1994 புரட்டாதி 13ம் நாள் இலண்டன் பி.பி.சியின் தமிழ் சேவையின் சார்பில் திருமதி.ஆனந்தி என்ற நிருபர் தமிழீழத் தேசியத் தலைவரைப் பேட்டி கண்டபோது ‘பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம். ஒரு சுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகளும் அதனையே நிரூபித்துக் காட்டுகின்றன. நாமும் சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம். இன்று சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போர்.

எனவே போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். யார் இந்தப் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்களோ அவர்களே இந்தப் போருக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும். போர் மூலம், அடக்கு முறையின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதன் மூலமே இன்றைய இனநெருக்கடிக்குத் தீர்வு காணலாம். சமாதான வழிமூலமே இதனைச் சாதிக்கலாம். இதனை சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கும் இராணுவவாதிகளுக்கும் சிங்கள மக்களே உணர்த்த வேண்டும். நாம் சிங்கள மக்களை நேசிக்கிறோம். நாம் சிங்கள மக்களுக்கு விரோதமானவர்கள் அல்ல. சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாடுகளுக்கும் பகைமைக்கும் இனவாத சக்திகளே காரணம்.

இந்த இனவாத சக்திகளைச் சிங்கள மக்கள் இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கைத்தீவில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்