Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2009

வரலாறு தந்த வல்லமைக்கு வயது 55(காணொளிகள்)

தமிழீழத் தேசியத்தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது!

  • தங்க வண்ண மேனியும்
    புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
    கண்களில் வீரப் போர்ப் புலிப்பார்வையும்
    புவனம் யாவையும் தன்வயமாக்கிடும்
    எங்களின் கோமகன்
    தமிழ்க்குலக் காவலன்
    தமிழீழ நாட்டின் மேதகு தலைவன்
    பிரபாகரன் எனும் பெருநிதியே
    உன் திருமலரடியை தினம் போற்றிப்
    பணிகின்றோம்
    வரலாறு தந்த வல்லமையே
    ஏங்கித் தவிக்கின்றோம்
    எங்கிருந்தாலும் நீ
    எழுந்தருள்க.

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்

  • இன்று நவம்பர் 26 ஆம் திகதி. இந்நன்னாள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவர்க்குமே ஒரு பொன்நாள். இந்நாள் தான் தமிழர் எழுச்சியின் சின்னமாகத் திகழும் தங்கத் தமிழீழ மண் தந்த தன்மானத் தமிழன், தமிழீழ விடுதலைப் புரட்சியின் நாயகன் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்.

    தமிழரின் வரலாறு காணாத வகையில் வீரத்தை நிலைநிறுத்தி புதிய புறனானூற்றைப் படைத்துவரும் எங்கள் தேசியத் தலைவர் தனது ஐம்பத்தி ஐந்தாவது அகவையை நிறைவு செய்யும் இவ்வேளையில் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. நாமும் அவரைப் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவோமாக.

    .fullpost{display:inline;}

இவ்வேளையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வினை, தமிழ் மொழி உணர்வினை, தமிழின விடுதலை உணர்வினை ஊட்டுகின்ற நிலவரம்| , இன்போதமிழ் போன்ற ஊடகங்கள் வாயிலாக தேசியத் தலைவரை வாழ்த்துவதென்பது மிகப் பொருத்தமானதே.

அந்நியர் தாய்த் தமிழக மண்ணில் காலடி வைக்க முனைந்த போது, வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, வாஞ்சிநாதன் போன்றோர் வீறுகொண்டு எழுந்தனர். ஆனால், அப்போதும் தமிழகம் கிளர்ந்து எழவில்லை. தமிழர்கள் உறங்கிக் கிடந்தனர்;. ஏன் இப்போதும் தான்! கோழைத் தமிழனக்கு மத்தியில் வாழ்வதை விட தூக்கில் தொங்கி மடிவதே மேல் என அந்த மானமிகு மறவர்கள் மாண்டு போயினர். இதனால் தானோ என்னவோ ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்?” என மகாகவி மனம் நொந்து பாடினார்.

பகற்கனவாகிப் போன பழம் பெருமைகளுக்கு உயிர் கொடுத்தவர் எமது தலைவரே. இதன் மூலம் வீரத்தளபதி எவரையும் தமிழினம் நீண்ட காலமாகத் தோற்றுவிக்கவில்லையே என்ற குறையை ஈழத்தமிழன் ஒருவன் போக்கியிருப்பது எமக்கெல்லாம் பெருமை அல்லவா?

உலகத் தமிழர்கள் அனைவர்க்குமே ஒரு முகவரியை பெற்றுத் தந்தவன் எமது தானைத் தலைவனே. தமிழினம் எனும் போது உலகம் இப்போது உற்று நோக்குவது ஏழு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவையோ அல்லது மலேசியா தென்னாபிரிக்காவையோ அல்ல. முப்பத்தைந்து இலட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையைத் தான்.

‘தாயை அதிகம் பார்த்தவன் இல்லை. தமிழ்த்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை” என்று தமிழகக் கவிஞன் அறிவுமதி சும்மாவா எழுதினான்?

உலகில் தமிழனுக்காக ஒரு இராச்சியத்தை அமைக்கும் பணிக்காக முற்றிலுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றைக் கட்டியெழுப்பி அதனை வழிநடத்திச் செல்லும் பிரபாகரனின் சாதனைகளை, அலாதியான அரசியல், இராணுவ வெற்றிகளைக் கண்டு உலகமே பிரமித்து நிற்கிறது. அவற்றைத் தமது சாதனைகளாக, வெற்றிகளாகக் கருதி தமிழர்கள் பெருமைப் படுகின்றனர்.

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கை ஆகவும் தணியாத தாகமாகவும் உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கை ஆக மாறியது. இப்படியொரு அபரிதமான ஆற்றல் மிக்க தலைவன் எமக்கு கிடைத்தது நாம் செய்த பெரும் பேறாகும். இந்தச் சரித்திர நாயகன் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமைக்குரிய விடயம்.

  • தன் இன மானத்தை தான் மதித்தான்
    பகை தாவியே வந்திட கால் மிதித்தான்

என தமிழீழக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கவிதை தலைவரைப் போற்றிப் பாடும் விதம் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

இப்புவியில் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி, தமிழினமும் தமிழ் மொழியும் எழுச்சி பெற்றிட தமிழீழம் தந்த தவப் புதல்வன் தம்பி பிரபாகரனின் பாதையில் அணி திரளுங்கள்.

ஏனெனில், நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்!

இது காலம் இட்ட கட்டளை.

  • வரலாறு என்பது தன்னியக்கம் உடையதன்று. வரலாற்று மாற்றத்திற்கு தனிமனிதர்களின் குறுக்கீடு அவசியமாகின்றது. இதனால்தான் பெரும் புரட்சிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப்பற்றி நாம் பேசிக்கொள்ளும் போது அவற்றை முன்னின்று நகர்த்திய ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனிமனிதர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறோம். இன்றும் அதற்காகவே வாழ்வு தொடர்கின்றோம்

விதியின் அடிப்படையில் வரலாற்றை காலச்சக்கரமாகக் கற்பிதம் செய்த ஒரு சமூகத்தில் பிறந்த எங்கள் தலைவர் அதை உடைத்து புதிய வரலாற்றை எழுதுகின்றார். மனிதத்தில் அபாரமான நம்பிக்கை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றிற்கு தரும் விளக்கம் உற்று நோக்கற்பாலது.

  • “வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்.”

    என செயல்மூலம் காட்டியபின் கூறுகின்றார்.

    “You can’t be neutral in a moving train! என்னும் நூலை எழுதிய Howard Zinn என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர் the struggle for justice should never be abandoned because of the apparent overwhelming power of those who have the guns and the money and who seem invincible in their determination to hold on to it. That apparent power has, again and again, proved vulnerable to human qualities less measurable than bombs and dollars”… எனக் கூறி அந்த மனிதப்பண்புகளாக அவர் குறிப்பிடும் moral fervor, determination, unity, organization, sacrifice, wit, ingenuity, courage, patience அனைத்தையும் எங்கள் தலைவர் உள்வாங்கியுள்ளார்.

    இதனை தலைவர் விடையத்திலும் காண்கின்றோம்.

வரலாற்றை நகர்த்துவோருக்கு கடந்த காலத்தைப் பற்றிய தெளிவான ஞானமும் நிகழ்காலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் ஆற்றலும் அவசியமாகின்றது. இவை கைவரப் பெற்றவர்களே காலத்தை வென்று வரலாறு சமைக்கின்றார்கள்.

இவர்கள் சமைக்கும் எதிர்காலம் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களை நோக்கிச் செல்கின்றன. கலியை வென்று கிருதயுகம் காணும் யுக புருஷனே வேலுப்பிள்ளை பிரபாகாரன்.

புதுவையாரின் கவிதை வரிகளில் கூறுவதாயின்

  • “திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து
    அங்கையர்க் கண்ணிகள் அணிவகுத்தது எப்படி”

இந்த படைப்பில் நான் ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் என் ஆய்வுக்கு உட்கொள்கிறேன்.

கிட்டுவின் மரணம். அந்த மரணத்தால் புத்திர சோகத்தில் தவிக்கும் அவரின் தாய். அந்தத் தாயை அணைத்துக் கொள்ளும் தலைவன்.

பற்றிப் படரத்தவிக்கும் தாய்மை. நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிணாமத்தின் கொடுமுடியைத் தொட்டு நிற்கும் அணைப்பு அந்த அணைப்பினுள் தப்பித்தவறி விழும் அந்தத் தாயின் கையொன்றை பற்றி அணைக்கும் போராளி.

இன்னோரு வகையில் பார்க்கின் அணைத்துக் கொள்வது கிட்டுவின் தாயை மட்டுமல்ல. தமிழர் தேசத்தையே அணைத்து வாரிக் கொள்கிறான். அந்த அணைப்பில் தப்பியவற்றை அவர் வளர்த்த போராளி ஏந்துகிறான். அதே சமயம் அவரது பார்வை இந்தக் கொடுமையைச் செய்தவர்களைச் சுட்டு எரிப்பதைப்பாருங்கள். அந்தப்பார்வை செல்லும் பாதையில் எது வந்தாலும் மிதித்து வெல்லும் உறுதியும் அந்தக் கண்களில் பளிச்சிடுகின்றது.

இது புகைப்படம் அல்ல. ஒரு ஓவியம். தியாகம், வீரம், தலைமை, போராளி மாவீரம் யாவும் கோலம் காட்டி நிற்கும் இப் புகைப்படத்தை Rembrandt என்னும் ஒல்லாந்த ஓவியனது கைகளில் மலர்ந்த ஓவியங்களுக்கு ஒப்பிடலாம்

  • ‘தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்கு முறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.”
    தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவரும்,பலருக்குச் சவாலுமானவர் பிரபாகரன்

    இலங்கை, தமிழீழம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் 2009 இல் தனது 55 வது அகவையை நிறைவு செய்யும் தமிழர் தலைவரை நெஞ்சம் நிறைந்து போற்றி வணங்கி வாழ்த்துகிறார்கள்.

ஏனென்றால் அவர் சிங்கள ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சவாலாகவும், தமிழ் மக்களின் விடுதலை வேட்கை நிறை வீரனாகவும் கணிக்கப்படுகிறார். சிங்கள அரசியல் சக்திகளுக்கும், அதன் அடக்குமுறையின் கருவியான இராணுவத்துக்கும் அவர் ஒரு சவால் ஆக இருப்பது மட்டுமல்ல, அடக்குமுறையை மறைமுகமாகவும், நேரடியாகவும், ஊக்குவிக்கின்ற சுயநலமிக்க வல்லரசுகளுக்குத் தடையாகவும் சவாலாகவும் எழுந்து நிற்கின்றார்.

  • இவரது தலைமைத்துவத்தை தாயகத்தில் மட்டுமல்ல உலகில் வாழுகின்ற தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு இவரை தங்களுடைய விடுதலையின் வீரனாகவும், உலகிற் ஓர் தனித்துவ தலைமைத்துவத்தைப் பேணுபவராகவும், கருதுகின்றபடியால் அவரது 55 ஆவது அகவை நாள் முக்கியத்துவம் பெறுகின்றது. இவரின் செயற்பாடுகள் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கின்றது.

சிங்களக் காடையரும் அரச படைகளின் காடைத்தனமும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் உயிர்வாழ்விற்கும் சவாலாக எழுந்த வேளையில், அன்றைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்வது என்று அறியாது திகைத்தனர். தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தைக் கண்டு சர்வதேசம் மௌனம் சாதித்தது. இந் நிலையில் இராணுவ அடக்குமுறைக்கும் காடைத்தனத்திற்கும் சவாலாக எவரும் அன்று இருக்கவில்லை.

சிங்கள கொடுமைத்தனத்தின் மத்தியில் அரசிற்கு சவாலாகத் தோன்றிய பிரபாகரன் இலங்கை சுதந்திம் பெற்ற பின்பு, இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களைக் கொன்று எரித்தும், அவர்களுடைய உடமைகளைச் சூறையாடிக் கொள்ளையடித்தும் வந்தனர். தமிழ் மக்களின் பேரறிவின் அடையாளச் சின்னமாக கட்டி எழுப்பப்பட்ட யாழ் பொது நூலகத்தை சிங்களக் காடையர் எரித்தனர், தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கினர், தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரச் சின்னங்களை அழித்தனர். இக் காலகட்டத்தில் தான் பிரபாகரன் தோன்றினார்.

  • அவரின் கண்களும், காதுகளும், இதயமும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் கொடூரத்தைக் கண்டன, அழுகுரலைக் கேட்டன. சிங்களத்தின் கொடுமையிலிருந்து தன் மக்களை விடுதலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற உறுதி மலை போல் அவர் உள்ளத்தில் திரண்டது. ஆனால், அவர் தன்னுடைய நாளுக்காகக் காத்திருந்தார். பதுங்குவதில் பலம் தேடினார்.

பலருக்கு வேதனையாகவும், அதிர்ச்சியுமாக அமைந்த தன்னுடைய திட்டங்களை மெதுவாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த சிங்களக் கொடூரங்களை நிறுத்தினார்;. நீங்கள் செய்த கொடூரங்கள் இனிப் போதும் என்ற செய்தியை தென்னிலங்கைச் சிங்களவருக்கு செய்தியாக அனுப்பினார். சிங்களவர்கள் இதன்பின்னரே விழித்தெழத் தொடங்கினர்.

மக்கள் மத்தியில் எழுந்து நிற்கும் ஓர் தனித்துவத் தலைவர்

இவர் தன்னுடைய தீர்க்கமான 30 வருடப் போராட்டத்துக்குப்பின் தமிழ் மக்களுடைய, உயர்ந்த-தாழ்ந்த, செல்வர்;-ஏழைகள், படித்த-படியாத மக்களின் அன்பையும் மதிப்பையும் வென்றெடுத்தார். இவரை அன்று கடுமையாக விமர்சித்தவர்களும் இன்று இவருடைய தலைமைத்துவத்தைப் பாராட்டுகிறார்கள்.

இவருடைய எதிரிகள் இவருடைய பெயரைக் கொச்சைப்படுத்தினாலும், இவர் உலகத் தலைவர்களுடைய ஒப்பற்ற கவனத்தை ஈர்ந்துள்ளார். இவர் தன்னுடைய நேர்மையான இலட்சியத்திலிருந்து கீழிறங்கி உலகின் சக்திகளுக்கு அடிமைப்பட்டு விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டவரல்ல.

‘இலட்சியத்தில் நான் தவறின் என்னையே அழித்துவிடுங்கள்” என்று கூறுகின்றார்,தமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் தலைமைத்துவத்தை நிர்மாணித்த தலைவரை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

  • ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கடந்த 58வருடங்களாக பல எல்லைகளையும் எதிர்ப்புகளையும் கடந்திருக்கின்றது. மக்களின் விடுதலைக்கு உண்மையான அர்த்தத்தை ஊட்டி, அதேவேளையில் தீய சக்திகளான பல்வேறு அடக்குமுறையாளர்களையும் அடையாளங் காண வைத்துள்ளது. உண்மையான விடுதலைக்கு மக்கள் வாழ்வாலும் சொத்து அழிவாலும் விலை கொடுக்க வேண்டும் என்ற நிலையை நிரூபித்துள்ளது. அழிவின் சக்திகளாகச் செயற்படும் அடக்குமுறை நாடுகளையும் அரசுகளையும் அடையாளம் காட்டத் தவறியதில்லை. இந்த உண்மைகள் புதிய தமிழ்த் தேசத்தால் உள்வாங்கப்பட்டு எம் தமிழ்த் தேசியத்தின் நித்திய நினைவுகளில் பதியப்பட வேண்டியவை!!

    தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரைத் தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.


Ulakattamilarai Uyaravaittavan Prabhakarane...
உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே…

மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!

தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் எழுச்சி விழா உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் புகழோடும் பெருமிதத்தோடும் முன்னைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

mdayஇந்த ஆண்டு வன்னியில் நடந்த போரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராளிகள் களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்தார்கள். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் வீராங்கனைகளும் கடற்புலிகளும் கரும்புலிகளும் வான்புலிகளும் களமாடி கடலில் கரைந்தும் காற்றில் கலந்தும் தீயில் எரிந்தும் மண்ணில் புதைந்தும் போயிருக்கிறார்கள்.

அந்த மறைந்தும் மறையாத மாவீரர்களுக்கு வாழ்த்தும் வீர வணக்கமும் வழிபாடும் செய்யும் இந்நாள் தமிழ் மக்களுக்கு ஒரு திருநாள். தமிழினத்தின் தேசிய நாள்.

மானம் பெரிதென ஊன உடல் விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத் தந்த மானத் தமிழன் தோள்
தங்கம் தங்கமடா!

எனக் கல்லறையில் துயில் கொள்ளும் எங்கள் மாவீரர்களைப் போற்றிப் பாடுவோம். தோள்தட்டி ஆடுவோம்.

களத்தில் விழுப்புண் பட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட முதல் வி.புலிப் போராளி சங்கர் என்ற லெப்டினன்ட் சத்தியநாதன் களத்தில் வீழ்ந்து வீரச் சாவைத் தழுவிக் கொண்ட நொவெம்பர் 27ஆம் நாளையே இன்று உலகெங்கும் மாவீரர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

லெப்டினன்ட் சத்தியநாதன் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது அகவையிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன்.

உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடிய மக்கள் எல்லோரும் குருதி, கண்ணீர், வியர்வை இவற்றை விலையாகக் கொடுத்தே விடுதலையைப் பெற்றிருக்கிறார்கள். அய்ரிஷ் தொடங்கி எரித்திரியா வரை, கிழக்குத் திமோர் தொடங்கி கொசோவோ தீமோர் வரை இடம்பெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள் நீண்ட காலத்தின் பின்னரே வெற்றியடைந்தன. அதன் பின்னரே அந்த மக்கள சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடிந்தது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு தீமோர் மக்கள் விடுதலைக்காக ஆண்டுக் கணக்கில் ஆயுதம் ஏந்தி, குருதி சிந்திப் போராடி கண்ணினும் இனிய தங்கள் பொன்னாட்டை அன்னிய நாட்டின் பிடியிலிருந்து மீட்டு எடுத்தார்கள். இன்று கிழக்கு திமோர் அய்க்கிய நாடுகள் அவையின் 191ஆவது உறுப்பு நாடாக அனுமதிக்கப்பட்டு அந்த நாட்டின் கொடி அய்க்கிய நாடுகள் சபை முன்றலில் பட்டொளி வீசிப் பறக்கிறது!

வி.புலிகள் போர்வெறிபிடித்த மனநோயாளிகள் அல்லர். துப்பாக்கியை ஏதோ விளையாட்டுக்குத் தூக்கியவர்களும் அல்லர். வாழு வாழவிடு என்ற உரிமைக் குரல் எழுப்பி அடக்கு முறைக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தியவர்கள். துப்பாக்கிகளை இன்று அவர்கள் மவுனித்து இருக்கிறார்கள். ஆனால் விடுதலைகான போராட்டம் அரசியல் மற்றும் அரசதந்திர மட்டத்தில் தொடர்கிறது.

இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்மக்களுக்குள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமை பொருந்திய சமய சார்பற்ற, சமவுடமை தமிழீழ அரசை மீட்டெடுத்தலும் மீள உருவாக்குதலும் தவிர்க்க முடியாதென்ற முடிவே வட்டுக் கோட்டைத் தீர்மானமாகும்.

தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோட்பாடுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாகவே முதல்முதலாக முழு வடிவம் பெற்றன.

காலம் காமாக சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்த்தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. எழுதிய ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அகிம்சை வழிப் போராட்டங்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டன. தமிழர்கள் மீது முறைக்கு முறை வன்முறை கட்டவுழ்த்து விடப்பட்டன. தமிழர்களது மொழியுரிமை, உயர்கல்வி வாய்ப்பு, வேலை வாயப்பு மறுக்கப்பட்டன. அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகப் போராடியபோது சிறை, சித்திரவதை பரிசாக அளிக்கப்பட்டன. இதன் பிரதி பலிப்பே வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஆகும்.

தமிழினத்தின் தாகமான தமிழீழத்தை மீள்கட்டியெழுப்பவும் மீள் உருவாக்கவும் வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானம் மீது வாக்குக் கணிப்பு (Referendum) நடத்த உலகளாவிய அளவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே சமயம் மக்களாட்சி விழுமியங்களுக்கு அமைய புலம்பெயர் நாடுகளில் மக்கள் அவைகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற இருக்கிறது. நோர்வே நாட்டு புலம்பெயர் தமிழர்கள் இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார்கள்.

தாயகத்தில் இன்று அரசியல் செயல்பாடுகளைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளுவதற்குரிய ஒரு அரசியல் இடைவெளி (political space) இல்லாத சூழல் இருக்கிறது. எனவே புலம்பெயர் தமிழர்கள்தான் இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும். அவர்களால்தான் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதற்கான முயற்சியே நாடுகடந்த தமிழீழ அரசாகும். இதற்கு முன் எடுத்துக்காட்டு இல்லை. எனவே இந்த முயற்சியை அறிவியல் அரசியல் துறைக்கு தமிழர்களது நன்கொடை என்று கூடச் சொல்லலாம்.

இந்த அரசு ஆட்புலம், படை இல்லாத அரசு. புலம்பெயர் மக்களால் மக்களாட்சி முறைமைக்கு அமைய வெளிப்படையான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் சார்பாளர்கள் உலக ஒழுங்குக்கும் பன்னாட்டுச் சட்ட நெறிமுறைகளுக்கும் இசைவாக உருவாக்குவார்கள்.. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சார்பாளர்களே நாடுகடந்த தமிழீழ அரசுக்குரிய அரசியல் யாப்பை வரைவார்கள். அந்த யாப்பில் மக்களது உரிமைகள் அரசுக்குரிய நடைமுறை விதிகள் யாவும் இடம்பெறும்.

ஈழத்தமிழ் மக்களின் சிக்கலுக்குத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் நாடுகடந்த அரசில் பங்கு கொள்ளலாம். புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது கொடிவழியினர் இதில் உறுப்புரிமை வகிக்க உரித்துடையவர் ஆவர்.

இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் வெற்றி புலம்பெயர் தமிழர்களின் ஆதரவில் (support) பங்களிப்பில் (contribution) ஈடுபாட்டில் (engagement) தங்கியுள்ளது.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும். காரணம் இவை ஒன்றுக்கொன்று தொடர்பானவை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகியவையே நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டுமானங்கள் ஆகும்.

இன்றைய அரசியல் சூழலில் மற்றும் உலக ஒழுங்கில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல், பொருண்மிய, பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கத் தாமே முன்வந்து போராட வேண்டும். மக்களாட்சி முறைமையின் அடிப்படையில் போராடினால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை.

புலம்பெயர் தமிழர்களுக்குக் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தக் கடமை இன்று அதிகரித்துள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை நாம் முழு அர்ப்பணிப்போடு தொடர்ந்து செய்ய வேண்டும். தமிழீழத்தில் உள்ள மக்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழும் அரசியல், பொருண்மிய, கலை, பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கும் வரை நாம் தொடர்ந்து தொய்வோ, சோர்வோ இல்லாது அரசியல், அரசதந்திர மட்டத்தில் உலகில் உள்ள ஏழு கோடி தமிழ்மக்களையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்.

தாயக விடுதலைக்காக தமது இளைய இனிய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் கொலுவிருத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து ஓயாது ஒழியாது உழைத்தலே நடுகல்லாகிப் போன எம் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வணக்கமாகும். அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன்னரைவிட அதிக வேகத்தோடும் ஈடுபாட்டோடும் பாடுபடுவோம். தாயகக் கனவை நெஞ்சினில் சுமந்து கல்லறையில் துயில் கொள்ளும் எமது மறைந்த மாவீரர்களின் தாயகக் கனவை நினைவாக்குவோம்..

மாவீரர்களது தாயகக் கனவை நினைவாக்க எங்களுக்குள் இருக்கும் போர்க்குணத்தை மேலும் வளர்த்துக் கொள்வோம். ஆயுதம் ஏந்தாத போராளிகளாக களத்தில் நிற்போம் எனச் சூளுரைப்போம்! அடிமை விலங்கை உடைத்து எமது விடுதலையை வென்றெடுப்போம்.

மாவீரர்கள் நீங்களே மறப்போமா நாங்களே?
ஒளிமுகம் தோறும் புலிமுகம் காட்டு
குல தெய்வம் போல உம்மைக் கும்பிடுவோம் நாங்கள்
உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
அது பதுங்குகுழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்
அது பத்துமாதம் சுமந்த வயிற்றை தடவிப் பார்த்துச் சிரிக்கும்
இறந்தவர் என்றா மறப்போம்? உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்
கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகைச் சுடர்கள் விரிக்கும்
தலைவன் உரையை எழுந்த உம்மைக் களங்கள் ஆட அழைக்கும்

மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!
குலதெய்வம்போலே உம்மைக் கும்பிடுவோம் நாங்களே!

– நக்கீரன்

மாவீரர்நாள் 2009 கொள்கை விளக்க உரை காணொளிகள்

இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை ஒலிவடிவம்,

மாவீரர்நாள் 2009 – சீமான் உரை @ Yahoo! Video

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,
வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கனடா இளையர்வர்களிடம் சீமான் ஆற்றிய எழுச்சி உரை (காணொளியில்)

மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..


உலகையே வியக்கவைத்த

எங்கள் உன்னத வீரர்கள்…..

சரித்திரங்கள் பலபடைத்த
சாதனைச் சிகரங்கள்…..

மலைகளைப் பிழந்து
தமிழன் வீரம் சொன்னவர்கள்….
உலகையே எதிர்த்து நின்று
எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…
உலகச் சதிகளினால்
மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….
இறந்தும் நம் மானம் காக்கும்
தமிழினத்தின் வித்துக்கள்….

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பத்தையாயிரத்துக்கு மேல்
தங்கள் மூச்சுக்களைத் திறந்து
எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….

வியூகம் உடைக்க
வாவென்று அழைக்கு முன்னே..
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்கள்….

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி…
விடுதலையே மேலோங்கி ; அதற்காய்
மரணித்த வீரர்கள்…..

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து…
விடுதலையை சிரசில் வைத்து…
அந்த ஒன்றையே சிந்தித்து….
எங்கள் மனங்களெல்லாம்
உரம் தூவிச் சென்றவர்கள்….

அவர் ஆசைப்பட்ட ஓர் உடை
போராளிக்கான சீருடை….
விரும்பிய ஆபரணம்
கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்….
எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய்
தங்கள் நித்திரை கலைத்தவர்கள்….
நிலம் காடு மேடெல்லாம்
படுக்கையாய் கொண்டவர்கள்….

மானிட உருவில் வந்த
தமிழின் மானம் நீங்கள்…..
விடுதலைக் கனவை மட்டுமல்ல
வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்…
மரித்தாலும் உயிர்த்து எழ
நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல….
மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட
எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்…

கார்த்திகை இருபத்தியேழு
உம் கல்லறையை வணங்கிடும் நாள்….
கார்த்திகை பூவினால்
உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்…
மாவீரர் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றிடும் நாள்..
எம் மனமும் உன் ஆன்மாவும்
கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்…

உம் லட்சியம் வெல்வோம்
இதை இன்று சத்தியமாய் கொள்வோம்..
உன் சாவின் கனவுகளை
நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…


by nerudal

– இளங்கவி

எரிமலையெ உன் வீச்சு தமிழ் மூச்சென்று குமுறு


உயிரோடு உயிராகிய உத்தம வீரர்களே.. நீங்கள் உங்களை கரைத்தது எங்கள் உதிரத்திலா

பயிருக்கு வேராகி நமக்கும் வீரத்தை ஊட்ட.. விதையாக விழுந்த கண்மணிகளா

எனக்கு மட்டும் நலம் தேடி நான் வாழ… பிறர்க்காகவும் வாழும் எண்ணம் படைத்தீரே

நீங்கள் தினம் எழுந்து கண் விழித்தது இனமான தாய் முகத்திலா

உன் அயலவனாகத்தனே நானும் வாழ்ந்தேன்.. உன்தன் எண்சான் உடம்புக்குள் மடடும்

என்சனத்தின் உணர்வு விண்ணாக உயர்ந்தது எப்படி

நாற்திசை எங்கும் நெருப்பு இருப்பினும் கீழ்த்திசை வெளிக்கும் என்ற உறுதியுடன்

போர்த்திசை மேவிய புண்ணியர்களே

november27வீரம் விளைந்த மண்ணில் செங்குருதி தெளித்து புது வேதம் படைத்துச் சென்றவரே.

ஈரமற்ற என் இதயத்தை ஏன் இப்படி மாற்றி இரவு பகலாய் அழச் செய்தீர்

தாரமும் சேயும் கண்ணில் நீர்மல்க பேழைக்குள் விதையான முத்துக்களே

சொந்தங்கள் வீசும் சுகந்தங்களுக்குள் நாங்கள் மெய் மறந்து கிடக்க விடுதலை தீயில்

வெந்தெங்கள் வாழ்வுக்காய் எப்படிச் சென்றீர்

அனலாகிக் கொதித்த தாய் மண்iணில் புனலுடன் கலந்த செந்நீர் வரைந்த வரளாற்றின்

நாயகர்களே

மணலாகிய கல் தோன்ற முன் இந்த இனம் தோன்றியதை நிருபிக்க தாய் மண்ணோடு கலந்தவரே

எங்கள் உடலோடு உறைகின்றது உங்கள் உணர்வு.. அது நரம்போடு இணைந்திட உயர்கிறது தாய்மண் ஆர்வு

உங்ளைத் தேடி தினம் கடக்கும்; பல கோடி முகங்கள் பார்த்தும்.. கணாது அகம் வாடி வாழும் வாழ்வு எமக்கு

எங்களை விடடுச் சென்று எங்களை எமக்கு தொட்டுக் காட்டியவரே..

அடிமையென்றும் ..அகதியென்றும்.. நாடற்றவர்..கோழை.. துரொகியென்றும்.. என்றும் எம்மை வகைப்படுத்தியவரே..

பாதை வகுத்து தந்தவரே பயணத்தை நெறிப்படுத்தியவரே.. தடைகளை உடைக்கும் உறுதியை தந்து நாட்டுப் பற்றாளராக எம்மையும் மாற்றிட செய்தவரே..

மாற்றத்து ஏற்றமாகி விடுதலைப் பயிருக்கு செங்குருதி இறைத்தவரே.. தோற்றமடைந்தது சுதந்திரச் செங்கொடி உலகச் செவ்வாணத் தமிழன் கையுயர

போர் ஓயும் காலம் ஒன்றின் கட்டாயம் வல்வினை வல்லரசுகளின் கூட்டுபாயத்தால் வலிக்க

வேரகழா மதியுபாயம் மிக்க சரணடைவுத் தற்கொடைக்கு புது விதிமுறை தந்தவரே

இன வெறியர் முன் வெள்ளைக் கொடியுடன் நீங்கள் நின்ற உறுதி என்றும் வாழ்கிறது..

பிணந்தின்னி சிங்களநரிச் செயலை இப்பருதிக்கு வெளிச்சமாக்கிய சூரியர்களே

இனவெறி ஆட்சியாளனின் கொட்டம் அடக்க புதுவழி தந்த புண்ணியர்களே

பிஞ்சுகளின் வதனம் சிதைய வஞ்சிகளின் உயிரும் துடிக்க நடக்கும் கொடுமை தாங்காது ரத்தம் கொதிக்கிறது.. வித்தாகி விழுந்தவih சாட்சியாக்கி பெற்ற எங்கள் அகதிவாழ்க்கை சுடுகிறது

குருதியின் சேற்றில் உயிருடன் இழுத்து வந்து.. முதுகில் உதைந்து தமிழனின் பின்புறம் நின்று சுட்ட கோழைச் சிங்களனை எப்படி நான் சகித்துக் கொள்வேன்..

அடக்கு முறைக்குள் என் உறவின் இரத்தம் குடிக்கும் ஆட்சியாளனை எப்படி நான் கட்டித் தழுவுவேன்

கூட்டினில் உறங்;கிய காலம் போதும் புலியென போற்றப் படுபவனே சிறுநரிகள் வேட்டை உன்னை அழிக்குமா

பூனையும் சூடுபட்டு புலியாகும் ..புலியே நீ புயலாக மாறவேண்டாமா..

தமிழ் அகமே எழுந்துவா.. நாம் தமிழர் அணிசேர்வோம்.. நீ துணிந்தாள் மலையும் கடுகாகி ஓடும்

கடமை பெரிது பயணம் பெரிது தலைவன் ஆணைவர சேனைதிரண்டு வா

வேற்றிடம் தேடி வந்து குளிர் வெப்பத்துள் இன்னும் எங்கள் இருப்பு வேண்டுமா

போர்ப் பறை முழக்கம் உலகம் சேர்ந்து கொட்டியபோதும் வாய்ப்பு ஒன்றை பெற்ற தமிழர்; வீரம் உலக வானை முட்டியது

நீங்கில் உயிர் உடல் விட்டு போகட்டும்.. தமிழ் வாழ சாவினில் கலந்தான் இத்தமிழன் வாழ்வதற்காக வீழ்ந்தான் என்றதுதான் எங்கள் வரலாறு

தீவினில் இருநாடுகள் தோன்றி தீந்தமிழ் ஓங்கும் காலம் கூடும் திக்கெங்கும் தமிழன் புகழ் ஓங்கப் புறம் பாடு

நாங்கள் இருக்கின்றோம் வாருங்கள் நீங்களும் என்று வேங்கைகள் குரல் கேட்கும்

தாங்கும் துயர் எதையும் தாங்குவோம் தமிழ் வாழ.. எம் மண்மீள களப் புண் பல நூறாயினும் வாங்குவோம்

பன் நெடும்காலம் காத்து வந்த மரபு மண்ணோடு புதைந்து போகாது நிலைக்க

கண்ணோடு மைதடவி வாழ்ந்த பொண்கள்.. களப் புண்ணோடு கிடக்கும் காட்சி கண்டோம்

தென்நாடு எங்கும் தமிழன் வாழந்த அந்த பொன்னாடு இன்று எங்கே

மண்ணாளும் உரிமை தமிழனுக்கில்லை என்று நாயைப் பின்னாலும் தொடர்ந்து வந்தவன் சொன்னான்..

விண்ணாளப் பிறந்து மலைத் தோள் சுமந்தவனே பின்னாலே பிறந்த மொழிக்கெல்லாம் நாடுண்டு

இந்நாளும் பொழிவோடு வாழும் மூத்த மொழிக்கு உன்னால்தான் முடியும் எந்நாளும் தமிழ் வாழ மகுடம் சூட்டு

வாடுதல் சோர்தல் தளர்தல் நீக்கம் கண்டு தேடுதல் வேண்டும்

கூடித் தொழில் செய்வோரெல்லாம் தமிழ் வாழப் பாடவேண்டும்.

நாடெங்கும் அலைந்தாலும் வீடு ஒன்று சொந்த மண்ணில் நிறுவவேண்டும்.

தன்மானத்தோடு நீயும் நானும் தமிழன் பெயர் பொறித்த வீதியில் உலவவேண்டும்..

தாயகத்த்தில் பிறந்தவர்களில் ஆயிரத்தில் ஒருவன் நீ..

மரமிருந்து விழும் கனிகள் வேருக்குத் தூரமமாய் விழுவதில்லை

மண்பிரிந்து நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகள் தாயகத்தை மறப்பதில்லை

சும்மா விட்டு விடமுடியாது.. வக்கிரகங்களை புதைத்துவிட்டு வாழ்க்கையை தேடு;.

ஆக்கிரமிப்புகளை மீறி நாம.;.. தொலைத்த எங்கள் புண்ணிய பூமியை நாடு..

சரியாக எதையும் செய்ய தெரியாத உனக்காக இன்னும் எத்தனை தமிழன் வித்தாகவேண்டும்..

பிறந்தபோது உன் உடலில் ஒட்டிய மண்ணை நீ தட்டிவிட்டாலும் இன்னும் உன் இதயத்தில் எங்கோ ஒட்டிக் கிடக்கிறது

ஒரு வக்கிரமான மனித குலத்தில் இருக்கக் கூடிய அத்தனை உக்கிரமான குணங்களால் உன் மனம் உக்கிப் போனாலும்

உன் பசுமையான தேச நினைவுகள் சுதந்திரத் தளிரை துளிர்த்துவிடச் செய்துவிடும்

அணல் பூத்த நெருப்பே உன்கையில்தான் உன் இருப்பே.. மண்ணை மறக்க முடியாமலும் அதற்காக இறக்கமுடியாமலும் உன்னைப் போல் இங்கு பல உணர்வுகள் புழுங்கித் தவிக்கிறதே.. எரிமலையெ உன் வீச்சு தமிழ் மூச்சென்று குமுறு…

– நெருடலுக்காக மணிவண்ணன்

ஒரு நாள் நிமிரும் எம் தேசம்

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

maveerar-naal3வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

ஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்களை தாக்கியழித்த சமர் நேற்று நடந்திருந்தது. பலாலி பெரும் கூட்டு படைத்தளத்தின் கிழக்கு பகுதியில் 4.5 கிலோமீற்றர் காவலரண்களை தாக்கி அழித்திருந்தனர். அந்த நடவடிக்கையில் காயப்பட்டோர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அது மட்டுமன்றி வன்னியில் இருந்தும் தென் தமிழீழத்தில் இருந்தும் மன்னாரில் இருந்தும் கடல்வழியாக காயப்பட்ட போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதே வேளை மாவீரர்களின் வித்துடல்களும் கிளாலி கடல்வழியாக ந்து கொண்டிருந்தன.

இதற்கு காரணம் 1992 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தின் வட தமிழீழ மிகப்பெரும் படை நடவடிக்கை எடுப்பினை சீர்குலைக்கும் தாக்குதல்களை நடாத்தியதும் தென் தமிழீழத்தில் படை நடவடிக்கைகளை முறியடித்ததும் ஆகும். 1992 ம் ஆண்டினை ஓர் வெற்றி ஆண்டாக தமிழ்ழிழ தேசமும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் கொண்டாடினர். அந்த வெற்றிக்காக தமது உயிரையும், குருதியினையும்,அங்கங்களையும் கொடுத்த போராளிகளை மக்கள் வாழ்த்தினர். கூடவே மாவீரர் நாளில் அந்த மாவீரர்களுக்காக தமிழீழத்தின் திக்கு திசை எங்கும் மக்கள் தமது இடங்களை அழகு படுத்தி அந்த அழகில் மாவீரர்களை நிறுத்தினர் என்றே சொல்லவேண்டும்.

பலாலி கிழக்கு இராணுவ வேலிகள் தகர்ப்பு தாக்குதல் அப்போது அரச படைகளுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்து இருந்தது ஏனெனில் 1992 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடா நாட்டில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள இருந்தது. ஐந்து முனைகளில் இந்த தாக்குதலினை நடாத்த அரச படைகள் தயாராகி கொண்டிருந்தனர். மண்டைதீவு வழியாக , பலாலி ஊடாக,அனையிறவு இயக்கச்சி ஊடாக, கட்டைக்காட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு ஊடாக, அராலிதுறையூடாக ஆகிய முனைகளில் தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்ட பல முறியடிப்பு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.

இதன்படி குடா நாட்டை கைப்பற்றுவதற்கான படை நடைவடிக்கையினை வழி நடாத்தவிருந்த சிங்கள தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, ஜெயமகா உட்பட 09 அதிகாரிகள் அராலியில் கண்ணீவெடி தாக்குதலில் 1992.08.08 அன்று கொல்லப்பட்டனர். மேஜர் கார்வண்ணன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தினார். அதன் பின்னர் கட்டைக்காட்டில் உள்ள படை நடவடிக்கைக்கான ஆயுத கிடங்கின் மீது 1/10/1992 ம் ஆண்டு அதிகாலை விடுதலைப்புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், மகளிர்படையணி ஆகியன இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இயக்க வரலாற்றில் (1992வரை) முதன் முறையாக பெரும் தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்ட சமராக அப்போது அமைந்தது. இந்த சமரில் மேஜர் கார்வண்ணன் வீரச்சாவு அடைந்தது பேரிழப்பாக இருந்தது.

இதே நேரம் தென் தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் தமது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜயபார இராணுவ நடவடிக்கையானதும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றினையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் பூனகரி இராணுவ முகாமின் இராணுவ வேலிகளும் தாக்கி அழிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் 1992 ம் ஆண்டினை வெற்றியாண்டாக பதிவு செய்துள்ளனர். காரணம் போருக்கு தேவையான பெரும் தொகையான ஆயுத வெடிப்பொருட்களை எதிரியிடம் இருந்து மீட்ட ஆண்டு, வட தமிழீழ மிகப்பெரும் படையெடுப்பினை முறியடித்து அதன் தளபதிகளையே கொன்றொழித்த ஆண்டு. இவ்வாறாக நமது வெற்றிக்கு உயிர் கொடுத்தது மட்டுமன்றி எதிர்கால போராட்டத்திற்கே உயிர்கொடுத்து ஆயுதங்களை பெற்று தந்த அந்த மாவீரர்களை போற்றுவோம்.

அதே நேரம் உயிர்கொடுத்து பெற்ற ஆயுதங்கள் இன்று எதிரி கைக்கு போவதனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் மனம் கனக்கின்றது என்றாலும் இந்த நேரத்தில் ஒரு ஆயுதத்தை கொடுத்து பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் சில வேளை எங்கள் மாவீரர்கள் மன்னிப்பார்கள். ஏனென்றால் நாட்டின் மீது கொண்ட அதே பாசம் மக்கள் மீதும் போராளிகள் மீதும் அவர்களுக்கு இருந்தது.

கொடிய போர்கள் நடந்த ஜயசிக்குறு காலப்பகுதியில் எமது ஒரு நேர சாப்பாட்டை நிறுத்தி பட்டிணி கிடக்கும் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன ஒரு மாவீரனை இந்த நேரத்தில் நினைவு கூருகின்றேன். அந்த மாவீரனின் சகோதரன் இந்த வருடம் இரணைப்பாலை ஆனந்த புரம் சண்டையில் படுகாயமடைந்து தற்போது இராணுவத்தின் சிறையில் இருக்கின்றான்.

தாயகத்தில் யாரும் யாருக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தமது பிள்ளைகளுக்கு தமது வீட்டில்கூட நினைவு கூர முடியாத நிலையில் இருக்கின்றது தமிழீழம். வெற்றி ஒலிகளில் மாவீரர்களை போற்றிய தமிழீழம் இன்று வேதனை ஒலிகளாலும் வலிகளாலும் தளர்வுற்று காணப்படுகின்றது. என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது.

Up ↑