விடுதலைப் புலிகளால் திருகோணமலை கைப்பற்றப்பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணப்பட்டது.

திருகோணமலை படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்களும், கடற் பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறீலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. எனவே, அதனைத் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் அது இறங்கியது. திருகோணமலையில் இந்தியாவிற்கு சொந்தமான எண்ணைய்க் குதங்கள் மட்டுமல்ல பல பொருளாதார நலன்களும் இருக்கின்றன. இவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது திருகோணமலையில் தனது இருத்தலுக்கான ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்துவிடும் என்பதே இந்தியாவின் அவசர நடவடிக்கைக்கு காரணம்.

திருகோணமலையை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அங்கிருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டும் என்ற முடிவுக்கு இந்தியா வந்திருந்தது. எனவேதான், கிழக்கில் மகிந்த எடுத்த படையயடுப்பிற்கு இந்தியா தனது ஆதரவுகளை வழங்கியது. வெளிப்படையாகச் சொல்வதானால், திருகோணமலையில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை இந்தியாவே தூண்டிவிட்டது. மகிந்தவின் ‘கிழக்கின் உதயம்’ என்ற கருத்துருவாக்கமும் இந்தியாவிடம் இருந்து வந்த கருத்துருவாக்கமே என்பது திடமானது. அத்துடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில பிரதேசங்களையும் ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால நோக்கங்களில் ஒன்றாக இருந்து.

திருகோணமலையில் புல்மோட்டை தொடக்கம் மூதூர் வரையான கடற்கரை பிரதேசங்கள் பல வளங்களைக் கொண்டிருக்கின்றது. இதில் கனிம வளங்கள் மிக முக்கியமானவை. இதனை தனதாக்கிக் கொள்வதில் முன்னர் ஜப்பான் அரசு கடுமையாக ஈடுபட்டுவந்தது. சில வருடங்களுக்கு முன் புல்மோட்டையில் ஜப்பான் கொண்டு செல்வதற்காக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டிருந்த கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம். எனவே, இவ்வாறான வளங்கள் நிறைந்த வசதியான இடங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இந்தியா சிறீலங்கா அரசுக்கு உதவிகளை வழங்கத் தொடங்கியது. இந்தியப்படை அதிகாரிகளின் ஆலோசனைகள் சிறீலங்காவிற்கு வழங்கப்படுகின்றன.

இதில் படைத்துறை சார்ந்த உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்திய அதிகாரிகள் கிழக்கில் நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பது அன்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், 2007ம் ஆண்டு வவுனியா யோசப் படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் “இந்திரா-02′ றேடர் சேதமாக்கப்பட்டதும், இதன்போது இந்திய அதிகாரிகள் காயமடைந்ததையும் பின்பு காணக்கூடியதாக இருந்தது. எனினும், கிழக்கில் அவர்கள் இருந்ததற்கான ஆதாரங்களுடனான தகவல்கள் எவற்றையும் வெளிக்கொண்டுவர முடியவில்லை. எனினும், திருகோணமலையில் இந்தியாவிடம் இருந்த எண்ணைக் குதங்கள் போன்றவற்றின் பாதுகாப்பிற்காக இந்தியப் படைகள் அங்கு நிலைகொண்டுள்ளன என்பதுடன், தொழில்நுட்ப கருவிகளையும் வைத்திருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

திருமலையில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்றுவது என்ற நோக்கில் படைநடவடிக்கை பெரும் எடுப்பில் ஆரம்பமாகின்றது. மூதூர் பகுதியில் இருந்தும் படையினர் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க நகர்கிறார்கள். இதனால், சுமார் 80,000 வரையான மக்கள் வாகரை, வெருகல் பிரதேசங்களில் முடக்கப்படுகிறார்கள். பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு மக்கள் பட்டினியால் வதைக்கப்படுகிறார்கள். இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்குறிப்பிடப்படும் இடங்கள் மீது சிறீலங்காப் படையின் மிக், கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. இவற்றில் மக்கள் கொல்லப்படுகிறார்கள், காயமடைகிறார்கள். ஆனால், சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால் சர்வதேசம் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்களை திசை திருப்பும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு திட்டமிட்ட வகையில் செய்திகளை வெளியிடுகின்றது.

திருமலை துறைமுகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடுதலைப் புலிகளையும், அவர்களின் பீரங்கிகளையும் அழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்று சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதனையடுத்து ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேசங்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை சிறீலங்காவின் முப்படையினரும் மேற்கொள்கின்றார்கள். வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக வெருகல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. திருகோணமலை என்ற பெயருக்கு அமைவாக இங்கு மலைகள் அதிகம் காணப்படும். அந்தவகையில் வெருகல் பிரதேசத்திலும் மலைகள் காணப்படுகிறன. மகாவலி கங்கையின் ஒரு கிளை ஆறாக, வெருகல் ஆறு உள்ளது. இந்த ஆற்றினை அண்டியே வெருகல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

சிறீலங்காப் படையினரின் தாக்குதல் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் பெருமளவில் வெருகல் ஆறு, மற்றும் முருகன் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்தார்கள். இம்மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சிலவற்றை அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பினை படையினர் ஆக்கிரமிக்க தயாராகின்றார்கள். இந்த முயற்சியைத் தடுப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகுதி போராளிகள் நகர்த்தப்படத் தயாராகின்றார்கள். எனினும், சில காரணங்களால் இவர்களின் நகர்வு பின்னர் இடைநிறுத்தப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அதேவேளை, திருகோணமலையில் இருந்த காயமடைந்த போராளிகள் காட்டுப்பகுதி ஊடாக மட்டக்களப்பிற்கும் ஏனைய பகுதிக்கும் நகர்த்தப்படுகின்றார்கள். வெருகல் பகுதி மீது பல்குழல் தாக்குதல்களை படையினர் நடாத்துகின்றார்கள். கிபீர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றன. தளபதி சொர்ணம் நிலைகொண்டிருந்த பகுதிகளை இலக்குவைத்து சிறீலங்காவின் வான்படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இலக்குகளை படையினர் அறிந்துகொண்டே தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தத் தாக்குதல்களுக்கு பின்னால் பலம் வாய்ந்த கரங்கள் இருக்கின்றன என்பதை உணரக்கூடியதாக இருந்தது. மக்கள் வாழ்விடங்களிலும் தாக்குதல்கள் கடுமையாக இருந்து மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து சிறீலங்கா அரசு மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தாக்குதலை நடத்துவதற்கு சிறீலங்கா முனைகின்றது.

மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா உத்தரவிடுகின்றது. ஆனால், மக்கள் அங்கிருந்து வெளியேற மறுக்கின்றார்கள். இதனால், விடுதலைப் புலிகள் மக்களை பணயமாக வைத்திருக்கின்றார்கள் என்று இன்னொரு பொய்யான குற்றச்சாட்டையும் சர்வதேச ரீதியாக சிறீலங்கா அரசு முன்வைக்கத் தொடங்கியிருந்தது. எனவே, சிறீலங்கா அரசின் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார்கள். மக்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நேரில் வந்து மக்களிடம் நிலைமையை கேட்டறிந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றார்கள். இதற்கமைவாக கந்தளாய் ஊடாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வெருகல் பிரதேசம் செல்கிறார்கள். அவர்கள் அங்கு சென்றிருந்தபோது நிலைமை மேலும் மோசம் அடைகின்றது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு