சமாதான உடன்படிக்கைக்கு முரணாக சிறீலங்கா செயற்பட்டுக் கொண்டிருந்த போதுதான், விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையை மூடுகின்றார்கள்.

போரினால் மட்டுமல்ல இயற்கைப் பேரனர்த்தமான ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதற்கு முனையாத சிறீலங்கா, அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு போர்க்கால நிலை போன்று ஏற்படுத்திய நிலையில்தான், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள்.

2006ம் ஆண்டு யூலை 22ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன. இது மூடப்பட்டதும், இரு தரப்பினரும் சில காலம் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், மக்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட சிறீலங்கா இறங்கியோ, இணங்கியோ வராத நிலையில், பிரச்சினை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குச் செல்கிறது.

இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் அணையைத் திறந்து விடுவதற்கு விடுதலைப் புலிகள் சம்மதிக்கின்றனர். ஆனால், பேச்சுக்கள் மூலம் அணையை திறப்பதற்கு மறுத்த படையினர், தாக்குதல் மூலம் அணையைத் திறப்பதாக அறிவித்துவிட்டு கடுமையான முன்னேற்றத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். இந்நிலையில்தான் படையினரின் முன்னேற்ற நகர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும், திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் பலத்தினைக் காட்டுமுகமாகவும் ஓகஷ்ட் மாத ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை மூதூர் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்கின்றார்கள்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் பலத்தினைக் காட்டுமுகமான தாக்குதலாக இது இருக்க வேண்டும் எனக் கருதிய விடுதலைப் புலிகள், சிறீலங்காப் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து வகையில் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றார்கள். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இதற்கான தாக்குதல் திட்டத்தினை தளபதி சொர்ணம் வகுத்துக்கொடுத்தார்.

தாக்குதல் கடல்வழியாகவும் தரை வழியாகவும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. தரைப்பகுதியில் வெளிகளினூடாக கடந்து சென்று கட்டைபறிச்சான் ஜி.பி.எஸ். படைமுகாமினைத் தாக்கி அழித்து அங்கிருந்து 45ம் கட்டைபறிச்சான் படைமுகாம் சென்று தாக்குதல் நடாத்துவது.

கடல்வழியாக மூதூர் இறங்குதுறை மீது தாக்குதல் நடத்தி மூதூர் நகரத்தை மீட்பது. பின்பு அங்கிருந்து கொண்டு தம்பலகாமம், ஆலங்கேணி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி மூதூரின் பிரதேசத்தை முற்றுமுழுதாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தது. புலனாய்வு தகவல்களைக் கொண்டு இழப்புக்களை குறைத்து படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் திட்டம் மிகக் கவனமாக வகுக்கப்பட்டிருந்தது. எனினும், மூதூர் பிரதேசம் என்பது பெரிய பிரதேசம். தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது. இதில் முஸ்லீம் மக்கள் தாக்குதல் நடத்தும் இடங்களில் அதிகம் வசித்து வந்தார்கள்.

எனவே, ஒரு வலிந்த தாக்குதல் திட்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல் திட்டம், இறுதியில் ஒரு முறியடிப்பு தாக்குதல் வடிவமாக மாற்றப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தற்கு மாறாக தாக்குதல் தொடங்குவதற்குள்ளாகவே மூதூர் பிரதேசத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து படையினர் எல்லாரும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள். அருகில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் கூட தாக்குதல் அச்சத்தால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். எனினும், மூதூரில் குறிப்பிட்டு கூறக்கூடிய படைமுகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு படையினரின் இராணுவ தளவாடப் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன. மூதூர் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கைகளில் முழுமையாக வந்ததடைந்தது.

இருந்தும் மீட்கப்பட்ட இடங்களை தக்கவைப்பது என்பது கேள்விக்குரிய விடயமாகின்றது. அதாவது, விடுதலைப் புலிகளின் கைகளுக்குள் இலகுவாக விழுந்த பரந்த பிரதேசத்தில் அரண் அமைத்து தக்கவைப்பதற்கு காலம் மட்டுமல்ல, போராளிகளும் போதாமல் இருந்தனர். அதிக இழப்புக்களும் அழிவுகளுமின்றி மிக இலகுவாக வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தை தக்க வைக்க முடியாமல் போராளிகள் தங்கள் பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டிய ஒரு இக்கட்டான நிலை எழுந்தது. அதேவேளை, இராணுவ முன்னேற்றங்களுக்கு கருத்துக் கூறாத சர்வதேச நாடுகளும், விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை மதித்து தமது பழைய நிலைகளுக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

இந்நிலையில், போராளிகள் மீண்டும் தங்களது பழைய நிலைகளுக்கு திரும்பினார்கள். மீண்டும் அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தது சிறீலங்கா இராணுவம். இந்த ஆக்கிரமிப்பின்போது அங்கு தங்கியிருந்த மக்கள் பலரைப் படுகொலை செய்தது. இதில் குறிப்பாக பிரான்சின் பட்டினிக்கு எதிரான (அக்சன் கொந்ர லா பம்) அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் மிகக்கொடூரமாகப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதற்கிடையில், மாவிலாற்றை திறப்பதற்கு பொது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஊடாக தமிழ்த் தலைவர்கள் சிலர் சமரச முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இதில் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தலைவராக இருந்து, பின்பு சிறீலங்கா துணை இராணுவ ஒட்டுக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விக்னேஸ்வரன் (மாமனிதர் விக்னேஸ்வரன்) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்டோர் சிங்கள அதிகாரிகளுடனும், சிங்களத் தலைவர்களுடனும் கதைத்து இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முனைகின்றார்கள். அதிலும் எதுவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. (இவர்களின் தமிழின உணர்வு தொடர்பாக தொடரும் பாகங்களில் விரிவாகத் தருகின்றோம்.)இதேவேளை, மாவிலாற்று அணை விவகாரம் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான பேச்சுக்களின் முடிவில் மனிதாபிமான அடிப்படையில் நீரைத் திறந்து விடுவதற்கு விடுதலைப் புலிகள் முடிவு செய்கின்றார்கள்.

இதனடிப்படையில் 06.08.2006 அன்று அணையைத் திறப்பதற்காகச் சென்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரும் சிறீலங்காப் படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். எழிலனும், கண்காணிப்புக் குழுவினரும் மயிரிழையில் உயிர்தப்புகின்றனர். பின்னர் 08.08.2006 மாலை ஐந்து மணிக்கு அணை திறந்து விடப்பட்டது. எனினும் தமது போர் நடவடிக்கையை கைவிடாத சிறீலங்கா இராணுவம் அணையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மாவிலாறு நோக்கி மறுநாள் ஒன்பதாம் திகதி காலை நகர்வை மேற்கொண்டனர். அந்த நகர்வு விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டதையடுத்து, மறுநாள் 10ம் திகதியும் பெரும் எடுப்பில் படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது 40ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பல படையினர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். இந்த முயற்சியும் தோல்வியிடைந்ததையடுத்து கடுமையான விமானத் தாக்குதல்களைத் தொடங்கிய படையினர் அணைக்கட்டை தாக்கியழிக்கும் நோக்குடன் அதனை இலக்கு வைத்தும் கடுமையான வான் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக 12ம் திகதி விடுதலைப் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணி திருகோணமலைத் துறைமுகம் மீது கடுமையான ஆட்டிலெறித் தாக்குதலை நடத்தியது. எனினும், தொடர்ச்சியாக தரை வழியாக முன்னேற படையினர் முனைந்தனர். இவர்கள் மீது விடுதலைப் புலிகளின் அணிகள் சிறப்பாக தாக்குதல் நடத்துகின்றார்கள். காட்டுப்பகுதியில் பொறிவெடி, மிதிவெடி என்பவற்றில் படைகள் சிக்கி பெரும் இழப்புக்களைச் சந்திக்கின்றார்கள்.

திருகோணமலையில் படையினருக்கு ஏற்பட்டு வந்த தொடர்ச்சியான பேரிழப்புகள் விடுதலைப் புலிகளின் பலம் குறித்த அச்சத்தை இராணுவத்தினர் மத்தியில் ஏற்படுகின்றது. மிகக் குறுகிய காலத்தில் பல படை முகாம்களைத் தாக்கியழித்து விடுதலைப் புலிகள் மிக வேகமாக முன்னேறியது எதிர்காலத்தில் படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை சிங்கள தரப்பிற்கு உணர்த்தியது.

கருணாவின் பிரிவும், சமாதான காலமும் விடுதலைப் புலிகளின் பலத்தை பெருமளவில் குறைவடைய வைத்திருக்கும் என்று நம்பிய படையினருக்கு மட்டுமல்ல சிங்கள அரச தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவே, திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சிங்கள தலைமையான மகிந்தவின் ஆழ் மனதில் உருவாகிக்கியது எனலாம்.

இத் தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலையில் சிறீலங்கா கடற்படையினரின் மிதக்கும் மினிமுகாம் எனப்படும் அரசின் டோறா கலங்கள் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்படுகின்றன. திருகோணமலை துறைமுகத்தின் நிலை கேள்விக்குள்ளாகின்றது. இது பன்னாட்டு வணிக நடவடிக்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.அதாவது திருகோணமலைக்கு வரும் வணிகக் கப்பல்கள் அங்கு வர மறுக்கின்றன.

இது சிறீலங்கா அரசிற்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. குறிப்பிட்டுக் கூறுவதானால் துறைமுகம் சிறீலங்கா இராணுவத்தின் கைகளில் இருந்தாலும், திருகோணமலைக் கடல் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. இது சிறீலங்காவினை விட அருகிலுள்ள இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு