Search

Eelamaravar

Eelamaravar

Month

April 2009

வீரச்சாவைத் தழுவிய போராளிகள்



தலைவர் பிரபாகரன் தொடர் 12

‘ஐயோ, உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது?’

அவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு என்கிற கிட்டுவின் உயிர், ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி எங்கோ ஒரு ரகசிய இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அசுரனின் உயிர் போல ஈழ விடுதலை என்னும் பெருங்கனவுக்குள் புதைத்துவைக்கப்பட்டிருப்பது. சற்றும் நிகரற்ற போராளி. அப்பழுக்கே சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உணர்வின் சொந்தக்காரர். ஒப்புவமையற்ற சுறுசுறுப்பு. ஓயாத களப்பணி. புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரபாகரனுக்கு கிட்டு ஒரு முக்கியத் தளபதி.

அவருக்குத்தான் ஆபத்து என்று செய்தி வந்திருந்தது. அன்றைக்கு மார்ச் 31-ம் தேதி. 1987-ம் வருடம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி வழியே கிட்டுவின் மிட்சுபிஷி லான்ஸர் போய்க்கொண்டிருந்தது. மிகச் சரியாகக் குறி பார்க்கப்பட்டு எங்கிருந்தோ வீசப்பட்ட கையெறி குண்டு, காரில் மோதி வெடித்தது. எழுந்த பெரும் சத்தமும் சூழ்ந்த கரும் புகையும் சில வினாடிகள் பிராந்தியத்தை நிலைகுலையவைத்துவிட்டன.

சில வினாடிகள்தாம். ஐயோ, உள்ளே இருப்பது கிட்டுவல்லவா? பாய்ந்து கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்தபோது எங்கிருந்து என்று தெரியாமல் ரத்தம் பொங்கிக்கொண்டிருந்தது. கிட்டுவை மருத்துவமனைக்கும் தகவலைப் பிரபாகரனுக்கும் உடனே உடனே அனுப்பிவிட்டு, யாழ்ப்பாணத்து மக்கள் கவலை தின்று காத்துக்-கிடந்தார்கள்.

அப்போதுதான் பிரபாகரன் கேட்டார். யார் செய்தது?

பிரச்னை. பெரிய பிரச்னை. மாபெரும் அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், இயக்கத்துக்கு உள்ளே இம்மாதிரியான பிரச்னைகள் எழுவது ஆபத்து. ஆனாலும் கிருமிகள் போல விஷ எண்ணங்கள் சில மனங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. பதவிப் போட்டி. அதிகாரப் போட்டி. ஆளுமையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற ஒப்பீடு.

மாத்தையாதான் காரணம் என்று இயக்கத்தில் பலபேருக்குச் சந்தேகம். விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதியும் பிரபாகரனின் மிக நெருங்கிய சகாவுமான கிட்டுவின் கார் மீது வேறு யார் குண்டு வீசத் துணிய முடியும்? தவிரவும் கிட்டுவைப் பகையாளி என்று கருத, இயக்கத்தில் வேறு யாரும் கிடையாது.

ஒரு வீரனாகக் களத்தில் கிட்டுவின் இருப்பும் செயல்பாடும் மிகத் தீவிரமானது. அவருக்கு பிரபாகரன் தான் ராணுவ குரு. துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டது அவரிடம்தான். ஒரு சமயம் ஊராட்சித் தேர்தல் ஒன்று நடந்தது (1983). கண் துடைப்புத் தேர்தல். அதனைப் புறக்கணியுங்கள் என்று புலிகள் மக்களிடம் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் அரசாங்கம் தேர்தல் வேலைகளில் மும்முரமாகவே இருந்தது. ராணுவப் பாதுகாப்-புடன் வாக்குச் சாவடிகளில் தேர்தல் தினம் விடிந்தபோது, கிட்டு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச் சாவடிகளுக்குப் போனார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

கிட்டு பயின்றது கெரில்லா தாக்குதல்தான். ஆனாலும் அவருடைய வேகம் பிற போராளிகளால் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியதல்ல. பிரபாகரனுக்குத் தனிப்பட்ட முறையில் இதில் மிகப்பெரிய பெருமித உணர்வு உண்டு. ஒரு சுத்த வீரனைப் பெறுவதைக் காட்டிலும் தலைவனுக்கு வேறு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது.

அதனால்தான் துடித்துப் போனார். மருத்துவமனையிலிருந்து வந்த தகவல் விரும்பக்கூடியதாக இல்லை. கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஒரு கால் போய்விட்டது.

1979-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கிட்டுவுக்கு, பிரபாகரன் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார். முதலாவது, யுத்தம் செய்வது. அடுத்தது, சமையல் செய்வது.

`வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம். சாப்பாட்டு ருசி ஒழிந்தால்தான் விடுதலைக்கான யுத்தத்தில் முழுக்கவனம் செலுத்தமுடியும்’ என்பார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அத்தனை பேருக்குமே சமைக்கத் தெரியும். அது அங்கே ஒரு கட்டாயப்பாடம். என்னத்தையாவது போட்டுச் சமைத்து கூடி உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் எப்போதும் உண்டு.

சென்னையில் இருந்த காலத்தில் ஒருநாள் கிட்டு, `இன்றைக்கு எனக்கு இங்கே சாப்பாடு இல்லை. வெளியே ஒரு புரட்சி செய்யப்போகிறேன்’ என்று தோழர்களிடம் அறிவித்தார். என்னவோ விவகாரம் என்று பிரபாகரனுக்குப் புரிந்துவிட்டது. `நண்பா ஜாக்கிரதை’ என்று மட்டும் சொன்னார். காத்திருந்தார்கள். கிட்டு தனது அன்றைய உணவு கோட்டாவான பத்து ரூபாயுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிக்கொண்டார். குளித்துவிட்டு வேட்டி கட்டிக்கொண்டார். மேல் சட்டை அணியாமல் நாலணாவுக்கு ஒரு பூணூல் வாங்கிப் போட்டுக்கொண்டு நெற்றியிலும் கழுத்திலும் இரு தோள்களிலும் வயிற்றிலும் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ருத்திராட்ச மாலை வாங்கி அணிந்துகொண்டு, `சரி வருகிறேன்’ என்று புறப்பட்டு வெளியே போனார்.

அவர் நேரே போன இடம் ஒரு மிலிட்டரி ஹோட்டல். இயக்கத் தோழர்கள் சிலர், என்ன நடக்கிறது என்று பார்க்க அவருடன் வந்து உட்கார, கிட்டு சர்வரிடம் திட்டவட்டமாகத் தனது ஆர்டர்களை அளித்தார். மட்டன் பிரியாணி. முட்டை பொடிமாஸ். கோழிப் பொரியல்.. வேறென்ன இருக்கிறது?

சுற்றிலும் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வக்கணையாக ருசித்துச் சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஹோட்டலின் உணவுத்தரத்தையும் பாராட்டிவிட்டு பெரிதாக ஓர் ஏப்பம் விட்டபடி எழுந்து வந்தார் கிட்டு.

அந்தணர்களைக் கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஓர் அந்தணர் மிலிட்டரி ஹோட்டலுக்கு வந்தால் மற்றவர்கள் எத்தனை பதற்றமாகிவிடுகிறார்கள் என்று பார்த்தீர்களல்லவா? தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் நாமே நெருங்கிய தொடர்பை உண்டாக்கிவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார். விழுந்து விழுந்து சிரித்தார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தவர் பண்டிதர். 1985-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அவர் ஒரு தாக்குதலில் மரணமடைய, அந்தப் பொறுப்புக்குக் கிட்டுவை அமர்த்தினார் பிரபாகரன்.

கிட்டு இயக்கத்துக்கு வந்த சமகாலத்தில்தான் மாத்தையாவும் வந்தார். மாத்தையா பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரும் பிரபாகரனிடம் போர்ப்பயிற்சி பெற்று வளர்ந்தவர்தான். யாழ்ப்பாணத்துக்குக் கிட்டு என்றால், வன்னிக்கு மாத்தையா. சம அந்தஸ்துதான். சம பொறுப்புதான். ஒரே பதவிதான். ஆனாலும் கிட்டுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அவர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள். அவற்றில் கிடைத்த வெற்றிகள். பிரபாகரனுக்கு அவர் மீதிருந்த அன்பு. இயக்கத்தோழர்கள் மத்தியில் வளர்ந்த மரியாதை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் பரவிய புகழ், இந்தியத் தொடர்புகள், கிட்டுவின் வாசிப்பு ஆர்வம், உலக அறிவு, அரசியல் அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அர்ப்பணிப்புணர்வு..

இன்னது என்று சொல்லமுடியாது. மாத்தையாவுக்கு கிட்டுவின் வளர்ச்சி பிடிக்காது போயிற்று. செய்தது மாத்தையாதான் என்று அப்போது தெரியாவிட்டாலும், அந்த கார் குண்டு வீச்சு ஏதோ ஓர் அபாயத்தின் ஆரம்பம் என்று பிரபாகரன் மனத்தில் பட்டது. உமா மகேஸ்வரன் விவகாரம் முடிந்து, அதன்பின் தன் காதல் திருமண களேபரங்கள் முடிந்து, இயக்கத்தில் பலர் பிரிந்து, போராடி ஒன்று சேர்த்து, இழுத்துக்கட்டி ஒருவழியாக சுதந்திரப் போரில் முழுக் கவனம் குவிக்க ஆரம்பித்த தருணத்தில், இது பேரபாயம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஓலமிட்டது.

அந்த அபாயத்தின் அதிர்வு அத்துடன் நிற்காமல் கருணா போன்றோரின் கலகங்கள் வரை நீண்டது புலிகளின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது பாகம். அந்த இரண்டாவது பாகத்தில் பிரபாகரனின் களப்பணியும், சிந்தனையும் எப்படி இருந்தது?

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் களத்தில் சந்திப்போம்..

(முதல் பாகம் முற்றும்)

தலைவர் பிரபாகரன் தொடர்-11


மன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்’ பிரபாகரன்.

நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று அடுத்தடுத்த திட்டங்கள் தயார்.

எதிர்பார்க்கவில்லை. இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச் சாப்பிடவைத்து போதனை செய்யும் இந்த மனிதர் யார்?

என் பெயர் பிரபாகரன் என்றார் பிரபாகரன். கேள்விப்பட்டிருந்தார்கள். பார்த்ததில்லை. இவரா? சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட்டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு… பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே? குரலில் என்ன ஒரு மிருது!

சுற்றி இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அன்பான பேச்சு. கனிவான பார்வை. துடிப்பான கண்காணிப்பு. உயிர் விலைமதிப்பற்றது. வீணாக அதனை இழக்கக்கூடாது. உங்களை நான் தமிழகத்துக்கு அனுப்புகிறேன். தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உருப்படியாகச் செய்யுங்கள். சம்மதமா? சம்மதித்தார்கள். தோணி ஏறினார்கள்.

மதிவதனி, வினோஜா, லலிதா, ஜெயா என்கிற அந்த நான்கு பெண்களும் கோடியக்கரை வரைக்கும் தோணியில் வந்து அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, அழைத்துச்சென்று தங்கவைக்கும் பொறுப்பு திருமதி அடேல் பாலசிங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

திருவான்மியூர் வீட்டில் நான்கு பெண்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டது. பாலசிங்கம் தன் மனைவியைத் தனியே கூப்பிட்டுச் சொன்னார். கவனம். யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள் ரொம்பக் கடுமையானவை. திருமணமாகாத பெண்களை நாம் ஆயுதங்களைப் பாதுகாப்பதுபோல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஆண்களுடன் பேசுவது, பழகுவது, அவர்கள் புழங்கும் இடத்தில் சகஜமாக வந்து போவதற்குக் கூட கண், காது, மூக்கு வைத்துவிடுவார்கள். தம்பி, உன் பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்துக்கும் சேர்த்து.

அடேலும் பெண் தான். ஆனால் ஆஸ்திரேலியப் பெண். லண்டனில் வசித்த பெண். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண். அவர் யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான் படித்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முகாமில் முதல் முதலில் அவர் வந்து சேர்ந்தபோதே நிறைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாகப் பிரபாகரன் அவரை `அன்ரி’ (ஆண்ட்டி) என்று அழைத்து ஆரம்பித்துவைக்க, அதுவே அவரது நிரந்தர உறவு முறையாயிற்று.

ஆனால் இந்தப் பெண்கள்?

பிரபாகரன் வந்தார். அனைவருக்கும் அந்த நான்கு பேரையும் அறிமுகம் செய்துவைத்தார். இனி இவர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள். சமையலில், பிற வேலைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆயுதம் பழக விரும்பினால் ரொம்ப சந்தோஷம். கற்றுக்கொடுங்கள். இன்னும் சில பெண்கள் விரைவில் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. வந்தார்கள். ஒருவர் இருவரல்லர். நிறையவே வந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில் யுத்தம், வாருங்கள் என்று.

`டெலோ’ கூப்பிட்டு நிறையப் பெண்கள் தோணி ஏறியிருந்தார்கள். கல்லூரிப் பெண்கள். படிப்பை விட்ட, படித்து முடித்த பெண்கள். துரதிருஷ்டவசமாக அவர்களைத் தமிழகத்தில் தங்க வைக்கவோ, முறையான பயிற்சியளிக்கவோ டெலோ ஏற்பாடு செய்யத் தவறியிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன் ஒரு மூத்த சகோதரன் போல நின்று அழைத்தது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

அத்தனைபேரும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் அடைக்கலமானார்கள். திருவான்மியூரில் தங்குமிடம். சென்னைக்கு வெளியே பல இடங்களில் பயிற்சி. போவார்கள், வருவார்கள், சமைப்பார்கள், சாப்பிடுவார்கள். பேசித் தீர்த்துவிட்டுப் படுத்துத் தூங்கினால் மறுநாள் மீண்டும் பயிற்சி.

பிரபாகரன் வருவார். அனைவருடனும் பேசுவார். உற்சாகமான, நம்பிக்கையூட்டக்கூடிய அற்புதமான பேச்சுகள். அனைவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து கோழியடித்துக் குழம்பு வைப்பார். பாலசிங்கம் மீன் சமைப்பதில் கில்லாடி.

வேறு பல தோழர்கள் கறிகாய் நறுக்குவார்கள். கடைக்குப் போவார்கள். துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி, சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார்.

`அன்ரி, நீங்களும் ஏன் பிஸ்டல் சுடக் கற்கக்கூடாது?’ பிரபாகரன் ஒருநாள் கேட்டார். அவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துத் திரும்பிய ஒருநாள் தற்செயலாகப் பிரபாகரன் சொன்னார். `நான் மதிவதனியை விரும்புகிறேன்.’

ஒரு கண்ணிவெடிகூட அத்தனை அதிரச் செய்திருக்க முடியாது. இயற்கை என்ன இலங்கை அரசா? எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க? ஆனால் ஆரம்பத்தில் யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள யாரும் விரும்பவில்லை. அன்றைக்கு உமா மகேஸ்வரனை அத்தனை கேள்வி கேட்டாயே, இன்றைக்கு உன் காதல் அத்தனை முக்கியமாகிப் போய்விட்டதா என்றுதான் பெரும்பாலானோர் கேட்டார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் காதலுக்கு எதிரியல்ல. காதலித்துக்கொண்டே காலம் கழிப்பதற்கோ, கழட்டிவிட்டுவிட்டுப் போய்விடுவதற்கோதான் எதிரி. ஒரு பெண்ணைப் பிடிக்கிறதா? கூப்பிட்டுப் பேசு. பெண்ணிடமல்ல. பெற்றோரிடம். புரியவை. மணந்துகொள். தீர்ந்தது விஷயம்.

ஆனால், உமா மகேஸ்வரன் பாதித்திருந்தார். மிகவும் பாதித்திருந்தார். இயக்கத்திலிருந்து அவரை வெளியேற்றியது, அவர் ப்ளாட் இயக்கம் கண்டது, ஒரு பெரும் படை அவருடன் போனது, பல வெளிநாட்டுத் தொடர்புகள் அவருடன் சென்றது எல்லாம், எல்லாமே எல்லோரையும் பாதித்திருந்தன. அதனால், பிரபாகரனுக்குக் காதல் என்றபோது சுற்றி நின்று கேள்வி கேட்டார்கள். சொற்களில் கோபம் சேர்த்து, சுற்றிச் சுற்றி அடித்தார்கள்.

பிரபாகரன் அனைவருக்கும் பொறுமையாக பதில் சொன்னார். ஆமாம், காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நீங்களும் காதலிக்கலாம். திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தை நாம் தடுப்பதே இல்லை.

பாலசிங்கம் இயக்கத்தில் ஒவ்வொருவரிடமும் தனியே பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். காதல் இயற்கையானது. திருமண உறவு ஆரோக்கியமானது. அதற்குத் தடைபோடுவதன்மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது. முறையற்ற உறவைத்தான் கூடாது என்று சொல்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

பலர் புரிந்துகொண்டார்கள். சிலர் புரிந்துகொள்ள மறுத்தார்கள். பெரிய களேபரத்துக்குப் பிறகுதான் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடந்தது.

மதிவதனியின் பெற்றோர் புங்குடுத் தீவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தனர். பாலசிங்கம் அவர்களுடன் உட்கார்ந்து பேசிப் புரியவைத்திருந்தார். 1984-ம் வருடம் அக்டோபர் முதல் தேதி. திருப்போரூர் முருகன் கோயிலில் மிக எளிமையாக நடந்த திருமணம் அது. குறைந்தபட்ச உறவினர்கள், குறைந்தபட்ச நண்பர்கள்.

திருமணம் முடிந்தபிறகும்கூட இயக்கத்தில் பலரால் அதை நம்பமுடியாமலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு உலகெங்கும் பரவத் தொடங்கியிருந்த காலம் அது. லண்டனில் புலிகள் இருந்தார்கள். பிரான்ஸில் இருந்தார்கள். ஸ்விட்சர்லாந்தில் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் பரவியிருந்தார்கள். தகவல் ஒவ்வொரு இடமாகப் போகப் போக, அத்தனை பேரும் நிஜமா, நிஜமா என்று நம்பமுடியாமல்தான் கேட்டார்கள்.

இந்தக் கட்டத்தில் பாலசிங்கம் செய்த உதவி மகத்தானது. அவர்தான் பேசினார். அவர் மட்டும்தான் பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். தனி மனித உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப் பழகுங்கள். அப்படிக் கொடுக்காத சந்தர்ப்பங்கள் அனைத்தும் விரிசலை உண்டாக்கியிருக்கின்றன. தனி வாழ்க்கை ஒழுங்காக இருந்தால்தான் இயக்கமாகச் செயல்படும்போது முழுக்கவனம் செலுத்த முடியும்.

ஒன்று சொல்லவேண்டும். பிரபாகரன் மாதிரி ஒரு செயல்வெறி கொண்ட வீரரைத் திருமணம் செய்துகொள்ள ஒரு துணிச்சல் வேண்டும். தன்னைத்தானே நாட்டுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டவரின் வீட்டை ஆள்வதென்பது சாதாரண செயலல்ல. விவசாய விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த மதிவதனி அதன்பின் வீட்டு நிர்வாக விஞ்ஞானம் பயில ஆரம்பித்தார்.

மூன்று குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. சார்ல்ஸ் ஆண்டனி, துவாரகா, பாலச்சந்திரன். மூன்றுமே மாவீரர்களின் பெயர்கள். (பாலச்சந்திரன் என்பவர் மதிவதனியின் சகோதரர். அவரும் புலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்தவர்தான்.)

வாழ்நாளில் பெரும்பகுதி கானகத்தில். இன்று உறங்கும் இடத்தில் நாளை இருப்போமா என்று தெரியாது. இன்று கிடைத்த உணவு நாளை கிடைக்குமா தெரியாது. இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்றும் தெரியாது.

அதனாலென்ன? இந்த வாழ்க்கையும் இனிக்கத்தான் செய்கிறது. ஓய்வான சமயங்களில் பிரபாகரன் வீட்டு வேலைகளும் பார்த்தார். கோழியடித்துக் குழம்பு வைக்க இப்போதும் தயங்குவதில்லை. வாருங்கள், ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றால், இரு என்று ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்துவந்து அருகே வைத்துக்கொண்டு, ம், எடு என்னும் குழந்தைத்தனம் அப்படியேதான் இருக்கிறது, தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேசமுடியவில்லையே என்கிற வருத்தத்தைப் போலவே.

ஆ, அது ஒரு தீராத வருத்தம். அடிக்கடி சொல்லி ஏங்குவார். மதிவதனி கமுக்கமாகச் சிரிப்பார். சர்வதேசத் தலைவர்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சகஜமாகப் பேசமுடியாமல் என்ன ஒரு சிக்கல்! யாராவது இங்கிலீஷ் தெரிந்தவர்கள் உடன் இருந்தே தீரவேண்டியிருக்கிறது. சே. படித்திருக்கலாம்.

டே தம்பி, நீயாவது படி என்று மகனை முழு மூச்சில் படிக்க வைத்தார். சார்ல்ஸ் ஆண்டனி யாழ்ப்பாணத்தில் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது, அவரது தனிப்பாடம், விருப்பப்பாடம் ஆங்கிலம். அந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலப் பரீட்சை எழுதிய ஒரே மாணவன் சார்ல்ஸ் ஆண்டனிதான்.

அவருக்காக ஒரே ஒரு கேள்வித்தாள் தனியாக வந்தது!.

(தொடரும்)

தலைவர் பிரபாகரன் தொடர் -9

 1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.

`தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்’ – பாலசிங்கம் சொன்னார்.

`அவசியம் நேரில் பார்த்து நன்றி சொல்லத்தான் வேண்டும்’ என்றார் பிரபாகரன்.

அந்த வாரமே ஒரு நாள் குறிக்கப்பட்டது. ராமாவரம் வீட்டுக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் நேரில் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.

தமிழகத்தில் இன்றைக்கு இலங்கை குறித்துப் பேசாத தலைவர்கள் யாருமில்லை. முதன்முதலில் அவர்களுக்கு உதவலாம், உதவ வேண்டும், உதவுவது நமது கடமை என்று கருதிச் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்து வைத்ததைத்தான் மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். செய்தது வெறும் பண உதவி மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சிக்கலான ஒரு சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர். நீட்டிய நேசக்கரம், அவர்கள் தன்னம்பிக்கை இழக்காதிருக்கப் பேருதவி புரிந்தது.

இந்திய உளவு அமைப்பான RAW அப்போது போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்துக்கொண்டிருந்தது. டெலோ இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இருந்தது. ப்ளாட் இருந்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இலங்கைப் போராளி இயக்க இளைஞர்கள் வட இந்தியாவில் சில ரகசியப் பயிற்சி முகாம்களில் மும்முரமாகப் பயின்றுகொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ இந்தப் பயிற்சி முகாமில் பங்குபெற முதலில் புலிகளை அழைக்கவில்லை. பிறகு கடுமையாக முயற்சி செய்து, வாதாடித்தான் இடம்பெற முடிந்தது. ஆனால், சொற்பமான போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர முடியும் என்று சொல்லப்பட்டது.

இந்த ஓர வஞ்சனையில் மிகவும் மனம் நொறுங்கிப் போயிருந்தார் பிரபாகரன். என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல பயிற்சியளிக்க வேண்டும், தரமான ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவருக்கு எம்.ஜி.ஆர். அளித்த பணம் ஒரு வரமாகவே தெரிந்தது.

உடனடியாக சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சில பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டன. இலங்கையிலிருந்து பல விடுதலைப் புலிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மறுபுறம் நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஆலோசனைகள் பலமாக நடைபெற்றன.

பிரபாகரன், `கே.பி.யைக் கூப்பிடுங்கள்’ என்று சொன்னார்.

கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனைப் பற்றிப் பொதுவாக வெளியே யாருக்கும் அதிகம் தெரியாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்முதல் பிரிவின் தலைவர் அவர். இலங்கையில் மயிலிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். எளிய மீனவக் குடும்பம். இளமையில் வறுமை. கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறி, இயக்கத்துக்காகப் பாதியில் விட்டவர். தொடக்கத்தில் `டெலோ’வில் உறுப்பினராக இருந்தார் கே.பி. குட்டிமணி, தங்கதுரை காலத்து டெலோ.

உமா மகேஸ்வரன் விவகாரம் வெடித்து, விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டபோது, மனம் வெறுத்துப் போன பிரபாகரன், டெலோவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து அங்கே போனபோது அறிமுகமானவர்.

பிரபாகரன் டெலோவில் அதிககாலம் இல்லை. ஆனால், சில நல்ல நட்புகள் அவருக்கு அங்கே ஏற்பட்டன. கே.பி. அதிலொருவர்.

ஒரு சம்பவம் நடந்தது. வெகு முக்கிய சம்பவம். 1981-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி ஒரு பெரும் கொள்ளைக்குத் திட்டமிட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளும் டெலோவும் இணைந்து திட்டமிட்ட கொள்ளை. நீர்வேலிக் கொள்ளை என்று சரித்திரம் அதனைச் சொல்லும்.

வடமராச்சி பகுதியில் உள்ள பல வங்கிக் கிளைகளிலிருந்து அன்றைக்குப் பணத்தைத் திரட்டிக்கொண்டு ஒரு வேன் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான வேன். உள்ளே இருந்த பணத்தின் மொத்த மதிப்பு எண்பது லட்சம். நல்ல செக்யூரிடி. ஆயுததாரிகளின் பாதுகாப்பு. கொண்டுபோய்த் தலைமையகத்தில் சேர்த்துவிட்டால் தீர்ந்தது விஷயம்.

அப்படியா? நாம் அந்தப் பணத்தை எடுக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னார். ஒரு கைத்துப்பாக்கி வாங்கக்கூடப் பணமில்லாமல் இயக்கங்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த தொடக்ககாலத்தில் வங்கிக்கொள்ளைகள்தான் அன்றைக்கு அவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.

டெலோவுடன் இணைந்து செயல்படலாம் என்று முடிவு செய்து பிரபாகரன் குழுவினர் வந்து சேர்ந்திருந்த புதிது. ஒரு கம்பீரமான தொடக்கமாக அது அமைவதற்கு இந்தக் கொள்ளை பெரிதும் உதவும் என்று இரு தரப்புமே நினைத்திருந்தது. திட்டமிட்டார்கள். யாழ்ப்பாணம் பாயிண்ட் பெட்ரோ நெடுஞ்சாலையெங்கும் போராளிகள் அணி வகுத்து மறைந்து நின்றார்கள். வேன் புறப்பட்ட இடத்துக்குச் சற்றுத்தள்ளி ஒரு மோட்டார் சைக்கிளில் இளம் போராளி ஒருவர் தயாராகக் காத்திருந்தார். அவருக்கு இடப்பட்டிருந்த உத்தரவு, வேனை விடாமல் பின் தொடர்ந்து வா என்பது.

வேனின் முன்னும் பின்னும் செக்யூரிடி போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் இருக்கும். போலீஸாருக்குப் பின்னால் இந்த மோட்டார் சைக்கிள் வரவேண்டும். இடையே யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நீர்வேலியை அடைவதற்குச் சற்றுமுன்னால் வேகமெடுத்து செக்யூரிடி பைக்குகளைத் தாண்டி இந்த வண்டி முன்னால் வரவேண்டும். வேன் வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கை சிக்னல் கொடுக்க வேண்டும். மிச்ச வேலையை மறைந்திருக்கும் விடுதலைப் புலி, டெலோ போராளிகள் பார்த்துக்கொள்வார்கள்.

வாக்கி டாக்கிகளோ, மொபைல் போன்களோ புழக்கத்தில் இல்லாத காலம். நேரடித் தகவல் ஒன்றுதான் வழி. பாதுகாப்பு பந்தோபஸ்துடன் வரும் பண வண்டியைப் பின் தொடர்ந்து வந்து, ஒரு கட்டத்தில் முன்னேறி நண்பர்களுக்குத் தகவல் தந்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கப் பேருதவி புரியும் மிகப்பெரிய பொறுப்பு.

செய்து முடித்தவர் கே.பி., அன்றைக்குத்தான் பிரபாகரன் அவரை நெருக்கமாகப் பார்த்தது. புன்னகை செய்தார். கையைப் பற்றி அழுத்தினார். நண்பா, நாம் இன்னொரு நாளும் சந்திப்போம்.

அப்போது நினைத்திருக்க முடியாது, அந்த இன்னொரு நாள் சந்திப்பு, நிரந்தர உறவாகப்போகிறது என்று. அப்படித்தான் ஆனது.

நீர்வேலி சம்பவத்துக்குப் பிறகு கே.பி. தமிழகத்துக்குத் தப்பி வந்து இருந்தார். போராளி இயக்கங்களுக்கு இங்கே ஆயுதங்கள் வாங்கி அனுப்ப முயற்சி செய்துகொண்டிருந்த வக்கீல் கந்தசாமி என்பவரிடம் அசிஸ்டெண்டாகச் சேர்ந்தார் கே.பி. மும்பையில் வாசம். இந்திய – பாகிஸ்தான் எல்லையிலும் இந்திய – நேபாள எல்லையிலும் வேலை. நிறைய வெளிநாட்டுப் பயணங்கள். ஒவ்வொரு பயணமும் புதிய புதிய பாஸ்போர்ட்களில்.

கே.பி. ஒரு உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்குவரை அப்படித்தான். அவரிடம் தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச் சொல்லுவார்கள். அவரது தாய்நாட்டுக் குடியுரிமை எண் 550971231.

எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுதக் கொள்முதலுக்காகச் செலவிடுவது என்று முடிவு செய்து கே.பி.யைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார் பிரபாகரன். அநேகமாக புலிகள் இயக்கத்துக்கென கே.பி. செய்த முதல் அசைன்மெண்ட் அதுவாகத்தான் இருக்கவேண்டும். குறுகிய காலத்தில் பல நாடுகளில் தனக்கு உருவாகியிருந்த தொடர்புகளை வைத்து ஏராளமான நவீனரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள், தகவல் தொடர்புக் கருவிகளை வாங்கி பத்திரமாகக் கப்பலேற்றி அனுப்பிவிட்டார் கே.பி.

சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வந்து சேர்ந்தபோது பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல் வந்தது. ஆயுதங்கள் வந்துவிட்டன. ஆனால் எப்படி எடுப்பது? முன்னதாக உமா மகேஸ்வரன் இதே மாதிரி ஓர் ஆயுதக் கொள்முதல் செய்திருந்தார், அவருடைய ப்ளாட் இயக்கத்துக்காக. அதுவும் இதே மாதிரி சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். கோடிக்கணக்கான பணம். அசுர முயற்சி. ஒரு தவம் மாதிரி செய்து வரவழைத்த ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, காணாமல் போயின. உமா இடிந்தே போய்விட்டார்.

பிரபாகரன் யோசித்தார். முயற்சி செய்வது பெரிய விஷயமில்லை. அது சரியான பலனைத் தரவேண்டும். வேண்டியது கொஞ்சம் புத்திசாலித்தனம். உடனே பாலசிங்கத்தைக் கூப்பிட்டார். அண்ண, நீங்கள் முதலமைச்சரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். எதையும் மறைக்கவேண்டாம். நமது ஆயுதக் கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்குச் சரக்கு கிடைத்தாக வேண்டும். அவர்தான் உதவ வேண்டும். அவரால் மட்டும்தான் உதவ முடியும்.

எம்.ஜி.ஆருடனான அடுத்த சந்திப்பு அப்போது நடந்தது. இப்போதும் எம்.ஜி.ஆர்.தான் உதவினார். சற்றும் சலனமில்லை. பரபரப்பில்லை. ஒரு ஈ எறும்புக்கும் விஷயம் தெரியாது. ஒரே ஒரு போன்கால். யாருக்குச் செய்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆயுதங்கள் அனைத்தும் அலுங்காமல் குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன..

(தொடரும்)

தலைவர் பிரபாகரன் தொடர் 10

ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட கலவரம். பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்திருந்தார். அவர் அதிபர். கண்ணசைத்தால் போதும். கலவரதாரிகள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிடுவார்கள். ஒரு கையில் வாக்காளர் பட்டியல். மறுகையில் ஆயுதம். வீடு வீடாகத் தேடிச் சென்று கொல்வது ஒரு சுகம். இழுத்துப் போட்டு எரிப்பது ஒரு சுகம். குழந்தைகள் கதறுகின்றனவா? தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள். கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா? பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா? விட்டுவிடு. அவர்களுக்கு உள்ளேயே ஜீவ சமாதியளித்துவிடலாம். ஒரு கடைக்கு ஒரு கேன் பெட்ரோல் போதும். நீ புகைக்காதவனாயினும் பரவாயில்லை. பாக்கெட்டில் எப்போதும் தீப்பெட்டி இருக்கட்டும்.

இதெல்லாம் காவியத்துக்குப் பாயிரம் போல. மேல் பேச்சுக்கு `விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம்’ என்று சொல்வார்கள். ஏய், பார்த்தாயா? இங்கே புலிகள் இருக்கிறார்களா? மரியாதையாகச் சொல்லிவிடு. பிரபாகரன் இங்கேதான் பதுங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எங்கே?

ஊர் ஊராக ராணுவ டிரக்குகள் போகும். இறங்கி, எதிர்ப்படுபவர்களைப் பிடித்து விசாரிப்பார்கள். அடித்துத் துவைத்துத் தூக்கிப் போடுவார்கள்.

அப்படித்தான் ஜூலை 15-ம் தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ டிரக். நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள். சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு விடுதலைப் புலிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்ட வெளிப் பிரதேசம்.

சரி, தாக்கத் தொடங்கலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட ஆரம்பித்தார்கள். உக்கிரமான சண்டை. வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையிலான சண்டை. ஆனால் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வெட்டவெளியில் நின்று பதிலடி தருவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எதிரியின் குறி சரியாக அமையும் வரை மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.

பல நிமிடங்கள் நீடித்த அந்த யுத்தம் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கியது. இலங்கை வீரர்களுக்குக் குறி பார்த்துச் சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்குத் தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது.

இரண்டு பேர் அன்றைக்குத் தப்பித்தார்கள். இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் கொல்லப்பட்டு அவர்கள் உயிர் துறக்கவில்லை. குண்டடி பட்டிருந்தது. ஓட முடியாது என்று தெரிந்து, எதிரியிடம் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்னைச் சுட்டுவிடு என்று கேட்டு சக போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.

சீலன், ஆனந்த் என்கிற அந்த இரு போராளிகளுள் சீலன் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தோழன். பின்னாளில் தனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்தபோது அந்தச் சீலனின் இயற்பெயரான சார்லஸ் ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான தோழன்.

எனவே பிரபாகரன் துடித்து எழுந்தார். விட்டுவிடுவதற்கில்லை. சீலன், ஆனந்தின் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக ஒரு பதிலளித்தாகவேண்டும். செல்லக்கிளி என்று கூப்பிட்டார். கிளி பறந்து வந்தது. கூடவே அவரது படைப்பிரிவினர். மறுபுறம் புலனாய்வுப் பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு, யாழ்ப்பாணம் முழுதும் இரவு நேரங்களில் ராணுவ வாகனங்கள் ரோந்து போகும் பாதைகள் பற்றிய விவரம் உடனே, உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

பரபரவென்று திட்டம் தீட்டப்பட்டது. திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்தார்கள். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ராணுவக் கவச வாகனங்கள் இரவுப் பொழுதில் அணி வகுத்துப் போகும் பாதை. வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். புறப்பட உத்தரவு கேட்டார் செல்லக்கிளி.

இரு, நானும் வருகிறேன் என்றார் பிரபாகரன். கோபம் குறையவில்லை. சற்றும் அணையாத தீ. உள்ளுக்குள் கனன்ற பெருநெருப்பு. புறப்பட்டார். பிரபாகரன், செல்லக்கிளி, விக்டர், சந்தோஷம், புலேந்திரன், கிட்டு. பதினான்கு பேர் கொண்ட குழுவில் ஆறு கமாண்டர்கள். பிரபாகரனே களமிறங்கினாலும் இந்தத் திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர் என்று முடிவு செய்யப்பட்டது.

இருள் மூடிய வானம். செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். பொது மக்களிடம் சாங்கோபாங்கமாக விஷயம் சொல்லப்பட்டிருந்தது. யாரும் வெளியே வரவேண்டாம். கடைகளைத் திறக்கவேண்டாம். வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம். இன்றொருநாள் வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள். இனி தூங்க அவகாசம் கிடைக்குமா என்று சொல்லமுடியாது.

சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப் பட்டன. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம் போய்ப் பார்த்தார். பதினான்கு பேரும் நிலையெடுத்து சாலையின் இரு புறமும் அணி வகுத்துப் பதுங்கி நின்றார்கள். பிரபாகரன் காத்திருந்தார்.

மாதகல் என்னும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உண்டு. அங்கிருந்துதான் புறப்படுவார்கள். புறப்பட்டார்கள். முன்னால் ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச வாகனம். மொத்தம் பதினைந்து வீரர்கள்.

வருகிறார்கள் என்றார் செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள். ஜீப் நெருங்கியது. கண்ணிவெடி பொருத்தப்பட்ட இடத்தை அது தொட்டபோது பிரபாகரன் விசையை அழுத்தினார்.

வெடித்தது. வெடித்தார்கள்.

அதுதான் ஜெயவர்த்தனாவை அதிரச் செய்தது. எண்பத்தி மூன்றாம் வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்த அரசாங்கக் கலவரத் திருவிழா தன் அடுத்த பரிமாணத்தை எட்டுவதற்கும் அதுவே காரணமாயிற்று. அன்றைக்கு ராணுவ டிரக்கில் சென்றுகொண்டிருந்த அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

விவரிக்க முடியாத கொடூரங்கள். எங்கும் மரண ஓலம், காணுமிடமெல்லாம் ரத்தம். யாழ்ப்பாணம் ஒரு மாபெரும் திறந்தவெளி மயானமாகிக்கொண்டிருந்தது. அவலம் ஒரு பக்கம். சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன் விடாமல் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. மக்களின் முழு ஆதரவும் புலிகளின் பக்கம் இருந்தது. இைளஞர்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கிப் படையெடுத்து வந்து சேரத் தொடங்கிய தருணம் அது.

ஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம் நான்கு பெண்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கல்லூரி மாணவிகள். பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்த கடைசித் தமிழ் மாணவர் வரை நீக்கிவிட்டு, முற்றிலும் சிங்கள மயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சி.

எனவே `நாம் உண்ணாவிரதம் இருப்போம்’ என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்த அந்த மாணவிகள் நான்கு பேரும் ஒப்புக்குச் சொல்லவிலை. உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத் திட்டம் அவர்களிடம் இருந்தது. யார் சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம், பிரபாகரனுக்குப் போனது. நான்கு பெண்கள். யார் அவர்கள்? விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும்? இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா? ம்ஹும். வேண்டாம். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போக அனுமதிக்காதீர்கள். தூக்கி வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஒரு ஜீப். நான்கு போராளிகள். மின்னல் வேகம். அந்த நான்கு பெண்களும் பிரபாகரனின் எதிரே நின்றுகொண்டிருந்தார்கள். பெயரென்ன என்று கேட்டார்.

நான்கு பேரும் பேரைச் சொன்னார்கள். அதிலொரு பெயர் மதிவதனி..

(தொடரும்)

வீரச்சாவைத் தழுவிய போராளிகள்

வீரச்சாவைத் தழுவிய போராளிகள்


வீரச்சாவைத் தழுவிய போராளிகள்


வீரவணக்கங்கள்

சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம்


வீரவணக்கங்கள்

Up ↑