1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து மலைமகள் என்றொரு பெண் எனக்குக் கடிதம் எழுதினாள். அவள் ஒரு போராளி. இன்றும் நான் மறவாத பெயர், மலைமகள். கடிதத்தையும் ஆவணப்படுத்தி காலத்தின் பதிவாய் வைத்திருக்கிறேன்.

மலைமகள் எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை: “”தந்தை வீரச்சாவு அடைய, தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் ஒரு தாய் என்று நான் வாசித்திருக்கிறேன். ஆனால் களத்திலே வீரச் சாவடைந்த தன் மகனுக்குப் போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். மணநாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித் துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக் காதலனை நான் கண்டிருக் கிறேன்.

பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையை பின்னால் ஒரு போராளி சுமந்து வர, முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதை குழியில் வைத்து மண் போட்டு மூடிய போராளி மனைவியின் அருகே நின்றிருக்கிறேன்.

தன் ஒரே மகனை களத்தில் இழந்த தாய், அவன் பாதையில் போன கடைசி மகளும் வீரமரணமடைந்து உடலமாய் வீடு வர, “உனக்குப் பின்னாலே போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லாமல் போய்விட்டதே’ என்று அழுததை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருவர் மற்றவருக்குச் சொல்லாமல் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து சண்டைக் களத்தில் தற்செயலாய் தொலை தொடர்பு கருவியில் குரல் கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணை யும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதிகளை நான் அறிந் திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க உணவு இல்லை என்று தெரிந்து கொண்டே, களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் ஏழைத் தாய்மாரை நான் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் உலகிற்குத் தெரியுமா? எத்தனையோ வேதனைகள் விம்மல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுதான் இங்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்…” -இவ்வாறாக மலைமகளின் கடிதம் தொடர்ந்தது.

மலைமகள், சிவசங்கரி, அங்கயற்கண்ணி என நெருப்பின் குழந்தைகள் களத்தில் இருந்து காவியங் களாய் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நக்கீரன் ஊடாகவே அவை நித்திய வரலாற்றுக்காய் பதிவுபெறும்.

ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுப் பிழை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்ற குற்றச் சாயம் பெறுவதற்கும், இன்றைய நினைத்துப் பார்க்க முடியாத பேரழி விற்கும் காரணமாயிற்று. ஆயினும் இவ் வரலாற்றுப் பிழைக்கும் அப்பால் அவ்விடுதலைப் போராட் டத்திற்கு தார்மீகமும் புனிதத் தன்மையும் இருந்தது. அப்புனிதத்தை கொடையாக போராட்டத்திற்குத் தந்தவர்கள் துரும்பளவுதானும் சுயநலம் இன்றி, தன்முனைப்பு இல்லாதவர்களாய், தம் தலைமுறைகள் நலமுடன் வாழ தமிழ் ஈழ நிலமொன்று உரிமையுடன் வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காய் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள்.

இந்திரன் என்ற போராளி 1998-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் எத்தனையோ அதிகாலை வேளைகளில் என்னை தனியாக அழ வைத்த கடிதம். இப்போது அதனை எழுதும்போது கூட என் கண்கள் பனிக்கின்றன. அப்போது கிளிநொச்சி நகரை ராணுவப் பிடியிலிருந்து மீட்க விடுதலைப்புலிகள் ஆயத்தமாகிக் கொண்டி ருந்த காலகட்டம். இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை தொடங் கியிருந்தான்: “”அண்ணா! நான் பல சமர்களில் பங்கு பற்றியிருக்கிறேன். ஆனால் இச் சமருக்குச் செல்லும் முன் எதையாவது எழுதிவிட்டுச் செல் என்று என் மனம் சொல்கிறது. எந்தச் சண்டைக்குப் போனா லும் இப்படி மனம் இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு இக்கடிதம் எழுதி என் தோழனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அவன் நான் இச்சமரில் வீரச்சாவு அடைந்தால் மட்டுமே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைப்பான். (ஆக, கடிதம் என்னை வந்து சேர்கிறது… அந்தப் போராளி இந்திரன் உயிரோடு இல்லை).

இந்திரன் எழுதிய கடிதத்தில் என் உயிரைப் பிழிந்த வரிகள் இவை: “”அண்ணா! ஒரு மனிதனுக்குத் தான் சாகப் போகும் போது, மரணம் அருகில் வந்துவிட்டதென்ற உணர்வு மேலிடுகையில் பலவிதமான ஆசைகள் இறுதி ஆசையாக மனதிலே தோன்றும். அதேபோல் என் மனதிலும் சில இறுதி ஆசைகள். தமிழீழம் கெதியா (விரைவாக) கிடைக்கணும். எங்கட சனத் தின்றெ கஷ்டங்கள் தீரோணும்”. வானகமே, வையகமே, நேயமுள்ள மனுக்குலமே! மரணம் மௌனமாய் அருகில் வந்து அணைக்கக் காத்திருப்பது கண்ணுக்குத் தெரிகிறபோதும்கூட தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தவரைப் பற்றியோ தன் பிற நேசங்களைப் பற்றியோ எண்ணாமல், “கெதியா தமிழீழம் கிடைக்கணும் எங்கட சனத்தின்றெ கஷ்டங்கள் தீரணும்’ என்று ஆசித்து உயிர் சமர்ப்பிக்கும் எங்கள் பிள்ளைகளையா பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்?

இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை நிறைவு செய்திருந்தான்: “”அண்ணா! என்ன இருந்தாலும் இந்தச் சண்டையில் நான் கட்டாயம் வீரச்சாவு அடைவேன் என்று என் மனம் சொல்கிறது. நான் வீரச்சாவு அடைந்தாலும் என் உயிர் தமிழ் ஈழ வான் பரப்பிலே உலவிக் கொண்டிருக்கும். உயிர் பிரிந்தாலும் உங்கள் குரலை வான்பரப்பில் நான் தவறாது கேட்பேன். “தமிழீழம் மலர்ந்துவிட்டது’ என ஒருநாள் நீங்கள் வானொலியில் அறிவித்து அதனைக் கேட்டு என் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென் பதும் என் இறுதி ஆசைகளில் ஒன்று. அண்ணா! உங்கள் முகத்தை எனக்குத் தெரியாது. ஆனால் தூரத்தில் இருந்து எம் விடுதலையை நேசிக்கும் எல்லோரது முகங்களையும் எம் தலைவரின் முகத்தில் பார்க்கிறேன்!’.

நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என சுற்றித் திரிந்து விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மைகளைப் பதிவு செய்த அந்நாட்களில் நான் உணர்ந்து பதிவு செய்த உன்னதமான உண்மைகளில் ஒன்று, களத்தில் ஆயுதம் தாங்கும் அப்போராளிகள் மனதில் எத்துணை கனிவானவர்களாகவும், மென்மையான வர்களாயும், வருணிக்கவே முடியாத நேயம் கொண்டவர்களாயும் இருந்தார்களென்பது.

சந்தனம் எனக்குப் பிடிக்கும். சந்தனச் சிமிழ் எங்கிருந்தாலும் எடுத்து நெற்றியில் பொட்டிடும் பழக்கம் எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு. ஏதோ ஒரு தெய்வீக ரகசியம் சந்தனத்தில் இருக்கிறது. வயிரம் ஏற வாசம் கூடும் மரம் அது. அதனிலும் முக்கியமாக எரிந்து குளிர்தரும் அதிசயம் சந்தனம். போராளிகளையும் நான் அவ்வாறே கண்டேன். விடுதலைக்காய் நெருப்பாகிச் சுடர்விட்ட அதேவேளை நெஞ்சுக்குள் குளிர் தடாகங்களாய் நேசமாகிக் கிடந்த அபூர்வப் பிறவிகள். எனவே தான் மாவீரர்களாய் அவர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகையில் பாடப்படும் பாடலும் நான் இதுவரை கேட்ட பாடல்களிலெல்லாம் மறக்க முடியாததாய் நிற்கிறது.

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே! இங்கு

கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே?

உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் -அன்று

செங்கழல் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே!

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்.

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

சா வரும் போதிலும் தணலிடை மீதிலும்

சந்ததி தூங்காது.

எங்கள் தாயகம் வரும்வரை

தாவிடும் புலிகளின் பாதங்கள் தீராது.

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

உயிர்விடும் வேளையில் உங்களின் நாவுகள்

உரைத்தது தமிழீழம்.

அதைவிட யாதொரு குன்றில் விரைவினில்

நிச்சயம் எடுத்தாளும்.

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனி அரசு வென்றிடுவோம் -எந்த

நிலை வரும் போதிலும் இனி உளோம்

உங்களின் நினைவுடன் ஒன்றிடுவோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

-நண்பர்களே! தமிழர்களே! பயங்கர வாதம், தவறுகள் குற்றங்கள் அனைத்திற்கும் அப்பால் தமிழீழ விடுதலை என்ற கனவு தூய்மையானது. அவர்களது மரணம் வீர மரணம். வணக்கம் பெறுவார்கள், தமிழ் இனம் இப்பூமிப் பரப்பில் உள்ளவரை!

-ஜெகத் கஸ்பர்
(நினைவுகள் சுழலும்)