Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2009

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15


இரணைமடு விமானத்தளம் பிரதானமாக இருக்கையில், ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு வந்தது. குறைந்த தூரத்தில் பறப்பில் ஈடுபடவும், தாக்குதல்களின்போது அவசர தரையிறக்கங்களுக்காகவும் மற்றும் எதிரியை திசைதிருப்புவதற்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பண்படுத்திவிட்டு தார் போட்டு கொள்வதுதான் விமான தளமாக காணப்பட்டது. இதற்கமைவாக பூநகரி, சுண்டிக்குளம், இருட்டுமடு, கொண்டமடு, சூதுபுரம், இருட்டுமடு என்பது உடையார்கட்டு காட்டுபகுதியில் உள்ளது. கொண்டமடு என்பது புதுக்குடியிருப்புக்கு அடுத்ததாக உள்ள மன்னாகண்டல் பகுதிக்கு அண்மையாக உள்ள இடம். சூதுபுரம் என்பது கேப்பாபுலவு எனப்படும் இடத்தில் உள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகளின் விமானத் தளங்கள் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்தன. இதன்போதுதான் அன்று ஒருநாள் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுக்கு விடுதலைப் புலிகளின் வான்படை அணியினை தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.


(இதனை முதல் தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.) இதன்போது இரண்டு பேர் விகிதம் விமானத்தில் ஏற்றி விமானத்தை ஓட்டிக்காட்டி மக்களின் இடங்களையும் காண்பிக்கின்றனர். தலைவர் விமானப்படையின் பலம் தொடர்பாக தளபதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைவாக இந்த அறிமுகம் நடைபெற்றது. இந்தப் பறப்பிற்குப் பின்னர்தான் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வன் அவர்களால் விடுதலைப் புலிகளிடம் விமானப்படை உள்ளதென்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்து. இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தியது. இது அயல் நாட்டைக்கூட வியக்கவைத்தது. விடுதலைப் புலிகளின் விமானப் படையினை முடக்கவேண்டும் என்ற எண்ணம் சிறீலங்கா அரசின் எண்ணத்தில் மட்டுமல்ல, அயல்நாட்டிலும் உருவாகிறது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறீலங்கா அரசின் புலனாய்வாளர்கள் பல தரைவழித் தகவலைத் திரட்டுகின்றார்கள். அதாவது வன்னியில் இருந்து வவுனியா செல்லும் மக்களை விசாரித்து தகவல்களைப் புடுங்கி எடுக்கின்றார்கள். இதன்போது விடுதலைப் புலிகளின் பயிற்சித் தளங்கள் வெளிப்படையாகிறது. வன்னியில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்போது சிறீலங்காப் படையின் வேவு விமானம் வன்னி மண்ணை வேவு எடுக்கின்றது. இதில் வாகனப் போக்குவரத்துப் பாதைகள், ஆள் நடமாட்டங்கள் என்பவற்றை வைத்து சில இடங்களை இனம்கண்டு, தரைவழித் தகவல் ஊடாக விடுதலைப் புலிகளின் இடங்களை உறுதிப்படுத்துகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சிங்கள அரசிடமிருந்து நியாமான தீர்வொன்று கிடைக்காது என்பதையும், போரையே மீண்டும் அது முன்னெடுக்கும் என்பதையும் தெரிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமை வரப்போகும் போரை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கான தயார்படுத்தல்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றது. மக்கள் படை, உள்ளக பாதுகாப்பு படை, எல்லைப்படை என மக்கள் கட்டுமானங்கள் கொண்டுவரப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக ஊதியம் வழங்கப்பட்டு பணிசெய்யும் விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவ படையணி ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியில் இளைஞர்கள், யுவதிகள் பலர் முன்வந்து இணைந்தார்கள்.

முதற்கட்டமாக யாழ் குடாநாட்டிலிருந்து ஒருசில இளைஞர்கள் பயிற்சிக்காக பளைக்கு எடுக்கப்பட்டு சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று இளைஞரைத் திரட்டும் பணியல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது யாழ்குடாவை எதிரியிடமிருந்து மீட்டு எடுக்க அங்குள்ள இளைஞர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக ஒருசில இடங்களிலிருந்து முச்சக்கரவண்டி சாரதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என விடுதலை உணர்வுள்ளவர்களைக் கட்டம்கட்டமாக பளைக்கு அழைத்து சில முக்கியத்தவர்கள் கதைத்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. பளையில் உள்ள எரிமலை எனும் பயிற்சித் தளத்திலும் ஜி-12 எனும் பயிற்சித்தளத்திலும் சூட்டுப்பயிற்சி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது.

யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும், வன்னி மக்கள் மத்தியிலும் கதை பரவலாக அடிபடுகிறது. விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் செய்யப்போகிறார்கள். முதல் யாழ்ப்பாணத்தைத்தான் பிடிப்பார்கள். யாழ்ப்பாணம் பிடித்தால் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் கால்களில் விழுந்துவிடும் என்றெல்லாம் பல கதைகள் மக்கள் மத்தியில் உலாவருகின்றது. இவற்றை எல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் அறிகிறார்கள். அன்று யாழ்மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி இத்தகவலை அறிந்து தனது தலைமைக்கு தெரியப்படுத்தி இதனூடாக கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான படைமுன்னணி அரண்களை பலப்படுத்துகிறார்கள். பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த முன்னணி காவலரண்களை வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண முன்னணி காவலரண்களில் உள்ள படையினர் உசார் படுத்தப்பட்டு இரகசியமாக சில படை செயற்பாடுகளில் சிறீலங்கா படையினர் ஈடுபடுகின்றார்கள். ஏராளமான எறிகணைகள் யாழ்குடாநாட்டில் குவிக்கப்படுகிறது. மேலதிக படையினர் குவிக்கப்படுகிறார்கள். கவச வாகனங்கள் களமுனையில் நகர்த்தப்படுகிறது. இவ்வாறு படைநகர்த்தல்களை சிறீலங்கா படையினர் இரகசியமாக மேற்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் 2006ம் ஆண்டு 8ம் மாதம் 11 திகதி மாலை 5.00 மணியளவில் ஏ9 வீதி முகமாலைப் பாதையில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலைத் தொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் ஊடாக வன்னிக்களமுனை போர்க்கள முனையாக மாறுகிறது.

இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா படையின் காவலரண்களைத் தகர்த்து அழித்துச் சென்றாலும் இரண்டாம் நிலையான காவலரண்களை தாண்டிச்செல்ல முடியவில்லை. காரணம் சிறீலங்கா படையினர் பின்வாங்கி தமது நிலைகளை இலக்குவைத்து கடுமையாகத் தாக்குகின்றார்கள். இதனால், பிடித்த நிலைகளில் நிலைகொள்ள முடியாதளவிற்கு கடும் எதிர்ப்பை விடுதலைப் புலிகள் எதிர்கொள்கிறார்கள். இதனால், அன்றைய தாக்குதல் இடைநிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் வன்னிக்கும் – யாழ்குடாவிற்குமான தரை வழிப்பாதையை சிறீலங்கா மூடுகின்றது. வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் யாழ்ப்பாணத்திலும், யாழில் இருந்து வன்னி சென்றவர்கள் வன்னியிலும் முடக்கப்படுகிறார்கள்.

உறவுகளைப் பிரிந்து வாழும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேறமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மன்னார் உயிலங்குளம் சோதனைச் சாவடி, வவுனியா ஓமந்தை சோதனை சாவடி ஊடாகவும் சென்ற அதேவேளை, ஒருசில இளைஞர்கள் காட்டு வழியாக மன்னார் சென்று படையினரின் கட்டுப்பாட்டுக்கும், கடல்வழியாக படகில் யாழ்ப்பாணமும் சென்றடைகின்றர்கள். இவ்வாறு இருக்கையில் மன்னார் உயிலம் குளம் சோதனை நிலையத்தில் இறுக்கமான கட்டுப்பாட்டினை படையினர் மேற்கொள்கின்றார்கள். ஓமந்தை சோதனை நிலையத்தில் சிறீலங்கா படையினர் பொருட்களுக்குக் கட்டுப்பாடு, தடை விதிக்கின்றார்கள். உயிலங்குளம் போக்குவரத்துப் பாதை கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொள்கிறது. இதன்போது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் துப்பாக்கி முனையில் தொடங்கிய தாக்குதல் பூதாகரமாகின்றது.

(தொடரும்…)

நன்றி:ஈழமரசு

தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…

ம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

ரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

ல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

க்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

ந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

வ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

று கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!

மிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

நாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

யிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

ன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

விகடன்

ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்

இலங்கையில் நான் பயணித்துக்கொண்டிருந்த போது ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, நான் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளேனா என்பதேயாகும்.viduthalaiperoli-history of prabakaran

ஐயத்திற்கிடமில்லாமல் எனது அந்தஸ்து அவரைச் சந்திப்பதிலேயே தங்கியிருந்தது. நான் அவரைச் சந்திக்கவில்லை என்ற உண்மையைக் கூறினேன். ஆனால் அவரைச் சந்திப்பதையிட்டு நம்பிக்கையற்ற நிலையில் நான் இருக்கவில்லை. ஏனெனில் இதனைவிட நான் வேறு ஒரு பேற்றைப் பெற்றிருந்தேன் என்று சொல்லலாம். ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கத்தின் உறுப்பினர் சிலரது ஆழமான நட்பைக் கொண்டிருந்தேன். இருபது ஆண்டுகளாக அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை, அவர்களது தாயகத்திலும், இடம் பெயர்ந்து அவர்கள் வாழும் புலத்திலும் சந்தித்து வருகின்றேன். அவர்களுடைய மகிழ்ச்சிகளிலும் துயரங்களிலும் பங்குகொள்வதில் ஒருவித தனியுரிமை பெற்றிருக்கின்றேன் என்று கூடச் சொல்லலாம்.

தமிழீழத்தை அடைவதற்கான சமர்களில் தங்களது உயிர்களைத் துறந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் நினைவுகளைப் பேணிக் காப்பாற்றி நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் மாவீரர் நாளன்று தமிழ் இயக்க உறுப்பினர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடுகின்றனர். இதுவரை நடந்த சமர்களில் உயிர் துறந்த போராளிகள் சிலரை அறிந்திருந்ததோடு, இனி வரும் சமர்களில் மரணிக்கப் போகும் போராளிகள் சிலரையும் நான் அறிந்து இருக்கின்றேன். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவும் சிதைவும் கணிக்க முடியாதது என்பதை நான் உணர்கின்றேன். அப்படிச் சிதைக்கப்பட்ட தமிழர்களது அமைப்புக்களில் மோசமாகப் பாழ்படுத்தப்பட்டிருப்பது அவர்களது கல்வி முறைமையேயாகும். அது படுமோசமாக வீழ்ச்சியுற்று அழிவு நிலையில் கிடக்கின்றது.

போர்க்களங்களில் மரணித்த 17,000க்கும் மேற்பட்ட போராளிகள் தமது தாயகத்தில் அமைதியை நிலை நிறுத்தத்தான் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தார்களே தவிர நிரந்தரமாகப் போரை நிறுவனப்படுத்துவதற்காகவல்ல என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைப்பாடு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனால் கௌரவிக்கப்பட்டு வருகிறது என்றே நான் சொல்வேன். 1996ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திகதி மாவீரர் தினத்தன்று அவரால் நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து சில பகுதிகளை முனைப்புப் படுத்திக் காட்ட விரும்புகின்றேன். சமாதானத்துக்கோ, பிணக்கிற்குச் சமாதானமான முறையில் தீர்வொன்றை எட்டுவதற்கோ, தமிழீழ விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல. சமாதானப் பேச்சுக்கள், இராணுவ ஆக்கிரமிப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்ட ஓர் இசைவான ஒத்துணர்வுள்ள சூழ்நிலையிலேயே நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

1995ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தார்கள் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார். சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முதல் சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு அவசியமானதாக வன் முறைத் தணிப்பு, படையினரை மீளப் பெறுதல், சகஜ நிலையை உருவாக்கு தல் போன்றவற்றையே தமிழீழ விடுதலைப்புலிகள் வலியு றுத்துகின்றனர். நாங்கள் 2004ம் ஆண்டிலிருந்து பின்னோக்கிப்பார்ப்போமேயானால், வன்னி போன்ற தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதம் தாங்கிய தமது படைகள் மீளப்பெறப்பட்டு, இராணுவ சம்பந்தமில்லாத நாகரீகமான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அப்பகுதிகளில் சட்டமும் ஒழுங்கும் மேலோங்கிச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருட்கள் ஏழை மக்களுக்கு மீள விநியோகிக்கப்படுகின்றன. நோர்வேயின் உதவியுடன் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்று உண்மையாகிக்கொண்டிருக்கிறது. வன்னியை அபிவிருத்தி செய்வதற்குப் புலத்திலுள்ள தமிழ் சமூகம் தனது தொழில் ரீதியான ஆற்றலையும் திறனையும் அளிப்பதற்கு முன்வந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிணக்கிற்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக மிஷிநிகி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவுகளைக்கொண்ட ஆவணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைகளைச் சாத்தியமற்றதாக ஆக்கக் கூடிய தனி நாட்டுக் கோரிக்கை, பேச்சு வார்த்தைகளுக்கான அவர்களது நிகழ்ச்சி நிரலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சேர்க்கப்படவில்லை.

எதிர்காலத்தில் அமைதியான ஒரு தமிழர் தாயகத்தைப் பற்றிய கூற்றை குறிப்பிட்டுவிட்டு எனது இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகின்றேன். வெளியாரின் வல்லந்தப்படுத்தலும் நெருக்குதலும் இல்லாமல் தமிழ் மக்கள் தமது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தாமே நிர்ணயித்து சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழுவதற்கான நிலையை வேண்டி நிற்பதாகவே அவர் கூறுகிறார். ஈழவரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் படியான வேண்டுகோளையே அவரது கோரிக்கை உள்ளடக்கியுள்ளது. இவ்வங்கீகாரம் நிச்சயமாகச் சமாதானத்திற்கான பல கதவுகளைத் திறந்துவிடும். சர்வதேச சமூகம் இந்தத் தரிசனத்தின் உள்ளடக்கத்தை ஏற்கெனவே சரிவரப் புரிந்துகொண்டிருப்பதுடன், தெற்கிலுள்ள தீவிரவாத சக்திகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து இதனை ஆதரிக்கின்றது. திரு.பிரபாகரனால் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளும் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அவரது இயக்கமும் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

சமூகஆய்வாளர்,

பேராசிரியர், உப்சலா பல்கலைக்கழகம்,

சுவீடன்.

பீற்றர் சால்க்

pdf தமிழ் ஆங்கிலத்தில் pro peter schalk about prabakaran

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.mgr_prabaharan

தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன்.

அவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்சியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன். ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி,ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது. காலவெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. (ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.) இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.

பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங்கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது. பிரபாகரன், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும். உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20கட்சித்தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.

பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.

தன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வரவேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச்சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார்.

அதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீதுதிரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.

“என்ன? உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று. 1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டுகொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவுசெய்தார். அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது.

இதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.

1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம் 2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப் படும். 3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக்காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’, என எம்.ஜி.ஆர் கூறியபொழுது பிரபாகரன் கூறியபதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது. “கேவலம்! மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.

நாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக்கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார். இந்தியப்பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.

ஆசைவார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்கமுடியாது என்பதை பிரதமர் இராஜீவிற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.

முன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வரமுடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம். சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.

தமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 1987ஆம் ஆண்டு, சனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப்போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை. 1993

தலைவர், தமிழர் தேசிய இயக்கம்,

தமிழீழப் பற்றாளர்,

தமிழகம்.

பழ.நெடுமாறன்

pdf MGR and Prabakaran friendship

பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்

தமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள்.

நாடு பிடிக்கும் நாட்டத்தோடு வலிமைமிக்க சரித்திர நாயகர்களாக, வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் பலர். ஆனால்…அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் அங்கலாய்ப்பில் உள்ள தமிழ் இனத்திற்கு அபயமாக, ஒரு விடிவெள்ளியாக, தமிழனுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க இளமையிலேயே புயலாகப் புறப்பட்ட வேங்கையே பிரபாகரன். உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்குப் புது இரத்தம் பாய்ச்சுகின்றவன் பிரபாகரன். தாழ்ந்து போன தமிழினத்தைத் தலைநிமிரவைத்தவன் பிரபாகரன்.

முதுகொடிந்த தமிழினத்தின் முள்ளந்தண்டை நிமிர்த்திக் காட்டியவன் பிரபாகரன். ‘சாகும்வரை சமர்தான்’ என்று விண்ணதிரும் குரலோடு விஸ்வரூபம் எடுத்திருப்பவன் பிரபாகரன் மட்டுமே. வடக்குக் கிழக்குத் தமிழரின் விடுதலைக்கு மட்டுமன்றி வந்தேறு குடிகளென வசைபாடப்பட்ட இந்தியத் தமிழரான மலையகத் தமிழருக்கும் தோள்கொடுக்கத் துணிந்திருப்பவன் பிரபாகரன். உள்நாட்டுத் தமிழரை ஒன்றிணைத்தது மட்டுமன்றி உலகத் தமிழரையும் ஒன்றிணைக்கும் உணர்வுகளை ஊட்டி வருபவன் பிரபாகரன்.

50 வருட வாழ்வல்ல வரலாறு – 20 வருட ‘காலத்தை வென்ற’ எதிர் நீச்சல் மட்டுமல்ல எதிர்காலச் சரித்திரம். வரலாறு என்பது எல்லையற்றது. அதில் வாழ்பவர்களும் மடிபவர்களும் கோடான கோடி. அதில் அழிக்கமுடியாதபடி கால்பதித்து, காலத்தை வென்று, நிரந்தர இடத்தைத் தனதாக்கிக் கொள்பவர்கள் சிலரே. அந்த இடத்தைப் பிரபாகரனுக்கு மாத்திரம் என்று தனியாக ஒதுக்கிக் கொண்டது தமிழர் சரித்திரம். சரித்திரத்தையே மாற்றிக் காட்டும் மாபெரும் பிரமிக்கும் சக்தியாகத் தமிழரால் இனம் காணப்பட்டவனே பிரபாகரன். அவன் இன்னும் பல்லாண்டு வாழ்வான்! தமிழையும் தமிழனையும் வாழ வைப்பான்!

தலைவர்,

மலையக மக்கள் விடுதலை முன்னணி,

நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை.

பெ.சந்திரசேகரன்

முகம் பேசுகின்றது

அனைத்திலும் பக்குவம். இதுவே இம்முகத்த்தைப் பார்க்கும் எமக்கு ஏற்படும் மெய்நிலை எண்ணப்பதிவு.

 

தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்

தமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு.

அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன்.

1.மோசஸ்:

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும் அன்று அந்த நாட்டில் யூத மக்களே செய்து வந்தனர். அவர்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. மிருகங்ளைப் போல் நடாத்தப்பட்டனர். வறுமையிலும், வேதனையிலும் மிதந்தனர். இறைவன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, தூய மோசஸ் கனவில் தோன்றி, ‘உன் மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்’, என்று கேட்டாராம். எவ்வளவோ இன்னல்களுக்கிடையே, எவ்வளவோ சஞ்சலத்துக்கிடையே, எவ்வளவோ ஏமாற்றங்களுக்கிடையே, எகிப்து மன்னனிடமிருந்து, எகிப்து இராணுவத்திடமிருந்து, எகிப்திய ஆதிபத்திய வாதிகளிடமிருந்து மோசஸ் யூத மக்களை விடுவித்தார் என்று விவிலிய நூல் விபரிக்கின்றது.

நமக்கு ஈழத்தமிழரின் சரித்திரம் தெரியும். பல நூற்றாண்டு காலம், இலங்கைத் தீவின் வடக்கிலும், கிழக்கிலும் அரசு அமைத்து, எல்லைகளைக்காப்பாற்ற இராணுவம் உருவாக்கி, ‘தேச வழமை’ என்ற சட்டத் தொகுப்புக்கு வடிவம் கொடுத்து, வரி விதித்து, மக்களைப் பாதுகாத்து, மக்கள் ஒரு குறையுமின்றி வாழ வழி செய்து, பரம்பரை பரம்பரையாக தமிழ் மன்னர்கள் ஆண்ட நாடு தமிழ் ஈழம். போத்துக்கீசர் ஆகட்டும், ஆங்கிலேயர் ஆகட்டும் தமிழ் அரசர்களின், தமிழ் வீரர்களின், வீரத்தையும் – விவேகத்தையும் – தியாகத்தையும் நேரில் பார்த்தார்கள். முன்னவர்கள் யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னனை, இந்தியாவின் கோவாவில் தூக்கில் இட்டதையும், பின்னவர்கள் கண்டியின் கடைசித் தமிழ் மன்னனை இந்தியாவின் வேலூரில் தூக்கிலிட்டதையும் வரலாறு எமக்கு கூறுகின்றது.

1800 முதல் 1946 வரை ஆங்கிலேயன் புத்திசாலித் தனமாக தமிழரின் திறமையைப் பயன்படுத்திக் கொண்டான். அன்று தமிழர் நிம்மதியாக உரிமைகளுடன் வாழ்ந்ததாக அறிகிறோம். பெப்ரவரி 48இல் ஆங்கில எஜமான் கப்பலேறியதும், அவன் இடத்தை சிங்கள எஜமான் கைப்பற்றிக் கொண்டான். ஈழத் தமிழர் இரண்டாந்தர குடிமக்களாக, அந்நியராக, அடிமைகளாக நடத்தப்பட்டனர். தமிழரின் வரிப்பணத்தில் சிங்களத் தெற்கு வளர்ந்தது. தமிழர் பகுதிகள் முன்னேற்றத்தைக் காணவில்லை. எங்கும் எதிலும் தமிழனுக்கு ஒரு நீதி, சிங்களவனுக்கு ஒரு நீதி என்று ஆனது. தமிழனின் கூக்குரல், தமிழனின் அமைதிப்போராட்டங்கள் சிங்களவரின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தையும் கவரவில்லை.

ஈழத்தமிழ் சகோதரிகளின் துன்பம், துயரம், வேதனை, கண்ணீர் உலகத் தமிழர்களை மிகவும் பாதித்தது. இந்த வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவேயில்லையா? தமிழரின் நேர்மையான கோரிக்கைகள் உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் இல்லையா? தமிழர்கள் இப்படியே அழியவேண்டியதுதானா? அறிஞர் அண்ணா 1961 இல் எழுதியது போல “நாமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப்பிசைந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா” என்று தவித்தோம், தடுமாறினோம், தள்ளாடினோம். அன்று எகிப்து நாட்டில் வாடிய யூத மக்களுக்கு ஒரு மோசஸ் கிடைத்தது போல திக்குத் திசை தெரியாமல் திண்டாடிய தமிழருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக வந்து உதித்தவர்தான் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

2. அண்ணல் காந்தி:

சரி பிரபாவை மோஸசோடு ஒப்பிடலாம். ஆனால் காந்தியுடன் எப்படி ஒப்பிடுவது. அடிகள் அகிம்சை வீரர். பிரபா வன்முறையாளர் ஆயிற்றே என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அவர்கள் காந்தியாரின் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.‘எவனோ ஒரு காமுகன் என் மனைவியின் கற்புக்கோ, எனது மகளின் கற்புக்கோ குந்தகம் விளைவிப்பான் என்றால், அவன் மீது வன்முறையைப் பயன்படுத்த நான் தயங்கமாட்டேன். அப்படி வன்முறையைப் பயன்படுத்தி, எனது குடும்பத்தினரை என்னால் பாதுகாக்க முடியவில்லை என்றால் நானொரு கோழை என்று பொருள்’ என்று அண்ணல் காந்தி எழுதியுள்ளார். இப்பொழுது கூறுங்கள் பிரபாவை, காந்தியடிகளுடன் ஒப்பிடுவது தவறா?,

திருமிகு பிரபாகரன் வன்முறையை, வன்முறைக்காகத் தேர்ந்தெடுத்தவர் அல்ல. வன்முறையை அவர் மீது திணித்தவர்களே சிங்களவர்கள்தான். அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரை சிங்களக்காடையர்கள் தாக்கினார்கள். அறவழிப் போராட்டத்தில் பங்குபற்றிய தமிழரை சிங்களப் போலிசாரும் இராணுவத்தினரும் தாக்கினர். சிங்களவருக்கு தெரிந்தது வன்முறைதான். அதே முறையை அவனுக்கே பதிலாகத் தந்தார் பிரபா. அவ்வளவு தான். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொல்லப்பட்டபின் அன்றைய தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பாடகர் தியாகராஜ பாகவதர் ஒரு பாடல் பாடினார். “சேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்து உண்பார் போல் தாய் நாட்டுக்கு தொல்லை கேட்டுதான் உண்ணாது இருப்போருக்கு கைமாறு செய்வதுண்டோ” என்று ஒரு பாடல் பாடினார். அண்ணலைப் போலவே பிரபாவும் அவரது மனைவி மக்களும், தமிழ் ஈழத்துக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செய்துள்ள தியாகங்கள் எத்தனை எத்தனையோ!

3. ஜெனரல் சார்ல்ஸ் டிகோல்

(charales de gaulle 1890-1970) பிரான்ஸ் நாட்டின் நம்பிக்கை நாயகன் ஆன இவரை நிறையப் பேருக்கு தெரியாது. 1940 யூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு, நாஜி ஜெர்மனுடன் போரில் வெற்றி பெற இயலாத நிலைமை. வயதான புகழ்மிக்க மார்ஷல் (Marchal) ஜெர்மனியிடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்து அவ்விதமே சரணாகதி அடைந்தார். அன்று ஏறத்தாழ 95 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் அம்முடிவை ஏற்றனர். ஆனால் ஐம்பது வயதே ஆன, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஜெனரல் டிகோல், “பிரான்சு ஒரு பெரிய வல்லரசு. ஒரு வல்லரசு, பிரான்சு போன்ற வல்லரசு, ஒரு போரில் தோற்பதில்லை. நமக்கு உலகம் முழுவதும் குடியேற்ற நாடுகள் (colonies) உள்ளன.

அவற்றின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் இப்போரின் முடிவில் பிரான்சு வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றாக விளங்க முடியும்” என்று சூளுரைத்து தன்னந் தனியனாய் இங்கிலாந்து சென்று தேசபக்த பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி சிறிது சிறிதாக ‘சுதந்திர பிரான்சை’ உருவாக்க ஒரு புதிய இராணுவத்தை உருவாக்கி, பல குடியேற்ற நாடுகளை தன் அணியில் சேர்த்து, பிரெஞ்சு மக்களிடம் ஜெர்மன் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து 1944 ஆகஸ்ட் 25இல் அவரது பிரெஞ்சு இராணுவத்தின் துணையுடன் பாரிஸ் நகரை விடுவித்து 44 இறுதியில் பிரான்சு முழுவதையும் விடுவித்தார்.

அதன்பின் அவரது படையினர் முன்பு ஆக்கிரமித்த ஜேர்மனியின் ஒரு பகுதியை வென்று 1945 மே 8இல் பிரான்சு நாட்டை வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றாக உலகத்துக்கு காட்டினார் டி கோல். டி கோலுக்கும் – பிரபாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளைக் காண்பதுண்டு. இதோ ஒரு உதாரணம். சமீபத்தில் ஜெனரல் டிகோலின் மகன் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். “1940 முதல் 45 வரை சுதந்திரப் பிரான்சின் இராணுவம் கலந்து கொண்ட எல்லாப் போர்களையும் எனது தந்தை தான் திட்டமிட்டு வழிநடத்தினார்” என்று அதில் எழுதியுள்ளார். அதே போன்று 1983முதல் தமிழீழ விடுதலைப் போரை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரபா தான் திட்டமிட்டு வழிநடத்துகிறார் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.

அன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், பிரான்சை மீட்டெடுப்பேன் என்று சூளுரைத்த டிகோல் பிரான்சை மீட்டுக் காட்டினார். இன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், சுதந்திர தமிழீழத்தைப் பெற்றெடுப்பேன் என்று உறுதியேற்ற பிரபா தமிழீழத்தைப் பெற்றுத் தருவார் என்று நம்புகின்றோம். 50 வயது காணும் பிரபா, இன்றைய தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம். பேராசிரியர் சுப.வீ கூறுவது போல, “அவர் நமக்கெல்லாம் வாராது வந்த மாமணி”. தமிழினம் வெகு காலமாய் எதிர்பார்த்து, காத்திருந்த தலைவர். வழிகாட்டி. அவர் வாழுங்காலத்தில் வாழ்வதே ஒரு பெருமை என்று நம்புவர்களில் நானும் ஒருவன்.

அவர் நீண்டகாலம் வாழட்டும். வாழ்க வேலுப்பிள்ளை பிரபாகரன்!

முன்னாள் கல்லூரிஆசிரியர்,

எழுத்தாளர்,

பிரான்ஸ்.

செவாலியர்’ யூலியா

பொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-

24/12/2009

ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது.

தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின் செல்விகண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன்.சிறப்பு மிக்க இந்த சங்க காலத்திற்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தன.

மீண்டும் ஒரு பொற்காலம் படைக்கச் சோழப் பெருவேந்தர்கள் இராசராசனும் இராசேந்திரனும் தோன்றினர். கங்கை வரை மட்டுமல்ல – கடல் கடந்து சிங்களம், புட்பகம்,சாவகம், கடாரம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். இந்திய வரலாற்றில் இத்தகைய சாதனை படைத்த பெருவேந்தர்கள் வேறு யாரும் இல்லை. அதன்பின் மற்றும் ஓராயிரம் ஆண்டுகள் உருண்டோடின. இடைக்காலத்தில் தமிழகமும் ஈழமும் அடிமைப்பட்டன. தெலுங்கர், மராட்டியர், முகம் மதியர்,பிரெஞ்சுக்காரர்,ஆங்கிலேயர், இந்திக்காரர் என அந்நியர் பலரிடம் தமிழகம் அடிமைப்பட நேர்ந்தது. அதே காலக்கட்டத்தில் போர்த்துகீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களர் என அந்நியரிடம் அடிமைப்பட்டது ஈழத் தமிழகம்.

வாள்முனையில் தமிழரை வென்றடக்க முடியாத ஆரியர் வஞ்சகம் நிறைந்த வர்ணா சிரம பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் தமிழ் இனத்தைச் சாதிகளாகப் பிரித்துக் கூறு போட்டனர். தமிழ் மொழியின் சீரிளமைத் திறனைச் சிதைக்க முயன்றனர். தமிழர்களின் வாழ்வு சரிந்தது. வட மொழியின் மரணப் பிடியில் சிக்கித் தவித்த அன்னைத் தமிழை மீட்கப் போராடினார் மறைமலையடிகள். வருணாசிரமப் பழமைவாதப் பிடியில் சிக்கித் தவித்த தமிழரை மீட்டெடுக்கப் போராடினார் பெரியார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இருவரும் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பல அறிஞர்களும் தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட அரும்பாடுபட்டனர்.

ஆனாலும் இந்திய தேசியம் என்னும் மாயையில் மூழ்கிக் கிடந்த தமிழர்களை மீட்பது எளிதாக இல்லை. அதைப் போலத் திராவிட தேசியம் என இல்லாத தேசிய மாயையிலும் தமிழினம் சிக்கித் தவித்தது. சிங்களப் பேரினவாதப் பிடியில் சிக்கி ஈழத் தமிழரும் நலிந்தனர். இதற்கெல்லாம் தீர்வு காண தமிழ்த் தேசியம் என்ற மாமருந்தால் தான் முடியும் என்பதை உணரத் தமிழினம்தவறியது. மொழி அடிமைத்தனத்திலிருந்தும், இன அடிமைத்தனத்திலிருந்தும், விடுதலை பெற வேண்டுமானால் முதற்கண் நாம் யார் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு பெறுவோமானால் அரசியல் விடுதலை எளிதில் கிடைக்கும். அந்த அரசியல் விடுதலையைப் பெறுவதற்கான வழி என்ன? இந்தக் கேள்விக்கு விடை காணத் தமிழகத்திலும், தமிழீழத்திலும் எண்ணற்ற தலைவர்கள் முயன்றார்கள்.

இடைவிடாத அறப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் ஆதிக்கவாதிகளின் இராணுவ வலிமைக்கு முன்னால் அவைகள் வெற்றி பெற முடியவில்லை.‘தமிழன் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவன் விடிவுகாலம் நோக்கி அடி எடுத்து வைக்கிறான். விடிவுக்கான ஒரே வழி இதுவே’ என்பதைத் தமிழினம் உணரத் தவறிற்று. ஆண்டாண்டு காலமாக ஊமையாய், ஆமையாய், அந்நியர்களின் அடிமையாய் அடங்கிக் கிடந்த தமிழர் வாழ்வில் மீண்டும் ஒரு பொற்காலம் பிறக்கும் நேரம் நெருங்கிற்று. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வில் துயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடத் துணிந்த புலித்தேவன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்புசுல்தான் போன்றவர்கள் வீரமுடன் போராடியும் வென்றாரில்லை. தூக்குக் கயிற்றிலும் துப்பாக்கிக் குண்டிலும் சாவை எதிர்கொண்டார்கள். தமிழ் ஈழத்திலும் போர்த்துகீசியரை எதிர்த்துப் போராடிய பண்டார வன்னியனும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டான். அதற்குப் பின் அந்நியரை எதிர்க்கும் துணிவைத் தமிழினம் அடியோடு இழந்தது என்றே கூறலாம். அதன்பின் தமிழினம் அடிமைத்தனத்திற்கு ஏற்ற இனமாக அந்நியரால் கருதப்பட்டது. இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்று அவற்றையெல்லாம் வென்ற டக்கிய இராசேந்திரசோழனின் பரம்பரையிலே வந்த தமிழர்கள் அதே நாடுகளுக்குக் கப்பல் கப்பலாக அடிமைகளாக ஆட்டு மந்தைகள் போல் ஓட்டிச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழினம் கூலி என்ற இழிவான சொல்லுக்கு உரிய இனமாக ஆக்கப்பட்டது. இந்த இழிவையும் பழியையும் துடைக்க யாராலும் முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழீழக் கடற்கரைச் சிற்றூரில் ஆர்ப்பரிக்கும் அலை யோசை நடுவே பிறந்த ஒரு தமிழன் வளரும் போதே இன உணர்வோடு வளர்ந்தான். மாசுபடிந்து கிடக்கும் மறத்தமிழினத்தின் பழியைத் துடைக்க உறுதி பூண்டான். ஆயுதம் தூக்குவதன் மூலமே சிங்கள வல்லரக்கரை நம்முடைய மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என முழங்கினான். இளைஞர்கள் பலர் அவருடன் கரம்கோர்த்தனர், புலிகள் உருவானார்கள். ‘சிறுபிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேருமா?’ எனக் கிண்டல் செய்தவர்கள் பலர்.

‘நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினால் அவர்கள் பீரங்கி கொண்டு வருவார்கள். என்ன செய்வீர்கள்?’ எனக் கெட்டிக்காரத்தனமாகக் கேட்டதாகக் கருதி, கெட்டிக்காரத்தனமாகப் பேசிவிட்டதாக நினைத்து சில தலைவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும் அந்த இளம் புலி கொஞ்சமும் கலங்கவில்லை. உறுதியோடு தனது இலக்கை நோக்கி முன்னேறியது. 25 ஆண்டு காலத்தில் உலகம் வியக்கும் சாதனைகளை, அந்த வீர இளைஞன் தலைமையில் புலிகள் படைத்தார்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற வல்லரசுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களுடன் போராடிய சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டினார்கள். அவர்களுக்கு உதவி புரிய வந்த ஐந்தாவது பெரிய வல்லரசான இந்தியாவின் படையையும் தங்கள் மண்ணை விட்டு வெளியேறவைத்தார்கள்.

தமிழீழத்தில் பெரும் பகுதி இன்று சுதந்திர பூமியாக விளங்குகிறது என்றால் அதற்கு அந்த இளைஞன் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் செய்த அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே காரணமாகும். விவசாயக்கருவிகளைத் தூக்குவதைத் தவிர வேறு போர்க் கருவிகளைத் தூக்கி அறியாத சீன விவசாய இளைஞர்களை ஒன்று திரட்டி, சீனாவில் மாபெரும் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, செஞ்சீனம் படைத்தார் மாவோ சேதுங். வியட்னாம் விவசாயிகளை வலிமை மிக்கவர்களாக மாற்றி பிரெஞ்சு, அமெரிக்க வல்லரசுகளின் கொட்டத்தை அடக்கினார் ஹோசிமின். வல்லரசுகளை வீழ்த்துவதற்கு மாவோ சேதுங், ஹோசிமின் ஆகியோருக்கு அன்று சோவியத் நாடு எல்லாவகையிலும் உறுதுணையாக நின்றது.

ஆயுதங்களைஅள்ளிக்கொடுத்தது. பிற உதவிகளையும் செய்தது. ஆனால் சின்னஞ்சிறிய தமிழீழத்தில் தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியை மட்டுமே நம்பி, உலகத்தமிழர்களின் சிறுசிறு உதவிகளைப் பெற்று சாதனை வரலாறு படைத்திருக்கிறார் அருமைத்தம்பி பிரபாகரன். அவர் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்த தியாகங்களின் விளைவாக ஈழத் தமிழினம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினமே இன்று பெருமிதத்தில் உயர்ந்து நிற்கிறது. கூலியாக உழைக்க மட்டுமே தகுதி வாய்ந்தவன் தமிழன் என்ற இழிவைப் புலிகள் சிந்திய இரத்தம் துடைத்தது. தமிழர்கள் வீரமற்ற கோழைகள் என இகழ்ந்தவர் நடுநடுங்கப் புலிகளாகப்பாய்ந்து உயர்ந்து வீரத்தின் விளைநிலம் தமிழினமே என் பதை நிலைநாட்டியுள்ளனர்.

பிரபாகரனின் தலைமையில் புலிகள் பெற்றுள்ள இந்த இராணுவ வலிமை ஈழத் தமிழர்களுக்கு அரசியல் விடுதலையை மட்டுமல்ல – சமூக விடுதலையையும் பொருளாதார விடுதலையையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என்றும் இல்லாத வகையில் நமது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் உலகளாவிய உயர்வும் மதிப்பும் கிடைத்திருக்கிறது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் வாழ்வில்பொற்காலம் படைக்கும் தலைவன் தோன்றியுள்ளான். அத்தகைய தலைவனே நமது தம்பி பிரபாகரன் ஆவார். அருமைத் தம்பியின் பொன்விழா கொண்டாடப்படும் இந்தவேளை தமிழினத்தின் வரலாற்றில் மீண்டும் ஒரு பொற்காலம் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையாகும். அவர் தலைமையில் தமிழினம் உலகில் சிறந்த இனமாக மீண்டும் மிளிரும் அறிகுறியும் நம்பிக்கையும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது. நிறைவான நெஞ்சத்தோடு அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக் கூறுவோமாக.

தலைவர், தமிழர் தேசிய இயக்கம்,

தமிழீழப் பற்றாளர்,

தமிழகம்.

பழ.நெடுமாறன்

சங்கே முழங்கு!-விடுதலைப்பேரொளி

சங்கே முழங்கு!

உணர்ச்சிக் கவிஞர், காசி ஆனந்தன்

Up ↑