Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2009

விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!

19-06-1961 – 27-11-1982

தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் “பூந்தோட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.

“புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்’ என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள “ஈழப் போர்முனையில் புலிகளுடன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந் நூலில் அவர் மேலும், “போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, “தன்பிரீன் தொடரும் பயணம்’ என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், “விடுதலைப்புலிகள்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: “நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.

தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், “என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்’ என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. “நடுகல்’ வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.

-பாவை சந்திரன்

பிரபாகரன் போராளியானது ஏன்?


ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் “தரப்படுத்துதல்’ என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, “மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு – தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்’ என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, “நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்’ என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, “இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை’ என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

“இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. “இளைஞர் அணி’ ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்’ என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.

பாவை சந்திரன்
தினமணி

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், “இலங்கைக்கு இப்போது செல்வதோ – குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை’ என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், “செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்’ என்று அவர் தடுத்தார்.

இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை “செட்டியை’த் தொடர வைத்தது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு “தமிழ்ப் புதுப்புலிகள்’ (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

“செட்டி’யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், “என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது – முடிந்தால் அவரைத் திருத்துவேன்’ என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

“”பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது” என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான “விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு’).

அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: “”ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்” என்றும் கூறுகிறது.

தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், “”அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது” என்று தெரிவிக்கிறது.

இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், “”கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்” என்றும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், “”எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்” என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் “விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

“ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக’ இவர்களின் வெளியீடு கூறுகிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் “ஆவ்ரோ’ விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.

தினமணி

கேணல் ராயு/குயிலன்

கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

rajuஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

~ ~ ~

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

~ ~ ~1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுநாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன’ப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்


ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?

pandara_vanniyanஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.

ltte_arty

அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.

விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.

புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.

யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.

ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.

தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.

rajuஅவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.

விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.

இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் – சாவடைந்தார்.

மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்


விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர்,

மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.

வான்புலிகளின் முதல் உருவாக்கம் தேசியத் தலைவர் -காணொளியில்

உயிரம்புகள் கதை மற்றும் திரைப்படம்


அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், தமிழீழ மக்களின் போரியல் முறைகளில் ஒன்றான உயிராயுதம் தாக்கி இருக்கும், மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி –

அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வித்தியாசமான முயற்சி எனலாம். இதுவரை இதுபோன்றதொரு திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. என்ற நிலை இருந்தது. இத்திரைப்படம் மூலம் அக்குறை தீர்ந்துள்ளது என உணரப்படுகிறது.

நீண்டகாலப் பெருமுயற்சியின் வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். முதலில் சிறந்த வலுவான கதையை தெரிவு செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். உயிரம்புகள் மூலம் வீடியோத் திரைப்பட உலகிற்குள் முதன்முதலாக ஊடக இல்லம் நுழைந்துள்ளதும் அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.

இவ்வீடியோ திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்திருக்கும் அல்பேட் பவுலசின் முயற்சி சாதனைக்குரியது. ஏனெனில் ஒரு இளைஞன் தன் வீடியோக் கமரா மூலம் அற்புதங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு அடையாளமாக உயிரம்புகள் வீடியோத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை இயக்கம் எனப் பல்துறை நிபுணராக நின்று படத்தை வெற்றிகரமாக இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார். அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான்.

சராசரி சினிமா உலகம் அல்லது திரைப்பட உலகம் என்பது விசாலமானது அதற்குள் தாக்குப்பிடிப்பது என்பது கடினமானது தான். இதில் பலர் மூழ்கிப் போனவரலாறுகளே நிறையவுண்டு. இது உலகம் பூராகவும் பொருந்தும். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சினிமா என்பது எவ்வளவு கரடுமுரடான பாதைகளால் கடக்கப்பட வேண்டியது என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பார்கள். ஆயினும் இந்தக் கடின முயற்சியில் ஈழத்தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டு வருகின்றனர். என்பது பாராட்டுக்குரியது. என்பதோடு இத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் திரைப்பட இரசிகர்கள் போன்றோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திரைப்பட உலகின் மத்தியில் உண்டு. அந்த வகையில் ஆதரவளிக்கப்பட வேண்டிய திரைப்படம் உயிரம்புகள் ஆகும்.

இப்போது நாங்கள் உயிரம்புகள் திரைப்படத்தில் மனதில் நின்ற சில காட்சிகள் உங்களையும் கவரும் என்பதற்காக ஒரு சில காட்சிகளைத் தருகின்றேன்.

சிறிலங்கா இராணுவம் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதியில் 250 போராளிகள்; சிங்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து படைத்துறைத் தலைமை ஆலோசித்து எதிரியின் முற்றுகைக்குள்ளாகிய போராளிகளை மீட்பதற்கு தாக்குதல் கட்டளைப் பீடத்தில் தந்திரோபாயமான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு மூன்று பேர் கொண்ட கரும்புலிகள் அணி தெரிவு செய்து அனுப்பப்பட்டு வெற்றிகரமான தாக்குதல் மூலம் இராணுவமுகாம் அழிக்கப்பட்டு 250 போராளிகளும் காப்பாற்றப்படுகின்றனர். இதுவே திரைப்படத்தின் கரு. படம் தொடங்கி முடியும் வரை விட்டுச் செல்ல முடியாதவாறு விறுவிறுப்புடன் நகர்கிறது.

காலையில் அந்தக் கரும்புலிகள் அணி புறப்படுகிறது. அந்த இராணுவ முகாம் மதியம் 12 மணிக்குத் தாக்கப்பட வேண்டுமென இலக்குவைக்கப்படுகிறது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் கடக்கவேண்டும் அதற்கு இவர்கள் கால் நடையாகவே நடந்து சென்று எதிரியின் இலக்கை அடைகிறார்கள். காலையில் இருந்து தாக்குதல் இலக்கு விரையும் வரையும் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன. அந்தக் கரும்புலி அணியில் இடம்பெற்றுள்ள மூவரின் இயல்பான நடிப்பு அனைவர் மனங்களையும் தொட்டுவிடுகின்றது. மூவரும் படத்திற்கு புதிய வரவுகள் தான் ஆயினும் தாங்கள் அறிமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதவாறு அவர்களின் நடிப்பு உரையாடல்கள் என்பன அமைந்திருக்கின்றன.

படத்தில் முக்கியமாகக் கணேஸ்மாமாவைக் குறிப்பிடவேண்டும். அவரது பாத்திரம் எல்லோர் மனங்களிலும் ஒருசுமையை ஏற்படுத்திவிட்டது. கரும்புலிகள் அணி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்து சந்திக்கும் ஆள் கணேஸ்மாமாவே. (அவர் ஒரு நகைச்சுவை நடிகர்) போராளிகளை இராணுவத்திற்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடு;த்துக் கொடுப்பதும், ஆயுதங்களை எடுக்க ஆலமர உச்சிக்கு ஏறுவதும், இடையில் களைத்துப் போய் இருப்பதும் ஏலாமல் வீழ்ந்து விடுவாரோ என எண்ணும் நேரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறுவதும் சுவாரசியமான காட்சியாகும். அவர் ஒரு வயது முதிர்ந்த மனிதராக இருந்தபோதும் மனத்துணிவோடு ஏறுவது இந்தப் போராட்டத்தின் மீது கொண்டிருக்கும் உணர்வைக் காட்டுகிறது.

ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒருவர் எவ்வாறு போராளிகளுக்கு உதவுவதும் அது விடுதலை வேட்கையின் வெளிப்பாடாக இருப்பதும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலமர உச்சியில் மறைந்திருந்த ஆயுதங்களை போராளிகளிடம் கொடுத்துவிட்டு அவர் அடையும் ஆனந்தம் உணர்வாக வெளிப்படுகிறது. கரும்புலி அணி அதனைப் பெற்றுச் செல்வதும் மனதைவிட்டு அகலாதவை. அவரது நடத்தை போராடும் தேசமக்களின் பற்றுணர்வை வெளிக்காட்டும் சம்பவமாகவும் அதுபடத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சியமைப்பாகவும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்ட கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற சசி, நிலவன், கீதன் ஆகியோரின் நடிப்பு அற்புதம். தாக்குதலுக்குத் தயாராக மூன்று கரும்புலிகள் படைத்துறைத் தளபதியால் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது பெண் கரும்புலிப் போராளிகளில் ஒருவரான சசி பேராடுகிறார். இந்தமுறை எனக்கு அந்த வாய்ப்பை தருவதாகக் கூறினீர்கள் இப்போது ஏன் என்னை விட்டுவிட்டீர்கள் என கூறுகின்றாள். அதற்கு இது சற்றுக் கடினமான பணி நீங்கள் கஸ்ரப்படுவீங்கள் எனக் கூறுகிறார் படைத்தளபதி. அப்போது இல்லை எங்களால் முடியும் தானும் தாக்குதல் அணியில் இடம்பெறப் போவதாக வலியுறுத்தி அதில் இணைந்து கொள்கிறாள்.

கரும்புலிப் போராளிகள் பயிற்சிப் பாசறையில் மிகவும் மகிழ்ச்சியோடு பயிற்சி பெறுவதும் தேசவிடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்ய தயாராக இருப்பதும் எந்தச் சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளவர்களாக இருப்பதும் இத்திரைப்படம் மூலம் எம் கண்முன்னே கொண்டு வரப்படுகிறது. கரும்புலி அணிக்குச் சசி தெரிவுசெய்யப்பட்டதுடன் அடையும் மகிழ்ச்சி பெண்களாலும் பெரும் தாக்குதல்களை நடாத்த முடியும் எனவாதிடுவதும் அவரது நடிப்பால் மேலும் வெளிப்படுத்தப்படுகிறது.

250 போராளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கட்டளைப்பீடத்தின் பணிப்பை நிறைவேற்ற வேகமாக நடந்து ஒரு இடிந்து போன வீட்டில் களைப்பாற நுழைகிறார்கள் அது இராணுவத்தாக்குதலால் சிதறிப்போயிருந்தது. அங்கே கூடிக்கதைக்கிறார்கள். நிலவன் சொல்கிறான் இதுதான் எங்கட வீடு இந்த முற்றத்தில் தான் ஓடி விளையாடுறனாங்கள். ஒரு நாள் விளையாடும் போது தங்கையோடு சண்டை பிடித்து அவள் பல்லுடைந்து போய்விட்டது. அம்மா அடிக்க ஓடிப்போய் இந்த மாமரத்தில ஏறிவிட்டன். என தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது யதார்த்தமாக இருந்தது. அது எல்லோர் வீட்டிலும் நிகழும் ஒரு சம்பவமாக மனக்கண் முன்வந்து மோதியது. இராணுவத் தாக்குதல்களால் வீடு வாசல்களை இழந்து போன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அனைவரையும் நெகிழவைத்தது அதுபோன்ற மரத்தடியில் இருந்து சாத்திரம் பார்ப்பதும் பிஸ்கட் சாப்பிடுவதும் கதை அளப்பதும் என எல்லாம் மனதில் நிற்கின்ற சம்பவங்களாக நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.

படத்தின் உச்ச கட்டமாக இராணுவத்தின் ஆட்லறித்தளம் முகாம் மீது கரும்புலிகள் அணி தாக்குதலை தொடர்கின்றனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைக் கண்டு சிங்களப்படை முகாம் கட்டளையதிகாரி துள்ளுவதும், குதிப்பதும் தன் வீரர்களிடம் புலிகளை அழிக்கும் படியும் கூறி கட்டுப்பாட்டுக்குள் வீரவசனம் பேசுவதும் முளிபிதுங்கி பூனைக்குட்டி மாதிரி சுத்தி ஓடுவதும் இறுதியில் சூடு வாங்குவதும் படை முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சியடையும் போதும் நடைபெறும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது.

இதில் குறிப்பாக சிங்களத்தில் படையதிகாரி பேசுவது தமிழ் திரைப்படத்திற்கு புதியமுயற்சி வித்தியாசமானதொன்றாக உள்ளது. அது பின்னிணைப்பாக தமிழில் வருகிறது. மொத்தத்தில் படையதிகாரியாக நடிக்கும் பரமநாதனின் நடிப்பு நன்றாகவிருந்தது.

இறுதிக்கட்ட தாக்குதல் ஓர் ஆங்கிலப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்தயது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்பைத் தோற்றுவிப்பதாக இருந்தது. சராசரி ஒரு திரைக்கதை என்ன நோக்கில் செல்ல வேண்டுமோ அதுமாதிரி அமைந்திருந்தது.

இறுதியில் கரும்புலி அணி இராணுவ முகாமை முற்றுகையிட்டு தகர்த்தழிக்கிறது. நிலவன் வீரச்சாவு அப்போது சசி கீதனிடம் கேட்கிறாள் ஏன் நிலவன் போனவன்? எனக்குத் தானே அந்தச் சந்தர்ப்பம் என்றாள.; ஏன் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இசைப்பிரியனின் இசை படத்தை மெருகூட்டுகிறது. எமது மண்ணின் வாசனையை ஒளிப்பதிவாக்கி தந்த உயிரம்புகள் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒட்டுமொத்தமாக உயிரம்புகள் திரைப்படம் எமது மண் வரலாற்றில் ஒரு சிறந்த பதிவு. புதிய முயற்சியாக விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் காவற்றுறை என்பவற்றின் துணையோடு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போராளிகளின் போர்க்களச் செயற்பாடுகளையும் அவர்களது வீரம் தியாகம் போன்றவற்றையும் இனம் கண்டு கொள்ளக் கூடிய நேர்நிலையில் உருவாகவும் இதனைப் பார்க்கலாம்.

எமது மண்ணின் வீரத்தையும்; ஈகத்தையும் எண்ணி வியப்புற்றிருக்கும் உலகின் முன் இத்திரைப்படமும் ஒரு புதியபார்வையை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது போன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும் இன்னும் இன்னும் வர வேண்டும். ஈழத்தமிழர் திரைப்பட வரலாற்றில் ஊடக இல்லத்தின் முயற்சி பயன் மிக்கது. இது போன்ற படைப்புக்களைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும் அதற்குத் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை வழங்குவர். நல்ல சிறந்த படைப்புக்கள் என்றும் வரவேற்றப்படும் என்ற யதார்த்த நிலைக்கு ஒருமைல் கல்லாக உயிரம்புகள் வெளிவந்திருக்கின்றன.

எமது மண்ணின் வாசனையும் எமது மண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து விடுபட எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்ற செய்தியும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு நடிகரும் தன்பாத்திரத்தை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

குறிப்பாக கரும்புலியாக நடித்திருக்கும் சசி, நிலவன், கீதன் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டனர். அவர்களது இயல்பான நடிப்பு மிகமிகத் தத்துரூபமாக அமைந்து விட்டது. நீண்ட காலமாக இதுபோன்றதொரு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு வழி பிறந்துள்ளது.

தமிழ்ச் செய்திகள்

கடற்புலி மேஜர் வைகுந்தன்


1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.

வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது. எங்களுக்கு அங்கொரு பணியிருந்த காரணத்தால் அந்தப் பற்றைக்குள்ளும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் தேடுதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் தேடிக்கொண்டிருந்தது கிபிர் விமானத்திலிருந்து வீசப்பட்டு வெடிக்காமற்போன இரண்டு குண்டுகளை.

விமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.

56025959_05a9119ad7

அப்படியான அழைப்பொன்று தனக்குக் கிடைத்தபோது, கற்கைநெறியில் இருந்த எம்மையும் அழைத்துச்சென்று சொல்லிக்கொடுப்பதென்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த சந்தர்ப்பமொன்றில்தான் நாங்கள் முப்பது பேர்வரை வந்து வட்டுவாகல் கரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வீசப்பட்ட இரண்டு குண்டுகளை நாங்கள் தேடியெடுத்துச் செயலிழக்கச் செய்ய வேண்டும். நாங்கள் தேடத்தொடங்கி இரண்டு நிமிடங்களிலேயே ஒரு குண்டைக் கண்டுபிடித்துவிட்டோம். மற்றதைத் தேடத் தொடங்கினோம்.

இரண்டாவது குண்டை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
சரி, இப்ப கிடைச்ச குண்டைச் செயலிழக்கச் செய்திட்டு பிறகு மற்றதைத் தேடுவம்’ என்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்தார். அதன்படி அனைவரையும் கூட்டிவைத்து குண்டைப்பற்றிய அடிப்படைப் பொறியமைப்பையும், அதைச் செயலிழக்கச் செய்யும் முறையையும் விளங்கப்படுத்தினார். பின் தன்னோடு இன்னும் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு அக்குண்டைச் செயலிழக்கச் செய்தார். பத்து நிமிடத்துக்குள் வேலை முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டாவது குண்டைத் தேடத் தொடங்கினோம்.

பற்றைகளை முடித்து, எமது தேடுதற்பரப்பு இன்னும் அதிகரித்த்து. நந்திக்கடலின் கரைப்பகுதிகளையும் தேடினோம். குண்டு இருப்பதற்கான தடயங்களே இல்லை. மதிய வெயில் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் குண்டைத் தேடுவோமென்று நினைக்கவில்லை. வரும்போதே குண்டுகளைக் காட்டுவார்கள், அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் குண்டுகளை இனங்காண அவ்விடத்திற் பணியாற்றும் போராளிகள் யாரும் உதவியாக வரவில்லை. ‘குண்டைக் காட்டாமல் இவங்கள் எங்க போய்த் துலைஞ்சாங்கள்’ என்று திட்டிக்கொண்டே தேடிக்கொண்டிருந்தோம். அவர்களின் முகாம் பக்கம் யாரும் போய்க் கூப்பிடத் துணியவில்லை. எங்களோடு நின்ற கடற்புலிப் போராளிகளைக் கேட்டோம்,
டேய் நீங்கள் ஒராளெண்டாலும் போய் இடம் தெரிஞ்ச ஆரையேன் கூட்டிக்கொண்டு வாங்கோவேன்ரா’
சேச்சே… நாங்கள் அங்க போகேலாது’ என்றுவிட்டு அவர்களும் எம்மோடு தேடினார்கள்.

ltteboatsகொஞ்ச நேரத்தில் ஐந்துபேர் கடற்கரைப் பக்கமிருந்து வந்தார்கள். எங்களை விசாரித்து அறிந்துகொண்டார்கள். அதற்குள் ஒருவன், தனக்கு அந்தக் குண்டிருக்கும் இடம் தெரியுமென்று சொல்லி முன்வந்தான். நந்திக்கடலின் கரையோரச் சதுப்புநிலத்தில்தான் இடங்காட்டினான். அது ஒருவருடத்தின் முன்பு வீசப்பட்ட குண்டு. துல்லியமாக அவனாலும் இடத்தைச் சொல்லமுடியவில்லை. அதில் நின்ற ஒரு தில்லைமரம், பாதையிலிருந்து குண்டு விழுந்த தூரம் என்பவற்றைக் கணக்கிட்டு குண்டுவிழுந்த இடத்தைப் பருமட்டாகச் சுட்டினான். அது இப்போது நீரால் மேவப்பட்டிருந்தது.

அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். குடிக்க ஏதாவது அனுப்பிவிடுறம் என்று சொல்லிச் சென்றவர்களிடம், ‘வேண்டாம். இந்தக் குண்டை இப்ப எடுக்க ஏலாது. தண்ணி வத்தினபிறகுதான் வரவேணும். நாங்கள் இப்பவே வெளிக்கிடுறம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமானோம்.

அப்போதுதான் நரேஸ் ஓடிவந்தான்.
“_ _ _ _ அண்ணை, வைகுந்தன் அண்ணா வந்திட்டுப் போறார். கதைச்சனியளோ? உங்களை மட்டுக்கட்டினவரோ? நீங்கள் அவரை மட்டுக்கட்டினியளோ?”

திகைத்துப் போனேன். உடனேயே என் மனக்கண்ணில் அந்த ஐவருள் வைகுந்தன் இனங்காணப்பட்டான். அது அவனேதான். அந்தச்சிரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உதட்டை ஒருமாதிரிச் சுளித்துத் கதைப்பது, அது வைகுந்தனேதான்.
எட கோதாரி… இவ்வளவு நேரமும் குண்டிருக்கிற இடம்பற்றி என்னோட கதைச்சுக் கொண்டிருந்திட்டுப் போனவன் என்ர வைகுந்தனோ?”

—————————————————————-

அவனின் இயற்பெயர் விமல். எனது ஊர்க்காரன்தான். ஐந்தாம் ஆண்டுவரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட அவன் இரண்டுவயது மூத்தவன். ஆனால் என்னோடுதான் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாட்கூட பாடசாலையைத் தவறவிடமாட்டான். அவன் வருவதே விளையாடத்தான். அவனோடு இருக்கும் பொழுதுகள் மிகமிகச் சுவாரசியமாக இருக்கும். சிறுவயதிலேயே அவனுக்குத் தந்தையில்லை. மஞ்சு என்ற பெயரில் தமக்கையொருத்தி இருந்தாள். தாய், தமக்கை, இவன் என அவனது குடும்பம் சிறியது.

அவன் தனித்துவமானவனாக இருந்தான். இரண்டு விடயங்கள் அவனுக்குத் தெரியாது; அழுவது, கோபப்படுவது. இதுபற்றி இன்றும் நான் வியப்பாகச் சிந்திப்பதுண்டு. அவனை அழவைக்க அல்லது கோபப்படுத்த அப்போது நாங்கள் நிறைய முயற்சித்தோம். எதுவும் பலிக்கவில்லை. ஒருமுறை இரத்தம் வருமளவுக்கு அவனது பின்பக்கத்தில் பேனையால் ஒருவன் குத்தினான். வாயை உறிஞ்சி நோவை வெளிக்காட்டியதோடு சரி, குத்தியவனைச் செல்லமாக நுள்ளிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனான். வகுப்பறையில் அவன் அடிவாங்காத நாளே இருக்கமுடியாது. மொளியில் அடிமட்டத்தால் அடிவாங்கிவிட்டு யாராலும் அழாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் என்றுமே அழுததில்லை. ஒருகட்டத்தில் நாமே சலித்துப்போய் அவனை அழவைக்கும் / கோபப்பட வைக்கும் விளையாட்டுக்களை விட்டுவிட்டோம்.

Sea_Tigersஅந்தப்பாடசாலை வளவில் விளாத்திமரங்கள், மாமரங்கள், மகிழமரம் என்பன இருந்தன. வருடத்தில் முழுநாளுமே மாங்காயோ விளாங்காயோ காய்த்திருக்கும். விமல் பாடசாலை வரும்போது கொப்பி, புத்தகங்கள் கொண்டுவருவானோ இல்லையோ சம்பல் போட ஏதுவாக எல்லாச் சரக்கும் கொண்டுவருவான். அனேகமான நாட்களில் நாங்கள் மாங்காய்ச் சம்பலோ விளாங்காய்ச் சம்பலோ சாப்பிட்டிருப்போம். திருவுபலகை அலகொன்றைக்கூட பாடசாலையில் நிரந்தரமாக ஒளித்துவைத்திருந்தான் விமல். மரமேறத் தெரியாத எங்களுக்கு அவன்தான் எல்லாமே.

அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரைதான் வகுப்புகள் இருந்தன. அதன்பிறகு பாடசாலை மாறவேண்டும். நான் இரண்டு கிராமங்கள் தள்ளியிருந்த ஒரு கல்லூரியில் இணைந்தேன். விமல் என் கிராமத்துப் பாடசாலையொன்றிலேயே கல்வியைத் தொடர்ந்தான். சில மாதங்களிலேயே எமது சொந்த ஊர் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது. எல்லோரும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. அத்தோடு விமலுக்கும் எனக்குமான தொடர்பு இல்லாமற் போய்விட்டது.

பின்னொரு நாள் கேள்விப்பட்டேன், விமல் இயக்கத்துக்குப் போய்விட்டான் என. அதன்பின் அவனது தமக்கையிடமிருந்து அவ்வப்போது அவனைப்பற்றிக் கேட்டறிவேன். முதலில் படைத்துறைப்பள்ளியில் இணைக்கப்பட்டிருந்தான், பிறகு கடற்புலிகள் பிரிவில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவனது பெயர் வைகுந்தன் என்பதையும் அறிந்திருந்தேன். எனது போராட்ட வாழ்க்கையும் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தைமாதம், குடாரப்புப் பகுதியில் ஒரு கடமையாக நின்றிருந்தவேளை, எனது ஊர்க்காரப் போராளியொருவரைச் சந்திக்க நேர்ந்தது. 1995 இன் நடுப்பகுதியில் கடத்தப்பட்டிருந்த ஐரிஷ்மோனா கப்பல் அப்போது குடாரப்புக் கடற்கரையில்தான் அலையடித்துச் சேதமாகப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்க்கப் போனபோதுதான் இச்சந்திப்பு. வைகுந்தன் பக்கத்தில்தான் எங்கோ நிற்பதாக அவர் சொன்னார். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. அப்போது முயன்றும் என்னால் முடியவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு வந்தபின்னும் அவனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட கற்கைநெறியில் இருந்தபோது அங்கே படிப்பதற்கென வந்திருந்த கடற்புலிப் போராளிகளுள் ஒருவன்தான் நரேஸ். இடையிடையே தனது முகாமுக்குச் சென்றுவருவான். அப்படிச் சென்றுவந்த ஒருநாளில்தான் வைகுந்தன் என்னை விசாரித்ததாகச் சொன்னான். வியந்துபோனேன். எமது படையணியிலிருந்து கடற்புலிக்குச் சென்றவர்களிடம் என்னைக்குறித்து விசாரித்து, இப்போது நான் நரேசோடு படித்துக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தான் வைகுந்தன்.

அவனைச் சந்திக்க வேண்டுமென்ற எனது அவாவையும் நரேசிடம் சொன்னேன். அப்போது வைகுந்தன் கடற்புலியின் ‘சாள்ஸ்’ அணியில் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சந்திப்பது இலகுவான காரியமன்று. ஆனாலும் நரேஸ் எங்களிடையே தூதுவனாக இருந்தான். ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்பதை என்னிடமிருந்து வைகுந்தனுக்கும் வைகுந்தனிடமிருந்து எனக்கும் காவிக்கொண்டு திரிந்தான் நரேஸ்.

———————————————————————–

அதே வைகுந்தன்தான் கொஞ்சநேரத்துக்கு முன்பு என்னோடு உரையாடிவிட்டுச் சென்றவன். நானும் அவனும் யார்யாரெனத் தெரியாமலே குண்டிருக்கும் இடம்பற்றி ஆராய்ந்திருக்கிறோம். இப்போதே எப்படியாவது அவனைச் சந்தித்து விடுவதென்று நான் தீர்மானித்தேன். கால்மணி நேரம் பொறுக்கும்படி வானம்பாடி மாஸ்டரிடம் சொல்லியாயிற்று. தான் அவர்களின் தளப்பக்கம் போய் நுழைவாயிற் காவலரணில் நிற்பவரிடம் சொல்லி வைகுந்தனைக் கூட்டி வருகிறேன் என்று நரேஸ் சென்றான். என்னால் இருக்க முடியவில்லை. அங்கெல்லாம் போவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுமென்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவன் தடுக்கத் தடுக்க நானும் நரேசுடன் போனேன்.

காவலரணுக்கு முன்னமே இரண்டுபேர் வந்து வழிமறித்தார்கள். நல்லவேளை, அதிலொருவன் எங்களோடிருந்து கடற்புலிக்குப் போனவன். ‘வைகுந்தன் ஆக்களின்ர வண்டி இப்பதான் வெளிக்கிட்டது. இண்டைக்கு ஆளைப் பார்க்க எலாது’ என்று சொன்னான்.

தோல்வியோடு திரும்பினேன்.

veeravanakkamஅதன்பின், அன்பரசனின் வெடிவிபத்து, வானம்பாடி மாஸ்டரின் வெடிவிபத்து எல்லாம் நடந்து எமது படிப்பும் முடிந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட காலம் நீட்டி நிமிர்ந்து இருக்க முடியாதபடி வேலைகள். அன்பரசன் வீரச்சாவடைந்த வெடிவிபத்தின்போது காயமடைந்த நரேஸ் அதன்பின் படிக்க வரவில்லை. ஆனாலும் அவனோடு எனது தொடர்பு நீடித்தது. சில மாதங்களின் பின்னர் அங்கிங்கு என்று திரிந்து கடமையாற்ற வேண்டி வந்ததாலும் ஓரளவு ஓய்வு நேரம் கிடைத்ததாலும் வைகுந்தனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்ற எண்ணினேன். இருந்த கடற்புலித் தொடர்புகளுக்குள்ளால் முயற்சித்தபோது வைகுந்தன் சந்திக்க முடியாத நிலையிலிருந்தான். வைகுந்தனால் முடிந்தபோது அவன் என்னைச் சந்திக்க முயற்சித்துத் தோல்வியடைந்தான், ஏனென்றால் நான் அப்போது சந்திக்க முடியாத நிலையிலிருந்தேன். இப்படி மாறிமாறி நடந்தாலும் நரேஸ் எங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது அதே ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்ற விசாரிப்பைப் பரிமாறிக்கொண்டிருந்தான்

ஒருநாள், வழமையான வழிமுறைகளின்றி நேரடியாக நானிருந்த தளத்துக்குத் தொடர்பெடுத்து வைகுந்தன் காயம் என்ற தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி சொன்னான் நரேஸ். இப்படிச் சொன்னபடியால் ஏதாவது கடுமையான காயமாகத்தான் இருக்குமென்று நான் முடிவெடுத்தேன். அப்போது நான் வெளிச்சந்திப்புக்களைச் செய்ய முடியாத நிலையிலிருந்தேன். கொஞ்ச நாட்களில் நரேசிடமிருந்து தகவல் வந்தது, வைகுந்தனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியில்லை என்று.

சிலநாட்களின் பின்னர் முல்லைத்தீவுப் பக்கம் போனபோது கடற்புலிப் போராளிகளைச் சந்தித்து வைகுந்தன் இருக்கும் மருத்துவமனையைத் தெரிந்துகொண்டேன். எனக்கான நேரமும் வசதியும் கிடைத்தபோதும்கூட நான் ஏனோ அவசரப்படவில்லை. ஒரு முழுநாளை அவனோடு ஒதுக்க வேண்டுமென்று யோசித்திருந்தேன். இடுப்புக் கீழே உணர்ச்சியில்லை என்பதை உயிராபத்தான ஒரு விடயமாக நான் கருதியிருக்கவில்லை. ‘வாறகிழமை ஒருநாள் ஒதுக்கிப் போகவேண்டும்’ என்று ஒவ்வொரு கிழமையும் தள்ளிக்கொண்டே போனது.

ஆனால் வைகுந்தனின் உயிர் எனக்காகக் காத்திருக்கவில்லை. ஒரு கடமை காரணமாக பத்துநாட்கள் ஓரிடம் போய் நின்றுவந்த பின்னால் புதுக்குடியிருப்பில் வைத்து ஊர்க்காரர் ஒருவர்தான் சொன்னார் வைகுந்தன் வீரச்சாவென்பதை. வழமையாக புலிகளின் குரல் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டுவிடும் நான் அந்தப்பத்து நாட்களும் வானொலிகூடக் கேட்கவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

நான் அவனைச் சந்திக்கத் தேடித்திரிந்த காலங்களில் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தேன். பளார் என்று கன்னத்தில் அறைந்து, அவன் விமலாக இருந்ததுபோல்தான் இப்போதும் கோபமோ அழுகையோ வராத வைகுந்தனாக இருக்கிறானா என்று சோதிப்பதே அது.

* கடலில் நடந்த சண்டையொன்றில் கப்டன் நரேசும் வீரச்சாவடைந்து விட்டான்.

அன்பரசன்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உழைத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்

இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் பற்றி பல நினைவுரைகள் பத்திரிகை வாயிலாகவும் பல நினைவு மலர்கள் வாயிலாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிவந்திருந்தன. கொழும்பு 4, பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் 2000.8.12 ஆம் திகதி நடைபெற்ற அவருடைய பிறந்ததின நிகழ்ச்சியில் சாதி, மதம் பேதமற்ற முறையில் பங்குபற்றிய சில முக்கிய பிரமுகர்கள் நினைவுரை நிகழ்த்தியிருந்தார்கள். 2000.8.12 ஆம் திகதியன்று சண்டே லீடர் பிரதம பதிப்பாசிரியர் காலஞ்சென்ற லசந்த விக்கிரமதுங்க ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கத்தை வெளிப்படுத்துவது சாலப்பொருத்தம் என்று எண்ணி வெளிப்படுத்துகின்றேன்.

லசந்த விக்கிரமதுங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு;

“”குமார் பொன்னம்பலம் ஒரு மாமனிதர் என்பதற்காக மட்டுமல்ல, எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டும் உண்மை நண்பனாக அவர் இருந்தார் என்பதற்காகவும் அவரை கௌரவப்படுத்த வாய்ப்புக்கிடைத்தமையை ஓர் அரிய பேறாக நான் கருதியதாலும் அவரைப்பற்றி இந் நினைவுரையை நிகழ்த்துவதில் பூரண திருப்தி அடைகின்றேன். என்னைப் பொறுத்தமட்டில் அவர் வெறுமனே ஒரு அரசியல்வாதியாக அல்ல, ஆனால் எனது சொந்த வாழ்வாகட்டும் அல்லது எனது தொழில்சார் வாழ்வாகட்டும் எப்போது ஒரு தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் அவரது ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் பெரிதும் மதிப்பளித்து அவற்றை நான் நாடிச் செல்லும் வகையில் திகழ்ந்த ஒரு அருமையான நண்பனாகவே எனக்கு தோன்றினார். இன்று குமாரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் குறித்து பேசி எவ்வகையான ஒரு மானிடப்பிறவியாக அவர் விளங்கினார் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’.

“”சண்டே லீடர்’ பத்திரிகையை நான் ஆரம்பித்த போது அதை நாம் சிறிதாகவே தொடங்கினோம். அக் கருத்திட்டங் குறித்து நான் கலந்துரையாடிய முதல் நபர்களுள் குமாரும் ஒருவர். ஆரம்ப கட்டங்களில் அதில் பத்தியொன்றை எழுதுவதன் மூலம் பங்களிப்புச் செய்யமுடியுமாவெனக் குமாரை நான் கேட்ட போது அவர் அதற்கு உடனே இணக்கம் தெரிவித்தார். பத்திரிகை அதன் குழந்தைப் பருவத்தில் இருந்தபடியால் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நிறையவே இருந்தன. வரவேண்டிய சட்ட இடர்பாடுகள் பல இருந்தன. பத்திரிகையையும் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்தி எங்களுக்காக பத்திரிகை கவுன்சிலுக்கு ஓடித்திரிந்து ஆவன செய்வதற்கு அங்கே எப்போதும் குமார் தயாராயிருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு சதம் கூட எம்மிடம் அறவிடவில்லை. வெறுமனே நான் அவரின் ஒரு நண்பர் என்றதால் அல்ல. ஆனால் உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடுவதில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாகவே அவர் எமக்காக அதைச் செய்தார்.

விடயங்கள் எதுவாயினும் உள்ளதை உள்ளவாறு பார்க்க பெரும்பாலான மக்களுக்கு விருப்பம் இல்லாததால் இலங்கையின் வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை ஒலிக்கச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு தனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லையென்று குமார் எப்போதும் என்னிடம் வந்து கூறுவார். அவர்களுக்கு தேவைப்பட்டதோ இனிப்பு பூசப்பட்ட ஒரு கசப்பான மாத்திரையே. ஆனால் குமாரோ உள்ளதை உள்ளவாறே கூறும் ஒரு மனிதராகவே விளங்கினார்.

குமார் ஒரு கிளர்ச்சிக்காரராக தமிழ் மக்களின் உய்வை முன்னிறுத்திப் பாடுபடும் ஒரு கிளர்ச்சிக்காரராக விளங்கினார். எங்கே அநீதி இருந்ததோ தமிழ் மக்களுக்கெதிரானதாயிருந்தாலும் சரி முஸ்லிம் மக்களுக்கெதிரானதாயிருநந்தாலும் சரி அல்லது சிங்கள மக்களுக்கெதிரானதாயிருந்தாலும் சரி அங்கே குமார் போராடத் தயாராய் இருந்தார். காலத்தினதும் பதவியில் இருந்த அரசாங்கத்தினதும் சூழ்நிலையில் மக்கள் குமாரை ஓர் எல்.ரி.ரி.ஈ. அனுதாபி என முத்திரை குத்தினர்.

ஒரேயொரு நோக்கத்திற்காக குமார் உண்மையாயுழைத்தார். அது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கமாகும். ஓர் உதாரணத்தை உங்களுக்கு நான் தருகின்றேன். 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அநேக கட்சிகளுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டு ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு என்னும் அமைப்பை உருவாக்கியது. இதற்கென அயரா முயற்சியெடுத்து ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த குமார் அதில் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கியிருந்தார்.

இத் தீர்மானத்திற்கு வந்த கையோடு தமிழீழ விடுதலைப் புலிகளை இச் செயன்முறைக்கு கொண்டு வராவிடில் எந்தத் தீர்வும் சாத்தியமாகாது என்ற நிலைப்பாட்டையும் எடுத்திருந்த அவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவியாய் இருந்த திருமதி பண்டாரநாயக்கவிடம் என் முன்னிலையில் “”இத் தீர்வுப் பொதியை நான் எல்.ரி.ரி.ஈ.யிடம் எடுத்துச் செல்லட்டுமா? அப்படியாயின் தீர்வினை ஏற்படுத்துவதில் தாங்கள் உண்மையான அர்ப்பணிப்போடிருந்தால் உங்கள் மகனை என்னோடு அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கேட்டார்.

அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த திருமதி பண்டாரநாயக்கா அம்மையாரும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தார். வன்னி நோக்கிய கடினமான ஒரு பயணத்தை நாம் மேற்கொண்டோம். குமார் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அத் தூதுக் குழுவில் நானும் இணைந்திருந்தேன். ஏனெனில் பேச்சுகள் பயனளித்தால் மட்டுமே ஊடக உள்ளடக்கல் வழங்கப்படும் என்ற ஒரு புரிந்துணர்வுடன் சம்பவங்கள் குறித்த அறிக்கை செய்யும் ஓர் ஊடகவியலாளராக பணியாற்றுமாறு குமார் என்னை வலியுறுத்தியிருந்தார்.

அனுருத்த ரத்வத்த, அனுர பண்டாரநாயக்க, காலஞ்சென்ற தர்மசிறி சேனநாயக்க, குமார் பொன்னம்பலம் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் அத்தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். கொழும்பிலிருந்து விமானம் மூலம் பயணித்து அநுராதபுரம் சென்றோம். அங்கு எங்களுக்காக ஒரு வாகனம் காத்திருந்தது. அதன் முலம் அங்கிருந்து வவுனியா சென்றோம். அது இந்திய அமைதி காக்கும் படை(ஐ.பி.கே.எப்.) நிலைகொண்டிருந்த காலமாகும். ஐ.பி.கே.எப். இன் ரோந்துகளைத் தவிர்க்குமுகமாக வெவ்வேறு மார்க்கங்கள் வழியாகச் சென்று இறுதியாக சேரவேண்டிய இடத்தை அடைந்தோம். தினேஷ் என்று அடையாளம் காணப்பட்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுள் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அவரைச் சந்தித்தபின் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அப்போதைய எல்.ரி.ரி.ஈ. யின் அரசியல் பிரிவுத் தலைவர்களுள் ஒருவரான திலீப் யோகி என்பவரைச் சந்தித்தோம்.

அந்தச் சந்திப்பின் போது குமார் பொன்னம்பலம் இந்த ஆவணத்தின் பிரதியொன்றை அவரிடம் சமர்ப்பித்து பரிசீலனை செய்யுமாறும் திருமதி பண்டாரநாயக்கா தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அதையடுத்து வரும் பொருத்தமான ஒரு நேரத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அத்தீர்வினால் குமார் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவ்வளவு தூரம் சிரமப்பட்டுப் பயணித்து இந்த ஆவணத்துடன் நாம் இங்கு வந்திருப்பது தமிழ் மக்களுக்கான இந்தப் பிரச்சினையை என்றென்றைக்குமாக தீர்த்து வைப்பதற்கேயாதலால் தமது நிலைப்பாட்டை மிகவும் அவதானமாக பரிசீலனை செய்யுமாறு அவர்களைக் கோரினார். குமாரை ஓர் எல்.ரி.ரி.ஈ. அனுதாபி என்று அக்காலத்தில் யாரும் கூறவில்லை. அவர் ஒரு குறிக்கோளுக்காகப் போராடினார். காலத்தின் கட்டாயத்தினாலேயே அவர் தன் குறிக்கோளை முன்னெடுத்தார்.

1994 இல் நிகழ்வுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. அரசியலமைப்பு பற்றி அரங்கேறிய நாடகமெல்லாம் பொதுமக்கள் பணத்தைச் செலவிடுவதற்கான ஒரு நாடகமேயன்றி வேறில்லை என்பதைக் குமார் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார். ஏனெனில் என் நினைவினை மீட்டிப் பார்க்கையில் “”கலந்துரையாடல்களுக்காக வடக்கிற்கு நீங்கள் அனுப்ப விரும்பும் தீர்வுப் பொதிதான் என்ன?’ என்று அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருந்த அஸ்ரப் அவர்களைக் குமார் கேட்டபோது “”அப்படிப்பட்ட எந்த தீர்வுப் பொதியும் கிடையாது’ என அவர் கூறியதாக தீர்வொன்று இல்லாமை பற்றிக் குமாருடன் பேசியபோது அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. குமார் தனது போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அவர் பகிரங்கமாகவே பேசினார். குமார் கூறியவற்றோடு நான் எப்போதும் இணங்கிப் போகவில்லை. ஆனால் அவர் எப்போதும் என்னிடம் கூறுவார், “”லசந்த இவ்விடயங்கள் குறித்து நாம் எப்போதும் வாதம் புரியலாம். ஆனால் அதற்கு முன் நாம் என்ன கூறுகிறோம் என்பதற்கு முதலில் செவிகொடுங்கள்’ என்று ரி.என்.எல். நிகழ்ச்சியொன்றில் குமார் தோன்றும் போதெல்லாம் அதைக் கேட்பதற்கு மிகப் பெரிய கூட்டம் திரண்டது என்று என்னால் கூறமுடியும். குமார் கூறியவற்றுடன் இணங்காதவர்கள் அவரை வெறுக்கத் துடித்தனர். ஆனாலும் அவர் கூறுவதற்கு எப்போதும் செவிமடுத்தனர். உறுதிப்பாட்டில் அவர் வெளிப்படுத்திய தைரியத்தை அவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அதை அவர்கள் வியந்தனர்.

(தொடரும்)

Up ↑