Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2009

உறங்காத கண்மணிகள்! உலுக்கும் உண்மைகள்!


றங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவ வெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது. விடுதலைப்புலிகளின் முன்னணி ராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் “உறங்காத கண்மணிகள்’. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.

புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது “உறங்காத கண்மணிகள்’ கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அதிசயங்களில் ஒன்று.

ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர் முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள். முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும் கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.

உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.

இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம் இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம், ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம், அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.

எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள் சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய் முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள். பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும் நடப்பதுண்டு.

உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம் போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப் பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.

பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள் மறக்க முடியாதவை. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: “”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.” எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல். கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எது வேண்டுமா னாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின் னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக் கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!

பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம். “”ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.” உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்.

“”இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான் கொன்றிருக்கிறேன்” என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். “உறங்காத கண்மணிகள்’ கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே “டம்மி’ உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக இருக்கும். புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.

உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன் அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம் – வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங் களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள் களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும் எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.

கடாஃபி சொன்னார் : “”என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்” ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.

இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லா மல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது. ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணி களுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசய மாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத் தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்ன பாவம் செய்தது… நாமெல் லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது… என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு “வாக்கி-டாக்கி’யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும் இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத் தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம் இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும் முதற்போராளி, “”நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா” என்று சொல்லிக்கொண்டே தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது உடல்கூட கிடைக்கவில்லையாம்.

தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர் இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.

(நினைவுகள் சுழலும்)

தமிழீழ வான்புலிகள் முதலில் உருவாக்கப்பட்ட போது எடுத்தது-காணொளி

எம் தலைவர் சாகவில்லை பாடல் ஒலி – தேனிசைச் செல்லப்பா

எம் தலைவர் சாகவில்லை பாடல் ஒலி – தேனிசைச் செல்லப்பா

விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்!

1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து மலைமகள் என்றொரு பெண் எனக்குக் கடிதம் எழுதினாள். அவள் ஒரு போராளி. இன்றும் நான் மறவாத பெயர், மலைமகள். கடிதத்தையும் ஆவணப்படுத்தி காலத்தின் பதிவாய் வைத்திருக்கிறேன்.

மலைமகள் எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை: “”தந்தை வீரச்சாவு அடைய, தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் ஒரு தாய் என்று நான் வாசித்திருக்கிறேன். ஆனால் களத்திலே வீரச் சாவடைந்த தன் மகனுக்குப் போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். மணநாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித் துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக் காதலனை நான் கண்டிருக் கிறேன்.

பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையை பின்னால் ஒரு போராளி சுமந்து வர, முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதை குழியில் வைத்து மண் போட்டு மூடிய போராளி மனைவியின் அருகே நின்றிருக்கிறேன்.

தன் ஒரே மகனை களத்தில் இழந்த தாய், அவன் பாதையில் போன கடைசி மகளும் வீரமரணமடைந்து உடலமாய் வீடு வர, “உனக்குப் பின்னாலே போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லாமல் போய்விட்டதே’ என்று அழுததை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருவர் மற்றவருக்குச் சொல்லாமல் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து சண்டைக் களத்தில் தற்செயலாய் தொலை தொடர்பு கருவியில் குரல் கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணை யும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதிகளை நான் அறிந் திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க உணவு இல்லை என்று தெரிந்து கொண்டே, களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் ஏழைத் தாய்மாரை நான் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் உலகிற்குத் தெரியுமா? எத்தனையோ வேதனைகள் விம்மல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுதான் இங்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்…” -இவ்வாறாக மலைமகளின் கடிதம் தொடர்ந்தது.

மலைமகள், சிவசங்கரி, அங்கயற்கண்ணி என நெருப்பின் குழந்தைகள் களத்தில் இருந்து காவியங் களாய் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நக்கீரன் ஊடாகவே அவை நித்திய வரலாற்றுக்காய் பதிவுபெறும்.

ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுப் பிழை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்ற குற்றச் சாயம் பெறுவதற்கும், இன்றைய நினைத்துப் பார்க்க முடியாத பேரழி விற்கும் காரணமாயிற்று. ஆயினும் இவ் வரலாற்றுப் பிழைக்கும் அப்பால் அவ்விடுதலைப் போராட் டத்திற்கு தார்மீகமும் புனிதத் தன்மையும் இருந்தது. அப்புனிதத்தை கொடையாக போராட்டத்திற்குத் தந்தவர்கள் துரும்பளவுதானும் சுயநலம் இன்றி, தன்முனைப்பு இல்லாதவர்களாய், தம் தலைமுறைகள் நலமுடன் வாழ தமிழ் ஈழ நிலமொன்று உரிமையுடன் வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காய் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள்.

இந்திரன் என்ற போராளி 1998-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் எத்தனையோ அதிகாலை வேளைகளில் என்னை தனியாக அழ வைத்த கடிதம். இப்போது அதனை எழுதும்போது கூட என் கண்கள் பனிக்கின்றன. அப்போது கிளிநொச்சி நகரை ராணுவப் பிடியிலிருந்து மீட்க விடுதலைப்புலிகள் ஆயத்தமாகிக் கொண்டி ருந்த காலகட்டம். இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை தொடங் கியிருந்தான்: “”அண்ணா! நான் பல சமர்களில் பங்கு பற்றியிருக்கிறேன். ஆனால் இச் சமருக்குச் செல்லும் முன் எதையாவது எழுதிவிட்டுச் செல் என்று என் மனம் சொல்கிறது. எந்தச் சண்டைக்குப் போனா லும் இப்படி மனம் இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு இக்கடிதம் எழுதி என் தோழனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அவன் நான் இச்சமரில் வீரச்சாவு அடைந்தால் மட்டுமே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைப்பான். (ஆக, கடிதம் என்னை வந்து சேர்கிறது… அந்தப் போராளி இந்திரன் உயிரோடு இல்லை).

இந்திரன் எழுதிய கடிதத்தில் என் உயிரைப் பிழிந்த வரிகள் இவை: “”அண்ணா! ஒரு மனிதனுக்குத் தான் சாகப் போகும் போது, மரணம் அருகில் வந்துவிட்டதென்ற உணர்வு மேலிடுகையில் பலவிதமான ஆசைகள் இறுதி ஆசையாக மனதிலே தோன்றும். அதேபோல் என் மனதிலும் சில இறுதி ஆசைகள். தமிழீழம் கெதியா (விரைவாக) கிடைக்கணும். எங்கட சனத் தின்றெ கஷ்டங்கள் தீரோணும்”. வானகமே, வையகமே, நேயமுள்ள மனுக்குலமே! மரணம் மௌனமாய் அருகில் வந்து அணைக்கக் காத்திருப்பது கண்ணுக்குத் தெரிகிறபோதும்கூட தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தவரைப் பற்றியோ தன் பிற நேசங்களைப் பற்றியோ எண்ணாமல், “கெதியா தமிழீழம் கிடைக்கணும் எங்கட சனத்தின்றெ கஷ்டங்கள் தீரணும்’ என்று ஆசித்து உயிர் சமர்ப்பிக்கும் எங்கள் பிள்ளைகளையா பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்?

இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை நிறைவு செய்திருந்தான்: “”அண்ணா! என்ன இருந்தாலும் இந்தச் சண்டையில் நான் கட்டாயம் வீரச்சாவு அடைவேன் என்று என் மனம் சொல்கிறது. நான் வீரச்சாவு அடைந்தாலும் என் உயிர் தமிழ் ஈழ வான் பரப்பிலே உலவிக் கொண்டிருக்கும். உயிர் பிரிந்தாலும் உங்கள் குரலை வான்பரப்பில் நான் தவறாது கேட்பேன். “தமிழீழம் மலர்ந்துவிட்டது’ என ஒருநாள் நீங்கள் வானொலியில் அறிவித்து அதனைக் கேட்டு என் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென் பதும் என் இறுதி ஆசைகளில் ஒன்று. அண்ணா! உங்கள் முகத்தை எனக்குத் தெரியாது. ஆனால் தூரத்தில் இருந்து எம் விடுதலையை நேசிக்கும் எல்லோரது முகங்களையும் எம் தலைவரின் முகத்தில் பார்க்கிறேன்!’.

நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என சுற்றித் திரிந்து விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மைகளைப் பதிவு செய்த அந்நாட்களில் நான் உணர்ந்து பதிவு செய்த உன்னதமான உண்மைகளில் ஒன்று, களத்தில் ஆயுதம் தாங்கும் அப்போராளிகள் மனதில் எத்துணை கனிவானவர்களாகவும், மென்மையான வர்களாயும், வருணிக்கவே முடியாத நேயம் கொண்டவர்களாயும் இருந்தார்களென்பது.

சந்தனம் எனக்குப் பிடிக்கும். சந்தனச் சிமிழ் எங்கிருந்தாலும் எடுத்து நெற்றியில் பொட்டிடும் பழக்கம் எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு. ஏதோ ஒரு தெய்வீக ரகசியம் சந்தனத்தில் இருக்கிறது. வயிரம் ஏற வாசம் கூடும் மரம் அது. அதனிலும் முக்கியமாக எரிந்து குளிர்தரும் அதிசயம் சந்தனம். போராளிகளையும் நான் அவ்வாறே கண்டேன். விடுதலைக்காய் நெருப்பாகிச் சுடர்விட்ட அதேவேளை நெஞ்சுக்குள் குளிர் தடாகங்களாய் நேசமாகிக் கிடந்த அபூர்வப் பிறவிகள். எனவே தான் மாவீரர்களாய் அவர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகையில் பாடப்படும் பாடலும் நான் இதுவரை கேட்ட பாடல்களிலெல்லாம் மறக்க முடியாததாய் நிற்கிறது.

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே! இங்கு

கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே?

உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் -அன்று

செங்கழல் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

தாயக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப் பேழைகளே!

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்.

வல்லமை தாரும் -முன்

உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.

சா வரும் போதிலும் தணலிடை மீதிலும்

சந்ததி தூங்காது.

எங்கள் தாயகம் வரும்வரை

தாவிடும் புலிகளின் பாதங்கள் தீராது.

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

உயிர்விடும் வேளையில் உங்களின் நாவுகள்

உரைத்தது தமிழீழம்.

அதைவிட யாதொரு குன்றில் விரைவினில்

நிச்சயம் எடுத்தாளும்.

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனி அரசு வென்றிடுவோம் -எந்த

நிலை வரும் போதிலும் இனி உளோம்

உங்களின் நினைவுடன் ஒன்றிடுவோம்.

எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்,

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

-நண்பர்களே! தமிழர்களே! பயங்கர வாதம், தவறுகள் குற்றங்கள் அனைத்திற்கும் அப்பால் தமிழீழ விடுதலை என்ற கனவு தூய்மையானது. அவர்களது மரணம் வீர மரணம். வணக்கம் பெறுவார்கள், தமிழ் இனம் இப்பூமிப் பரப்பில் உள்ளவரை!

-ஜெகத் கஸ்பர்
(நினைவுகள் சுழலும்)

பேசாமல் பேசவைக்கும் பெருந் தலைவன்-காணொளி

தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாவாகிய தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளினை ஈழத் தமிழர்கள் இன்று வெள்ளிக்கிழமை நினைவுகூருகின்றனர்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 24 ஆவது வயதில் சயனைட் அருந்தி களப்பலியான பொன்.சிவகுமாரன் ஈழப்போராட்டதின் புதிய வரலாற்றை தொடக்கி வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தில் 26.08.50 ஆண்டில் பொன்னுத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்த சிவகுமாரன் இளவயதிலேயே பொதுவுடமைக் கருத்துக்கொண்ட சமூகச் செயற்பாட்டாளனாக விளங்கினார்.

1970 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் பொன்.சிவகுமாரன் விளங்கினார்.

1974 ஆம் ஆண்டு ஐனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்க முயற்சித்திருந்த வேளையில் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்ய முயற்சிக்கையில் சயனைட் அருந்தி களப்பலியானார் பொன்.சிவகுமாரன்.

Up ↑