Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2008

போர்முகம் 1

சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள். ஏழு எட்டுத் தரத்துக்குமேல் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரே தரத்தில் போட்டுக்குவிச்சுக் கொண்டு போனாங்கள்.

காயப்பட்ட ஆமிக்காறங்களை இப்பிடிக் குவியலாய் போட்டுக்கொண்டு போகமாட்டாங்கள். அப்பிடி எண்டால் இதில கொண்டுபோறது செத்த ஆமிக்காறங்களாய் தான் இருக்கவேணும். அப்படியே படுத்துக்கிடந்தபடி எட்டிப்பார்த்தன். அந்த ஸ்ரெச்சரில் கொண்டு போற ஆமிக்காறங்கள் சண்டையில் செத்துப்போன ஆக்கள். எனக்கு என்னோட அதில் நிண்ட பிள்ளையளுக்கும் அந்த ஸ்ரெச்சரைப் பாக்கப் பாக்கப் பெரிய சந்தோசமாய் இருந்தது” என்ற எழில்நிலாவின் முகம் மலர்ந்தது.”பொழுது விடிஞ்சு சூரியன் வந்திட்டுது. ஆமிக்காறங்களின்ர விளையாட்டுக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தம். நாங்கள் சுட்டு ஆமிக்கறங்கள் சாகாட்டிக்கும் எங்களின்ர ஆக்களின்ர அடியளில செத்துப்போன ஆமிக்காறங்களின்ர பொடியள் மற்றது காயப்பட்டு அனுங்கிக்கொண்டிருக்கிற ஆமிக்காறங்களைப் பாக்கப் பாக்கப் பயங்கரச் சந்தோசமாய் இருந்தது.

ஒவ்வொருக்காலும் செத்துப்போன ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் வரவேணும் எண்டு மனசுக்குள்ள வேண்டினம். சண்டை தொடங்கினதில இருந்து முடியும் வரைக்கும் எங்களின்ர பொசிசனுக்கு முன்னுக்கு இருக்கிற அவங்களின்ர சப்பிளேப் பாதையால ஒரு பதினைஞ்சு இருபது தரத்துக்குக் கிட்ட கொண்டுபோய் வைச்சிட்டு வந்திருப்பாங்கள். இதுகளவிட காயப்பட்ட ஆமிக்காறங்களின்ர ஸ்ரெச்சர் நாப்பத்தைஞ்சு ஐம்பது தரத்துக்குக் கிட்டபோய் வந்திட்டுது” என்று எழில்நிலா சம்பவங்களை விபரிக்கப் போராளிகளின் வீரம் மனதில் ஓங்கி ஒலித்தது. எழில்நிலாவின் கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் போலவே இருந்தது. பத்து மீற்றரில் நிற்கும் சிங்களப் படைகளின் முன்னால் நின்று அவள் இத்தனை சம்பவங்களையும் துல்லியமாய் அவதானித்துக் கட்டளைப் பணியகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியபடி இருந்தது என்பது மிகவும் சாதாரணமான விடயமல்ல.

இதற்குள்ளால் அந்தப்போராளிகளின் துணிவும் களமாடும் ஓர்மமும் வெளிப்பட்டு நின்றது.அவள் தொடர்ந்தாள் “நாங்கள் ஜெரி அண்ணைக்கும் நித்திலன் அண்ணைக்கும் குடுத்த இடங்களுக்கு எங்களின்ர ஆக்களின்ர செல்லுகள் வந்து விழுந்துகொண்டிருந்தது. சில இடங்களில் நாங்கள் எங்களப் பார்க்காமல் கூட செல் அனுப்பச் சொல்லிச் சொன்னம். நாங்கள் குடுக்கிற இடங்களுக்குக் கொஞ்சம் கூடப்பிசகாமல் செல்லுகள் விழுந்து வெடிச்சுது. ஏற்கனவே சண்டையில் காயப்பட்டும் செத்தும் வந்துகொண்டிருந்த ஆமிக்காறங்களுக்கு இப்ப இதிலயும் எங்களின்ர செல்லுகளோட கிடந்து அடிபடவேண்டியதாய் இருந்திது” என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

சண்டையின் நிறைவுக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களைச் சொல்லும்போது எழில்நிலாவிற்கு அவளது தோழிற்கும் சிரிப்பு வந்துவிடட்து. இவளது அனுபவங்களுடன் மட்டும் பயணித்துக்கொண்டிருந்த அந்தக்காப்பரண் இப்போது மீண்டும் பகிடிகளால் கலகலக்கத் தொடங்கியது. சாப்பாட்டுக்கான நேரம் நெருங்கிவிடட்து. தொலைவான இடமொன்றில் இருந்து பெண் போராளிகள் இருவர் பகல் உணவையும் அவற்றுக்குரிய கறியையும் கைகளில் தாங்கியவாறு நடந்துவந்துகொண்டிருந்தனர்.காப்பரணின் ஒரு பக்க மூலையில் இருந்த சிறிய அவதானிப்புத் துவாரத்திற்குள்ளால் அந்தப்பெண் போராளிகளை அவதானித்துவிட்டோம். சற்று மனசில் இரக்கமில்லாதவன்போலக் கதிரவன் சுட்டெரித்துக்கொண்டிருந்தான்.

காப்பரணுக்குள்ளும் வெயிலின் தாக்கம் வியர்வையாய் கொட்டியது. சற்றுத் தொலைவில் இரண்டு போராளிகள் நடந்துவந்தனர். வழமைபோலவே அவர்களின் தோளில் துப்பாக்கிகள். தோளில் துப்பாக்கியுடன் மட்டும் தான் இவர்கள் வருகிறார்களா?. சில நிமிடங்கள் கழிந்தன. காப்பரணுக்குள்ளிருந்த மெல்லியதான சற்று உயர்ந்த போராளி ஒருத்தி “மத்தியான ஒழுங்கு வருது” என்றாள். நகர்வு அகழிகளிற்குள் வளைந்தும் நெளிந்தம் குனிந்தும் விழுந்து எழுந்தும் நீண்டதூரங்கள் நடந்தால் உடல் களைத்திருந்தது. அந்தக்களைப்புக் காலைச் சாப்பாட்டைக் கைநழுவவிட்டுவிட்ட எங்களை வயிறு கண்டித்தது. வயிற்றின் கண்டிப்பு சாதாரணமானதாய் இருக்கவில்லை. சிறுகுடல் பெருங்குடலை அப்படியே விழுங்குவதும் பின்னர் சிறுகுடலின் போராட்டத்தால் மீள்வதுமாக நிலைமை தொடர்ந்தது. இந்த நிலமையை காப்பரணில் நிற்கும் பெண்போராளிகளிடம் எப்படிச் சொல்வது. இது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் எழில்நிலாவின் சுவாரசியமானதும் மனதைத் துடிக்கவைக்கும் முற்றுகைக்குள் நின்ற அனுபவமும் பசியைத் தொலைக்க வைத்திருந்தது.

அவளது அனுபவப்பகிர்வில் ஏற்பட்ட சிறிய தளம்பல் அந்த மெல்லிய உயர்ந்த பெண் போராளியின் ‘மத்தியான ஒழுங்கு வருது’ என்ற பகிடியான பேச்சும் எங்களுக்குள் உறைந்திருந்த பசிப்போராட்டத்தைச் சட்டென்று கிளறியது. பசிவந்தால் பறக்கின்ற பத்தில் ஐந்தாறு பறந்துவிட்டது. சொற்பமாக இன்றும் ஒரு நான்கைந்து மாத்திரம் பறக்கவேண்யதாய் இருந்தது. அவற்றைப் பறக்காமல் தடுக்கின்ற பங்கில் எழில்நிலாவின் சுவாரசியமான அனுபங்களின் பகிர்வு முக்கியமானதாய் இருந்தது. அவளவு உயிர்துடிப்பான அனுபவத்தில் மூழ்கியதில் பசியின் சிந்தனையை மறந்திருந்தோம்.தொலைவில் துப்பாக்கியையுத் தோளில் சுமந்தபடி வந்த பெண்போராளிகள் நாங்கள் இருக்கும் காப்பரணை நெருங்கிவிட்டார்கள்.

வறுத்தெடுக்கும் வெயிலில் அந்தப்போராளிகளின் கைகளில் இருந்த பொருட்கள் முதலில் தெரியவில்லை. எங்களை நெருங்கிவந்துவிட்டனர். இப்போது தான் தெரிநிதது அவர்களின் கைகளில் பொதிசெய்யப்பட்ட சொப்பின் பைகளில் மதிய உணவுடன் வருகின்றார்கள் என்பது தெரிந்தது. அவ்வளவு தான் பசி இன்னும் பன்மடங்காகியது. உடனடியாகவே சாப்பிட வேண்டும் போலிருந்தது. சாப்பாட்டுடன் வந்த போராளிகள் எங்களை முதலில்; காணவில்லை. குதூகலமாகக் காப்பரணுக்குள் நுழைந்தவர்கள் எங்களைக்கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்கள்.

எங்களை எதிர்பார்க்காத அவர்கள் எங்களைக்கண்டதும் சற்றுத்திகைத்துவிட்டார்கள். வெட்க்கத்தில் நின்ற அந்தப்பெண் போராளிகளை புன்சிரிப்புடன் பார்த்தோம். முகத்தில் எந்த அசைவும் இல்லை. “நாங்கள் ஆமி இல்லை” என்றோம்.அவர்களின் முகங்கள் முழுமையாய் சிரித்தன. உணவுப்பொதிகளுடன் வந்த அந்த இரண்டு போராளிகளில் சிறியவர்களான போராளி “ஆமிக்காறங்கள் எண்டால் இப்ப என்ன நடந்திருக்கும் எண்டுறது தெரியும்தானே. பிள்ளையள் சுட்டுப் பொசுக்கியிருக்குங்கள் தெரியும்தானே” என்றாள் மிடுக்குடன்

“என்ன கொஞ்ச நாளுக்கு முன்னுக்குத் தானே இருபத்தைஞ்சு முப்பது ஆமிக்காறங்களின்ர பொடியள எடுத்துப்போட்டு இப்ப திரும்பவும் இப்படிக்கதைக்கிறியள்” என்றோம். “அண்டைக்குச் சின்ன மூச்சுத்தான் விட்டனாங்கள். இனித்தான் மிச்சம் குடுக்கவேண்டும். அண்டைய ஒத்திகையிலையே ஆமிக்காறங்களுக்கு இந்த அடி எண்டால் இனி எப்படி இருக்கும் எண்டு பாருங்கோவன்” என்றாள் சாப்பாட்டுப் பொதிகளுடன் வந்த அந்தப் பெண் போராளி. அவளது உறுதியான பேச்சு எங்களை வியக்கவைத்தது. கடுமையான களத்தில் உறுதியாய் நிற்கும் அந்தப்போராளிகளின் உணர்வுமிக்க பேச்சு மிரமிக்கவைத்தது.உணர்வுமிக்க போராளிகளின் மத்தியில் இருப்பதில் பெருமையடைந்தோம். நாங்கள் இருக்கும் காப்பரணும் சிங்களப்படைகளின் தாக்குதலில் தப்பியிருக்கவில்லை. அதுவும் சிதைவடைந்திருற்தது.

சிதைவுகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகளும் விரைவாக இடம்பெற்றன. அந்தப்போராளிகளிடம் “என்னசாப்பாடு விசேசமோ?”என்றோம். “ஆமிக்காறங்கள் எங்களுக்குச் செல்லுகள் அனுப்புறது மாதிரி எங்களுக்குச் சாப்பாட்டில் ஒரு சிக்கலும் இல்லை” என்றாள். எங்களுக்கு பசி வயிற்றைக்கிள்ளியபடி இருந்தது. அந்தச் சிறியபோராளி எங்களைப் பார்த்து “இண்டைக்கு எங்களின்ர பொசிசனில சாப்பிட்டுப்பாருங்கோவன்” என்றாள் சாப்பாடு தயாரானது. நன்றாக அவிந்த சோறு அதனுடன் பொரித்துவைத்த நல்ல மீன்கறியும் இணைந்திருந்தது. பொரித்து வைத்த குழம்பு என்பதால் அதன் சுவை நாக்கைப்பிடுங்கியது. இவற்றுடன் நன்றாக மசித்துக்காய்ச்சிய கீரைக்கறி. இவை இரண்டும் இணைந்துவிட இன்றைய மதியச்சாப்பாடு. சுவையாய் இருந்தது. மெல்லமாய் சுவைத்தோம். இரண்டு வாய் சாப்பிடவில்லை நன்றாகப் பொரித்த நெத்தலிக்கருவாடு அந்தப் போராளியிடம் “இது என்ன எல்லாம் எங்களிட்டக் கேக்கக்கூடாது நாங்கள்” இப்பிடி எத்தின செற்றப்புகள் எல்லாம் செய்து வைச்சிருப்பம் தெரியும் தானே” என்றாள் சிரிப்புடன்.

வயிற்றை வறுகும் பசியுடன் போராடிக்கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிற்கு இப்படி ஒரு சாப்பாடு கிடைத்ததை நினைக்க முடியாதிந்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்க இடையில் மெல்லிய வெள்ளை நிறமான போராளி ஒருத்தி “அண்ணை உப்புத்தண்ணி இருக்குது கீரைக்குக் கொஞ்சம் காணாதுபோல கிடக்குது விட்டுச்சாப்பிடுங்கோ?” என்றவள் உப்புத்தண்ணியை விடுவதற்குத் தயாராய் இருந்தாள். அந்தப்போராளி சொல்வதில் உண்மை இருந்தது. தான் ஆனாலும் பசியின் கோரத்தால் அதனைப் பொருட்படுத்தவில்லை. மேலதிகமான உப்பும் சேர்த்தவுடன் மதிய உணவின் சுவை பிரமாதமாய் இருந்தது.

வயிறு நிறைந்து குளிர்ந்தது. “சமையல் செற்றப்புகள் எல்லாம் வைச்சிருக்கிறியள்போல கிடக்குது” என்றோம்.”நாங்கள் லைனில நிற்கிறம் எண்டுற பேர்தான். ஆனால் இஞ்ச எல்ல வசதிகளும் எங்களிட்ட இருக்குது. ஆனால் வீட்டில இருந்து அம்மா கடிதம் எழுதேக்குள்ள பிள்ள கவனம் கவனம் எண்டு நூறு கவனம் போட்டுத்தான் கடிதம் எழுதுவா அண்ண பாவம் அந்த மனிசிக்கு எங்க விளங்கப்போகுது இஞ்ச நாங்கள் ஆடுற கூத்துகள்” என்றாள் எழில்நிலா அவளின்அருகில் நின்ற இன்னொரு போராளி “இஞ்ச அடிக்கடி ஏதும் சின்னதாய் செற்றுப் பண்ணுறநாங்கள். இண்டைக்கு எங்களிட்டக் கைவசம் ஒண்டும் இல்லாமல் போச்சுது. நீங்கள் வருவீங்கள் எண்டு தெரிஞ்சிருந்தால் பெசல் சாப்பாடு செய்திருப்பம்” என்று சிரித்துக்கொண்டே சொல்லமுடித்தாள்.

‘எட அறிவிச்சுப்போட்டு வந்திருந்தால் அந்த மாதிரிச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்’ என்று மனசு தனது வழமையான பாய்ச்சலில் நின்றது. களமுனையில் நிற்கிறோம் என்ற உண்மையைப் போராளிகளின் இத்தகைய செயற்பாடுகளும் அவர்களது பகிடியான பேச்சுக்களும் மறந்துவிடச் செய்தது. இருந்தும் நாங்கள் நிற்கும் இடத்தின் தன்மையைச் சிங்களப்படைகள் அவ்வப்போது நினைவுபடுத்தினார்கள். சற்றுவெட்டையான பிரதேசத்தில் வறுக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் செயற்பட்டார்கள். அந்தப்போராளிகள் சாப்பாடு நipறவடைய மீண்டும் எழில்நிலா தனது அனுபவங்களின் இறுதிக்கட்டங்களைப் பகிரத்தொடங்கினாள்.

இதற்கிடையில் உருமறைப்புத்தொப்பியை தலையில் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் போராளி ஒருத்தி அந்தக் காப்பரணை வந்தடைந்தாள்.அவளைப் பார்த்ததும் “கம்பஸ்” என்றார்கள். மனதில் உறுதி நிறைந்த அந்தப் போராளிகளைப் பார்க்கலாம். வியர்வையில் நனைந்த அவள் எங்களைப் பார்த்தாள்.

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008


எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.


இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.


சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.


வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்

1994 புரட்டாதி 13ம் நாள் இலண்டன் பி.பி.சியின் தமிழ் சேவையின் சார்பில் திருமதி.ஆனந்தி என்ற நிருபர் தமிழீழத் தேசியத் தலைவரைப் பேட்டி கண்டபோது ‘பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம். ஒரு சுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகளும் அதனையே நிரூபித்துக் காட்டுகின்றன. நாமும் சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம். இன்று சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போர்.

எனவே போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். யார் இந்தப் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்களோ அவர்களே இந்தப் போருக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும். போர் மூலம், அடக்கு முறையின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதன் மூலமே இன்றைய இனநெருக்கடிக்குத் தீர்வு காணலாம். சமாதான வழிமூலமே இதனைச் சாதிக்கலாம். இதனை சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கும் இராணுவவாதிகளுக்கும் சிங்கள மக்களே உணர்த்த வேண்டும். நாம் சிங்கள மக்களை நேசிக்கிறோம். நாம் சிங்கள மக்களுக்கு விரோதமானவர்கள் அல்ல. சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாடுகளுக்கும் பகைமைக்கும் இனவாத சக்திகளே காரணம்.

இந்த இனவாத சக்திகளைச் சிங்கள மக்கள் இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கைத்தீவில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்

தமிழீழப் போர் 3

மூன்றாம் கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும் கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும் தரைத்தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற ரீதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன.

இறுதியில் யாழ்.குடாநாட்டிற்கான விநியோகத்தை மட்டுப்படுத்தும் அளவில் வட-கிழக்குக் கடற்பிராந்தியத்தில் கடற்புலிகளின் கைமேலோங்கியதாக இருந்தது. இது யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரை அச்சம் ஊட்டும் வகையில் காணப்பட்டது. இவ் அச்சுறுத்தல் பற்றி இராணுவ ஆய்வாளர்களால் வெளிப்படையாகப் பிரஸ்தாபிக்கவும்பட்டது.

மூன்றாம் கட்ட ஈழப்போரில் இராணுவமும் கடற்படையும் முனைப்பாகப் பயன்படுத்தப்பட்டது போன்று விமானப்படையும் முனைப்பாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு வகையிற் பார்த்தால் மற்றைய இரு படைப்பிரிவுகளையும் விட விமானப்படைக்கு முதன்மை அளிக்கப்பட்டது என்றே கூறலாம். இக்காலப்பகுதியிலேயே கிபீர் மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் பயன்பாட்டுக்கு வந்ததோடு அவை போர்க்களத்தில் முக்கிய பங்கும் ஏற்றன.

இதேசமயம் விடுதலைப் புலிகளும் விமான எதிர்ப்புச் சாதனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக சிறீலங்கா விமானப்படை பல தாக்குதல் வான் கலங்களை இழக்க வேண்டி வந்தது. ஏனைய ஆயுதப் படையினர் போன்றே விமானப் படையும் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தது. இவ் விழப்பானது ஒரு கட்டத்தில் விமானப் படையைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது.

இந்த வகையில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப் படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில் இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.
இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வொன்று காணப்படும் என்ற ரீதியில் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி சந்திரிகாவும் அவரது பொ. ஐ. முன்னணியும் விடுதலைப் புலிகளுடனான மோதல் தொடங்கியதும் தமது நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஒன்றைச் செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதே அவர்களின் இந்நிலைப்பாட்டு மாற்றமாகும்.

இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குத் தத்துவார்த்த விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதுவே ‘சமாதானத்துக்கான யுத்தம்’ என்ற ஜனாதிபதி சந்திரிகாவின் பிரசித்தமான கோட்பாடாகும். இக்கோட்பாட்டுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முனைப்புப்படுத்திய சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் வரை அவர்களுடன் பேச்சு வார்த்தை என்பதற்கு இடமில்லை எனவும் பிரகடனம் செய்தது.

ஆயினும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற தனது நிலைப்பாட்டிற்கு எதிராக எழக்கூடிய உள்நாட்டு வெளிநாட்டு அபிப்பிராயங்களை மழுங்கடிக்கும் வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பும் அரச தரப்பால் அடிக்கடி வெளியிடப்படும் ஒன்றாக இருந்தது. இந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி என்ற ரீதியில் 1995 ஆகஸ்டில் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்று அன்றைய நீதி அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களினால் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. ஆனால் இவ அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட்டதாக இல்லை.

இவ்வாறு கசியவிடப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது பௌத்த அமைப்புக்களினதும் பௌத்த-சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் பேரினவாத ஊடகங்களின் கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியது. பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தரப்பும் அவற்றை ஏற்றுக்கொண்டாற்போல் அறிவிப்புக்களை வெளியிட அத்திட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் ஆகியது.
அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.

அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.

இதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கமோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தில் உறுதியானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இந்த வகையில் புலிகளின் நிலைப்பாட்டில் சில அம்சங்கள் முக்கிய இடம்பிடித்தன.

1. இராணுவ ரீதியான அழுத்தங்களுடன் கூடிய நிலையில் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகப் போவதில்லை.

2. சர்வதேசத்தின் மத்தியஸ்த்துவத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளே அரசியல் தீர்வுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும்.

3. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அரசியல் தீர்வொன்றைக் காணவும் எவ வேளையிலும் தயாராகவே உள்ளது.

ஆனால் மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இடைப்பட்ட காலத்திலும் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு சர்வதேச மத்தியஸ்துவம் என்பன குறித்துப் பேசியவை யாவும் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்ற நிலையிலேயே சிறீலங்கா ஆட்சியாளர்களினால் விமர்சனம் செய்யப்பட்டன. உலக நாடுகள் சிலவும் இதை மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதான சிறீலங்காவின் முயற்சிகளுக்கு உதவியும் வழங்கி வந்தது.

இதன் காரணமாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் என்பதும் அரசியல் தீர்வென்பதும் கிடப்பில் போடப்பட்ட தொன்றாகியிருந்தன. ஆனால் ‘ஜயசிக்குறு’ ‘ரணகோஸ’ நடவடிக்கைகள் சந்தித்த பெரும் இழப்புக்களும் தடங்கல்களும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்துக்கும் அதன் தலைமைக்கும் இனப்பிரச்சினைக்கன அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தோற்றுவித்தன.இதன் விளைவாகவே புலிகளுடன் பேச்சுவார்த்தை வெளிநாட்டு மத்தியஸ்துவம் என்பனவற்றை நிராகரித்து வந்த சந்திரிகா குமாரதுங்க நோர்வே அரசின் மத்தியஸ்துவத்துக்கு அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே சர்வதேச மத்தியஸ்துவத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராக இருந்தமை காரணமாக நோர்வே அரசின் முயற்சி விரைவாகவே ஆரம்பித்தது.

நோர்வேயின் விசேட தூதுவரான எரிக்சொல்கெய்ம் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகள் தரப்பினரையும் சிறீலங்கா தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தகளை நடாத்தினார் இதன் பிரகாரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை எரிக்சொல்கெய்ம் வன்னியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு சமாதான முயற்சிகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்புகிடைக்கும் எனவும் புலிகளால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சந்திரிகா குமாரதுங்காவோ அன்றி பொ. ஐ. முன்னணி அரசாங்கமோ இச்சமாதான முயற்சிகளுக்குத் தமது மனப்பூர்வமான சம்மதத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. முதலில் சமாதான முயற்சிகள் தொடர்பாக இழுத்தடிப்பைச் செய்த அவர்கள் இறுதியில் எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகளின் சார்பாகச் செயற்படுவதாகக் கூறி நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையைத் தோற்றுவித்தனர்.

அதுமாத்திரமல்ல விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அறிவிப்புச் செய்திருந்த நான்கு மாதகால ஒருதலைப்பட்சமான போர் ஓய்வையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். யாழ்.குடாநாட்டில் சில பகுதிகளை மீள ஆக்கிரமித்துக் கொண்ட அதேவேளை பாரிய படை நடவடிக்கைக்கும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய நிலையில் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் ஒரே குறிக்கோள் விடுதலைப் புலிகளிடம் இழந்துவிட்ட ஆனையிறவுப் பிரதேசத்தை எவ வாறேனும் மீட்டெடுத்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதன் காரணமாக நோர்வேயின் சமரச முயற்சிகள் கூட இரண்டாம் பட்சமானவையாகப் புறம் தள்ளப்பட்டன.

ஆயினும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம் முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால் மீண்டும் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசத் தொடங்கியது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பெறப்பட்ட அதிகாரப் பரவலாக்கற் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு விவாதத்துக்கான நாளை ஒதுக்கீடும் செய்தது. பெரும் சவால்களைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை உறுதியானதொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தியுள்ளது.

ஆனால் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவுற்றுப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால் இவ வதிகாரப் பரவலாக்கற் திட்டமும் அர்த்தமற்றதாகியது. இதுகூட தேர்தலை இலக்குக் கொண்டே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருப்பினும் அவ வதிகாரப் பரவலாக்கற் திட்டத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனத்துரோகத் தலைமையை உருவாக்கும் சந்திரிகாவின் அரசியல் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பொ. ஐ. முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எத்தகைய முனைப்புக் காட்டியதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் சித்தரிக்க முனைந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் இதனையே வெளிவிவகார அமைச்சின் முக்கிய இராஜதந்திரபணி ஆக்கியது.

சந்திரிகா குமாரதுங்காவின் இத்திட்டத்துக்கு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். மேற்கு நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதுவராலயங்களின் முழுநேரப் பணியாக இப்பிரச்சார நடவடிக்கை அமைந்திருந்தது. லக்ஸ்மன் கதிர்காமரின் பல நாட்கள் இப்பிரச்சாரத்துக்கென வெளிநாடுகளிலேயே கழிந்தன. ஒருவகையிற் பார்த்தால் இம்முயற்சியில் கதிர்காமரும் சந்திரிகா குமாரதுங்கவும் ஓரளவு வெற்றி பெற்றனர் என்றே கூறலாம். அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இவ வெற்றி பெறப்பட்டது. இது சந்திரிகா அரசின் மிகப்பெரும் இராஜதந்திர வெற்றியாகவும் சித்தரிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை சிறீலங்கா அரசின் கோரிக்கை காரணமாகவோ அன்றி அழுத்தத்தின் காரணமாகவோ உருவாகவில்லை என்ற இந்நாடுகளின் அறிவிப்புகள் இவ வெற்றி கூட சிறீலங்காவுக்குரியதல்ல என்பதையே வெளிப்படுத்துவதாயிருந்தது.

ஆயினும் சிறீலங்கா அரசுக்கு இத்தடைகள் தெம்பூட்டுபவையாக இருப்பினும்கூட மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருந த நாடுகள் கூட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியமையானது – அரசின் எதிர்பார்க்கைகளுக்கு எல்லையிடுவதாகவே இருந்தது. இந்நிலையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்கா மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தானும் அனுகூலம் அடைவதற்கான நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியது. ஆனால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைப பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அன்றி இந்தியாவோ மாற்றிக்கொள்ளாமை விடுதலைப் புலிகள் மீதான தடைமூலம் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் இராஜதந்திர இராணுவ அனுகூலங்களை ஈட்ட முடியாததொரு நிலையையே ஆட்சியாளர்களுக்கு கொடுத்தது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையைத் தாங்க முடியாத பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்ப ஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது. இரண டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததுபோல் மூன்றாம் கட்ட ஈழப்போரும் அடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது சிறீலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியைவிட மிக மோசமான அரசியற் பொருளாதார இராணுவ நெருக்கடியை மூன்றாம் ஈழப்போர் முடிவடைந்தபோது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து அதன் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. மறுபுறத்தில் யுத்ததுக்கும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண வேண்டிய அவசியமும் இருந்தது.

இதனை நன்கு புரிந்துகொண்டிருந்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார். அவரின் இவ வுரையில் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை குறித்து பின்வரும் அம்சங்கள் வலியுறுத்துப்பட்டன.

1. இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது.

2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

3.அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வியைத் தழுவித் தலைகுனிய வேண்டி ஏற்படும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இவ அறிவிப்பானது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இப்பிரச்சினை தீர்வு குறித்து மேற்கொண்ட இராணுவ – அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தும் தோல்வி கண்டுவிட்டன என்பதைத் தெளிவாக அறிவிப்புச் செய்வதாகவும் இருந்தது. அது மாத்திரமல்ல இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதையும் வெளிப்படுத்தியது. சமாதானத்திற்கும் அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்ல என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ ரீதியிலான அடக்கு முறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலிறுத்தியே வந்தார்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்திற்கு இத்தகையதொரு பாரிய தோல்வி பின்னடைவு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் கொடுக்கப்பட்டது என்பதே நிதர்சனமானதாகும். இம்மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் சந்திரிகா குமாரதுங்கா அரசாங்கம் சிறீலங்கா அரசின் அனைத்து வளங்களையும் சக்தியினையும் பயன்படுத்தி மேற்கொண்ட இராணுவ அரசியல் இராஜதந்திர முயற்சிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு வெற்றி பெறப்பட்டன.

காந்தரூபன் அறிவுச்சோலை

1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் ‘எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர்.

தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ‘யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல், தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.

தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்

1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.

தமிழீழ சட்டக் கல்லூரி

1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது ‘தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும். முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள்.

இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில், பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்” என்றார்.

தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை

தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் ‘மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்கும,; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது.

தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Up ↑