலிக்கொடி செய்து கட்டுவதற்கு கூட அவகாசம் இல்லாமல், இருந்த மஞ்சள் கயிற்றில் அவசர அவசரமாக தாலி கட்டிவைத்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் திருமணங்கள் அப்போது மக்களால் ‘போர்க் கல்யாணம்’ என நகைச்சுவையாக் குறிப்பிடப்பட்டது பலரும் அறிந்தது. இதேவேளை, இணைந்த போராளிகள் அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு புதிய புதிய படை அணிகளாக களமிறங்குகின்றார்கள். புதிய போராளிகளுக்காக களமுனைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு புதிய போராளிகள் மன்னார் களமுனையாக இருந்தாலும் முகமாலை களமுனையாக இருந்தாலும், மணலாற்றுக் களமுனையாக இருந்தாலும், வவுனியா களமுனையாக இருந்தாலும் தமது வீரங்களை எதிரிக்கு காட்டுகின்றார்கள்.

முதன்மை தளபதிகளின் வழிநடத்தலில் களமுனைகளின் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்புக்கள் இப்புதிய பேராளிகளால் நிகழ்கின்றன. இவ்வாறு போராளிகள் களமுனை அனுபவங்களை பெற்று அடுத்தகட்டத்திற்காக தன்னை தயார்படுத்துகின்றார்கள். அதாவது அதிகாரி பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு அதிகாரி பயிற்சி அளிக்கும் இடமாக முத்தையன் கட்டு பயிற்சி தளங்கள் அமைகின்றன. அதாவது அதிகாரி என்பது பதினைந்து போரைக் கொண்ட ஒரு அணியினை வழிநடத்தும் திறமை. இதற்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறுதான் புதியபோராளிகளின் பதவி நிலைகள் உயர்கின்றன. இவ்வாறு அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேறுசில அணிகள் கிளைமோர்த் தாக்குதல், கட்டடத் தகர்ப்பு, கனரக வாகனத் தகர்ப்பு என வெடிமருந்துப் பயிற்சிகளில் சிறப்புத் தேர்ச்சி அடையும் நோக்கில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு