சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள். ஏழு எட்டுத் தரத்துக்குமேல் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரே தரத்தில் போட்டுக்குவிச்சுக் கொண்டு போனாங்கள்.

காயப்பட்ட ஆமிக்காறங்களை இப்பிடிக் குவியலாய் போட்டுக்கொண்டு போகமாட்டாங்கள். அப்பிடி எண்டால் இதில கொண்டுபோறது செத்த ஆமிக்காறங்களாய் தான் இருக்கவேணும். அப்படியே படுத்துக்கிடந்தபடி எட்டிப்பார்த்தன். அந்த ஸ்ரெச்சரில் கொண்டு போற ஆமிக்காறங்கள் சண்டையில் செத்துப்போன ஆக்கள். எனக்கு என்னோட அதில் நிண்ட பிள்ளையளுக்கும் அந்த ஸ்ரெச்சரைப் பாக்கப் பாக்கப் பெரிய சந்தோசமாய் இருந்தது” என்ற எழில்நிலாவின் முகம் மலர்ந்தது.”பொழுது விடிஞ்சு சூரியன் வந்திட்டுது. ஆமிக்காறங்களின்ர விளையாட்டுக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தம். நாங்கள் சுட்டு ஆமிக்கறங்கள் சாகாட்டிக்கும் எங்களின்ர ஆக்களின்ர அடியளில செத்துப்போன ஆமிக்காறங்களின்ர பொடியள் மற்றது காயப்பட்டு அனுங்கிக்கொண்டிருக்கிற ஆமிக்காறங்களைப் பாக்கப் பாக்கப் பயங்கரச் சந்தோசமாய் இருந்தது.

ஒவ்வொருக்காலும் செத்துப்போன ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் வரவேணும் எண்டு மனசுக்குள்ள வேண்டினம். சண்டை தொடங்கினதில இருந்து முடியும் வரைக்கும் எங்களின்ர பொசிசனுக்கு முன்னுக்கு இருக்கிற அவங்களின்ர சப்பிளேப் பாதையால ஒரு பதினைஞ்சு இருபது தரத்துக்குக் கிட்ட கொண்டுபோய் வைச்சிட்டு வந்திருப்பாங்கள். இதுகளவிட காயப்பட்ட ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் நாப்பத்தைஞ்சு ஐம்பது தரத்துக்குக் கிட்டபோய் வந்திட்டுது” என்று எழில்நிலா சம்பவங்களை விபரிக்கப் போராளிகளின் வீரம் மனதில் ஓங்கி ஒலித்தது. எழில்நிலாவின் கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் போலவே இருந்தது. பத்து மீற்றரில் நிற்கும் சிங்களப் படைகளின் முன்னால் நின்று அவள் இத்தனை சம்பவங்களையும் துல்லியமாய் அவதானித்துக் கட்டளைப் பணியகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியபடி இருந்தது என்பது மிகவும் சாதாரணமான விடயமல்ல.

இதற்குள்ளால் அந்தப்போராளிகளின் துணிவும் களமாடும் ஓர்மமும் வெளிப்பட்டு நின்றது.அவள் தொடர்ந்தாள் “நாங்கள் ஜெரி அண்ணைக்கும் நித்திலன் அண்ணைக்கும் குடுத்த இடங்களுக்கு எங்களின்ர ஆக்களின்ர செல்லுகள் வந்து விழுந்துகொண்டிருந்தது. சில இடங்களில் நாங்கள் எங்களப் பார்க்காமல் கூட செல் அனுப்பச் சொல்லிச் சொன்னம். நாங்கள் குடுக்கிற இடங்களுக்குக் கொஞ்சம் கூடப்பிசகாமல் செல்லுகள் விழுந்து வெடிச்சுது. ஏற்கனவே சண்டையில் காயப்பட்டும் செத்தும் வந்துகொண்டிருந்த ஆமிக்காறங்களுக்கு இப்ப இதிலயும் எங்களின்ர செல்லுகளோட கிடந்து அடிபடவேண்டியதாய் இருந்திது” என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

சண்டையின் நிறைவுக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களைச் சொல்லும்போது எழில்நிலாவிற்கு அவளது தோழிற்கும் சிரிப்பு வந்துவிடட்து. இவளது அனுபவங்களுடன் மட்டும் பயணித்துக்கொண்டிருந்த அந்தக்காப்பரண் இப்போது மீண்டும் பகிடிகளால் கலகலக்கத் தொடங்கியது. சாப்பாட்டுக்கான நேரம் நெருங்கிவிடட்து. தொலைவான இடமொன்றில் இருந்து பெண் போராளிகள் இருவர் பகல் உணவையும் அவற்றுக்குரிய கறியையும் கைகளில் தாங்கியவாறு நடந்துவந்துகொண்டிருந்தனர்.காப்பரணின் ஒரு பக்க மூலையில் இருந்த சிறிய அவதானிப்புத் துவாரத்திற்குள்ளால் அந்தப்பெண் போராளிகளை அவதானித்துவிட்டோம். சற்று மனசில் இரக்கமில்லாதவன்போலக் கதிரவன் சுட்டெரித்துக்கொண்டிருந்தான்.

காப்பரணுக்குள்ளும் வெயிலின் தாக்கம் வியர்வையாய் கொட்டியது. சற்றுத் தொலைவில் இரண்டு போராளிகள் நடந்துவந்தனர். வழமைபோலவே அவர்களின் தோளில் துப்பாக்கிகள். தோளில் துப்பாக்கியுடன் மட்டும் தான் இவர்கள் வருகிறார்களா?. சில நிமிடங்கள் கழிந்தன. காப்பரணுக்குள்ளிருந்த மெல்லியதான சற்று உயர்ந்த போராளி ஒருத்தி “மத்தியான ஒழுங்கு வருது” என்றாள். நகர்வு அகழிகளிற்குள் வளைந்தும் நெளிந்தம் குனிந்தும் விழுந்து எழுந்தும் நீண்டதூரங்கள் நடந்தால் உடல் களைத்திருந்தது. அந்தக்களைப்புக் காலைச் சாப்பாட்டைக் கைநழுவவிட்டுவிட்ட எங்களை வயிறு கண்டித்தது. வயிற்றின் கண்டிப்பு சாதாரணமானதாய் இருக்கவில்லை. சிறுகுடல் பெருங்குடலை அப்படியே விழுங்குவதும் பின்னர் சிறுகுடலின் போராட்டத்தால் மீள்வதுமாக நிலைமை தொடர்ந்தது. இந்த நிலமையை காப்பரணில் நிற்கும் பெண்போராளிகளிடம் எப்படிச் சொல்வது. இது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் எழில்நிலாவின் சுவாரசியமானதும் மனதைத் துடிக்கவைக்கும் முற்றுகைக்குள் நின்ற அனுபவமும் பசியைத் தொலைக்க வைத்திருந்தது.

அவளது அனுபவப்பகிர்வில் ஏற்பட்ட சிறிய தளம்பல் அந்த மெல்லிய உயர்ந்த பெண் போராளியின் ‘மத்தியான ஒழுங்கு வருது’ என்ற பகிடியான பேச்சும் எங்களுக்குள் உறைந்திருந்த பசிப்போராட்டத்தைச் சட்டென்று கிளறியது. பசிவந்தால் பறக்கின்ற பத்தில் ஐந்தாறு பறந்துவிட்டது. சொற்பமாக இன்றும் ஒரு நான்கைந்து மாத்திரம் பறக்கவேண்யதாய் இருந்தது. அவற்றைப் பறக்காமல் தடுக்கின்ற பங்கில் எழில்நிலாவின் சுவாரசியமான அனுபங்களின் பகிர்வு முக்கியமானதாய் இருந்தது. அவளவு உயிர்துடிப்பான அனுபவத்தில் மூழ்கியதில் பசியின் சிந்தனையை மறந்திருந்தோம்.தொலைவில் துப்பாக்கியையுத் தோளில் சுமந்தபடி வந்த பெண்போராளிகள் நாங்கள் இருக்கும் காப்பரணை நெருங்கிவிட்டார்கள்.

வறுத்தெடுக்கும் வெயிலில் அந்தப்போராளிகளின் கைகளில் இருந்த பொருட்கள் முதலில் தெரியவில்லை. எங்களை நெருங்கிவந்துவிட்டனர். இப்போது தான் தெரிநிதது அவர்களின் கைகளில் பொதிசெய்யப்பட்ட சொப்பின் பைகளில் மதிய உணவுடன் வருகின்றார்கள் என்பது தெரிந்தது. அவ்வளவு தான் பசி இன்னும் பன்மடங்காகியது. உடனடியாகவே சாப்பிட வேண்டும் போலிருந்தது. சாப்பாட்டுடன் வந்த போராளிகள் எங்களை முதலில்; காணவில்லை. குதூகலமாகக் காப்பரணுக்குள் நுழைந்தவர்கள் எங்களைக்கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்கள்.

எங்களை எதிர்பார்க்காத அவர்கள் எங்களைக்கண்டதும் சற்றுத்திகைத்துவிட்டார்கள். வெட்க்கத்தில் நின்ற அந்தப்பெண் போராளிகளை புன்சிரிப்புடன் பார்த்தோம். முகத்தில் எந்த அசைவும் இல்லை. “நாங்கள் ஆமி இல்லை” என்றோம்.அவர்களின் முகங்கள் முழுமையாய் சிரித்தன. உணவுப்பொதிகளுடன் வந்த அந்த இரண்டு போராளிகளில் சிறியவர்களான போராளி “ஆமிக்காறங்கள் எண்டால் இப்ப என்ன நடந்திருக்கும் எண்டுறது தெரியும்தானே. பிள்ளையள் சுட்டுப் பொசுக்கியிருக்குங்கள் தெரியும்தானே” என்றாள் மிடுக்குடன்

“என்ன கொஞ்ச நாளுக்கு முன்னுக்குத் தானே இருபத்தைஞ்சு முப்பது ஆமிக்காறங்களின்ர பொடியள எடுத்துப்போட்டு இப்ப திரும்பவும் இப்படிக்கதைக்கிறியள்” என்றோம். “அண்டைக்குச் சின்ன மூச்சுத்தான் விட்டனாங்கள். இனித்தான் மிச்சம் குடுக்கவேண்டும். அண்டைய ஒத்திகையிலையே ஆமிக்காறங்களுக்கு இந்த அடி எண்டால் இனி எப்படி இருக்கும் எண்டு பாருங்கோவன்” என்றாள் சாப்பாட்டுப் பொதிகளுடன் வந்த அந்தப் பெண் போராளி. அவளது உறுதியான பேச்சு எங்களை வியக்கவைத்தது. கடுமையான களத்தில் உறுதியாய் நிற்கும் அந்தப்போராளிகளின் உணர்வுமிக்க பேச்சு மிரமிக்கவைத்தது.உணர்வுமிக்க போராளிகளின் மத்தியில் இருப்பதில் பெருமையடைந்தோம். நாங்கள் இருக்கும் காப்பரணும் சிங்களப்படைகளின் தாக்குதலில் தப்பியிருக்கவில்லை. அதுவும் சிதைவடைந்திருற்தது.

சிதைவுகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகளும் விரைவாக இடம்பெற்றன. அந்தப்போராளிகளிடம் “என்னசாப்பாடு விசேசமோ?”என்றோம். “ஆமிக்காறங்கள் எங்களுக்குச் செல்லுகள் அனுப்புறது மாதிரி எங்களுக்குச் சாப்பாட்டில் ஒரு சிக்கலும் இல்லை” என்றாள். எங்களுக்கு பசி வயிற்றைக்கிள்ளியபடி இருந்தது. அந்தச் சிறியபோராளி எங்களைப் பார்த்து “இண்டைக்கு எங்களின்ர பொசிசனில சாப்பிட்டுப்பாருங்கோவன்” என்றாள் சாப்பாடு தயாரானது. நன்றாக அவிந்த சோறு அதனுடன் பொரித்துவைத்த நல்ல மீன்கறியும் இணைந்திருந்தது. பொரித்து வைத்த குழம்பு என்பதால் அதன் சுவை நாக்கைப்பிடுங்கியது. இவற்றுடன் நன்றாக மசித்துக்காய்ச்சிய கீரைக்கறி. இவை இரண்டும் இணைந்துவிட இன்றைய மதியச்சாப்பாடு. சுவையாய் இருந்தது. மெல்லமாய் சுவைத்தோம். இரண்டு வாய் சாப்பிடவில்லை நன்றாகப் பொரித்த நெத்தலிக்கருவாடு அந்தப் போராளியிடம் “இது என்ன எல்லாம் எங்களிட்டக் கேக்கக்கூடாது நாங்கள்” இப்பிடி எத்தின செற்றப்புகள் எல்லாம் செய்து வைச்சிருப்பம் தெரியும் தானே” என்றாள் சிரிப்புடன்.

வயிற்றை வறுகும் பசியுடன் போராடிக்கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்க இடையில் மெல்லிய வெள்ளை நிறமான போராளி ஒருத்தி “அண்ணை உப்புத்தண்ணி இருக்குது கீரைக்குக் கொஞ்சம் காணாதுபோல கிடக்குது விட்டுச்சாப்பிடுங்கோ?” என்றவள் உப்புத்தண்ணியை விடுவதற்குத் தயாராய் இருந்தாள். அந்தப்போராளி சொல்வதில் உண்மை இருந்தது. தான் ஆனாலும் பசியின் கோரத்தால் அதனைப் பொருட்படுத்தவில்லை. மேலதிகமான உப்பும் சேர்த்தவுடன் மதிய உணவின் சுவை பிரமாதமாய் இருந்தது.

வயிறு நிறைந்து குளிர்ந்தது. “சமையல் செற்றப்புகள் எல்லாம் வைச்சிருக்கிறியள்போல கிடக்குது” என்றோம்.”நாங்கள் லைனில நிற்கிறம் எண்டுற பேர்தான். ஆனால் இஞ்ச எல்ல வசதிகளும் எங்களிட்ட இருக்குது. ஆனால் வீட்டில இருந்து அம்மா கடிதம் எழுதேக்குள்ள பிள்ள கவனம் கவனம் எண்டு நூறு கவனம் போட்டுத்தான் கடிதம் எழுதுவா அண்ண பாவம் அந்த மனிசிக்கு எங்க விளங்கப்போகுது இஞ்ச நாங்கள் ஆடுற கூத்துகள்” என்றாள் எழில்நிலா அவளின்அருகில் நின்ற இன்னொரு போராளி “இஞ்ச அடிக்கடி ஏதும் சின்னதாய் செற்றுப் பண்ணுறநாங்கள். இண்டைக்கு எங்களிட்டக் கைவசம் ஒண்டும் இல்லாமல் போச்சுது. நீங்கள் வருவீங்கள் எண்டு தெரிஞ்சிருந்தால் பெசல் சாப்பாடு செய்திருப்பம்” என்று சிரித்துக்கொண்டே சொல்லமுடித்தாள்.

‘எட அறிவிச்சுப்போட்டு வந்திருந்தால் அந்த மாதிரிச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்’ என்று மனசு தனது வழமையான பாய்ச்சலில் நின்றது. களமுனையில் நிற்கிறோம் என்ற உண்மையைப் போராளிகளின் இத்தகைய செயற்பாடுகளும் அவர்களது பகிடியான பேச்சுக்களும் மறந்துவிடச் செய்தது. இருந்தும் நாங்கள் நிற்கும் இடத்தின் தன்மையைச் சிங்களப்படைகள் அவ்வப்போது நினைவுபடுத்தினார்கள். சற்றுவெட்டையான பிரதேசத்தில் வறுக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் செயற்பட்டார்கள். அந்தப்போராளிகள் சாப்பாடு நipறவடைய மீண்டும் எழில்நிலா தனது அனுபவங்களின் இறுதிக்கட்டங்களைப் பகிரத்தொடங்கினாள்.

இதற்கிடையில் உருமறைப்புத்தொப்பியை தலையில் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் போராளி ஒருத்தி அந்தக் காப்பரணை வந்தடைந்தாள்.அவளைப் பார்த்ததும் “கம்பஸ்” என்றார்கள். மனதில் உறுதி நிறைந்த அந்தப் போராளிகளைப் பார்க்கலாம். வியர்வையில் நனைந்த அவள் எங்களைப் பார்த்தாள்.