இவ்வாறான பயிற்சிகளுக்கு நடுவே, ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல் அணிகள் உருவாகின்றன. இவர்களுக்கான பயிற்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக, எதிரியின் முகாம்கள், ஆறுகள், அருவிகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்கு மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருப்பெற்றிருந்தார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் போராளிகளின் பயிற்சித் தளங்கள் தொடர்பாக தொடர்ந்துவரும் தொடர்களில் தருகின்றேன். புதிய புதிய போராளிகளின் உள்வாங்கல்களால் விடுதலைப் புலிகளின் படை அணிகளில் சிறந்த தலைமையாளர்கள், சிறந்த குறி சூட்டாளார்கள் என ஒருபக்கமும், சிறந்த சிற்பக் கலைஞன், சிறந்த கணணி இயக்குனர்கள், சிறந்த கணக்காளர்கள் என அறிவுத்திறன் சார்ந்த இன்னொரு பக்கமும் வளர்ச்சியடைந்திருந்தது.
மறுபக்கத்தில் கடற்புலிகளின் அணிகளும் புதிய போராளிகளை உள்வாங்கி பெரும் வளர்ச்சி கண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு தொடக்கம் பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, நாயாறு வரையான நீண்ட கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களில் பலர் தங்களது பிள்ளைகளை கடற்புலி அணியில் இணைத்திருந்தார்கள். கடலோடு வாழ்ந்து பழகியதால் அவர்களுக்கு கடலில்ப் பயணிப்பதும், நீச்சல் அடிப்பதும் அத்துப்படியாக தெரிந்திருந்ததால் பெற்றோர்கள் இவர்களை விரும்பி கடற்புலிகளின் அணியில் இணைத்தார்கள்.
அத்துடன், கடலில் சிறீலங்காப் படையினரின் தாக்குதலில் தமது உறவுகளை இழந்திருந்த பலரும் தமது பிள்ளைகைள கடற்புலிகளில் இணைக்க முனைந்தார்கள். இவர்களில் பலர் கடற்புலிகள் அணியில் உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தளபதி சூசை அவர்களின் கீழ் வளர்க்கப்பட்டார்கள். இதேவேளை, புதிய போராளிகளின் பயிற்சிகளின் நிறைவில், பெற்றோர் முன்னிலையில் போராளிகளை காண்பிக்கும் நடவடிக்கை பெரும் நிகழ்வுகளாக நடந்தன. அதாவது அணிவகுப்பு மரியாதைகளுடன் புதிய போராளிகள் தமது பெற்றோர்களை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள்.
பயிற்சியில் ஈடுபட்டதன் காரணமாக பெற்றோர்களை நீண்ட நாட்களாகக் காணாத போராளிகளுக்கு பேற்றோறர்களை அழைத்து வந்து அவர்களின் பிள்ளைகள் காண்பிக்கப்பட்டார்கள். புதிய போராளிகள் தங்கள் திறமைகளை தாய் தந்தை உறவுகளிற்கு சொல்லி மகிழ்ந்தனர். இதனால் பெற்றோர்கள் பூரிப்படைந்தார்கள். தன்பிள்ளை பெரிய திறமைசாலி, படை நடத்துபவன், பொறுப்பாளன், கனரக துப்பாக்கி இயக்குபவன் என்று அவர்கள் பெருமிதம் அடைந்து பிள்ளைக்கு பலத்தினை ஊட்டியது. இவ்வாறுதான் அன்று அனைத்து புதிய போராளிகளுக்கும் பெற்றோர் சந்திப்புக்கள் நிகழ்ந்தேறின. புதிய போராளிகளின் இணைவினால் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்து சென்றது.
கடற்புலிகளின் அதிகரிப்பினால் கடற்படையில் புதிய படை அணிகள் உருவாக்கப்படுகின்றன. தாக்குதல் அணிகளைவிட கரையோர காவல்படை என புதிய அணி உருப்பெறுகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில், எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ்குடாநாட்டில் கைக்குண்டு வீச்சும், காவலரண் தகர்ப்பும் அங்குள்ள விடுதலைப் புலிகளால் நடத்தப்படுகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் பங்கேற்று எதிரிக்கு அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை யாழ்ப்பணத்தில் சிறீலங்காப் படையினருக்கு ஆத்திரம் ஊட்டும் செயல்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், எதிரி யாழ்குடாவைவிட்டு களமுனைக்கு நகர்த்தமுடியாத ஒரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை விடுதலைப் புலிகளின் யாழ்குடா புலனாய்வாளர்களான பொது மக்களும் (இவர்கள் இவ்வாறான தாக்குதலுக்கும் என பயிற்றப்பட்டிருந்தவர்கள்) இணைந்தே மேற்கொண்டார்கள் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், யாழ்குடாநாட்டில் மேலும் சில தாக்குதல்களை மேற்கொள்வதற்கென கரும்புலிகளை உள்ளடக்கிய புலனாய்வுத்துறை அணி ஒன்று வன்னியில் இருந்து கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு தரையிறப்படுகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஊடுருவி சிறீலங்காப் படையினருக்கு பின்தள இழப்புக்களை ஏற்படுத்தும் முகமாகவும் சிறீலங்காப் படையினரின் கனரக நீண்ட தூர தாக்குதல்களுக்குப் பயன்படும் பீரங்கிகளின் நிலைகளைக் கண்டறிந்து அவற்றினை தகர்த்தெறியும் முகமாகவும் அதாவது சிறீலங்காப் படையினரின் பின்தளங்களில் ஆட்லறி மற்றும் மல்ரிபரல் எறிகணைகளை இயக்கவிடாமல் செய்வதன் ஊடாக படையினருக்குரிய வழங்கல் பகுதியினை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தரைவழியாகவும் கடல்வழியாகவும் யாழ்குடாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். யாழ்குடாவிற்கான கடல்வழிப் பாதையாக இருவழிகள் இருந்தன.
ஒன்று வடமராட்சி கிழக்கில் இருந்து கடல்வழியாக சென்று கற்கோவளம் பகுதியில் தரை இறங்குதல். இதற்காக பயிற்றப்பட்ட அணிகள் செல்வார்கள். அதாவது கடலில் ஒரு கடல்மைல் தூரத்திற்கு கூடுதலாக நீந்தக்கூடியவர்கள் தான் இந்த வழியினூடாகச் செல்வார்கள். வடமராட்சி கிழக்கு கடல் மற்றும் நாகர்கோவில் கடற்பகுதிகளில் இருந்து சிறிய படகுகள் விரைந்து சென்று கற்கோவளத்தை அண்டிய கடற் பகுதியில் இவர்களை இறக்கிவிடுவார்கள். இவர்கள் கடலில் நீந்தியவாறு சிறீலங்காப் படையினரின் நடமாட்டங்களை அவதானித்து கரையேற வேண்டும். மற்றையது, யாழ்ப்பாணத்தில் அடுத்த பகுதியாக உள்ள கிளாலி கடல் வழியாக குருநகர், பாசையூர் பகுதிகளில் சென்று தரை இறங்குதல்.
அங்கு வரும் கடல்தொழிலாளர்கள் சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலேயே இந்த நடவடிக்கை இலகுவாக இருக்கும் என்பதால், அவர்களுடனான தொடர்புகள் பேணப்பட்டு கடல்வழியிலான பயணம் இடம்பெறும். கடலின் இடையில் வரும் அவர்களிடம் போராளிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தரையில் இறக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று, அங்கு தகவல்களைத் திரட்டியது மட்டுமல்ல, படையினரின் உணவினையே உண்டு படை நிலைகளுக்குள்ளே பதுங்கி வாழ்ந்த மாபெரும் வரலாற்று வீரன்தான் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ.
ஆனாலும், கரும்புலி பூட்டோ உண்பதற்கு உணவின்றியியும் முகாம்களுக்குள் நடமாடி இலக்குகளை சரியாக இனங்கண்டு சொல்லியிருக்கிறான். இதேவேளை, யாழ்குடாவில் இவ்வாறு சென்றிருந்த போராளிகளை மக்களும் பாராமரித்தார்கள். அவ்வாறான மக்கள் அன்றைய நாளில் இருந்தார்கள் என்றால் அது பெருமிதம்தான். ஏன்னென்றால் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் விடுதலை ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்கள் ஊடாக மேலும் பல விடுதலை ஆதரவாளர்களுகம் கைதாகின்றார்கள். இவ்வாறு அன்று யாழ்ப்பாணத்தில் வீடுகளில் நின்ற விடுதலைப் புலிகளை எவ்வாறாவுதல் கைது செய்துவிட படையினர் முற்படுகின்றவேளை, தன்னைதானே சுட்டும், விடுதலைப் புலிகளின் கொள்கை மரபிற்கு அமைய நஞ்சினை கடித்தும் வீரச்சாவடையும் நிகழ்வுகள் பல நடந்தேறின.
இவ்வாறுதான் லெப்.கேணல் பூட்டோ வீடொன்றில் தங்கி இருந்தவேளை, அந்த வீட்டை சிறீலங்காப் படையினர் சுற்றிவளைத்த முற்றுகையிட்டனர். படையினரின் முற்றுகையை உடைக்க முடியாது என்பதை அந்தக் கரும்புலிப் போராளி உணர்ந்துகொண்டிருந்தான். தான் உயிருடன் பிடிபட்டால் யாழ்குடாவில் செயற்படும் போராளிகள் பலருக்கு ஆபத்து நேரும் என்பதை பூட்டோ அறிந்திருந்தான். எனவே, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கவைத்து தன்னைதானே அழித்து விடுதலைக்கு வித்தானான் அந்தக் கரும்புலி.
இவ்வாறன தெய்வீக பிறவிகள் தான் அன்று யாழ்ப்பாணத்தில் நின்ற கரும்புலி அணிகள். பூட்டோவின் இழப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கரும்புலித் தாக்குதல் அணிகளின் வேவு நடவடிக்கைகள் சற்று மந்தமடைகின்றன. இதனால், நாகர்கோவில் கண்டல் பகுதிகள் ஊடாக விடுதலைப் புலிகளின் மேலும் சில வேவு அணிகள் சிறீலங்காப்படை கட்டுப்பாட்டுக்குள் நுழைகின்றார்கள். இதில் தளபதி தீபன் அவர்களின் வேவு அணிகள் சிறப்புற அவர்களது நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. இந்நிலையில்தான் லெப்.கேணல் தியாகராஜன் தலைமையில் ஒர் அணி அதாவது புலனாய்வுத்துறை அணி அங்கு களமிறங்குகின்றார்கள்.
(தொடரும்…)
நன்றி்
ஈழமுரசு
Recent Comments